என் மலர்
உள்ளூர் செய்திகள்

தாய் ஏறுவதற்குள் ரெயில் புறப்பட்டது- மின்சார ரெயிலில் தவித்த சிறுவனை மீட்ட போலீசார்
- போலீசார் முருகலிங்கம், அந்த ரெயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் பிரசாத் என்பவருக்கு தகவல் தெரிவித்தார்.
- மின்சார ரெயிலில் தவித்தபடி பயணம் செய்த சிறுவனை மீட்டு மீண்டும் கடற்கரை மார்க்கமாக வந்த ரெயிலில் அழைத்து வந்து தாய் கிரிஜாவிடம் ஒப்படைத்தார்.
தாம்பரம்:
கண்டிகை பகுதியை சேர்ந்தவர் கிரிஜா. இவர் தனது 6 வயது மகனுடன் பெருங்களத்தூர் ரெயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு செல்வதற்காக வந்தார். மின்சார ரெயில் வந்ததும் கிரிஜா தனது மகனை முதலில் ஏற்றிவிட்டு பின்னர் ரெயில் ஏற முயன்றார்.
இதற்குள் கூட்ட நெரிசலில் கிரிஜாவால் மின்சார ரெயிலில் ஏற முடியவில்லை. மின்சார ரெயிலும் செங்கல்பட்டு நோக்கி புறப்பட்டு சென்றது. அதில் தனியாக ஏறிய அவரது மகன் தவித்தார். இதுபற்றி கிரிஜா அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே போலீசாரிடம் கூறி அழுதார். இதையடுத்து ரெயில்வே போலீசார் முருகலிங்கம், அந்த ரெயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் பிரசாத் என்பவருக்கு தகவல் தெரிவித்தார். அவர் மின்சார ரெயிலில் தவித்தபடி பயணம் செய்த சிறுவனை மீட்டு மீண்டும் கடற்கரை மார்க்கமாக வந்த ரெயிலில் அழைத்து வந்து தாய் கிரிஜாவிடம் ஒப்படைத்தார். அவர் கண்ணீர் மல்க கதறி அழுத மகனை அணைத்தார். உடனடியாக செயல்பட்ட ரெயில்வே போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.






