என் மலர்
கோயம்புத்தூர்
- காலை 8 மணியில் இருந்து இயங்குவதால் வாகனஓட்டிகள் பாதிப்பு
- இரவு நேரத்தில் புறப்பட்டு கோவைக்கு வரும் ஆம்னி பஸ்கள், சரக்கு லாரிகள் அதிவேகத்தில் பறப்பதால் பாதசாரிகள் அவதி
குனியமுத்தூர்,
கோவையின் பிரதான சாலைகளில் ஆங்காங்கே பல்வேறு இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் மட்டுமன்றி விபத்துக்களும் தவிர்க்கப்பட்டு வருகிறது.
போக்குவரத்து சாலைக ளில் அன்றாடம் பயணி க்கும் ஆயிரக்கணக்கான வாகனங்களுக்கு போக்கு வரத்து சிக்னல்கள் கலங்கரை விளக்கமாக திகழ்ந்து வருகின்றன. இதனால் சம்பந்தப்பட்ட பகுதியில் போலீசார் இல்லையென்றாலும் கூட வாகனஓட்டிகள் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து, சாலைகளை கடந்து செல்வதை பார்க்க முடிகிறது. அந்தளவுக்கு வாகன ஓட்டிகள் மத்தியில் போக்குவரத்து சிக்னல் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது.
கோவையின் அனைத்து பிரதான சாலைகளிலும் காலை 8 மணியில் இருந்துதான் போக்குவரத்து சிக்னல்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே அதிகாலை 6 மணி முதல் 8 மணி வரை ரோட்டில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் தட்டுத்தடுமாறி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் ஒருசில பகுதிகளில் அதிகாலை நேரத்தில் ஆங்காங்கே சிறு சிறு விபத்துகளும் அரங்கேறி வருகிறது.
கோவையில் வியாபாரிகள் காலைநேரத்தில் மோட்டார் சைக்கிள் மூலம் காய்கறி வாங்கி செல்கின்றனர். உழவர் சந்தையில் காய்கறி வாங்கி வீடு திரும்பும் வாகனங்களையும் பார்க்க முடி கிறது.
அதிகாலையில் டியூசன் செல்லும் மாணவ மாணவிகளும் மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்து சாலையில் அதிகாலை நேரத்தில் கார்கள், பஸ்கள் மற்றும் நடைப்பயிற்சி செல்வோரையும் ஒரே நேரத்தில் அதிகமாக பார்க்க முடிகிறது.
கோவையில் அதிகாலை நேரத்தில் சிக்னல்கள் இயங்காததால் அனைத்து வாகனங்களும் ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு சாலையை கடக்க முற்படுகின்றன. இதனால் பல்வேறு பகுதியில் சிறு-சிறு விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மேலும் தினந்தோறும் இரவு நேரங்களில் புறப் பட்டு கோவைக்கு வரும் ஆம்னி பஸ்கள், சரக்கு லாரிகளும் அத்துமீறிய வேகத்தில் செல்கின்றன. அத்தகைய நேரத்தில் விபத்து ஏற்படுவதை தவிர்க்க முடியாத சூழ்நிலை உள்ளது.
சென்னையில் காலை 6 மணி முதல் போக்குவரத்து சிக்னல்கள் இயங்கி வருகின்றன. இதனால் அங்கு விபத்துகளின் எண்ணிக்கை குறைந்து உள்ளது. எனவே சென்னையை போல கோவையிலும் அதிகாலை 6 மணிக்கு சிக்னல் இயக்க வேண்டும். அப்படி செய்தால் போக்குவரத்து சாலைகளில் சிறு சிறு விபத்துகளையும் தடுக்க முடியும்.
போக்குவரத்து நெரிசலும் கட்டுப்படும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் நடைபயிற்சி செல்வோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- செல்போனுக்கு புதிய எண்ணில் இருந்து வீடியோகால் வந்ததால் வேதனை
- வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்
கருமத்தம்பட்டி,
கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள உஞ்சாபாளையம் குட்டை தோட்டத்தை சேர்ந்தவர் மல்லிகா அர்ஜூன். இவரது மனைவி திவ்யா (வயது 31). இவர்க ளுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகன் உள்ளார்.
சம்பவத்தன்று திவ்யா கணவர் மற்றும் மகனுடன் ஈரோடு பட்டக்காரன் பாளையத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென் றார். அப்போது மல்லிகா அர்ஜூனின் செல்போனுக்கு புதிதாக ஒரு எண்ணில் இருந்து வீடியோ அழைப்பு வந்தது. உடனே திவ்யா போனை எடுத்து பேச முயன்றார். ஆனால அந்த நபர் செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
இதனால் திவ்யாவுக்கு தனது கணவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதுபற்றி அவர் தனது கணவரிடம் கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் கணவன்-மனைவி இருவரையும் சமாதானம் செய்தனர். பின்னர் திவ்யா கணவர் மற்றும் மகனுடன் உஞ்சாபாளையத்துக்கு திரும்பினார்.
மறுநாள் மல்லிகா அர்ஜூன் வேலைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது கணவரை செல்போன் மூலமாக தொடர்பு கொண்ட திவ்யா மீண்டும் தகராறு செய்தார்.
இதனையடுத்து மல்லிகா அர்ஜூன் அவரது செல்போனை சுவிட்ச் ஆப் செய்தார். இதன் காரணமாக வாழ்க்கையில் விரக்தி அடைந்த திவ்யா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய அவரது கணவர் மனைவி தூக்கில் பிணமாக தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசா ரணை நடத்தினர்.
பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட திவ்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- விலங்குகள் நடமாடும் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு
- வனத்துறையினர் சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அகற்றினர்
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த இரு மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் இருந்தனர். இதனால் நிலத்தடி நீர் குறைந்து விவசாயத்திற்கு போதிய அளவில் தண்ணீர் இல்லாத சூழல் ஏற்பட்டது. இதனால் காய்கறிகள் விலை உச்சத்தில் இருந்து வந்தன. மேலும் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வந்தனர்.
இந்தநிலையில் கடந்த 4 நாட்களாக மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்ப சலனம் குறைந்துள்ளது. நேற்று இரவு மேட்டுப்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையால் பத்ரகாளியம்மன் கோவில் இருந்து தேக்கம்பட்டி செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் இப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் இப்பகுதியில் யானைகள் நடமாட்டம் இருக்கும் பகுதி என்பதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
தகவலறிந்த மேட்டுப்பாளையம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலையில் விழுந்திருந்த மரத்தை வெட்டி அகற்றினர். இதன்பின் இப்பகுதியில் மீண்டும் போக்குவரத்து இயக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டுநர்கள் நிம்மதி அடைந்தனர்.
- கேரள வனப்பகுதியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் கோவை வனச்சரகத்துக்கு வந்தது
- கோவை மட்டுமின்றி கேரளாவிலும் விசாரணை நடத்த வனஅதிகாரிகள் முடிவு
கவுண்டம்பாளையம்,
கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட தடாகம் பகுதியில் வனத்துறை ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது வீரபாண்டி செங்கல் சூளை பகுதியில், ஒரு பெண் யானை வாயில் படுகாயத்துடன் உயிருக்கு போராடுவது தெரிய வந்தது.
தொடர்ந்து வனத்துறை மருத்துவ குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த யானைக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோ திலும் டர்கடர்களின் சிகிச்சை பலனின்றி அந்த பெண் யானை பரிதாபமாக உயிரிழந்தது.பின்னர் அந்த யானையின் உடல் மாங்கரை வனஓய்வு விடுதிக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு கால்நடை டாக்டர்கள் சுகுமார், விஜயராகவன் அடங்கிய மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை நடத்தினர். பின்னர் யானையின் உடல் வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.
பன்றி வேட்டைக்கு வைத்த நாட்டு வெடி என அழைக்கப்படும் அவுட்டுக் காயை யானை கடித்ததில் பலத்த காயம் அடைந்து பலியானது தெரியவந்தது.
இதுதொடர்பாக வனத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். அந்த பகுதியில் எங்காவது அவுட்டுக்காய் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதா என்பதை கண்டுபிடிக்க மோப்பநாய் கொண்டு சோதனை நடத்தப்படுகிறது.
இதுகுறித்து கோவை வனச்சரக அதிகாரிகள் கூறுகையில், பலியான பெண் காட்டு யானைக்கு 6 வயது இருக்கும். அவுட்டுக் காயை கடித்ததால் யானைக்கு வாயில் படுகாயங்கள் ஏற்பட்டு உள்ளன. இதனால் அது உணவுகளை உட்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வந்து உள்ளது. இந்த நிலையில் தான் அந்த யானை வீரபாண்டி செங்கல் சூளை பகுதிக்கு வந்து உயிருக்கு போராடியது. சிகிச்சை அளித்தும் யானையை காப்பாற்ற முடியவில்லை.
யானை எங்கிருந்து வந்தது என்பது குறித்து வனப்பகுதியில் பொருத்த ப்பட்டு உள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு காமிரா மூலம் ஆய்வு செய்து பார்த்தோம். இதில் அந்த யானை கடந்த சில நாட்களுக்கு முன்புதான் கேரள வனப்பகுதியில் இருந்து கோவை வனச்சரகத்துக்கு வந்தது தெரிய வந்து உள்ளது.
எனவே அது எங்கு அவுட்டுக்காய் தின்று படுகாயம் அடைந்தது என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை. இதுகுறித்து கோவை வனச்சரகம் மட்டுமின்றி கேரளாவிலும் விசாரணை நடத்துவது என்று முடிவு செய்து உள்ளதாக தெரிவித்தனர்.
- மகளுக்கும் திருமணமாகி பாட்டி ஆனவர் 30 வயது வாலிபருடன் கள்ளக்காதல்
- கணவருக்கு தெரியாமல் வீட்டில் இருந்து ஓட்டம் பிடித்தார்
கோவை,
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள சேத்துமடையை சேர்ந்தவர் 42 வயது பெண். இவர் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் ஒரு மகள் உள்ளார்.
இந்தநிலையில் பெண்ணுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேலத்தை சேர்ந்த திருமண மாகாத 30 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளகாதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமை யில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர். பெண் அடிக்கடி அவரது கள்ளக்காதலனுடன் செல்போன் மூலமாக பேசி வந்தார். இதனை அவரது கணவர் கண்டித்தார். இதனால் கணவன்-மனை விக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று பெண்ணின் கணவர் வேலைக்கு சென்று இருந்தார். வீட்டில் தனியாக இருந்த பெண் அவரது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய பெண்ணின் கணவர் அவர் வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவரை அக்கம் பக்கத்தில் தேடினார். ஆனால் எந்த பலனும் இல்லை. இது குறித்து அவர் ஆனைமலை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திரும ணமாகாத வாலிபருடன் ஓட்டம் பிடித்த பெண்ணை தேடி வருகின்றனர்.
மாயமான பெண்ணின் மகளுக்கு திருமணம் ஆகி விட்டது. இந்தநிலையில் அந்த பெண், வாலிபர் ஒருவருடன் ஓட்டம் பிடித்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை:
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
அமைச்சர் உதயநிதியை மிரட்டிய அயோத்தி சாமியார் வாய்க்கு வந்ததை பேசுகிறார். அவர்களால் செய்ய முடியுமா? தலையை சீவ 10 கோடி தேவையில்லை, 10 ரூபாய் சீப்பு போதும் என அமைச்சர் உதயநிதி பதில் சொல்லிவிட்டார்.
நாங்கள் திராவிட இயக்க கொள்கையை 100 வருடங்களாக பேசி வருகிறோம். இவர்கள் புதிதாக ஆரம்பித்து ள்ளார்கள்.
பாரத் என வந்தாலும், இந்தியா என இருந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு சொல்லியுள்ளார். பெயரை எப்படி மாற்றினாலும் நாங்கள் எப்போதும் போல மத்திய பா.ஜ.க. அரசை ஒன்றிய அரசு என்று தான் அழைப்போம்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நடக்காத காரியம். அதற்கு தேர்தல் ஆணையம் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- சாமியாரின் மிரட்டலுக்கு தி.மு.க.வினரும், கூட்டணி கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
- கோவை மாநகரின் பல்வேறு இடங்களில் தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வினர் போட்டி போட்டு சுவரொட்டிகளை ஒட்டி உள்ளனர்.
கோவை:
தி.மு.க. இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்பது பற்றி பேசி இருந்தார். அதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜ.க.வினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அயோத்தியை சேர்ந்த பரமஹம்ச ஆச்சாரியார் என்ற சாமியார், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்ததோடு அவரது தலைக்கு ரூ.10 கோடி சன்மானம் அளிப்பதாக மிரட்டல் விடுத்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
சாமியாரின் இந்த மிரட்டலுக்கு தி.மு.க.வினரும், கூட்டணி கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கொலைவெறியை தூண்டும் விதமாக மிரட்டல் விடுத்துள்ள சாமியார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தி.மு.க. உள்பட பல்வேறு கட்சியினர் அந்தந்த மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் புகார் அளித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் சாமியார் பரமஹம்ச ஆச்சாரியாவுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் கோவை மாநகரின் பல்வேறு இடங்களில் தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வினர் போட்டி போட்டு சுவரொட்டிகளை ஒட்டி உள்ளனர்.
தி.மு.க. சார்பில் ஒட்டப்பட்டு உள்ள சுவரொட்டியில் "போலிச்சாமியாரே! 100 கோடி தர்ரோம் தொடுடா பார்க்கலாம்" என்ற வாசகங்களுடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
பா.ஜ.க. சார்பில் ஒட்டப்பட்டு உள்ள சுவரொட்டியில் "சனாதனம் எங்கள் உயிர் மூச்சு" என்ற வாசகங்களுடன் சுவரொட்டி ஒட்டப்பட்டு உள்ளது.
கோவை மாநகரில் டவுன்ஹால், லங்கா கார்னர், ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போட்டி போட்டு ஒட்டப்பட்டு உள்ள இந்த சுவரொட்டிகளை பொதுமக்கள் வியப்பாக பார்த்து செல்கின்றனர். இதனால் கோவை மாநகரில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
- தலைக்கு ரூ.10 கோடி சன்மானம் அளிப்பதாக பேசியதாக குற்றச்சாட்டு
- சட்டரீதியாக குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கோவை,
தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் கு. ராமகிருஷ்ணன் தலைமையில் இன்று அந்த அமைப்பை சேர்ந்த வர்கள் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவ லகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியபோது அவர் கூறிய சனாதனம் குறித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியை சேர்ந்த பரமஹம்ச ஆச்சாரியார் என்பவர் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக பேசியதோடு, அவரின் தலைக்கு ரூ.10 கோடி சன்மானம் அளிப்பதாகவும் பேசியது வேகமாக பரவி வருகிறது
மேலும் பரமஹம்ச ஆச்சாரியார் வெளியிட்ட காணொலி காட்சிகள் வன்முறையைத் தூண்டும் விதத்தில் உள்ளது. இவ்வகையில் ஒரு மாநில அமைச்சருக்கே கொலை மிரட்டல் விடுக்கின்ற வகையிலும் மற்றும் சமூகத்தில் கலவரத்தை தூண்டுகின்ற வகையிலும் பேசிய பரமஹம்ச ஆச்சாரியார் என்பவர் மீது சட்டரீதியாக குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறி உள்ளனர்.
- மருதமலை கோவில் வளாகத்தில் 8 ஏக்கரில் வாகன நிறுத்துமிடம் அமைக்க முடிவு
- முதல்-அமைச்சர் கோவைக்கு வருவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பேச்சு
கோவை,
சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 152- வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோைவ வ.உ.சி. மைதானத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக வீட்டு வசதி, நகர்புற வளர்ச்சித்துறை மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து அவர் கோவை மத்திய ஜெயில் வளாகத்தில் அமைந்துள்ள வ.உ.சி.யின் சிலை மற்றும் அவர் ஜெயிலில் இருந்து போது இழுத்த செக் ஆகியவற்றிற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தொழில் மையம் மூலம் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அதன்பின் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கோவை மாநகரில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க வேகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மருதமலை கோவில் செல்ல போக்குவரத்து வசதி குறைவாக உள்ளது. அங்கு கூட்ட நெரிசல் தவிர்க்கும் வகையில் வாகன நிறுத்துமிடம் 8 ஏக்கரில் அமைக்கப்படும்.
கோவை மாநகராட்சி வார்டுகளில் உள்ள பிரச்சினைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். .குடிநீர் பிரச்சினைக்கு ஒரு மாத காலத்தில் முழுமையாக தீர்வு காணப்படும்.
பீக் அவர் மின்கட்டணம் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் பேசி சுமூக முடிவு எடுக்கப்படும். டாஸ்மாக் கடை தொடர்பாக சீர்திருத்தங்கள் பல செய்ய வேண்டி உள்ளது. அதற்காக ஒரு மாத கால அவகாசம் கேட்டுள்ளோம். டாஸ்மாக் தொடர்பாக தவறாக கருத்துகள் மக்களிடம் கொண்டு செல்லப்படுகிறது. ஒரு மாத காலத்தில் டாஸ்மாக் தொடர்பான பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
பா.ஜ.க. சொல்வதை நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தால், மக்கள் பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு செயல்பட முடியாது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி என மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. இது ஜனநாயகத்தில் தவறான அறிவிப்பு. இதுகுறித்து மக்கள் முடிவு எடுக்க வேண்டும்.
முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 24 -ந் தேதி திருப்பூர் வருகிறார். கோவைக்கு அவர் ஆய்வு செய்ய வருவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சிகளில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மேயர் கல்பனா, மாநகராட்சி கமிஷனர் பிரதாப், துணைமேயர் வெற்றிச்செல்வன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், முன்னாள் எம்.பி நாகராஜ், கோவை மாநகர், மாவட்ட கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை தலைவர் ரேஸ்கோர்ஸ் ரகுநாத் உள்ட பலர் கலந்து கொண்டனர்.
- தொண்டாமுத்தூர் ரவி பழங்குடி கிராமத்துக்கு நேரில் சென்று ஆறுதல்
- சேதம் அடைந்த வீட்டிற்கு பழுது பார்க்கவும், மின்விளக்கு அமைக்கவும் நடவடிக்கை
வடவள்ளி,
கோவை தொண்டா முத்தூர் அருகே குப்பேபாளையம் கிராமம் உள்ளது. மலை அடிவாரப்பகுதியில் இந்த கிராமம் உள்ளதால் அவ்வப்போது வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவது வழக்கம்.
இந்த நிலையில் இன்று அதிகாலை யானை ஒன்று தனது குட்டியுடன் வனப்பகுதியில் இருந்து வெளியே குப்பேபாளையத்தில் பழங்குடியினர் வசிக்கும் பகுதிக்கு வந்தது.
அதிகாலை 3 மணியளவில் வந்த யானையை கண்டு நாய்கள் அதிக அளவில் சத்தம் போட்டது. சுதாரித்துக் கொண்டு மக்கள், யானை வீட்டின் ஓடுகளை உடைப்பது கண்டு வெளியே ஓடினர். வெள்ளிங்கிரி (43) மற்றும் நஞ்சன் (60) ஆகிய இருவரது வீடுகளை யானை சேதப்படுத்தியது.
வீட்டின் உள்ளே இருந்த கோதுமை, அரிசி போன்றவற்றை தின்றது. சுமார் 1 மணி நேரம் அங்கே குட்டியுடன் யானை நின் றது. வனத்துறைக்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் யானையை வனத்திற்குள் விரட்டினர்.
சுமார் 10 குடும்பங்கள் வசிக்கும் இந்த பகுதியில் கடந்த 2 வருடங்களாக மின் விளக்குகள் எரிவதில்லை. இரவு நேரங்களில் வனவி லங்குகள் நடமாட்டத்தால் வெளியில் வர முடியாமல் குழந்தைகளுடன் அவதிப்படுவதாக பழங்குடியினர் வேதனை தெரிவித்து உள்ளனர். அதிகாரிகள் மின் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, பழங்குடி மக்களுக்கு ஆறுதல் கூறி சேதம் அடைந்த வீட்டிற்கு பழுது பார்க்க நிதி உதவி கொடுத்து உடனடியாக மின் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
- ஸ்ரீமலையப்பசாமிகள், தாயாருடன் பவித்ரமாலை அணிந்து மாட வீதிகளில் எழுந்தருளினர்
- பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர்
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஆலாங்கொம்பு தென்திருமலை திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆவணி மாத பவித்ரோற்சவம் தொடங்கியது. அப்போது மாலை நேரத்தில் புண்ணியாக வாஜனம், மேதினி பூஜை, பூர்ணாஹூதி, திருவாராதனம், மந்திரபுஷ்பம், பிரபந்த சாற்றுமுறை, பிரசாத கோஷ்டி, ஏகாந்த சேவை நடைபெற்றது.
தென்மலை திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் பவித்ரோற்சவத்தின் 2-ம் நாள் நிகழ்ச்சியான சுப்ரபாதத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது. பின்னர் புண்ணியாக வாஜனம், பூர்ணாஹூதி, திருவாராதனம், சாற்றுமுறை, பிரசாத கோஷ்டி மற்றும் மலையப்பசாமி உடன் எழுந்தருளிய ஸ்ரீதேவி-பூதேவி தாயாருக்கும் ஸ்நபன திருமஞ்சனமும் நடத்தப்பட்டது.
தொடர்ந்து ஸ்ரீமலையப்பசாமிகள், ஸ்ரீதேவி-பூதேவி தாயாருடன் பவித்ர மாலை அணிந்து மாட வீதிகளின் வழியாக வலம் வந்து யாக சாலையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர்.
- தீயணைப்பு போலீசார் வருவதற்குள் கடை தீக்கிரையானது
- கடைக்கு யாராவது தீவைத்தார்களா என விசாரணை
வடவள்ளி,
கோவை வடவள்ளி அருகே உள்ள பெரியார் நகர் 3-வது வீதியைச் சேர்ந்தவர் பிரபா (வயது 65). இவரது வீட்டின் முன்பு ஆறுச்சாமி என்பவர் கடந்த 12 ஆண்டுகளாக துணி அயர்ன் செய்யும் பெட்டிக்கடை நடத்தி வந்தார்.
இன்று அதிகாலை திடீரென அந்த அயர்ன் கடை தீப்பிடித்து எரிந்தது. அந்த வழியாகச் சென்றவர்கள் இதுபற்றி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வருவதற்குள் கடை முற்றிலும் எரிந்து நாசமானது. கடையில் இருந்த துணிகளும் தீக்கிரையானது.
இதுபற்றி வடவள்ளி போலீஸ்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அந்த கடைக்கு யாராவது தீவைத்தார்களா, அல்லது விபத்து காரணமாக தீப்பிடித்ததா என்பது பற்றி விசாரணை நடக்கிறது.






