என் மலர்
செங்கல்பட்டு
- செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் சுமார் 37,000 கர்ப்பிணி தாய்மார்கள் தங்கள் கர்ப்பத்தை பதிவு செய்கின்றனர்.
- அதிக கவனம் தேவைப்படும் கர்ப்பிணி தாய்மார்களை கண்டறிந்து அவர்களை தொடர்ந்து கிராம சுகாதார நர்சுகள் கண்காணித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு நகராட்சி, யானைக்கால் நோய் தடுப்பு ஆஸ்பத்திரியில் உள்ள துணை சுகாதார இயக்குனர் அலுவலகத்தில் கர்ப்பிணி தாய்மார்களை தொடர்ந்து கண்காணிப்பதற்காக 24 மணி நேர தாய் சேய் நல கட்டுப்பாடு மையம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் போசும்போது, 'செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் சுமார் 37,000 கர்ப்பிணி தாய்மார்கள் தங்கள் கர்ப்பத்தை பதிவு செய்கின்றனர். இவர்களில் சுமார் 13,000 கர்ப்பிணி தாய்மார்கள் சிக்கலுள்ள கர்ப்பிணிகள் என்று கண்டறியப்பட்டுள்ளனர். கர்ப்ப காலத்தில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ரத்த சோகை, தைராய்டு போன்ற அதிக கவனம் தேவைப்படும் கர்ப்பிணி தாய்மார்களை கண்டறிந்து அவர்களை தொடர்ந்து கிராம சுகாதார நர்சுகள் கண்காணித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இந்த சிக்கலுள்ள கர்ப்பிணி தாய்மார்களை தொடர்ந்து கண்காணிப்பதற்காக துணை இயக்குநர் அலுவலகத்தில் 24 மணி நேர தாய் சேய் நல கட்டுப்பாட்டு மையம் இயங்கும் எனவும் இந்த கட்டுப்பாட்டு அறையிலிருந்து தினமும் சிக்கலுள்ள கர்ப்பிணிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்கள் சிகிச்சைக்கு சென்றனரா? தேவைப்படும் பரிசோதனைகள் மேற்கொண்டனரா? என்பதை கண்காணிப்பதோடு அவர்களை தொடர் சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகளின் அவசியம் பற்றிய அறிவுரைகள் வழங்கப்படும்.
மேலும், சந்தேகங்கள் இருப்பின் இந்த 24 மணி நேர தாய் சேய் நலக் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண் 7339697545 மற்றும் 7200210545-களில் தொடர்பு கொள்ளலாம்' என தெரிவித்தார்.
- ரவுடி சோட்டா வினோத் மீது 10 கொலை வழக்கு உள்பட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன
- ரமேஷ் மீது 5 கொலை வழக்கு உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன
சென்னை வண்டலூர் அடுத்துள்ள கூடுவாஞ்சேரி அருகே போலீசாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற 2 ரவுடிகள் என்கவுண்டரில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இன்று அதிகாலையில் நடைபெற்ற இந்த போலீஸ் வேட்டை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
தாம்பரம் புறநகர் பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் தினமும் இரவு ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் நேற்று இரவு கூடுவாஞ்சேரியை அடுத்த காரணை புதுச்சேரி அருங்கல் சாலையில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது.
கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் மற்றும் 10-க்கும் மேற்பட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
இன்று அதிகாலையிலும் போலீசாரின் வாகன சோதனை நீடித்தது. அப்போது 3.30 மணியளவில் அந்த வழியாக ஸ்கோடா கார் ஒன்று வேகமாக வந்தது. மின்னல் வேகத்தில் வந்த காரை பார்த்து சந்தேகம் அடைந்த போலீசார் அதனை தடுத்து நிறுத்தினர். ஆனால் காரில் இருந்தவர்கள் வேகத்தை குறைக்காமல் போலீசாரை இடித்து தள்ளுவதுபோல சென்றனர்.
போலீசிடமிருந்து தப்பிவிட வேண்டும் என்கிற எண்ணத்தில் காரை ஓட்டி வந்தவர்கள் அதனை தாறுமாறாக இயக்கினார்கள். இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. பின்னர் அங்கு நின்றிருந்த போலீஸ் வாகனத்தின் மீது மோதி அதனை இடித்து தள்ளி நின்றது. இதைத்தொடர்ந்து போலீசார் காரை நோக்கி விரைந்து சென்றனர். அப்போது காரில் இருந்து 4 பேர் இறங்கினர். அவர்களில் 2 பேர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
அவர்களின் கையில் பயங்கர ஆயுதங்கள் இருந்தன. இதைத்தொடர்ந்து போலீசார் 4 பேரையும் மடக்கி பிடிக்க நினைத்து அருகில் சென்றனர். ஆயுதங்களை கீழே போடுங்கடா? என்று எச்சரித்துக் கொண்டே போலீசார் அவர்களின் அருகில் சென்றனர். ஆனால் ரவுடிகள் அதனை கேட்கவில்லை.
அவர்களில் ஒருவன் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதனை அரிவாளால் வெட்டி பயங்கர தாக்குதலில் ஈடுபட்டான். அவரது இடது கையில் முதலில் வெட்டிய அவன் பின்னர் தலையிலும் வெட்டினான். ஆனால் சிவகுருநாதன் குனிந்து கொண்டார். இதனால் தொப்பியில் வெட்டு விழுந்தது.
ரவுடிகளின் தாக்குதலால் அதிர்ச்சி அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் மற்றும் இன்ஸ்பெக்டர் முருகேசன் இருவரும் தங்களது துப்பாக்கியை தூக்கினர். தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ள இருவரும் ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய ரவுடி, இன்னொரு ரவுடி ஆகிய இருவர் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. இதில் அலறி துடித்த இருவரும் அங்கேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தனர். உடனடியாக இருவரையும் ஆஸ்பத்திரிக்கு போலீசார் தூக்கிச் சென்றனர். ஆனால் வழியிலேயே இருவரும் உயிரிழந்து விட்டனர்.
போலீஸ் என்கவுண்டரில் சுட்டுத்தள்ளப்பட்ட 2 ரவுடிகளும் பயங்கர ரவுடிகள் என்பது தெரியவந்தது. ஒருவனது பெயர் சோட்டா வினோத். இவனுக்கு 35 வயதாகிறது. இன்னொருவன் பெயர் ரமேஷ். இவனுக்கு வயது 32. இருவரும் ஓட்டேரி போலீஸ் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளிகள் ஆவர்.
இவர்கள் தங்களது கூட்டாளிகளுடன் நேற்று இரவு காரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நோக்கில் ஆயுதங்களுடன் காரில் சுற்றி திரிந்துள்ளனர். அப்போதுதான் வாகன சோதனையின்போது போலீசில் சிக்கி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர்.
சிறுவயதிலேயே தவறான பழக்க வழக்கங்கள் காரணமாக சோட்டா வினோத்தும், ரமேசும் ரவுடிகளாக மாறி விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
சோட்டா வினோத் ஏ-பிளஸ் ரவுடியாக வலம் வந்துள்ளான். ஓட்டேரி, மண்ணிவாக்கம் பகுதியில் வசித்து வந்த இவன் அப்பகுதியில் பெரிய தாதாவாக வலம் வந்துள்ளான். தொழில் அதிபர்கள் மற்றும் பெரிய நிறுவன உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிப்பது, அடிதடியில் ஈடுபடுவது உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த சோட்டா வினோத் மீது 10 கொலை வழக்குகளும், 15 கொலை முயற்சி வழக்குகளும் உள்ளன.
ரவுடியான இவன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு கொள்ளையில் ஈடுபட்டு அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதுபோன்று 10 இடங்களில் கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்ட வழக்கும், 15 இடங்களில் அடிதடியில் ஈடுபட்டு பொதுமக்களை பயமுறுத்திய வழக்கும் உள்ளது. இதுபோன்று 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் சோட்டா வினோத் மீது உள்ளன.
என்கவுண்டரில் பலியான இன்னொரு ரவுடியான ரமேஷ் ஏ-வகையை சேர்ந்த ரவுடி ஆவான். இவன் மீதும் ஓட்டேரி போலீஸ் நிலையத்தில் சரித்திர பதிவேடு பராமரிக்கப்பட்டு வந்தது.
இவன் மீது 5 கொலை, 7 கொலை முயற்சி, 8 அடிதடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்குகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
2 ரவுடிகளின் உடல்களும் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் இன்னும் திருமணமாக வில்லை. பிரேத பரிசோதனை முடிந்து அவர்களது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட உள்ளது. அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக ஆஸ்பத்திரி மற்றும் ஓட்டேரி சுற்று வட்டார பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
ரவுடிகள் அரிவாளால் வெட்டியதில் காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயர் போலீஸ் அதிகாரிகள் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
அதிகாலையில் போலீசாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு 2 ரவுடிகள் இரையான சம்பவம் சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ரவுடிகள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கடல்சார் பணிகள், இயந்திரவியல் மற்றும் மின்சாரம் கருவிகள் நிறுவும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
- 9 இலட்சம் மக்கள் பயனடைவார்கள் என தலைமை செயலாளர் தெரிவித்தார்.
மாமல்லபுரம்:
சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் 1516.82 கோடி ரூபாய் செலவில் மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில், அமைக்கப்பட்டு வரும் நாள் ஒன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் புதிய ஆலையின் கட்டுமானப் பணிகளை நேற்று தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார்.
கடல்சார் பணிகள், இயந்திரவியல் மற்றும் மின்சாரம் கருவிகள் நிறுவும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும், கடல்நீரை நிலையத்திற்கு உள் கொண்டு வரும் குழாய் மற்றும் நிராகரிக்கப்பட்ட உவர்நீரை கடலுக்கு வெளியேற்றும் குழாய், கடல்நீரை உள் வாங்கும் ஆழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, காற்றழுத்தம் மூலம் எண்ணெய் மற்றும் கசடுகளை அகற்றும் தொட்டி, வடிகட்டப்பட்ட கடல் நீர்த்தேக்கத் தொட்டி, வடிகட்டப்பட்ட கடல்நீர் உந்து நிலையம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
இந்த ஆலையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் குடிநீரை, விநியோகம் செய்வதற்காக, 48.10 கி.மீ நீளத்திற்கு குழாய் பதிக்கும் பணிகள் மற்றும் சோழிங்கநல்லூரில் இடைநிலை நீரேற்று நிலையம் அமைப்பதற்கான அனைத்து கட்டுமானப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது., இப்பணிகளை ஆய்வு செய்த தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அனைத்து பணிகளையும் நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் முடிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆலையில் இருந்து பெறப்படும் குடிநீர், தென் சென்னை பகுதிகளான வேளச்சேரி, ஆலந்தூர், பரங்கிமலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்கட்டளை, மூவரசன்பேட்டை, சோழிங்கநல்லூர், உள்ளகரம், புழுதிவாக்கம், மடிப்பாக்கம். தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லாவரம் மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள தகவல் தொழில் நுட்ப பகுதிகளுக்கு வழங்கப்படும்.
இதனால் 9 இலட்சம் மக்கள் பயனடைவார்கள் என தலைமை செயலாளர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் இரா.கிர்லோஷ் குமார், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், சென்னை குடிநீர் வாரிய தலைமைப் பொறியாளர் கந்தசாமி, கண்காணிப்புப் பொறியாளர் வைதேகி, செயற்பொறியாளர் கிருபாகரவேல் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- 90 சதவீதத்துக்கு மேல் கட்டுமான பணிகள் முடிந்துவிட்டன.
- விரைவில் கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பில் புதிய பஸ்நிலையம் கட்டும் பணி நடந்து வருகறிது.
90 சதவீதத்துக்கு மேல் கட்டுமான பணிகள் முடிந்துவிட்டன. இறுதிகட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது. எனவே விரைவில் கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையம திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்தில் நடந்து வரும் பணிகளை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், தாம்பரம்போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், துணை கமிஷனர் மூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் சீனிவாசராவ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூரில் துப்பாக்கி முனையில் ஒரு கொள்ளை சம்பவம் நடந்து உள்ளது.
- திருப்போரூரில் வாலிபர் துப்பாக்கியுடன் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்போருர்:
திருப்போரூர் குளக்கரை அருகே பேக்கரி கடை உள்ளது. இங்கு விழுப்புரம் மாவட்டம் டி.குன்னத்துரை சேர்ந்த விக்னேஷ் (வயது 25) என்பவர் தங்கி வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு பெங்களூரில் இருந்து தனிப்படை போலீசார் பேக்கரிக்கு வந்து அங்கிருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் ஊழியர் விக்னேஷ் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு ஒரு கைத்துப்பாக்கி மற்றும் தங்க வளையல்கள் இருந்தன. இதைத்தொடர்ந்து விக்னேசை போலீசார் கைது செய்து துப்பாக்கி மற்றும் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
விக்னேஷ் கைது செய்யப்பட்டது எதற்கு என்று தெரியாமல் அப்பகுதி மக்கள் குழப்பமும் அதிர்ச்சியும் அடைந்தனர்.
இதற்கிடையே கைது செய்யப்பட்ட விக்னேசை பெங்களூர் போலீசார் காரில் அழைத்து சென்றனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டது தொடர்பாக தகவல் தெரிவித்து திருப்போரூர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர்.
அப்போது திடீரென விக்னேஷ் போலீசாரை தாக்கி தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இரவு நேரம் என்பதால் அவரை போலீசாரால் விரட்டி பிடிக்க முடியவில்லை. இதனால் கையில் சிக்கிய விக்னேசை தவற விட்டுவிட்டோமே என்ற ஏமாற்றத்துடன் பெங்களூர் போலீசார் திரும்பி சென்றனர்.
துப்பாக்கியுடன் சுற்றிய விக்னேஷ் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூரில் துப்பாக்கி முனையில் ஒரு கொள்ளை சம்பவம் நடந்து உள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ஒருவரை போலீசார் பிடித்தனர்.
அவரிடம் போலீசார் விசாரித்த போது 'கொள்ளைக்கு பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் நகைகளை திருப்போரூரில் பேக்கரி கடையில் வேலைபார்த்து வரும் விக்னேசிடம் கொடுத்து வைத்திருப்பதாக தெரிவித்து உள்ளனர்.
இதன் அடிப்படையில் தான் பெங்களூர் போலீசார் விக்னேசை துப்பாக்கி உடன் பிடித்து இருந்தனர். ஆனால் அவர் பின்னர் தப்பி ஓடிவிட்டார். அவரை கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்போரூரில் வாலிபர் துப்பாக்கியுடன் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பலத்த காயம் அடைந்த செல்சியா சம்பவ இடத்திலேயே பலியானார்.
- செல்சியாவின் தோழி யாழினிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
தாம்பரம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், புத்தர் தெருவை சேர்ந்தவர் யாழினி (வயது23).
இவர் நெருங்கிய தோழியான காரைக்குடியை சேர்ந்த செல்சியா (23) என்பவருடன் ஊரப்பாக்கத்தில் உள்ள ஒரு உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார்.
நேற்று மாலை தோழிகள் இருவரும் தி.நகரில் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்க மின்சார ரெயிலில் செல்ல திட்டமிட்டனர். இதைத்தொடர்ந்து இருவரும் ஊரப்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு நடந்து வந்து கொண்டு இருந்தனர்.
ரெயில் நிலையம் அருகே தண்டவாளம் ஓரத்தில் நடந்து வந்து கொண்டிருந்தபோது, சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற மின்சார ரெயில் தோழிகள் யாழினி, செல்சியா மீது மோதியது. இதில் அவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்ட னர்.
இதில் பலத்த காயம் அடைந்த செல்சியா சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது தோழி யாழினிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்குள்ள ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
தண்டவாளம் அருகே தோழிகள் இருவரும் பேசிக்கொண்டு நடந்து வந்தபோது மின்சார ரெயில் வருவதை கவனிக்காமல் சென்றதால் அவர்கள் விபத்தில் சிக்கி இருப்பது தெரிந் தது.
இதுகுறித்து தாம்பரம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் விசைப்படகில் வந்து மீன் பிடித்ததாக தெரிகிறது.
- பாண்டிச்சேரி மீனவர்கள் 10 பேர் விசைப்படகில் மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் வந்து மீன் பிடித்தனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள மீனவ கிராமத்தினர் மீன்பிடிக்கும் கடல் பகுதியில் காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் விசைப்படகில் வந்து மீன் பிடித்ததாக தெரிகிறது.
இதனை கண்ட மாமல்லபுரம் மீனவர்கள் 5 பைபர் படகுகளில் கடலுக்குள் சென்று காரைக்கால் மீனவர்களின் விசைப்படகை சுற்றி வளைத்து அதில் இருந்த 14 மீனவர்களை சிறைபிடித்தனர். அவர்களை படகில் ஏற்றி கரைக்கு அழைத்து வந்தனர். விசைப்படகை கடலிலேயே நிறுத்தி வைத்தனர்.
இதே போல் இன்று காலையில் பாண்டிச்சேரி மீனவர்கள் 10 பேர் விசைப்படகில் மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் வந்து மீன் பிடித்தனர். அவர்களையும் மாமல்லபுரம் மீனவர்கள் சிறைபிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான நிலை நீடிக்கிறது. மாமல்லபுரம் மீனவர்கள் காரைக்கால், பாண்டிச்சேரி மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
- டாக்டர்களை மிரட்டி பணம் வாங்கியது குறித்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் விசாரணை நடத்தினார்.
- விசாரணையில் பணம் வாங்கியது உறுதியானதால் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை சென்னையை அடுத்த திரிசூலம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் (வயது 27) என்பவர் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் தந்தை கூடுவாஞ்சேரியில் உள்ள வண்டலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் மகிதா அன்ன கிருஷ்டி வழக்குப்பதிவு செய்து அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட சிறுமிக்கு போலீசார் செங்கல்பட்டு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்தபோது அந்த சிறுமிக்கு ஏற்கனவே கருக்கலைப்பு செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து சிறுமியின் தாயார் தனது மகளுக்கு சிங்கப்பெருமாள் கோவில், மறைமலைநகர் பகுதியில் உள்ள ஆஸ்பத்திரி மற்றும் கிளினிக்கில் கருக்கலைப்பு செய்ததாக இன்ஸ்பெக்டரிடம் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஆஸ்பத்திரி நடத்தி வரும் அரசு டாக்டர் பராசக்தி மற்றும் மறைமலைநகர் பகுதியில் கிளினிக் நடத்தி வரும் டாக்டர் உமா மகேஸ்வரி ஆகியோரிடம் இன்ஸ்பெக்டர் மகிதா அன்ன கிருஷ்டி விசாரணை நடத்தினார்.
பின்னர் உங்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டி அரசு டாக்டர் பராசக்தியிடம் ரூ.10 லட்சம், தனியார் ஆஸ்பத்திரி டாக்டரிடம் இருந்து ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ.12 லட்சம் வாங்கினார். டாக்டர்களை மிரட்டி பணம் வாங்கியது குறித்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் பணம் வாங்கியது உறுதியானதால் கடந்த 11-ந்தேதி இன்ஸ்பெக்டர் மகிதா அன்ன கிருஷ்டியை பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.
இதையடுத்து சிங்கப்பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த அரசு டாக்டர் பராசக்தி, மறைமலைநகர் போலீஸ் நிலையத்தில் மகிதா அன்ன கிருஷ்டி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த வக்கீல் பன்னீர்செல்வம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் செய்தார்.
இதுகுறித்து மறைமலைநகர் போலீசார், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் மகிதா அன்ன கிருஷ்டி மற்றும் வக்கீல் பன்னீர்செல்வம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர்.
இந்த நிலையில் மறைமலைநகர் தனிப்படை போலீசார் நேற்று திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே மகிதா அன்ன கிருஷ்டியை கைது செய்து மறைமலைநகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.
- சங்க தலைவர் சகாதேவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.,
- மனித உரிமை மீறல்களை ஐ நா சபை விசாரிக்க வேண்டும்.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அம்பேத்கர் திடலில் கல்பாக்கம் அணுசக்திதுறை எஸ்.சி, எஸ்.டி ஊழியர் சங்கம் சார்பில், மணிப்பூர் வன்முறை சம்பவத்தை கண்டித்து, சங்க தலைவர் சகாதேவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மணிப்பூர் வன்முறைகளை கண்டும் காணாமல் இருக்கும் பா.ஜ.க மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கலவரத்தில் பெண்களை நிர்வானமாக்கி மானபங்க படுத்திய குற்றவாளிகள் மீது அதிகபட்ச தண்டனையாக தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்றும், இந்த மனித உரிமை மீறல்களை ஐ நா சபை விசாரிக்க வேண்டும். என்றும் ஆர்ப்பாட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்தனர்.
- 7 டி.எக்ஸ் டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் கூடிய காட்சியரங்கம் விரைவில் கட்டப்பட உள்ளது.
- நிகழ்ச்சியில் திருப்போரூர் எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாமல்லபுரம்:
கோவளம் அடுத்த முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் படுகு குழாம் உள்ளது. இங்கு ரூ.50லட்சம் செலவில் புதிய சுகாதார மையம், குழந்தைகள் விளையாட்டு மையம், கழிவுநீர் சுத்திகரிப்பு, காற்றில் இருந்து குடிநீர் உற்பத்தி உள்ளிட்டவை அமைக்கப்பட்டது. இதன் தொடக்க விழா நடைபெற்றது. இதில் சுற்று லாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாமல்லபுரத்தில் உள்ள புரான சின்னமான அர்ச்சுனன் தபசு அருகில் ரூ.5 கோடி மதிப்பில், 7 டி.எக்ஸ் டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் கூடிய காட்சியரங்கம் விரைவில் கட்டப்பட உள்ளது.
இதில் மாமல்லபுரம் புராதன சின்னங்களின் வரலாறு குறித்து "3டி லேசர்" ஒளி, ஒலி காட்சி ஒளிபரப்பு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் திருப்போரூர் எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
- ஒன்றிய கவுன்சிலர்கள் நேதாஜி, தினேஷ், முன்னாள் ஊராட்சி தலைவர் ஓட்டேரி குணா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வேங்கடமங்கலம்:
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள வேங்கடமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட ரத்தினமங்கலம் கிராமத்தில் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.38 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பில் தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
இதற்கு ரத்தினமங்கலம் ஒன்றிய கவுன்சிலரும், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளருமான ஏ.வி.எம்.இளங்கோவன் என்கிற கார்த்திக் தலைமை தாங்கினார். காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன், ஒன்றியகுழு துணை தலைவர் வி.எஸ்.ஆராமுதன், தி.மு.க. கிளை செயலாளர் முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் கலந்து கொண்டு பூமி பூஜை போட்டு சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
இதில் கீரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர்கள் நேதாஜி, தினேஷ், முன்னாள் ஊராட்சி தலைவர் ஓட்டேரி குணா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- வீட்டின் கதவை தாழ்பாள் மட்டும் போட்டுவிட்டு ஸ்கூட்டரில் வந்து ஜெயந்தியை அழைத்துச் சென்றார்.
- சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தாம்பரம்:
சென்னை தாம்பரம் அடுத்த அகரம்தென், அவ்வையார் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி. இவர், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து பஸ்சில் அகரம்தென் பஸ் நிறுத்தத்தில் வந்திறங்கினார். தாயாரை அழைத்துச்செல்வதற்காக அவருடைய மகள், வீட்டின் கதவை தாழ்பாள் மட்டும் போட்டுவிட்டு ஸ்கூட்டரில் வந்து ஜெயந்தியை அழைத்துச் சென்றார்.
அப்போது இவர்களது வீட்டின் அருகே நின்றிருந்த மர்ம பெண், ஜெயந்தி வருவதை கண்டதும் அங்கிருந்து அவசர அவசரமாக சென்று விட்டார். இதனால் சந்தேகம் அடைந்த ஜெயந்தி, வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்து இருந்த 20 பவுன் நகையை அந்த பெண் திருடிச்சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






