என் மலர்tooltip icon

    சென்னை

    • விஜய் தலைமையில் வலுவான கூட்டணி அமைந்தால் கடுமையான போட்டியாக அமையும்.
    • 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தான் செல்லும்.

    சென்னை அடையாறில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

    வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக- தவெக இடையே தான் போட்டி.

    2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தான் செல்லும்.

    விஜய் தலைமையில் வலுவான கூட்டணி அமைந்தால் கடுமையான போட்டியாக அமையும்.

    மனோஜ் பாண்டியன் திமுகவிற்கு சென்றது வருத்தமளிக்கிறது. இருப்பினும், மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்ததற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம்.

    பல கட்சிகளுடன் கூட்டணி தொடர்பாக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடக்க கட்டத்தில் உள்ளது. இறுதி முடிவு எடுக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், ரகுபதி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது.
    • ம.நீ.ம., ம.ம.க., ஐ.யூ.எம்.எல்., ஆம் ஆத்மி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 20 கட்சிகள் பங்கேற்றுள்ளன.

    கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, கட்சிகள் மேற்கொள்ளும் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியது.

    இந்நிலையில் பொதுக்கூட்டங்கள், பிரசார கூட்டங்கள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், ரகுபதி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது.

    கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், சி.பி.எம்., சி.பி.ஐ., வி.சி.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ஜ.க., த.வா.க., ம.நீ.ம., ம.ம.க., ஐ.யூ.எம்.எல்., ஆம் ஆத்மி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 20 கட்சிகள் பங்கேற்றுள்ளன.

    • விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • ரேஸை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    சென்னை:

    ராயப்பேட்டை பீட்டர்ஸ் பாலத்தில் நள்ளிரவில் பைக் ரேஸின்போது ஏற்பட்ட விபத்தில், ரேஸில் ஈடுபட்ட சுஹைல், எதிரே ஹெல்மெட் அணிந்து வந்த குமரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் பைக் ரேஸில் ஈடுபட்ட வாலிபர் சுஹைலின் நண்பர் சோயல் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரேஸை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும், நள்ளிரவில் ரேஸில் ஈடுபடும் சம்பவங்கள் அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது. 

    • நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ11 ஆயிரத்து 180-க்கும், சவரன் ரூ.89 ஆயிரத்து 440-க்கும் விற்பனையானது.
    • வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை தொடர்ந்து உச்சத்தில் உயர்ந்து அனைத்து தரப்பு மக்களையும் விழிபிதுங்க வைத்தது. மேலும் காலையில் ஒரு விலை, மாலையில் ஒரு விலை என இருவேளையிலும் தங்கம் விலை உயர்வதும், குறைவதுமாக இருந்ததால் மக்கள் குழப்பத்தில் இருந்தனர். இதனிடையே, தங்கம் கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் அதன் முந்தைய வாரத்தை விட சற்றே விலை குறைந்து விற்பனையானது.

    சென்னையில் கடந்த 3-ந்தேதி அன்று ஒரு கிராம் தங்கம் ரூ.11 ஆயிரத்து 350-க்கும், சவரன் ரூ.90 ஆயிரத்து 800-க்கும் விற்பனையானது. நேற்றுமுன்தினம் சவரனுக்கு ரூ.800 விலை குறைந்து ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் நேற்றும் தங்கம் விலையில் இறங்குமுகம் காணப்பட்டது. ஒரு சவரனுக்கு ரூ.560 குறைந்தது. அதன்படி சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ11 ஆயிரத்து 180-க்கும், சவரன் ரூ.89 ஆயிரத்து 440-க்கும் விற்பனையானது. தங்கம் விலை கடந்த 2 நாட்களில் பவுனுக்கு ரூ.1,360 குறைந்துள்ளது.

    இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,250-க்கும் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 164 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 64 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    05-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 89,440

    04-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 90,000

    03-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 90,800

    02-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 90,480

    01-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 90,480

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    05-11-2025- ஒரு கிராம் ரூ.163

    04-11-2025- ஒரு கிராம் ரூ.165

    03-11-2025- ஒரு கிராம் ரூ.168

    02-11-2025- ஒரு கிராம் ரூ.166

    01-11-2025- ஒரு கிராம் ரூ.166

    • பொது வாழ்வில் ஆத்திச்சூடியே அறியாதவர் விஜய்.
    • விஜய் நிதானம் இழக்காமல் அரசியல் நாகரிகத்தை கடைபிடிக்க வேண்டும்.

    த.வெ.க. பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றியதை சுட்டிக்காட்டி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    * பொது வாழ்வில் ஆத்திச்சூடியே அறியாதவர் விஜய்.

    * கரூர் கொடுந்துயருக்கு முழுக்காரணமான விஜய் பொறுப்பற்று திசை திருப்புகிறார்.

    * நடந்த சம்பவத்திற்கு துளியளவும் வருத்தப்படாமல், குற்ற உணர்ச்சியே இல்லாமல் உள்ளார் விஜய்.

    * காகிதக் கப்பலில் கடல் தாண்ட முனைகிறார் விஜய்.

    * ஆகாய வெளியில் கோட்டை கட்டுகிறார். அவரது நம்பிக்கைக் கனவுகள் கானல் நீராகிப் போய்விடும்.

    * தி.மு.க.வை சற்றும் மான வெட்கம் இன்றி எள்ளிநகையாட முனைகிறார் விஜய்.

    * முதலமைச்சர் மீது வெறுப்பையும், கசப்பையும் கொட்டி தீர்த்திருக்கிறார் விஜய்.

    * விஜயின் நிலைமை அனுதாபத்திற்கும் பரிதாபத்திற்கும் கண்டனத்திற்கும் உரியதாகும்.

    * விஜய் நிதானம் இழக்காமல் அரசியல் நாகரிகத்தை கடைபிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
    • முருகம்பேடு, பசும்பொன் நகர், கல்லிக்குப்பம், சந்திரசேகரபுரம்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (07.11.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    அம்பத்தூர்: பழனியப்பா, புதூர், ஏ.கே.அம்மன், பானு நகர், ஒரகடம், முருகம்பேடு, பசும்பொன் நகர், கல்லிக்குப்பம், சந்திரசேகரபுரம், வெங்கடாபுரம், கருக்கு.

    திருமுடிவாக்கம்: சிட்கோ 6வது, 8வது தெரு, மெயின் ரோடு மற்றும் லேன், வேலாயுதம் நகர், மீனாட்சி நகர், சதீஷ் நகர், கலைமகள் நகர், சாய்பாபா லேன், கற்பகம் நகர், 400 அடி ரோடு பார்க்கிங் யார்டு பகுதி, ஆசிரமம் அவென்யூ.

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    சென்னை:

    தமிழக உள் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தருமபுரி, கள்ளக்கறிச்சி, கிருஷ்ணகிரி பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், நெல்லை, திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • தங்களுக்கு வாக்களித்த தமிழக மகளிரின் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும்.
    • தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர்செய்வது தான் தற்போதைய உண்மையான தேவை.

    பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    வணக்கம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே!

    பிகாரில் காங்கிரசிற்கு இடமில்லை என்பதைத் தெளிவாக உணர்ந்துவிட்டதால், மக்களைத் திசைதிருப்பவே தங்களது சகோதரர் ராகுல்காந்தி

    அவர்கள் ஹரியானாவைக் கையில் எடுத்துள்ளார் என்பதை அனைவரும் அறிவர்.

    எங்கேயோ கேட்டதைப் போல இருக்கிறதா? ஆமாம், தமிழகத்தில் திமுகவிற்கு இடமில்லை என்பதைத் தெளிவாக உணர்ந்து, மக்களைத் திசைதிருப்ப SIR -ஐ கையில் எடுத்த தங்களது பாணி தான் இந்த நாடகத்திற்கு அடிப்படையே.

    அரசியல் சாசனத்தின்படி தன்னிச்சையாக செயல்படும் தேர்தல் ஆணையத்தை இப்படி எந்தவொரு அடிப்படையுமின்றி குறை சொல்வதை விடுத்து, தங்களுக்கு வாக்களித்த தமிழக மகளிரின் பாதுகாப்பை மேம்படுத்தி, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர்செய்வது தான் தற்போதைய உண்மையான தேவை.

    இதை செய்வீர்களா, முதல்வரே?

    பின்குறிப்பு : நீங்கள் செய்யமாட்டீர்கள் என்பதை அனைவரும் அறிவர்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பெண்கள் பாதுகாப்புக்காக போராட வேண்டிய சூழ்நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.
    • பா.ஜ.க. சார்பில் நாளை தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது.

    சென்னை தி.நகரில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நாடு சுதந்திரம் அடைய வேண்டும் என்பதற்காக வந்தே மாதரம் பாடல் எழுதப்பட்டு 150 ஆண்டு தொடக்கம் இதனை நாடு முழுவதும் கொண்டாட வேண்டும் என மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கூறி உள்ளார். அதன் அடிப்படை யில் நாடு முழுவதும் 'வந்தே மாதரம்' பாடல் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பதற் காக 7 நாட்கள் நிகழ்ச்சி தமிழக முழுவதும் நடைபெற உள்ளது.

    வரலாற்றில் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றியும் அதன் வீரர்களை பற்றியும் காங்கிரஸ் கட்சி குறைவான பதிப்புகளை வைத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு பதிப்புகளை தேடி தேடி சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு உரிய மரியாதை செலுத்தி வருகிறார். தமிழ்நாடு மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்தை எதிர் கொள்ள போகிறது. பெண்கள் பாதுகாப்புக்காக போராட வேண்டிய சூழ்நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.

    சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டு கால மாகிய பிறகும் பெண்கள் பகல், இரவு நேரத்தில் தனிமையில் வெளியே செல்ல முடியாத சூழ்நிலை நிலவுகிறது. பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருகிறது. கோவையில் மாணவி யினை 3 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத் காரம் செய்து ஆடையின்றி தூக்கி வீசப்பட்ட சம்பவம் வேதனை அளிக்கிறது.

    இதற்கு பா.ஜ.க. சார்பில் நாளை தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது. ஆனால் தி.மு.க. கட்சியைச் சார்ந்தவர்களும் அதன் கூட்டணியை சார்ந்த வர்களும் இதற்கு குரல் கொடுக்கவில்லை. இது போன்ற ஒரு சம்பவம் உத்தர பிரதேச மகாராஷ் டிரா மாநிலத்தின் நடை பெற்றிருந்தால் தி.மு.க. கூட்டணி கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பார்கள்.

    தமிழ்நாட்டில் கஞ்சா விற்பவர்களும் போதை ஆசாமியும் தான் சுதந்திரமாக சுற்றித் தெரிகிறார்கள். பெண்கள் சுதந்திரமாக இல்லை. போக்சோ உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை கையாளு வதில் தமிழகம் பின்தங்கி உள்ளது. நிர்பையா நிதியை கூட சரியாகப் பயன்படுத்த வில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாலியல் தாக்குதலுக்குள்ளான மாணவியின் மீதே பழியைச் சுமத்திப் பேசியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
    • திமுக, தனது கூட்டணிக் கட்சியினரை இது போன்று பேசத் தூண்டுவதும் கருதப்படும்.

    பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    திமுகவின் ஊதுகுழலாகவே மாறிவிட்ட ஒருவர், கோவை பாலியல் தாக்குதலுக்குள்ளான மாணவியின் மீதே பழியைச் சுமத்திப் பேசியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. குற்றவாளிகளைப் பற்றி எதுவும் கூறாமல், பாதிக்கப்பட்ட பெண்ணைப் பற்றி, முற்றிலும் பிற்போக்குத் தனமான கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

    திமுக ஆட்சியில், குட்டியை வைத்து ஆழம் பார்க்கும் குரங்கு கதையாக, முதலில் தனது ஊதுகுழல்களில் யாரையாவது வைத்து, பாதிக்கப்பட்ட பெண்கள் மீது குற்றம் சுமத்திச் செய்தியாக்கி, பின்னர் அந்த வழக்கை அப்படியே நீர்த்துப் போகச் செய்வது வழக்கமாகிவிட்டது.

    அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கிலும், மாணவியின் தனிப்பட்ட விவரங்களை பொதுவெளியில் வெளியிடும் அளவுக்குக் கீழ்த்தரமாக நடந்து கொண்டது இந்த திமுக அரசு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

    தவிர, கோவை மாணவி வழக்கில், குற்றவாளிகள் குறித்த மேலதிக தகவல்களை, காவல்துறை இதுவரை ஏன் வெளியிடவில்லை என்ற கேள்வி எழுகிறது. வழக்கம்போல, திமுக அரசில் செயலிழந்து நிற்கும் சட்டம் ஒழுங்கை மறைக்க, மடைமாற்றும் முயற்சிகளில் ஒன்றாகவே, திமுக, தனது கூட்டணிக் கட்சியினரை இது போன்று பேசத் தூண்டுவதும் கருதப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பாஜகவின் தேர்தல் வெற்றிகள் பெரும் சந்தேகங்களைத் தருகிறது.
    • வலுவான ஆதாரங்களுடன் என் சகோதரர் ராகுல் காந்தி நிரூபித்துள்ளார்.

    அரியானாவில் வாக்குத் திருட்டு நடைபெற்றதாக எம்.பி.ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார். இந்தநிலையில், இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் நடந்த வாக்குத் திருட்டு அதிர்ச்சி அளிக்கிறது. இதனை வலுவான ஆதாரங்களுடன் என் சகோதரர் ராகுல் காந்தி நிரூபித்துள்ளார்.

    பாஜகவின் தேர்தல் வெற்றிகள் பெரும் சந்தேகங்களைத் தருகிறது. வாக்காளர் பட்டியலில் மோசடி செய்து மக்கள் தீர்ப்பையே திருடுவது அம்பலமாகியுள்ளது, ஆதாரங்கள் வெளியிட்ட பின்பும் தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்கவில்லை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
    • நாளை கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    வட தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், தெற்கு தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியின் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    தமிழகத்தில் இன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்தில் நாளை கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×