என் மலர்
கோயம்புத்தூர்
- விடுபட்டவர்களுக்கு நாளை முதல் 3 நாட்கள் சிறப்பு முகாம்
- விண்ணப்பம் பெறாதவர்களும் மனுவை பதிவு செய்யலாம்
கோவை,
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் வாயிலாக பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி இதற்கான விண்ணப்ப மனுக்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் வசிக்கும் ரேஷன்கார்டு தாரர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் வழங்கி, அதற்கான டோக்கன்களும் தரப்பட்டன.
இதனை தொடர்ந்து 2 கட்டமாக விண்ணப்ப பதிவு முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த ரேஷன்கார்டுதாரர்கள் பூர்த்தி செய்த விண்ணங்களை பதிவு செய்து உள்ளனர்.
அதன்படி கோவை மாவட்டத்தில் இதுவரை 6.80 லட்சம் பேர் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பங்களை பதிவு செய்து உள்ளனர் என்பது தெரிய வந்து உள்ளது.
இந்த நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கு 2 கட்டமாக முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் விண்ணப்பத்தை பதிவு செய்து உள்ளனர்.
இந்த நிலையில் ரேஷன்கார்டுதாரர்களில் சிலர் விண்ணப்பங்கள் பெறவில்லை. அதிலும் பலர் வாங்கிய விண்ணப்பங்களை பதிவு செய்யவில்லை என்பது தெரியவந்து உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கு விண்ணப்பம் பெறாதவர்கள் மற்றும் மனுவை பதிவு செய்யாதவர்கள் ஆகியோர் பயனடையும் வகையில், விடுபட்டவர்களுக்கான 3 சிறப்பு முகாம்களை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான முகாம் நாளை (18-ந்தேதி) தொடங்கி வருகிற 20-ந்தேதி வரை நடக்க உள்ளது. இது முதல், இரண்டாவது கட்டமாக நடத்தப்பட்ட அதே முகாம்களில் நடக்க உள்ளது.
எனவே கோவை மாவட்டத்தில் விடுபட்ட பெண்கள் அந்தந்த சிறப்பு முகாம்களுக்கு நேரில் சென்று கலைஞர் மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
விண்ணப்பப்படிவம் கிடைக்கப்பெறாதவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள முகாம்களுக்கு சென்று அங்கு உள்ள பொறுப்பு அதிகாரியிடம் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து ஒப்படைத்து பயன்பெறலாம்.
கோவையில் மாற்று திறனாளிகள், உழவர் பாதுகாப்பு திட்டம், அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியம் ஆகிய திட்டங்கள் வாயிலாக முதியோர் ஓய்வூதியம் பெறுவோர் தவிர அந்த குடும்பத்தில் தகுதிவாய்ந்த பெண்களும் கலைஞர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
- நகராட்சி ஊழியர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்
- பஸ் நிலையம் அருகே கட்டி வைத்து உரிமையாளரை வரவழைத்து அபராதம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது
மேட்டுப்பாளையம்,
கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களின் மைய பகுதியாகவும், தமிழக-கேரள மாநில எல்லைப்பகுதியாகவும் மேட்டுப்பாளையம் இருந்து வருகிறது.
சமீப காலமாக அன்னூர், கோவை, சிறுமுகை, ஊட்டி, கோத்தகிரி செல்லும் சாலைகளில் ஆடு,மாடு மற்றும் இதர கால்நடைகள் சுற்றித் திரிகின்றன.
இதனால் அடிக்கடி வாகன விபத்துகளும், உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. ஆங்காங்கே சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இந்த நிலையில் மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் நகர் மன்றத்தலைவர் மெஹரீபா பர்வீன், ஆணையர் அமுதா உள்ளிட்டோர் இணைந்து பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் கால்ந டைகளை வளர்க்க வே ண்டும். மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். நகராட்சியின் எச்சரிக்கை யினையும் மீறி கால்நடைகள் சாலைகளில் சுற்றி திரிந்து வந்தன.
இதனை யடுத்து இன்று காலை முதல் நகராட்சி ஊழியர்கள் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடை களை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரு கின்றனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறு கையில் போக்கு வரத்திற்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள் பிடிக்கப்பட்டு பஸ் நிலையம் பின்புறமுள்ள உள்ள நீருந்து நிலையத்தின் அருகே கட்டி வைக்கப்பட்டு பின்னர் அதன் உரிமை யாளர்கள் வரவழை க்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட உள்ளது என தெரிவித்தனர்.
- ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு
- கடை முற்றிலும் எரிந்து நாசமானது
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம்- கோத்தகிரி சாலையில் ஓடந்துறை பகுதி 24 மணி நேரமும் போக்குவரத்து நிறைந்த பகுதியாகும்.
இப்பகுதியில் சாலையின் ஒரு புறம் சாலையோர கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இதில் ஓடந்துறை ராம சாமி நகர் பகுதியை சேர்ந்த சசிதரன்(60) என்பவர் சாலையோரத்தில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்றிரவு சசிதரன் வழக்கம் போல் வியாபாரத்தை முடித்து விட்டு, தனது கடையை மூடி விட்டு வீட்டிற்கு சென்றார்.
நள்ளிரவில் இவரது கடையில் இருந்து கரும்புகை வெளிவந்தது. சிறிது நேரத்தில் தீ பற்றி எரிந்தது.
அந்த சமயம் காற்றின் வேகமும் அதிகமாக இருந்த தால், தீ மளமளவென கடையின் மற்ற பகுதி களுக்கு வேகமாக பரவியது.
கடை முழுவதும் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் அக்கம்பக்கத்தினர் பார்த்து, மேட்டுப்பாளையம் தீயணைப்புத்துறையின ருக்கு தகவல் அளி த்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம் தலைமையிலான தீயணைப்புத்துறையினர் கடையில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணி யில் ஈடுபட்டனர்.
ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இருப்பினும் தீ விபத்தில் கடை முற்றிலும் எரிந்து சேதமாகி விட்டது. இதில் கடையில் இருந்த பொருட்களும் எரிந்து விட்டன.
மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் வாலிபர் மாயம் என வழக்குப்பதிவு செய்து, மாயமான அருண் கார்த்திக்கை தேடி வந்தனர்.
- கொன்று புதைத்த சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை:
கோவை பொள்ளாச்சி நேதாஜி ரோட்டை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் அருண்கார்த்திக் (வயது25). டிரைவர்.
அருண்கார்த்திக் கடந்த 10-ந் தேதி வெளியில் செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன்பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.
அவரது தந்தை மகனை அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளிலும் தேடி பார்த்தார். ஆனாலும் அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை.
அவரது நண்பர்களிடம் விசாரித்த போதும், அவர்களும் நாங்கள் பார்க்கவில்லை என்றே கூறியுள்ளனர். இதையடுத்து கணேசன் சம்பவம் குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீசார் வாலிபர் மாயம் என வழக்குப்பதிவு செய்து, மாயமான அருண் கார்த்திக்கை தேடி வந்தனர்.
மேலும் பல்வேறு கோணங்களில் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அருண்கார்த்திக்கின் நண்பர்களையும் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது போலீசாருக்கு எஸ்.சந்திராபுரத்தை சேர்ந்த சூரியபிரகாஷ் (26), அரவிந்த் என்ற அருண்ராஜ் (25) ஆகியோர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
அவர்களை பிடித்து விசாரித்த போது முதலில் முன்னுக்குப்பின் முரணாகவே பதில் அளித்து வந்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், அருண்கார்த்திக்கை அடித்து கொன்று, உடலை கல்குவாரி அருகே புதைத்து விட்ட அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் 2 பேரையும் எஸ்.சந்திராபுரத்தில் உள்ள கல்குவாரி அருகே அழைத்து சென்றனர். அவர்கள் அங்கு அருண்கார்த்திக்கை கொன்று குப்பை, மணல் போட்டு புதைத்த இடத்தை காண்பித்தனர்.
சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. ஏ.எஸ்.பி. பிருந்தா, தாசில்தார் ஜெயசித்ரா மற்றும் அதிகாரிகளும் வந்து பார்வையிட்டனர். அங்கு அதிகளவிலான போலீசார் குவிக்கப்பட்டனர்.
பின்னர் அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தனர்.
அவர்கள் போலீசாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
அருண்கார்த்திக் எங்களுக்கு சில வருடங்களுக்கு முன்பு தான் அறிமுகமானார். நாங்கள் 3 பேரும் எப்போதும் ஒன்றாக மது குடிப்பதையும், சூதாடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தோம்.
தொடர்ந்து ஒன்றாக சந்தித்து கொண்டதால் நாங்கள் 3 பேரும் நண்பர்களாக மாறிவிட்டோம். எங்கு சென்றாலும் 3 பேரும் ஒன்றாக தான் செல்வோம்.
அருண் கார்த்திக், எங்கள் 2 பேரிடம் பணம் கேட்டார். நாங்களும் நண்பர் என்பதால் எங்களிடம் இருந்த பணத்தை கொடுத்தோம். ஆனால் பணம் வாங்கி நீண்ட நாட்கள் ஆகியும் பணத்தை திருப்பி தரவில்லை.
இது தொடர்பாக அவரிடம் கேட்டபோதெல்லாம் மழுப்பலான பதில்களையே கூறி வந்தார். இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனை தொடர்ந்து அவர் எங்களுடன் சேருவதை நிறுத்திவிட்டார். சம்பவத்தன்று நாங்கள் அருண்கார்த்திக்கு போன் செய்து, பணம் சம்பந்தமாக நாம் சமாதானமாக சென்று விடலாம்.
முன்பு போல நாம் நண்பர்களாக இருப்போம் என கூறி சமாதானம் பேசுவதற்கு அழைத்தோம். அவரும் வந்தார். பின்னர் 3 பேரும் எஸ்.சந்திராபுரத்தில் பாறைமேடு பகுதிக்கு சென்று மது அருந்தினோம்.
அப்போது எங்களுக்குள் மீண்டும் பணம் தொடர்பாக தகராறு எழுந்தது.
இதில் ஆத்திரம் அடைந்த நாங்கள் அங்கிருந்த கட்டையை எடுத்து அருண்கார்த்திக்கை தலை உள்பட பல இடங்களில் சரமாரியாக தாக்கினோம். இதில் அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
அவர் இறந்துவிட்டதால் எங்களுக்கு பதற்றம் ஏற்பட்டது. உடனே அவரது உடலை மறைத்து விட முடிவு செய்தோம். அதன்படி அங்கு குழி தோண்டி உடலை உள்ளே தூக்கி போட்டு, மணல் மற்றும் அங்கு கிடந்த பிளாஸ்டிக் கழிவுகளை எடுத்து போட்டு மூடி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டோம்.
அருண்கார்த்திக்கின் தந்தை எங்களிடம் வந்து கேட்டபோது, நாங்கள் அவரை பார்க்கவில்லை என்று தெரிவித்ததோடு, அவருடன் இணைந்து தேடுவது போலவும் நாடகமாடினோம்.
ஆனால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி எங்கள் 2 பேரையும் கைது செய்துவிட்டனர்.
இவ்வாறு அவர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே கொன்று புதைக்கப்பட்ட அருண்கார்த்திக்கின் உடல் போலீசார் முன்னிலையில் இன்று தோண்டி எடுக்கப்படுகிறது. தொடர்ந்து உடல் அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.
பணம், கொடுக்கல் வாங்கல் தகராறில் வாலிபரை நண்பர்களே அடித்து கொன்று புதைத்த சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அரசு பஸ் டிரைவர் கண்ணன் என்பவர் தனது 6 மாத குழந்தையுடன் அமைச்சரின் காலில் விழுந்தார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் இடமாறுதலுக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோவை:
கோவை சுங்கத்தில் உள்ள அரசு போக்குவரத்து டிரைவர்கள், கண்டக்டர்களுக்கான குளிரூட்டப்பட்ட அறை, பணிக்காலங்களில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது.
இந்த விழாவில் அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு, போக்குவரத்து கழக ஊழியர்களின் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அரசு பஸ் டிரைவர் கண்ணன் என்பவர் தனது 6 மாத குழந்தையுடன் அமைச்சரின் காலில் விழுந்தார். மேலும் குழந்தையை அவரது காலடியில் வைத்து தனக்கு பணியிட மாறுதல் கேட்டு கோரிக்கை வைத்தார்.
இதனை பார்த்த அதிகாரிகள் குழந்தையை கையில் தூக்கி கொண்டனர். தொடர்ந்து அவர் அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
அதில் எனது சொந்த ஊர் தேனி. எனக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும், 6 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது மனைவி டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு இறந்து விட்டார். எனவே தேனியில் உள்ள எனது பிள்ளைகளை என்னால் கவனிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறேன்.
பெற்றோர்களுக்கு வயதானதால் அவர்களை இங்கு அழைத்து வந்து குழந்தைகளை பார்த்து கொள்வதிலும் சிரமமாக உள்ளது.
எனவே எனக்கு சொந்த ஊரான தேனிக்கு பணியிட மாறுதல் அளிக்க வேண்டும். பலமுறை இது தொடர்பாக பொதுமேலாளரிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் என கூறியிருந்தார்.
இந்த நிலையில் கைக்குழந்தையுடன் அமைச்சரின் காலில் விழுந்து பணியிட மாறுதல் கேட்டு கோரிக்கை வைத்த டிரைவர் கண்ணன் கோவையில் இருந்து திண்டுக்கல் மண்டலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- மதுரையில் வரும் 20-ம் தேதி பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற இருக்கிறது..
- இந்த மாநாட்டில் சுமார் 15 லட்சம் பேர் பங்கேற்பார்கள்.
கோவை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சேலம் செல்வதற்காக சென்னையில் இருந்து நேற்று இரவு விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மதுரையில் வரும் 20-ம் தேதி பொன்விழா எழுச்சி மாநாடு பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் வியக்கும் வகையில் இந்த மாநாடு நடைபெறும். மாநாட்டில் சுமார் 15 லட்சம் பேர் பங்கேற்பார்கள்.
இந்த மாநாட்டை கண்டு பயந்து நடுங்கிப்போய், என்ன செய்வது என்று தெரியாமல் நீட் தேர்வை மையமாக வைத்து உதயநிதி ஸ்டாலின் அங்கு உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்திருக்கிறார். இது வேண்டும் என்றே திட்டமிட்டு செய்யப்படுகிறது.
சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இப்போது 2 ஆண்டுகள் உருண்டோடி விட்டது. 3-வது ஆண்டு நடக்கிறது. இவ்வளவு நாட்கள் என்ன முயற்சி எடுத்தார்கள்?
ஆனால் அ.தி.மு.க. நீட் தேர்வை ரத்து செய்ய அனைத்து முயற்சிகளும் எடுத்தது. அதே முயற்சியை தான் தி.மு.க.வும் எடுத்து வருகிறது. இந்தியா கூட்டணி கட்சிகள் ஒன்றாக இணைந்தாவது தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய, ஆதரவை கேட்டு அந்த பிரச்சினையை பாராளுமன்றத்தில் எழுப்பி இருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை. 10 ஆண்டுகள் ஆனாலும் இவர்களால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது.
மதுரை மாநாட்டுக்கு தடை கேட்டு வழக்கு தொடுப்பதற்கு என நிறைய பேர் இருக்கிறார்கள். அதெல்லாம் ஒன்றும் செய்ய முடியாது. ஏற்கனவே காவல்துறையிடம் அனுமதி வாங்கி இருக்கிறோம் என தெரிவித்தார்.
- கோவையில் போக்குவரத்து அமைச்சர் பேசினார்
- மகளிர் இலவச பயணத்திற்காக ரூ.2500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கோவை.
கோவை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சுங்கம் கிளையில் பணிக்காலத்தில் இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி மற்றும் 10-ம் வகுப்பு 12-ம் வகுப்புகளில் பணிமனை அளவில் முதல் 3 மதிப்பெண்களைப் பெற்ற பணியாளர்களின் குழந்தைகளுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடந்தது.
இதில் அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு பணி ஆணைகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.
பின்னர் போக்குவரத்து ஊழியர்கள் மத்தியில் அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது:-
பணிக்காலத்தில் உயிரிழந்த, பணி ஓய்வு பெற்றவர்கள் என 5881 குடும்பங்களுக்கு ரூ.1582 கோடி 3 கட்டமாக ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டு வருகின்றது.
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு போக்குவரத்து துறையில் கவனம் செலுத்தி வருகின்றார் .
மகளிருக்கான கட்டணமில்லா பயணம் விடியல் பயணம் என முதல்வர் அறிவித்து இருக்கின்றார். மகளிர் பயணத்திற்காக ரூ.2500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தொகை ஒதுக்கீடு செய்து இருப்பதால்தான் போக்குவரத்து துறை சிரமம் இல்லாமல் செயல் படுகின்றது. ஒரு புறம் மகளிர் வாழ்வில் மறு மலர்ச்சி ஏற்படுவதுடன், இன்னொரு புறம் போக்குவரத்து துறை வளர்ச்சி பெறுகின்றது.
தேர்தல் நேரத்தில் சொன்னவற்றை முதல்வர் செய்து வருகின்றார். பல மாநிலங்களில் போக்குவரத்து துறையில் சம்பளம் கொடுக்கப்படாத நிலை இருக்கின்றது.
அரசு விரைவு போக்குவரத்து கழகம் பணியாளர்கள் ஆன் லைனில் விண்ணப்பிக்கும் முறை இரு தினங்களில் தொடங்கப்பட இருக்கின்றது .
கோவைக்கு கூடுதல் பஸ்கள் வேண்டும் என்ற கோரிக்கையினை கலெக்டர் மற்றும் அதிகாரிகள் வைத்திருக்கின்றனர். இவை நிறைவேற்றபடும்.
வேலைக்கு வரும் போது என்ன ஆர்வத்துடன் வருகின்றீர்களோ, அதே ஆர்வத்துடன் பணியாற்ற வேண்டும் .
ஏழைகளுக்காக போக்குவரத்து துறை செயல்படுகின்றது என்பது இங்குதான். தமிழகத்தினை போல எல்லா கிராமத்திற்கும் போக்குவரத்து பிற மாநிலங்களில் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அமைச்சர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பெண்களுக்கான மகளிர் விடியல் பயணம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மகளிர் விலையில்லா பேருந்தில் பயணம் செய்வது 40 சதவீதத்தில் இருந்து 68 சதவீதமாக உயர்ந்துள்ளது.
முதல் 100 மின்சார பஸ்கள் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டு, சென்னையில் சோதனை ஒட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
புதிதாக 4 ஆயிரம் பஸ்கள் வர உள்ளது. சீக்கிரம் பிரச்சனைகள் தீர்வு அடையும். அரசின் மஞ்சள் நிற பேருந்துகளும், பள்ளி வாகனங்களுக்கும் வேறு வேறான மஞ்சள் நிறம் இருக்கும். இரண்டையும் வேறு வேறாக வித்தியாசப்படுத்தும் வகையில் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருமண வாழ்கையை எதிர்கொள்ளும் தைரியம் இல்லை என கடிதம் எழுதி வைத்து உள்ளார்
- ராஜாராம் மனைவி புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் விசாரணை செய்தனர்
கோவை.
கோவை சின்னவேடம்பட்டியை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 29). ஐடி ஊழியர். இவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ராஜாராம் வழக்கம் போல் வேலைக்கு புறப்பட்டு சென்றார்.
ஆனால், மீண்டும் அவர் வீட்டிற்கு திரும்ப வரவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவர் மாயமாவதற்கு முன்பு கம்பெனியில் உள்ள நோட்டில் கைப்பட கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார்.
அதில் "திருமண வாழ்கையை எதிர்கொள்ளும் தைரியம் எனக்கு இல்லை. இதன் காரணமாக நான் போகிறேன். என்னை யாரும் தேட வேண்டாம்." இவ்வாறு அதில் எழுதியிருந்தார். இதுகுறித்து ராஜாராமின் மனைவி போத்தனூர் போலீசில் தனது கணவரை கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான புது மாப்பிள்ளையை தேடி வருகின்றனர்.
- இளம்பெண் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.
- 2-வதாக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்த எனது கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை,
கோவை வடமதுரை அருகே உள்ள கவுண்டன் புதூரை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவர் கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:
நான் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறேன். எனக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எனது கணவர் வருமான வரித்துறையில் அதிகாரியாக வேலைபார்த்து வருகிறார். எங்களுக்கு 9 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் எனது கணவர் பணம் மற்றும் நகைகள் வரதட்சணையாக கேட்டு தொல்லை கொடுத்து வந்தார். மேலும், அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. அந்த இளம் பெண்ணை அவர் 2-வதாக திருமணம் செய்துள்ளார்.
என்னுடன் சேர்ந்து வாழ மாட்டேன் என விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார். எனவே என்னை ஏமாற்றி 2-வதாக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்த எனது கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் கிழக்கு அனைத்து மகளிர் போலீசார் வருமான வரித்துறை அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாணிக்கம் தினசரி போதையில் வீட்டிற்கு வருவது வழக்கம்.
- செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை
கோவை தெலுங்கு பாளையம் புதூரை சேர்ந்த வர் மாணிக்கம் (வயது 55). கூலி தொழிலாளி. இவர் மனைவி குழந்தைகளை பிரித்து கடந்த 18 ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வந்தார்.
மது பழக்கத்திற்கு அடிமையான இவர் தினசரி போதையில் வீட்டிற்கு வருவது வழக்கம். கடந்த 5 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு சென்றார். மீண்டும் அவர் திரும்ப வேலைக்கு செல்லவில்லை. இந்த நிலையில் மாணிக்கத்தின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் செல்வ புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றனர். அப்போது வீட்டிற்குள் மாணிக்கம் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். பின்னர் போலீசார் அவரது உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ கறிக்கோழி இறைச்சி ரூ.200 முதல் ரூ.220 வரை விற்பனையாகி வருகிறது
- தமிழ்நாட்டில் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன.
கோவை,
தமிழ்நாட்டில் பல்லடம், சுல்தான்பேட்டை, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, ஈரோடு, நாமக்கல் உள்பட பல்வேறு இடங்களில் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன.
இந்த பண்ணைகளில் தினமும் சராசரியாக 2 கிலோ எடை கொண்ட 15 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நா டகா, புதுச்சேரி போன்ற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
தற்போது ஒரு கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்ய உற்பத்தியா ளர்களுக்கு சராசரியாக ரூ.95 வரை செலவாகிறது. கடந்த 7-ந் தேதி ஒரு கிலோ கறிக்கோழி கொள்முதல் விலை ரூ.99 என இருந்தது.
கடந்த 8-ந் தேதி ரூ.101, 10-ந் தேதி ரூ.105, 11-ந் தேதி ரூ.107, நேற்று முன்தினம் ரூ.112 என கொள்முதல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
ஒரு வாரத்தில் நுகர்வு அதிகரித்து கறிக்கோழி கொள்முதல் விலை கிலோவிற்கு ரூ.13 வரை உயர்ந்து உள்ளது. தற்போது ஒரு கிலோவிற்கு ரூ.18 வரை உற்பத்தியாளர்க ளுக்கு லாபம் கிடைக்கிறது.
இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோகறிக்கோழி இறைச்சி ரூ.200 முதல் ரூ.220 வரை விற்பனையாகி வருகிறது.தற்போது ஆடி மாதம் முடிவடைய உள்ளதால் வரும் நாட்களில் நுகர்வு இன்னும் அதிகரித்து விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
- 227 நிறுவனங்களில் தொழிலாளர் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
- விடுமுறை அளிக்காத நிறுவனங்களுக்கு ரூ.500 முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது
கோவை,
சென்னை தொழிலாளர் ஆணையாளர் அதுல் ஆனந்த் உத்தரவுப்படியும், கோவை தொழிலாளர் ஆணையாளர் தமிழரசி அறிவுறுத்தல்படியும், கோவை தொழிலாளர் இணை ஆணையாளர் லீலாவதி வழிகாட்டுதலின் படி, தொழிலாளர் துறை உதவி ஆணையாளர் (அமலாக்கம்) தலைமையில், சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது திடீர் ஆய்வு மேற்கொள்ளப்ப ட்டது.
தொழிலாளர்களுக்கு விடுப்பு வழங்கப்பட்டு உள்ளதா? அன்றைய தினத்தில் தொழிலாளர்கள் பணிபுரிய அனுமதிக்கபட்டு இருந்தால் உரிய படிவம் வழங்கப்பட்டு உள்ளதா? என்று ஆய்வு நடைபெற்றது.
கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதிகளில் உள்ள கடைகள், தொழில் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உள்பட 227 நிறுவனங்களில் தொழிலாளர் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமல், சம்பந்த ப்பட்ட ஆய்வாளருக்கு உரிய படிவத்தில் முன்ன றிவிப்பு அளிக்காமல், அன்றைய தினம் பணிபுரிய அனுமதித்த 78 கடைகள் மற்றும் நிறுவனங்கள், 96 உணவு நிறுவனங்கள் உள்பட மொத்தம் 174 உரிமையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள்மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் அந்த நிறுவனங்களுக்கு ரூ.500 முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். இந்த நிறுவனங்களில் அடுத்தமாதம் ஆய்வு செய்யப்பட்டு உரிய மாற்று விடுப்போ அல்லது இரட்டிப்பு ஊதியமோ வழங்கப்பட்டு உள்ளதா? என்று மீண்டும் ஆய்வு செய்யப்படும். மீண்டும் முரண்பாடுகள் கண்டறியப்பட்டால், சட்ட ப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.






