என் மலர்
செங்கல்பட்டு
- ஆம்லெட்டை அதிகமாக சாப்பிட்ட செல்லப்பனை முருகன் கண்டித்து வாக்குவாதம் செய்தார்.
- இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் உய்யாலி குப்பம் இருளர் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பன் (30). இவரது நெருங்கிய உறவினர் முருகன் (32).
இருவரும் நேற்று இரவு புதுப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கார் ஷோரூம் ஒன்றின் அருகே அமர்ந்து மது குடித்தனர். அப்போது வாங்கி வந்திருந்த ஆம்லெட்டை செல்லப்பன் அதிகமாக சாப்பிட்டதாகத் தெரிகிறது. இதனை முருகன் கண்டித்து வாக்குவாதம் செய்தார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதில் ஆத்திரம் அடைந்த முருகன் அருகில் கிடந்த விறகு கட்டையால் செல்லப்பனின் தலையில் தாக்கினார். பலத்த காயமடைந்த செல்லப்பன் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சுருண்டு விழுந்து இறந்தார்.
தகவலறிந்ததும் கல்பாக்கம் போலீசார் விரைந்து வந்து செல்லப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக அதே பகுதியில் பதுங்கி இருந்த முருகனை போலீசார் கைது செய்தனர். குடிபோதையில் ஆம்லேட்டுக்காக வாலிபர் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
- சுலோச்சனா மின்சாரம் தாக்கி பலியானார்.
- பலத்த காயம் அடைந்த மாணவன் சபரிவாசனுக்கு அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றம், அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் சுலோச்சனா (வயது50). இவரது பேரன் சபரிவாசன்(13).
அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். தினந்தோறும் சுலோச்சனா பேரனை பள்ளிக்கு செல்ல வெளியே அழைத்து வந்து விட்டு அருகில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பது வழக்கம்.
இந்த நிலையில் இன்று காலையும் வழக்கம் போல் சுலோச்சனா, பேரன் சபரிவாசனுடன் அதே பகுதியில் நடந்து சென்றார்.
அப்போது மின்கம்பத்தில் இருந்த உயர்மின்அழுத்த கம்பி திடீரென அறுந்து சுலோச்சனா மீது விழுந்தது. இதில் சுலோச்சனா மின்சாரம் தாக்கி பலியானார். அருகில் நின்ற சபரிவாசனும் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் சுமார் ஒரு மணிநேரத்திற்கு பின்னரே மின்வாரிய அதிகாரிகள் வந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். தகவல் அறிந்ததும் திருக்கழுக்குன்றம் போலீசார் விரைந்து பலியான சுலோச்சனாவின் உடலை மீட்டு பிரசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயம் அடைந்த மாணவன் சபரிவாசனுக்கு அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் கால்வாய் பணிகளும் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது.
- கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தின் பின்புறத்தில் இருந்து பஸ்கள் அய்யன்சேரி வழியாகச் சென்று ஊரப்பாக்கம் நெடுஞ்சாலையை கடந்து செல்வதற்கான சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.
வண்டலூர்:
சென்னையில் தற்போது கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு அரசு விரைவு பஸ்கள், தனியார் ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னை நகருக்குள் இயங்கும் மாநகர பஸ்கள் இயக்கப்படுகிறது. இதே போல் மாதவரத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் பெருகிவரும் மக்கள் தொகை மற்றும் போக்குவரத்து நெரிசைலை கருத்தில் கொண்டு வெளியூர்களுக்கு செல்லும் விரைவு பஸ்களை புறநகர் பகுதியில் இருந்து இயக்க முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு நவீன வசதிகளுடன் பிரம்மாண்ட பஸ்நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையத்திற்கான கட்டுமான பணிக்கு கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.
கொரோனோ பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பஸ் நிலைய கட்டுமான பணி மெதுவாக நடந்து வந்தது. இதனால் குறிப்பிட்ட காலத்தில் கிளாம்பாக்கம் பஸ் நிலைய பணியை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் கிளாம்பாக்கம் பஸ் நிலைய பணியை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் கட்டுமான பணியை அவ்வப்போது ஆய்வு செய்து ஆலோசனை வழங்கி வருகிறார்கள்.
பஸ் நிலையத்தில் 90 சதவீத பணிகள் முடிந்த நிலையில் மீதி உள்ள பணிகளை முடிப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.
பஸ் நிலையத்தில் பயணிகள் தங்குமிடம், சாதாரண அறை, குளிர்சாதன அறை மற்றும் டிரைவர்கள், கண்டக்டர்கள் தங்குவதற்கான இடம் கட்டுமான பணிகள் இன்னும் முடிவடையவில்லை.
இதேபோல் கழிவறைகள் மற்றும் பஸ் நிலையத்தை சுற்றி அமைய வேண்டிய கடைகளின் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது. பயணிகளின் வாகனத்தை நிறுத்துவதற்கான பார்க்கிங் ஏரியா பணிகள் இன்னும் முழுமை அடையவில்லை. உணவகங்கள் பணியும் இன்னும் முழுமை பெறாமல் உள்ளது.
பஸ் நிலையம் முன்பு வைக்கப்பட்டிருக்கும் வளைவு, அதனைச் சுற்றி பொறிக்க வேண்டிய கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையம் போன்ற எழுத்துக்களும் இன்னும் பொறிக்கப்படவில்லை.
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தின் பின்புறத்தில் இருந்து பஸ்கள் அய்யன்சேரி வழியாகச் சென்று ஊரப்பாக்கம் நெடுஞ்சாலையை கடந்து செல்வதற்கான சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.
இந்த சாலை அமைத்தால் வாகனங்கள் தொடர்ச்சியாக போகும் நிலையில் ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலை சந்திப்பில் வாகன நெரிசல் அதிகமாக ஏற்படும் என்பதால் மாற்று சாலை திட்டத்தை கருத்தில் கொண்டு அந்த சாலை பணியும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் கால்வாய் பணிகளும் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது.
தனியார் ஆம்னி பஸ்களை நிறுத்தத்திற்கான இடத்தை முதலில் படப்பை அருகில் தேர்வு செய்யப்பட்டது. பின்னர் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அங்கிருந்து ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வரும் போதும், பயணிகளை ஏற்றி சென்று மீண்டும் செல்லும் போதும் இரண்டு முறை டோல்கேட்டுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அந்த இடம் தேர்வு கைவிடப்பட்டது. எனவே ஆம்னி பஸ்களுக்கான இடத்தையும் தேர்வு செய்து ஆய்வு செய்யும் பணி இன்னும் முழுமையாக முடியாமல் உள்ளது.
பல்வேறு பணிகள் முடிவடையாமல் உள்ளதால் கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தை திறக்க மேலும் தாமதாகும் என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பஸ்நிலையத்தில் கட்டுமான பணிகள் முடிந்து ஒரு பகுதியை மட்டும் முதலில் பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
முதல் கட்டமாக திருநெல்வேலிக்கு விரைவு பஸ்களும் அடுத்த கட்டமாக மதுரைக்கும் பஸ்களை இயக்க முடிவு செய்து உள்ளனர். பின்னர் படிப்படியாக பஸ் நிலையம் முழுவதையும் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது கூறியதாவது:-
கிளாம்பாக்கம் பஸ் நிலைய கட்டுமான பணி வேகமாக நடந்து வருகின்றன. பணிகள் இன்னும் முடியாததால் திறப்பு தள்ளிப்போகும்.
மொத்தம், 10 பணிகள் நிலுவையில் உள்ளது. எனவே தீபாவளி வரை பஸ் நிலைய பணி நீடிக்கும். எனினும் முன்னதாக பஸ் நிலையத்தை படிப்படியாக திறக்க அரசு முடிவு செய்து உள்ளது. நிலுவையில் உள்ள 10 பணிகளில் சிலவற்றுக்கு டெண்டர் விடப்பட்டு இருக்கிறது. சில பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.
கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் இருந்து முதல்கட்டமாக திருநெல்வேலிக்கு பஸ்கள் இயக்கப்படும். அடுத்த கட்டமாக மதுரைக்கும், 3-வது கட்டமாக விழுப்புரம் செல்லும் பஸ்கள் அனுமதிக்கப்படும். இதுகுறித்து விரைவில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும். புதிய பணிகள் திட்டத்தால் 25 சதவீதம் செலவு அதிகரித்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த ஆட்சி காலத்தில், பாலாற்றின் குறுக்கே 7 தடுப்பணைகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
- ஈசூர், வள்ளிபுரம் பகுதியிலும் என இரண்டு தடுப்பணைகள் உருவாக்கப்பட்டது.
காஞ்சிபுரம்:
பருவமழையின் போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாயும் செய்யாறு, பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி தண்ணீர் வீணாகி வந்தது. இதனை தடுக்கும் வகையிலும், தண்ணீரை ஆற்றில் தேக்கி வைக்கும்படியும் பாலாறு, செய்யாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்பது விவசாயிகள் நீண்ட காலகோரிக்கையாக இருந்தது.
மாவட்டத்தில் பாயும் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டினால் குடிநீர் ஆதாரம் மற்றும் விவசாய பணிகளுக்கு பெரிதும் உதவும் என விவசாய சங்கங்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரின் வலியுறுத்தி வந்தனர்.
இதைத்தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த ஆட்சி காலத்தில், பாலாற்றின் குறுக்கே 7 தடுப்பணைகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழையசீவரம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது. ஏற்கனவே செங்கல்பட்டு மாவட்டத்தில் வாயலூர் பகுதியிலும், ஈசூர்,வள்ளிபுரம் பகுதியிலும் என இரண்டு தடுப்பணைகள் உருவாக்கப்பட்டது.
இதேபோல் மாகரல் கிராமப் பகுதியில் செல்லும் செய்யாற்றின் குறுக்கே ரூ.8 கோடி மதிப்பில் ஒரு தடுப்பணை கட்டப்பட்டது. இதனால் அந்த பகுதிகளின் ஆற்றுப்படுகையில் மழை நீர் தேங்கி, குடிநீர் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. மேலும் விவசாயிகளுக்கும் பெரிதும் உதவியது.
இந்த நிலையில் உத்திரமேரூர் தாலுகாவுக்கு உட்பட்ட சிலாம்பாக்கம் - புதுப்பாளையம் கிராமங்களுக்கு இடையே செல்லும் செய்யாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் ரூ.35 கோடியே 21 லட்சம் மதிப்பில் கட்ட திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் உத்திரமேரூர் எம்.எல்.ஏ.சுந்தர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி தடுப்பணைக்கான பணிகளை தொடங்கி வைத்தார். இந்த பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த தடுப்பணை பணிகளை வருகிற பருவ மழைக்கு முன்னர் முடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்து உள்ளனர். தற்போது தடுப்பணை பணி 50 சதவீதம் முடிந்து உள்ளது.
சிலாம்பாக்கம் - புதுப்பாளையம் இடையே செய்யாற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணை மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிலாம்பாக்கம், வெங்காரம், ஒழுகரை, மாகரல் ஆகிய கிராமங்களும், திருவண்ணாமலை மாவட்டத்தில் புதுப்பாளையம், அரசாணை பாளையம், வயலாத்தூர், உள்ளிட்ட கிராமங்கள் என மொத்தம் சுமார் 1,623 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, சிலாம்பாக்கம் - புதுப்பாளையம் இடையே செய்யாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க வேண்டும் என்பது சுற்றி உள்ள கிராமமக்களின் நீண்ட நாள்கோரிக்கை ஆகும். இந்த தடுப்பணையால் ஆற்றில் வீணாக செல்லும் தண்ணீர் தேங்கும். இதன் மூலம் சுற்றி உள்ள விவசாயிகள் பலன் அடைவார்கள். நிலத்தடி நீர்மட்டமும் உயரும். விவசாயம் ஆண்டு முழுவதும் நடைபெறும்.
தற்போது இந்த தடுப்பணை பணிகள் மெதுவாக நடந்து வருகிறது. இப்பணிக்காக செல்லும் வழித்தடங்கள் முறையாக இல்லாததால், பணிகள் தாமதமாகவும் அவ்வப்போது நிறுத்தப்படுகிறது. இதனை விரைவு படுத்தி வருகிற பருவமழைக்கு முன்னர் தடுப்பணை பணிகளை முழுவதும் முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ஜெயசீலன் பாலாற்று பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றார்.
- பலத்த காயம் அடைந்த ஜெயசீலன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பலியானார்.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அடுத்த வாயலூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலன் (வயது32), இவர் அதே பகுதியில் உள்ள பாலாற்று பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி சென்ற அரசு பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஜெயசீலன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பலியானார்.
இதேபோல் மாமல்லபுரத்தை சேர்ந்த கிருஷ்ணன் (64) என்பவர் திருக்கழுக்குன்றம் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். நல்லூர் நோக்கி சென்ற அரசு பஸ்மோதியில் கிருஷ்ணன் பலியானார்.
- போட்டியை மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி அரசு மேல்நிலை பள்ளி பொறுப்பேற்று நடத்தியது.
- 20 பள்ளிகளில் இருந்து, 21 அணிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இடையே பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, மாவட்ட அளவிலான மாணவ-மாணவிய வீரர்களை தேர்ந்தெடுத்து வருகிறார்கள். அதன்படி, திருப்போரூர் வட்டார அளவிலான கைப்பந்து போட்டியை மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி அரசு மேல்நிலை பள்ளி பொறுப்பேற்று நடத்தியது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரபாகரன், உடற்கல்வி ஆய்வாளர் திருவளர்ச்செல்வன், ஒன்றிய கவுன்சில் தேசிங்கு, நெம்மேலி ஊராட்சி தலைவர் சீ.ரமணி உள்ளிட்டோர் போட்டியை துவக்கி வைத்தனர்.
இதில் 20 பள்ளிகளில் இருந்து, 21 அணிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 14, 17, 19, வயது பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டிகளில் நெம்மேலி அரசு மேல்நிலை பள்ளி, திருப்போரூர் ஆறுபடைவீடு மெட்ரிகுலேஷன் பள்ளி, கேளம்பாக்கம் புவனகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி, கேளம்பாக்கம் அரசு மகளிர் உயர்நிலை பள்ளி, ஆகியவை முதலிடங்களை பிடித்தது. இப்பள்ளிகள் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளது.
- மகளிர் சுய உதவி குழுவினருக்கு மட்டும் ரூ.30 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெள்ளி செங்கோல் வழங்கி கவுரவித்தார்.
திருப்போரூர் ஒன்றியம் மானம்பதி ஊராட்சியில் குயில் குப்பம் பகுதியில் வசித்து வந்த இருளர் பழங்குடியினர் 63 பேருக்கு ரூ.7.50 கோடி மதிப்பில் மெட்ராஸ் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் மற்றும் அபிராமி ராமநாதன் டிரஸ்ட் சார்பில் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான திறப்பு விழா அபிராமி திரையரங்க உரிமையாளரும் மெட்ராஸ் சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவருமான அபிராமி ராமநாதன் தலைமையில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய வீடுகளை திறந்து வைத்து ஒவ்வொரு வீட்டுக்கும் பிரிட்ஜ், டி.வி., பீரோ, குக்கர், மிக்சி, கிரைண்டர், அடுப்பு, பாத்திரங்கள் உள்ளிட்ட குடும்பத்துக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வழங்கினார்.
அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:-
தமிழக அரசு ஏழை-எளிய மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மகளிர் சுய உதவி குழுவினருக்கு மட்டும் ரூ.30 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது.
மக்களை தேடி திட்டங்களை அளிப்பது திராவிட மாடல் அரசு மட்டுமே. உங்கள் குடும்பத் தலைவராகவே தமிழக முதல்வர் செயல்படுகிறார்.
அவருக்கும் இந்த அரசுக்கும் தோளோடு தோள் நின்று ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
நான் உங்களிடம் வைக்கும் கோரிக்கை என்னவென்றால், உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள். கல்வியை யாராலும் பறிக்க முடியாது. எந்த நிலை வந்தாலும் கல்வியை விட்டு விடாதீர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சி முடிந்ததும் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருப்போரூர் வடக்கு, தெற்கு ஒன்றியங்களில் கொடியேற்று விழா நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கொடியேற்று விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கிராமம் கிராமமாக சென்று கொடியேற்றினார்.
திருப்போரூர் பேரூர் அரசு மருத்துவமனை எதிரில் இருந்து கொடியேற்றி இள்ளலூர், வெண்பேடு, காயார், பனங்காட்டுப்பாக்கம், கொளத்தூர், வெள்சிசை கோளம்பாக்கம், தையூர் என 13 இடங்களில் பிரசார வேனில் கிராமம் கிராமமாக சென்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியேற்றினார். கல்வெட்டையும் திறந்து வைத்தார்.
அவருக்கு வழி நெடுக மக்கள் திரண்டு நின்று பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். பல ஊர்களில் மலர் தூவி வரவேற்பு கொடுத்தனர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெள்ளி செங்கோல் வழங்கி கவுரவித்தார்.
நிகழ்ச்சியில் பல்லாவரம் இ.கருணாநிதி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., ஒன்றியச் செயலாளர் எஸ்.ஆர்.எல்.இதயவர்மன், படப்பை மனோகரன் இளைஞரணி அமைப்பாளர் கோல்டு பிரகாஷ் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர்.
- 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள், மருத்துவ பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
- தொடர்ந்து வரும் 7ம் தேதிவரை பெண்களுக்காக தாய்ப்பால் வார விழா நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
மாமல்லபுரம்:
சதுரங்கபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மகப்பேறு பிரிவில், உலக "தாய்ப்பால் வாரவிழா" டாக்டர் கவிதா, கௌதமன் தலைமையில் நடைபெற்றது. 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள், மருத்துவ பணியாளர்கள் தாய்ப்பாலின் மகத்துவம் குறித்து உறுதிமொழி ஏற்றனர்.
தொடர்ந்து வரும் 7ம் தேதிவரை மாமல்லபுரம், கல்பாக்கம், திருக்கழுக்குன்றம் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் உள்ள பால்வாடி, சுகாதார மையம், மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் கர்ப்பிணி பெண்களுக்காக தாய்ப்பால் வார விழா நிகழ்ச்சி நடத்தப்படுவதாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் இரா.பகவதி தெரிவித்தார்.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வழி நெடுங்கிலும் உள்ள கிராமங்களில் மக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளிக்க பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
- இருளர் இன மக்களுக்கு 63 புதிய குடியிருப்புகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து 500 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
திருப்போரூர்:
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருப்போரூர் வடக்கு தெற்கு ஒன்றியம் மற்றும் பேரூரில் இன்று கிராமம் கிராமமாக சென்று தி.மு.க. கொடியேற்றி மக்களை சந்திக்கிறார். மேலும் 63 புதிய குடியிருப்புகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து 500 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையை முன்னிட்டு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் அடங்கிய திருப்போரூர் வடக்கு தெற்கு ஒன்றியம் மற்றும் பேரூரில் இன்று (புதன்கிழமை) அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிராமம் கிராமமாக சென்று கழக கொடியேற்றி மக்களை சந்திக்கிறார்.
திருப்போரூர் தெற்கு ஒன்றியம் மானாம்பதி கிராமத்தில் இன்று கொடியேற்று விழா நிகழ்ச்சியை தொடங்கி கழக கொடியேற்றுகிறார். குயில் குப்பத்தில் கொடியேற்றுகிறார்.
திருப்போரூர் பேரூர் அரசு மருத்துவமனை எதிரில் இருந்து கொடியேற்றி அதை தொடர்ந்து இள்ளலூரிலும், வெண்பேடு கிராமத்திலும், காயாரிலும், காரியார் காலனியிலும், மாலை 5 மணிக்கு பனங்காட்டுப்பாக்கத்திலும், 5.30 மணிக்கு கொளத்தூரிலும், 6 மணிக்கு சோலையூரிலும், 6.30 மணிக்கு கேளம்பாக்கத்திலும், இரவு 7 மணிக்கு தையூரிலும் கொடியேற்றி வைக்கிறார்.
மொத்தம் 13 இடங்களில் கிராமம் கிராமமாக சென்று கொடியேற்று விழா நிகழ்ச்சியில் பங்கேற்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வழி நெடுங்கிலும் உள்ள கிராமங்களில் மக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளிக்க பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் முறையாக கிராமம் கிராமமாக சென்று கொடியேற்று விழாவில் பங்கேற்க வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திருப்போரூர் வடக்கு, தெற்கு ஒன்றியம் மற்றும் பேரூரில் உள்ள ஒட்டு மொத்த கழக நிர்வாகிகளும் வழிநெடுக கழக கொடி தோரணங்களை அழகுற கட்டி வரவேற்பு பதாகைகளையும் கழக கொடிகளையும் தங்களது கரங்களில் ஏந்தி நின்று எழுச்சியான முறையில் வரவேற்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறி உள்ளார்.
முன்னதாக இருளர் இன மக்களுக்கு 63 புதிய குடியிருப்புகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து 500 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
- முகையூரை சேர்ந்த நிர்மல் பஸ்சுக்குள் ஏறி தூங்கி கொண்டிருந்த கண்டக்டரின் செல்போனை எடுத்து விட்டு, டிரைவர் போனை திருடினார்.
- நிர்மலை கூவத்தூர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மாமல்லபுரம்:
கூவத்தூர் அடுத்த முகையூர் கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று இரவு தனியார் பஸ்சை நிறுத்தி விட்டு, அதன் டிரைவரும், கண்டக்டரும் தூங்கினர். அப்போது முகையூரை சேர்ந்த நிர்மல் (26) என்பவர் பஸ்சுக்குள் ஏறி தூங்கி கொண்டிருந்த கண்டக்டரின் செல்போனை எடுத்து விட்டு, டிரைவர் போனை திருடினார்.
டிரைவர் போனை எடுத்த போது சிக்கிக்கொண்டார். இதையடுத்து நிர்மலை கூவத்தூர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- திருக்கழுக்குன்றம் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.டி.அரசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
- மாணவ - மாணவியர் 100 பேருக்கு தமிழக முதல்வரின் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அடுத்த சதுரங்கபட்டிணம் அரசினர் மேல்நிலை பள்ளியில், 12ம் வகுப்பு படிக்கும் மாணவ - மாணவியர் 100 பேருக்கு, தமிழக முதல்வரின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் திருப்போரூர் வி.சி.க. எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, சைக்கிள்களை வழங்கினார்.
திருக்கழுக்குன்றம் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.டி.அரசு, முன்னாள் எம்.எல்.ஏ தமிழ்மணி, தலைமை ஆசிரியர் ராஜசேகரன், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
- காதல் விவகாரம் தெரிந்ததும் ஹேமிதாவை பெற்றோர் கண்டித்து உள்ளனர்.
- ஹேமிதாவுக்கு அஜய் புதியதாக செல்போனை வாங்கி கொடுத்து இன்ஸ்டாகிராம் மூலமாக பேசி இருவரும் காதலை வளர்த்து வந்து உள்ளனர்.
தாம்பரம்:
பல்லாவரம், வேம்புலி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் பாலமுருகன். இவரது மனைவி விமலா. இவர்களது மூத்த மகள் ஹேமிதா (வயது19).இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக். 2-ம்ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 27-ந்தேதி அதிகாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற ஹேமிதா பின்னர் திரும்பி வரவில்லை. அவரை பெற்றோர் தேடிவந்தனர். இது தொடர்பாக பல்லாவரம் போலீசிலும் புகார் செய்யப்பட்டது.
இந்த நிலையில் குரோம்பேட்டை ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ஹேமிதா உடல் மீட்கப்பட்டது. அவர் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்ததாக கூறப்பட்டது.
இதற்கிடையே மகள் ஹேமிதா சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்து உள்ளனர். இது பற்றி போலீசார் விசாரணை நடத்தியபோது பல்வேறு பரபரப்பு தகவல்கள் கிடைத்தன.
ஹேமிதா அதே பகுதியில் உள்ள டியூஷன் சென்டரில் சிறு வயது முதலே படித்து வந்துள்ளார். அப்போது டியூஷன் மாஸ்டர் அஜய் (26) என்பவருடன் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது.
இந்த காதல் விவகாரம் தெரிந்ததும் ஹேமிதாவை பெற்றோர் கண்டித்து உள்ளனர். அதன் பிறகு சில மாதங்களாக இருவரும் பேசுவதை நிறுத்திவிட்டதாக கூறப்படுகின்றது. பின்னர் ஹேமிதா கல்லூரிக்கு சென்றபோது ஹேமிதாவை மீண்டும் அஜய் சந்தித்து காதலை வளர்த்து உள்ளார். ஆனால் ஹேமிதா பயன்படுத்தி இருந்த செல்போனை அவரின் பெற்றோர் வாங்கிக்கொண்டதால் இருவரும் பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டது
இதையடுத்து ஹேமிதாவுக்கு அஜய் புதியதாக செல்போனை வாங்கி கொடுத்து இன்ஸ்டாகிராம் மூலமாக பேசி இருவரும் காதலை வளர்த்து வந்து உள்ளனர். இந்த நிலையில் ஹேமிதா மர்மமான முறையில் இறந்து உள்ளார்.
இதைத்தொடர்ந்து டியூசன் மாஸ்டர் அஜய்யிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஹேமிதா தற்கொலை செய்துகொண்டதாக கூறினால் வீட்டை விட்டு வெளியே வந்து அவர் இரண்டு கிலோமீட்டர் தூரம் உள்ள குரோம்பேட்டை ரெயில் நிலையம் அருகே ஏன் வரவேண்டும்.
அதிகாலை 4 மணிக்கே அவரை வெளியே அழைத்தது யார்? யாரை சந்திக்க சென்றார்? அவரை யாரேனும் தற்கொலை செய்து கொள்வதற்காக தூண்டினார்களா? அல்லது காதலித்து வரும் அஜய்யை பார்ப்பதற்காக அதிகாலை வந்தாரா? என பல கோணங்களில் பல்லாவரம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இதன் பின்னரே ஹேமிதா ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது ரெயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்டாரா? என்பது தெரியவரும்.
இது தொடர்பாக ஹேமிதா பயன்படுத்திய செல்போன் மற்றும் காதலன் அஜய் பயன்படுத்திய செல்போன் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி அதில் உள்ள உரையாடல் மற்றும் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.






