என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • தலைமை, துணிவு, சாதனை, திறமை, புலமை மற்றும் கருணை ஆகிய பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றன.
    • பெண்களை கவுரவிப்பது, இளைஞர்களிடையே ஒரு நேர்மறையான சிந்தனையை உருவாக்குவதாக அமைந்துள்ளது.

    'அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதெற்கு' என்று இருந்த நிலை மாறி பெண்கள் இப்போது பல்வேறு துறைகளிலும் சாதனைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். படித்த பெண்கள் சமுதாயத்தில் தலை நிமிர்ந்து நிற்கின்றனர்.

    "பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்...

    பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்

    எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே...

    பெண்இளைப்பில்லை காணென்று கும்மியடி...

    ஏட்டையும் பெண்கள் தொடுவது...

    தீமையென்றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்

    வீட்டுக்குள்ளே பெண்ணை

    பூட்டிவைப்போமென்றவிந்தை மனிதர் .. தலை கவிழ்ந்தார்"

    என பெண் விடுதலைக்கு பாரதி பாடியவை நனவாயிற்று.

    இவ்வாறு சாதனை புரியும் பெண்களை கௌரவிக்கும் விதமாக "மாதரே" என்ற பெயரில் கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி விருது வழங்கும் விழாவை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. பெண்களின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், பெண்களை ஊக்குவிக்கவும், பெண் சாதனையாளர்களை கௌரவிக்கும் வகையில் தலைமை, துணிவு, சாதனை, திறமை, புலமை மற்றும் கருணை ஆகிய பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றன.

    இந்த நிகழ்வின் முக்கிய குறிக்கோள், பெண்கள் சாதனையாளர்களை அடையாளம் கண்டு, அந்தந்த துறைகளில் முன்மாதிரியாக இருப்பவர்கள் மற்றும் இளம் திறமைகளை ஊக்குவிப்பதோடு எதிர்கால சந்ததியினரை ஊக்கப்படுத்தும் விதமாகவும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

    கடந்த மூன்று ஆண்டுகளில், பல்வேறு வகைகளில் சாதனை படைத்த 42 சாதனை பெண்கள் கௌரவிக்கப்பட்டுள்ளார்கள். இந்த ஆண்டு ஒட்டுமொத்த சமூகத்திற்கு உத்வேகமாக இருக்கும் 13 தகுதி மற்றும் திறமை வாய்ந்த பெண்களை கௌரவிக்க திட்டமிட்டுள்ளார்கள்.

    இந்த அற்புதமான பெண்களை கவுரவிப்பது, இளைஞர்களிடையே ஒரு நேர்மறையான சிந்தனையை உருவாக்குவதாக அமைந்துள்ளது. சமூகம், பொருளாதாரத்திற்கு பெண்கள் ஆற்றும் இந்த பங்களிப்பை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்காகவே மாதரே விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இவ்விழா நாளை மறுநாள் (பிப்ரவரி 24) கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற உள்ளது.

    • விண்ணப்பம் சமர்ப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியதில்லை.
    • விண்ணப்பங்கள் பெறும் காலம் மேலும் நீட்டிக்கப்பட்டு, வருகிற 6-ந்தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக மருத்துவ அலுவலர், ஒப்பந்த செவிலியர், பல்நோக்கு சுகாதார பணியாளர், ஆதரவு ஊழியர் பணிநியமனம் செய்ய விண்ணப்பங்கள் 27.1.2023 அன்று மாலைக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    24.1.2023 நாளிட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அரசாணை எண்.26-ல் மேற்படி பணிகளுக்கான பணிவிவரம் மற்றும் பணி பொறுப்புகள் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மேற்கண்ட காலி பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிநியமனம் செய்ய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறும் காலம் மேலும் நீட்டிக்கப்பட்டு, வருகிற 6-ந்தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    ஏற்கெனவே, விண்ணப்பம் சமர்ப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியதில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

    விண்ணப்பங்களை செயற்செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம், துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள், செங்கல்பட்டு அலுவலத்திற்கு நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு (https://chengalpattu.nic.in-ல் பார்க்கவும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • முதல் அணு உலை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்தது.
    • இரண்டாவது அணு உலையில் இன்று அதிகாலை மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் இயங்கி வரும் சென்னை அணுமின் நிலையத்தில் இரண்டு அணுஉலை உள்ளது. இதில் தலா 220 மெகாவாட் வீதம் 440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி ஆகிவந்தது. அதில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் முதல் அணு உலை பழுதடைந்து மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இன்று வரை அது இயங்கவில்லை.

    இந்நிலையில் இயங்கி வந்த இரண்டாவது அணு உலையில் நேற்று நள்ளிரவில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது., அதிகாரிகள் சரி செய்ய முயற்சித்து முடியாததால், இன்று அதிகாலை மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உற்பத்தி ஆகிவந்த 220 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கபட்டது. ஒரிரு நாட்களில் சரியாகி விடும் என அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • மெட்ரோ ரெயில் பணிக்காக பல்வேறு இடங்களில் சாலைகளின் குறுக்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளதால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
    • மாதவரம்-சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் சோழிங்கநல்லூர் முதல் பெருங்குடி வரை ஓ.எம்.ஆர் சாலையில் மெட்ரோ ரெயில் பணிக்காக சாலையின் நடுவே பல இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    திருப்போரூர்:

    சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டப்பணி 118.9 கி.மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பில் நடந்து வருகிறது. இதில் மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை 45 கி.மீட்டர் தூரத்துக்கும், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கி.மீட்டர் தூரத்துக்கும், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீட்டர் தூரத்துக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

    தற்போது மெட்ரோ ரெயில் பணிக்காக ராட்சத எந்திரம் மூலம் சுரங்கப் பாதைகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மெட்ரோ ரெயில் பணிக்காக பல்வேறு இடங்களில் சாலைகளின் குறுக்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளதால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மாதவரம்-சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் சோழிங்கநல்லூர் முதல் பெருங்குடி வரை ஓ.எம்.ஆர் சாலையில் மெட்ரோ ரெயில் பணிக்காக சாலையின் நடுவே பல இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக ஓ.எம்.ஆர். சாலையில் தொடர்ந்து கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இன்று காலை கந்தன் சாவடி முதல் கண்ணகி நகர் வரை சுமார் 5 கி.மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    மோட்டார் சைக்கிள்கள், கார்கள் மற்றும் அவ்வழியே வந்த தனியார் நிறுவன பஸ்கள் ஸ்தம்பித்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். வாகனங்கள் மெல்ல, மெல்ல ஊர்ந்து சென்றன. இதனால் வேலைக்கு செல்வோர்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோரும் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. கண்ணகி நகர் துரைப்பாக்கம், பெருங்குடி, கந்தன்சாவடி முழுவதும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. 5 கி.மீட்டர் தூரத்தை கடக்க சுமார் ஒரு மணிநேரம் வரை ஆனது. போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, 'மெட்ரோ ரெயில் பணியால் ஓ.எம்.ஆர். சாலையில் தினந்தோறும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இந்த சாலையில் செல்வதே கடினமாக உள்ளது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அதிகாரிகள் மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

    • செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரத்தில் வரும் 23 மற்றும் 24ம் தேதிகளில் விளையாட்டு வீரர்களுக்கான ஏலம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • ஒவ்வொரு அணிக்காக மொத்த ஏலத்தொகை ரூ.70 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மகாபலிபுரம்:

    தமிழ்நாட்டில் உள்ளூர் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் விதமாக ஐபிஎல் போன்றே, டிஎன்பிஎல் போட்டிகள் ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. சர்வதேச வீரர்களும், உள்ளூர் வீரர்களும் இணைந்து ஆடும் இப்போட்டி, தமிழகத்தில் பிரபலமானது. வரும் ஆண்டிற்கான டிஎன்பிஎல் போட்டிக்கான வீரர்கள் தேர்வு குறித்த ஏலம் பற்றி, டிஎன்பிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரத்தில் வரும் 23 மற்றும் 24ம் தேதிகளில் விளையாட்டு வீரர்களுக்கான ஏலம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் டிஎன்பிஎல் போட்டியில் முதல்முறையாக வீரர்கள் ஏலம் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    ஏற்கனவே டிஎன்பிஎல் நிர்வாகக் குழு, ஒவ்வொரு உரிமையாளரும் 2 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம் அதில் ஒரு வீரர் ஏ அல்லது பி டிவிஷனில் இருந்தும், மற்றொரு வீரர் சி அல்லது டி டிவிஷனில் இருந்தும் தக்கவைக்கலாம்.

    மேலும் ஒவ்வொரு அணிக்காக மொத்த ஏலத்தொகை ரூ.70 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ஏ பிரிவு வீரருக்கு ரூ. 10 லட்சம், பி பிரிவு வீரருக்கு ரூ. 6 லட்சம், சி பிரிவு வீரருக்கு ரூ. 3 லட்சம் மற்றும் டி பிரிவு வீரருக்கு ரூ. 1.50 லட்சம் அடிப்படை தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதில் ஏ பிரிவு வீரர்- சர்வதேச போட்டிகளில் ஆடியவர், பி பிரிவு வீரர்- பிசிசிஐ உள்நாட்டுப் போட்டிகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய வீரர்கள், சி பிரிவு வீரர்- ஏ மற்றும் பி பிரிவில் இடம்பெறாத மற்றும் குறைந்தது 30 டிஎன்பில் போட்டிகளுக்கு மேல் விளையாடிய வீரர், டி பிரிவு வீரர்- மற்ற வீரர்கள். தக்கவைப்பதற்கான காலக்கெடு ஜனவரி 30 அன்று முடிந்தது.

    இதில் ஒவ்வொரு அணியினாலும் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் விவரம்:

    1) சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - ஜெகதீசன் (பிரிவு பி),சசிதேவ் (பிரிவு சி) - ரூ.61 லட்சம்

    2) நெல்லை ராயல் கிங்ஸ் - அஜிட்ஸ் (பிரிவு பி), கார்த்திக் மணிகண்டன் (பிரிவு டி) - ரூ.62.50 லட்சம்

    3) ஐடீரிம் திருப்பூர் தமிழன்ஸ் - துஷார் ரஹீஜா (பிரிவு டி) - ரூ.68.50 லட்சம்

    4) லைகா சூப்பர் கிங்ஸ் - ஷாரூக்கான் (பிரிவு பி), சுரேஷ் குமார் (பிரிவு டி) - ரூ.62.50 லட்சம்

    5) திண்டுக்கல் டிராகன்ஸ் - ரவிச்சந்திரன் அஷ்வின் (பிரிவு ஏ) - ரூ.60 லட்சம்

    6) ரூபி திருச்சி வாரியர்ஸ் - ஆண்டனி தாஸ் (பிரிவு பி) - ரூ.ரூ.64 லட்சம்

    7) சேலம் ஸ்பார்டன்ஸ் - கணேஷ் மூர்த்தி (பிரிவு சி) - ரூ.67 லட்சம்

    8.) மதுரை பேந்தர்ஸ் - கவுதம் (பிரிவு டி) - ரூ.68.50 லட்சம்

    • சதுரங்கபட்டினம் சாலையில் திறந்தவெளி மைதானத்தில் சம்பத் மர்மமாக இறந்து கிடந்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் அடுத்த ரத்தினபுரம் பகுதியை சேர்ந்தவர் சம்பத் (வயது50). கல்பாக்கம் நகரியத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். இந்த நிலையில் கல்பாக்கம் அடுத்த சதுரங்கபட்டினம் சாலையில் திறந்தவெளி மைதானத்தில் சம்பத் மர்மமாக இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் திருக்கழுக்குன்றம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பத்தை மர்மநபர்கள் அடித்து கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 40 ஆயிரத்து 598 பறவைகள் இருந்தன.
    • தையூர், நெமிலிச்சேரி ஏரிகளில் தட்டை வாயன் வாத்துக்கள் காணப்பட்டன

    மாமல்லபுரம்:

    தமிழகத்தில் இந்த ஆண்டு பறவைகள் கணக்கெடுப்பு கடந்த மாதம் 28-ந் தேதி, 29-ந் தேதி நடைபெற்றது. சதுப்பு நிலங்கள், நீர் நிலைகளில் உள்ள பறவைகள் குறித்து வனத்துறையினர், பறவை ஆர்வலர்கள் மாணவர்கள் கணக்கெடுப்பு செய்தனர்.

    இதில் அதிகபட்சமாக நகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 40 ஆயிரத்து 598 பறவைகள் இருந்தன. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 24 ஆயிரத்து 882 பறவைகளும், திருவள்ளூர் மாவட்டத்தில் 24 ஆயிரத்து 412 பறவைகளும் கணக்கெடுக்கப்பட்டு வந்தது. மொத்தம் 644 இடங்களில் இந்த பறவைகள் கணக்கெடுப்பு நடந்து இருந்தது.

    இதற்கிடையே கேளம்பாக்கம் அருகே உள்ள நெமிலிச்சேரி, தையூர் ஏரிகளுக்கு வெளிநாடு மற்றும் வட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வாத்துக்கள் இடம் பெயர்ந்து வந்து உள்ளது. இது பறவை ஆர்வலர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. மகுடித்தாரா வாத்து, ஆண்டி வாத்து, ஊசிவால் வாத்துக்கள் அதிகம் காணப்படுவதாக பறவை ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர். உணவுக்காக இந்த வகை வாத்துக்கள் அதிகம் இடம் பெயர்ந்து வந்து இருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து பறவை ஆர்வலர் ஒருவர் கூறும்போது, "தையூர், நெமிலிச்சேரி ஏரிகளில் தட்டை வாயன் வாத்துக்கள் காணப்பட்டன. இது இந்த நீர்நிலைகளுக்கு வந்திருப்பது அரிது. வடகிழக்கு பருவமழை சில இடங்களில் குறைவான அளவு பதிவாகி உள்ளது. இதனால் இடம் பெயர்ந்து வரும் வாத்துக்களுக்கு போதிய உணவு கிடைக்க வில்லை. உணவு கிடைக்கும் இடத்திற்கு அவை இடம் பெயர்ந்து வருகின்றன" என்றார்.

    • விழாவை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து, உரையாற்றி விட்டு தனது காருக்கு திரும்பியபோது தவறி விழுந்தார்.
    • உடன் சென்ற பாதுகாப்பு அதிகாரிகளும், பாதுகாவலர்களும் பதட்டம் அடைந்து அவரை தூக்கினர்.

    இந்தியாவின் முதலாவது ஹைபிரிட் ராக்கெட் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கடலோரத்தில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

    அதன் துவக்க விழா இன்று காலை மாமல்லபுரம் அடுத்த தேவநேரி அருகே நடைபெற்றது. விழாவை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து, உரையாற்றி விட்டு தனது காருக்கு திரும்பிய தெலுங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான (கூடுதல் பொறுப்பு) டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், கார்பெட் தடுக்கி கால் தவறி கீழே விழுந்தார்.

    உடன் சென்ற பாதுகாப்பு அதிகாரிகளும், பாதுகாவலர்களும் பதட்டம் அடைந்து அவரை தூக்கினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    • ஆத்தூர் ஊராட்சியில் செங்கல்பட்டு தாலுகா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் ஊராட்சியில் செங்கல்பட்டு தாலுகா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்க்கிடமான 3 வாலிபர்கள் அங்கு நின்றுக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடம் போலீசார் விசாரித்ததில், முன்னுக்கு முரணாக பதில் அளித்தனர். மேலும் அவர்களை சோதனை செய்தபோது ௩ வாலிபர்களும் கஞ்சா வைத்திருந்து தெரியவந்தது. இதனையடுத்து விக்னேஷ் (வயது 22), சஞ்சய் (21), சிவசக்தி (23) ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், போரூர் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
    • சுப்புலட்சுமி நகர் ராமாபுரம் வெங்கடேஸ்வர நகர் 1, 2 மற்றும் 3 வது மெயின் ரோடு, வெங்கடேஸ்வர நகர் 3, 11 மற்றும் 12 தெருக்கள், தாங்கள் தெரு ஆகிய இடங்களில் மின் தடை ஏற்படும்,

    சென்னையில் நாளை (20-ந்தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், போரூர் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    தாம்பரம், திருநீர்மலை பகுதியில் ஒயிலைம்மன்கோவில் தெரு, இரட்டைமலை சீனிவாசன் தெரு, தங்கவேல் தெரு,போரூர் பகுதியில் ஜெய் நகர், ஆற்காடு ரோடு, குன்றத்தூர் ரோடு பகுதி, ஆர்.இ நகர் பகுதி, எம்.எஸ் நகர், செந்தில் நகர், பெல் நகர், ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி நகர், ஆர்த்தி இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், சத்தியநாராயண புரம் செம்பரம்பாக்கம் பகுதியில் நசரத்பேட்டை ஊராட்சி, அகரமேல், மலையம்பாக்கம் மாங்காடு பகுதியில் கணபதி நகர், லட்சுமி நகர், மங்களாபுரம், பாலாஜி நகர், சிவந்தாங்கள், எஸ்.ஆர்,எம்.சி. பகுதியில் அன்னை இந்திர நகர், விஜயலட்சுமி நகர், லட்சுமி நகர், இந்திரா நகர் ஒரு பகுதி காவனூர் ஓண்டி காலனி, சரவணா நகர், திருப்பதி நகர், பல்லாவரம் மெயின் ரோடு மணஞ்சேரி, சுப்புலட்சுமி நகர் ராமாபுரம் வெங்கடேஸ்வர நகர் 1, 2 மற்றும் 3 வது மெயின் ரோடு, வெங்கடேஸ்வர நகர் 3, 11 மற்றும் 12 தெருக்கள், தாங்கள் தெரு ஆகிய இடங்களில் மின் தடை ஏற்படும்.

    • 3,500 அரசு பள்ளி மாணவர்கள் இணைந்து தயாரித்தது.
    • செயற்கை கோள் புரட்சியை அடிப்படையாக கொண்டு மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

    மாமல்லபுரம்

    மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை, கிழக்கு கடற்கரை சாலை கடற்கரையில் இருந்து இன்று காலை 8.15 மணிக்கு ஏ.பி.ஜே.அப்துல்கலாம் இன்டர் நேஷனல் பவுண்டேஷன் சார்பில் இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் 150 சிறிய ரக செயற்கைக் கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் ஏவப் பட்டது.

    இஸ்ரோ விஞ்ஞானி கோகுல் ஆணந்த் தலைமையிலான இஸ்ரோ தொழில்நுட்ப விஞ்ஞானிகள் இந்த ராக்கெட்டை இயக்கினர். இதில் தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் இயக்குனர் வெங்கட்ராமன், திருப்போரூர் எம்.எல்.ஏ.பாலாஜி ரோஸ் மார்ட்டீன், ஜோஸ் சார்லஸ் மார்ட்டீன், ஏ.பி.ஜெ.எம்.நஜீமா மரைக்காயர், ஷேக்ச லீம், ஷேக்தாவூர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ஹைபிரிட் சவுண்ட் ராக்கெட் எனப்படுவது குறைந்த உயரத்தில் செலுத்தக் கூடியதாகவும், சோதனை ஓட்டத்திற்கு பயன்படுத்துவதற்காகவும், செயற்கை கோள்களின் தரவுகளை சேகரிப்ப தற்காகவும் அனுப்பப்படுகிறது. இன்று விண்ணில் செலுத்த ப்பட்டுள்ள ஹைபிரிட் சவுண்ட் ராக்கெட் சுமார் 2.4 கி.மீ. உயரம் வரை செல்லக் கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ராக்கெட்டில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் 3,500 பேர் இணைந்து தயாரித்த 150 சிறிய ரக செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை நேரடியாக பார்வையிட்டனர். விண்ணில் ஏவப்பட்டு உள்ள சிறிய ரக செயற்கைகோள்கள் மூலம் வானிலை, கதிர்வீச்சு தன்மை, வளிமண்டல நிலை உள்ளிட்ட பல்வேறு தரவு களை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    செயற்கைகோள் விண்ணில் பாய்வதை பார்ப்பதற்காக அதனை தயாரித்த மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் பள்ளி நிர்வாகிகள் குஜராத், பெங்களூர், ஜெய்பூர், கேரளா, ராஜஸ்தான், தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநில மாணவர்கள், அணுசக்தி துறையினர் சுமார் 5 ஆயிரம் பேர் வந்திருந்தனர்.

    அவர்கள் விண்ணில் ராக்கெட் வெற்றிகரமாக பாய்ந்ததும் ஆரவாரத்தில் கைதட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

    விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறும் போது, செயற்கை கோள் புரட்சியை அடிப்படையாக கொண்டு மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இது மாணவர்களால் செயற்கை கோள் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கைக்கான வித்து.

    விண்வெளி ஆராய்ச்சித் துறையில் மாணவர்கள் குழுவாக செயல்பட முடியும். மாணவர்களின் குழு மனப்பான்மையை வளர்க்கும் விதமாக இது உள்ளது.

    மாணவர்கள் துறை ரீதியாக சாதிக்க பள்ளியில் இருந்து தொடங்க வேண்டும். சிறு வயது முதலே அனைவருடனும் இணைந்து செயல்படுவதற்கான பயிற்சி.

    தற்போது செயற்கை கோள் புரட்சி ஏற்பட்டு உள்ளது. பொறியாளர்களை பள்ளியிலேயே உருவாக்க வேண்டும். செயற்கை கோள்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது" என்றார்.

    • தமிழ்நாடு, குஜராத், தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநில மாணவர்கள் பங்கேற்றனர்
    • "பிக்கோ" எனப்படும் சிறிய வகை செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்படுகிறது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கிழக்கு கடற்கரை சாலையில், ஏ.பி.ஜே.அப்துல்கலாம் இன்டர்நேஷனல் பவுண்டேஷன் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் ராக்கெட் பற்றிய விழிப்புணர்வு அறிவியல் ஆர்வத்திற்கான 8 கி.மீ தூரம் செல்லும் "பிக்கோ" எனப்படும் சிறிய வகை செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்படுகிறது.

    இதில் தமிழ்நாடு, குஜராத், பெங்களூர், ஜெய்ப்பூர், கேரளா, ராஜஸ்தான், தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநில மாணவர்கள் பங்கேற்றனர்.

    இதற்கான துவக்க விழா, கருத்தரங்கம், பயிற்சி மற்றும் பாதுகாப்பு பற்றிய அறிவுரைகள் இன்று மாமல்லபுரம் அடுத்த தேவநேரி கிழக்கு கடற்கரை சாலை திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது. இதில் ஸ்பேஸ் சோன் இந்தியா, மார்ட்டின் சாரிட்டபுள் டிரஸ்ட் நிர்வாகிகள், அணுசக்தி துறையினர், காவல்துறை அதிகாரிகள், இராணுவத்தினர் பள்ளி, கல்லூரி மாணவர்கள் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ×