search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தையுடன் அமைச்சரின் காலில் விழுந்து கோரிக்கை: அரசு பஸ் டிரைவர் கண்ணன் சொந்த ஊருக்கு இடமாற்றம்
    X

    குழந்தையுடன் அமைச்சரின் காலில் விழுந்து கோரிக்கை: அரசு பஸ் டிரைவர் கண்ணன் சொந்த ஊருக்கு இடமாற்றம்

    • அரசு பஸ் டிரைவர் கண்ணன் என்பவர் தனது 6 மாத குழந்தையுடன் அமைச்சரின் காலில் விழுந்தார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் இடமாறுதலுக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கோவை:

    கோவை சுங்கத்தில் உள்ள அரசு போக்குவரத்து டிரைவர்கள், கண்டக்டர்களுக்கான குளிரூட்டப்பட்ட அறை, பணிக்காலங்களில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது.

    இந்த விழாவில் அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு, போக்குவரத்து கழக ஊழியர்களின் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த அரசு பஸ் டிரைவர் கண்ணன் என்பவர் தனது 6 மாத குழந்தையுடன் அமைச்சரின் காலில் விழுந்தார். மேலும் குழந்தையை அவரது காலடியில் வைத்து தனக்கு பணியிட மாறுதல் கேட்டு கோரிக்கை வைத்தார்.

    இதனை பார்த்த அதிகாரிகள் குழந்தையை கையில் தூக்கி கொண்டனர். தொடர்ந்து அவர் அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தார்.

    அதில் எனது சொந்த ஊர் தேனி. எனக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும், 6 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது மனைவி டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு இறந்து விட்டார். எனவே தேனியில் உள்ள எனது பிள்ளைகளை என்னால் கவனிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறேன்.

    பெற்றோர்களுக்கு வயதானதால் அவர்களை இங்கு அழைத்து வந்து குழந்தைகளை பார்த்து கொள்வதிலும் சிரமமாக உள்ளது.

    எனவே எனக்கு சொந்த ஊரான தேனிக்கு பணியிட மாறுதல் அளிக்க வேண்டும். பலமுறை இது தொடர்பாக பொதுமேலாளரிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் என கூறியிருந்தார்.

    இந்த நிலையில் கைக்குழந்தையுடன் அமைச்சரின் காலில் விழுந்து பணியிட மாறுதல் கேட்டு கோரிக்கை வைத்த டிரைவர் கண்ணன் கோவையில் இருந்து திண்டுக்கல் மண்டலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×