என் மலர்
செங்கல்பட்டு
- திருட்டுத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மறைமலைநகர்:
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த அனுமந்தபுரம் டாஸ்மாக் கடை அருகே திருட்டுத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு திருட்டுத்தனமாக மதுபானங்களை விற்பனை செய்து கொண்டிருந்த அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்த முருகன் (வயது 47), என்பவரை கைது செய்து அவரிடமிருந்து மதுபான மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் அருகே வீடுகள் மற்றும் ஒவ்வொரு வீட்டுக்கும் மின் விநியோகம் செய்யும் மின்சார கம்பிகள் அமைந்துள்ளன.
- 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் காங்கிரீட் தூண்கள் பழுதடைந்து தூண்களில் உள்ள கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் சேதம் அடைந்துள்ளது.
செங்கல்பட்டு:
காட்டாங்கொளத்தூர் ஊராட்சியில் அமைந்துள்ள திருவடிசூலம் ஊராட்சிக்கு உட்பட்ட புலிக்குடிவனம் கிராமத்தில் 150 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
இப்பகுதியில் 40 வருடங்களுக்கு முன்பு காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலமாக கிணற்றின் அருகே 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.
கிணற்றில் இருந்து தண்ணீரை எடுத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நிரப்பி அங்குள்ள குடும்பங்களுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது புலிக்குடிவனம் கிராமத்தில் மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்ற 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் காங்கிரீட் தூண்கள் பழுதடைந்து தூண்களில் உள்ள கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் சேதம் அடைந்துள்ளது.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் அருகே வீடுகள் மற்றும் ஒவ்வொரு வீட்டுக்கும் மின் விநியோகம் செய்யும் மின்சார கம்பிகள் அமைந்துள்ளன. மிகவும் ஆபத்தான நிலையில் திருவடிசூலம் ஊராட்சியில் புலிக்குடிவனம் கிராமத்தில் அமைந்துள்ள பழுதடைந்து உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அப்புறப்படுத்தி அதே இடத்தில் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க வேண்டும். பாதுகாப்பற்ற நிலையில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் அருகே அமைந்துள்ள திறந்தவெளி கிணற்றுக்கு கம்பி வலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தனியார் தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் வில்லிபாக்கம் என்ற இடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கூறி இந்த போராட்டம் நடந்தது.
மதுராந்தகம்:
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த வில்லிபாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று சூனாம்பேட்டையில் இருந்து வெண்ணங்குபட்டு செல்லும் சாலையில் வில்லிபாக்கம் என்ற இடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கூறி இந்த போராட்டம் நடந்தது.
- தடகள போட்டியில் 1,200 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
- 18-வது தேசிய இளைஞர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தமிழக அணி சார்பில் தேர்வு செய்யப்படுவார்கள்.
செங்கல்பட்டு:
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 4-வது மாநில இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ( 18 முதல் 20 வயதுக்குட்பட்டோர்) இன்றும், நாளையும் நடத்தப்படுகிறது. இந்த போட்டி வண்டலூரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தில் இன்று காலை தொடங்கியது.
2 நாட்கள் நடைபெறும் மாநில இளையோர் தடகள போட்டியில் 1,200 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த போட்டியில் சிறப்பாக செயல்படும் ஜூனியர் வீரர், வீராங்கனைகள் கர்நாடக மாநிலம் உடுப்பியில் மார்ச் 10 முதல் 12-ந்தேதி வரை நடைபெறும். 18-வது தேசிய இளைஞர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தமிழக அணி சார்பில் தேர்வு செய்யப்படுவார்கள்.
- 8 மாநிலங்களை சேர்ந்த அணியினர் பங்கேற்றனர்.
- வின்னர் கோப்பையை முதலாவதாக மும்பை-அஜந்தா அணியினர் பெற்றனர்.
மாமல்லபுரம்:
தேசிய அளவிலான அணுசக்திதுறை ஊழியர்களின் ஆண்-பெண் "அட்டாமிக் பேட்மிண்டன்" போட்டி கல்பாக்கம் நகரியத்தின் நெஸ்கோ உள்விளையாட்டு அரங்கத்தில் 5 நாட்கள் நடைபெற்றது. இதில் 8 மாநிலங்களை சேர்ந்த அணியினர் பங்கேற்றனர்.
வின்னர் கோப்பையை முதலாவதாக மும்பை-அஜந்தா அணியினர் பெற்றனர். இரண்டாம் இடத்தை கல்பாக்கம் இராமேஸ்வரம் அணியினர் பெற்றனர். பெண்கள் பிரிவில் மும்பை அணியினர் வெற்றி பெற்றனர். கல்பாக்கம் அணுமின் நிலைய இயக்குனர் எஸ்.பி.ஷெல்கே வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகளை வழங்கினார்.
- சைவ உணவகத்தில் தங்களுக்கு சிக்கன் பிரைட் ரைஸ் வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
- ஊழியர்கள் இது சைவ உணவகம். இங்கு அசைவம் கிடையாது என்று கூறியுள்ளனர்.
தாம்பரம்:
தாம்பரம் அடுத்த பதுவஞ்சேரியில் சைவ உணவகம் இயங்கி வருகிறது. இந்த உணவகத்தில் நேற்று இரவு தாம்பரம் ஆயுதப்படையை சேர்ந்த போலீசார் 2 பேர் சாதாரண உடையில் சாப்பிடுவதற்காக மது போதையில் சென்றதாக கூறப்படுகிறது.
சைவ உணவகத்தில் தங்களுக்கு சிக்கன் பிரைட் ரைஸ் வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதற்கு அங்கிருந்த ஊழியர்கள் இது சைவ உணவகம். இங்கு அசைவம் கிடையாது என்று கூறியுள்ளனர். ஆனாலும் அவர்கள் தங்களுக்கு பிரைட் ரைஸ் வேண்டும் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் ஆயுதப்படை போலீசாருக்கும் கடை ஊழியர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் சரமாரியாக தாக்கி கொண்டனர், இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏறடுத்தியுள்ளது.
- போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை போலீசார் மடக்கி விசாரித்தனர்.
- பல இடங்களிலும் செல்போன் திருட்டில் ஈடுபட்டதாக தெரிவித்தார். போலீசார் அசோக்கை கைது செய்தனர்.
திருக்கழுக்குன்றம்:
திருக்கழுக்குன்றம் அடுத்த புலியூர் கிராம பகுதிகளில் பலரது செல்போன் தொடர்ந்து காணாமல் போனது. இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருத்தனர். அதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் திருக்கழுக்குன்றம் கொத்திமங்கலம் பைபாஸ் சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை போலீசார் மடக்கி விசாரித்தனர்.
அப்போது அவர் பூலியூர் பகுதியை சேர்ந்த அசோக்(வயது 23) என்பதும் அவரிடம் விலை உயர்ந்த பல செல்போன்கள் இருந்த நிலையில் போலீசாரிடம் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து அவரிடம் விசாரணை நடத்தினர். பல இடங்களிலும் செல்போன் திருட்டில் ஈடுபட்டதாக தெரிவித்தார். போலீசார் அசோக்கை கைது செய்தனர்.
- முந்திரிகாட்டை குத்தகை எடுப்பது தொடர்பாக வேறு சிலரும் போட்டிபோட்டி வந்ததாக தெரிகிறது.
- குத்தகை தகராறில் கொலை நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அருகே உள்ள நெம்மேலியில் வசித்து வந்தவர் சகாதேவன் (வயது 87). இவரது மனைவி ஜானகி (80). இவர்கள் அப்பகுதியில் உள்ள முந்திரி காட்டை குத்தகைக்கு எடுத்து பராமரித்து அங்கேயே தனியாக வசித்து வந்தனர்.
நேற்று மாலை அருகில் வசிக்கும் அவர்களது மகன் ஒருவர் சகாதேவனை பார்க்க வந்தார். அப்போது வீட்டின் வெளியே சகாதேவன் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார். அவர் தவறி கீழே விழுந்து இறந்து இருக்கலாம் என்று உறவினர்கள் நினைத்தனர்.
ஆனால் வீட்டில் இருந்த தாய் ஜானகி மாயமாகி இருந்தார். அவரை தேடிவந்தனர். இதுகுறித்து மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சகாதேவனின் உடலை கைப்பற்றி பரிசோதனைகை்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மாயமான ஜானகியை உறவினர்கள் தேடிவந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை முந்திரி தோட்டத்தில் உள்ள முட்புதரில் ஜானகி கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
டி.எஸ்.பி.ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். ஜானகி அணிந்து இருந்த நகைகள் மாயமாகி இருந்தன. அவரது கழுத்தும் அறுக்கப்பட்டு இருந்தது. மர்ம கும்பல் வீட்டில் வயதான தம்பதி தனியாக இருப்பதை நோட்டமிட்டு சகாதேவனையும், ஜானகியையும் கொடூரமாக கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
முதலில் சகாதேவனை மர்ம கும்பல் அடித்துக் கொலை செய்து உள்ளனர். இதனை கண்ட ஜானகி அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடிய போது அவரையும் தாக்கி கழுத்தை அறுத்து கொன்று விட்டு நகைகளை கொள்ளையடித்து உள்ளனர். பின்னர் ஜானகியின் உடலை முட்புதரில் வீசி விட்டு சென்றதால் அவர் கொலையுண்டது உடனடியாக தெரியவில்லை.
மொத்தம் சுமார் 20 பவுன் நகை கொள்ளைபோய் இருப்பதாக தெரிகிறது. மேலும் வீட்டில் இருந்த பணத்தையும் கொலையாளிகள் அள்ளி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. எவ்வளவு பணம் கொள்ளை போனது என்று தெரியவில்லை.
தம்பதி கொலை நடந்த வீட்டில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் மதுக்கடை உள்ளது. அங்கு வந்த மர்ம நபர்கள் யாரேனும் வயதான தம்பதியினர் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்டு கொலை-கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக தனிப்படை போலீசார் அருகில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருன்றனர்.
மேலும் முந்திரிகாட்டை குத்தகை எடுப்பது தொடர்பாக வேறு சிலரும் போட்டிபோட்டி வந்ததாக தெரிகிறது. இந்த தகராறில் கொலை நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
வீட்டில் தனியாக இருந்த வயதான தம்பதியை கொன்று நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நகரத்தின் முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது
- பேரூராட்சி நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட நகர பகுதி வீதிகளில் நாளுக்கு நாள் மாடுகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் நகரத்தின் முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இரவு நேரங்களில் மாடுகளின் கூட்டத்தில் வாகனங்கள் புகுந்து விபத்தை ஏற்படுத்துகிறது. விபத்துகளில் சிக்கி மாடுகளும், வாகன ஓட்டிகளும் உயிரிழந்த சம்பவம் பலமுறை நடந்திருக்கிறது.
இதை தடுக்கும் வகையில் பேரூராட்சி நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
- ஜி-20 மாநாட்டு விருந்தினர், மாமல்லபுரம் வருகையின்போது புராதன சின்னங்கள் பகுதி பாதைகள் சீரமைக்கப்பட்டது.
- தொல்லியல்துறை டிக்கெட் கவுண்டர்களில் கூடுதல் வீல் சேர்கள் வைத்துள்ளனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்துரதம், வெண்ணெய் உருண்டைக்கல் பாறை பகுதிகளில் சரியான சமநிலை கல்பாதை இல்லாததால் மாற்று திறனாளிகள், முதியவர்கள் வீல் சேரில் அருகில் சென்று பார்க்க முடியாத நிலை இருந்தது.
இந்நிலையில் அண்மையில் ஜி-20 மாநாட்டு விருந்தினர், மாமல்லபுரம் வருகையின்போது புராதன சின்னங்கள் பகுதி பாதைகள் சீரமைக்கப்பட்டது. இதில் மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வசதிக்கு ஏற்பவும் பாதை சம நிலையாக அமைக்கப்பட்டது. தற்போது பாதை பணிகள் முழுவதும் முடிவடைந்த நிலையில் அவர்கள் மகிழ்ச்சியுடன் அருகில் சென்று மாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்த்து ரசித்து வருகின்றனர். தொல்லியல்துறை டிக்கெட் கவுண்டர்களில் கூடுதல் வீல் சேர்களும் வைத்துள்ளனர்.
- கடன் பிரச்சினையால் ஜெயந்தி தற்கொலை செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
- தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாம்பரம்:
தாம்பரத்தை அடுத்த சந்தோஷபுரத்தை சேர்ந்தவர் ஜெயந்தி (வயது 31). தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் நிச்சயித்து இருந்தனர். அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்தது. இதையடுத்து திருமண அழைப்பிதழ்களை ஜெயந்தியின் பெற்றோர் உறவினர்களுக்கு கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில் வழக்கம்போல் ஜெயந்தியின் பெற்றோர் திருமண அழைப்பிதழ் கொடுக்க வெளியே சென்றனர். வீட்டில் ஜெயந்தி மட்டும் தனியாக இருந்தார். பெற்றோர் திரும்பி வந்தபோது வீட்டில் மகள் ஜெயந்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
கடன் பிரச்சினையால் ஜெயந்தி தற்கொலை செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஜஸ்டின் மொய்தீன் என்பவர் சிறுமியை அவரது வீட்டுக்கு அழைத்து சென்று ஒரு நாள் முழுவதும் பாலியல் தொந்தரவு செய்து இருப்பது தெரியவந்தது.
- அதிர்ச்சி அடைந்த மக்கள் ஜஸ்டின் மொய்தீனுக்கு தர்ம அடி கொடுத்தனர்.
தாம்பரம்:
பல்லாவரம் அடுத்த நாகல்கேணி திடீர் நகர் பகுதியில் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் தங்கி கட்டிட வேலை செய்து வருகின்றனர். இந்தநிலையில் ஒரு தம்பதி பம்மல் பகுதியில் கட்டிட வேலை செய்வதற்காக அவர்களது 4 வயது சிறுமியை அருகில் உள்ள உறவினரிடம் விட்டுச் சென்றனர்.
பின்னர் மாலையில் திரும்பி வந்த போது மகள் மாயமாகி இருந்தார். தேடியபோது வீட்டின் அருகே மயக்க நிலையில் மகள் கிடப்பதை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே மகளை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுமியிடம் விசாரித்த போது அதே பகுதியை சேர்ந்த ஜஸ்டின் மொய்தீன் என்பவர் சிறுமியை அவரது வீட்டுக்கு அழைத்து சென்று ஒரு நாள் முழுவதும் பாலியல் தொந்தரவு செய்து இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஜஸ்டின் மொய்தீனுக்கு தர்ம அடி கொடுத்தனர்.
இது குறித்து சங்கர் நகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் ஜஸ்டின் மொய்தீனை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.






