என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடல்நீரை குடிநீராக்கும் புதிய ஆலைக்கு அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர்: விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்
- ஆலையின் கட்டுமான பணிகள் 42 மாதங்களில் நிறைவடைந்து, சென்னை மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது.
- சூலேரிக்காட்டில் நடைபெற்று வரும் 2வது ஆலையின் பணிகளையும் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த பேரூர் கிழக்கு கடற்கரை சாலையில் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில், 4276.44 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நாள் ஒன்றிற்கு 40 கோடி லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும், 3வது புதிய ஆலைக்கு வரும் 21ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். இந்த ஆலையின் கட்டுமான பணிகள் 42 மாதங்களில் நிறைவடைந்து, சென்னை மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது.
இந்த விழா நடைபெறும் பகுதி மற்றும் அங்கு அமைக்கப்பட்டு வரும் தற்காலிக அலுவலக கட்டிடம் கட்டும் பகுதிகளை இன்று அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் சூலேரிக்காட்டில் நடைபெற்று வரும் 2வது ஆலையின் பணிகளையும் ஆய்வு செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், போலீஸ் எஸ்.பி. சாய் பிரணீத், திருப்போரூர் எம்.எல்.ஏ பாலாஜி, திருப்போரூர் ஒன்றிய தலைவர் இதயவர்மன், பையனூர் சேகர், மாமல்லபுரம் விசுவநாதன், மாமல்லபுரம் பேரூராட்சி கவுன்சிலர் மோகன் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முன்னதாக மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன், இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், உளவுத்துறை போலீசார் உள்ளிட்டோர், வரும் 21ம் தேதி முதலமைச்சர் பங்கேற்கும் விழாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மேடை, அரங்கம் அமைக்கும் ஒப்பந்ததாரர்களுடன் ஆலோசனை நடத்தினர்.






