என் மலர்
செங்கல்பட்டு
- 1995ல் இந்திய அரசிடம் சிறியரக வானூர்தி அனுமதி பெற்று கோபிநாத் என்பவர் ஏர்டெக்கான் என்ற பெயரில் விமான சேவையை துவங்கினார்.
- 50-க்கும் மேற்பட்டோர் 20 ஆண்டுகளுக்கு பிறகு மாமல்லபுரத்தில் ஒன்று கூடினர்.
மாமல்லபுரம்:
விமான பயணத்தை ஏழைகளும் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் 1995ல் இந்திய அரசிடம் சிறியரக வானூர்தி அனுமதி பெற்று கோபிநாத் என்பவர் ஏர்டெக்கான் என்ற பெயரில் விமான சேவையை துவங்கினார்.
ஆரம்ப காலத்தில் இருந்தே டெல்லி, கொல்கத்தா, அகமதாபாத், சூரத், திருவனந்தபுரம், பெங்களூரு, சென்னை, கோவா, ஐதராபாத், அந்தமான் உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றிய கேப்டன், செக்யூரிட்டி, சோதனை அதிகாரி, விமான பணிப்பெண், அலுவலர்கள் என 50க்கும் மேற்பட்டோர் 20ஆண்டுகளுக்கு பிறகு மாமல்லபுரத்தில் ஒன்று கூடினர்.
ஆண்கள், பெண்கள் அனைவரும் ஒன்றாக கூடி ரீயூனியன் பெஸ்ட்-2023 என்ற நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி, கேக்வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். ஒரு சிலர் தங்களது குடும்பத்தாருடன் வந்திருந்தனர்.
- போலீசார் முருகலிங்கம், அந்த ரெயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் பிரசாத் என்பவருக்கு தகவல் தெரிவித்தார்.
- மின்சார ரெயிலில் தவித்தபடி பயணம் செய்த சிறுவனை மீட்டு மீண்டும் கடற்கரை மார்க்கமாக வந்த ரெயிலில் அழைத்து வந்து தாய் கிரிஜாவிடம் ஒப்படைத்தார்.
தாம்பரம்:
கண்டிகை பகுதியை சேர்ந்தவர் கிரிஜா. இவர் தனது 6 வயது மகனுடன் பெருங்களத்தூர் ரெயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு செல்வதற்காக வந்தார். மின்சார ரெயில் வந்ததும் கிரிஜா தனது மகனை முதலில் ஏற்றிவிட்டு பின்னர் ரெயில் ஏற முயன்றார்.
இதற்குள் கூட்ட நெரிசலில் கிரிஜாவால் மின்சார ரெயிலில் ஏற முடியவில்லை. மின்சார ரெயிலும் செங்கல்பட்டு நோக்கி புறப்பட்டு சென்றது. அதில் தனியாக ஏறிய அவரது மகன் தவித்தார். இதுபற்றி கிரிஜா அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே போலீசாரிடம் கூறி அழுதார். இதையடுத்து ரெயில்வே போலீசார் முருகலிங்கம், அந்த ரெயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் பிரசாத் என்பவருக்கு தகவல் தெரிவித்தார். அவர் மின்சார ரெயிலில் தவித்தபடி பயணம் செய்த சிறுவனை மீட்டு மீண்டும் கடற்கரை மார்க்கமாக வந்த ரெயிலில் அழைத்து வந்து தாய் கிரிஜாவிடம் ஒப்படைத்தார். அவர் கண்ணீர் மல்க கதறி அழுத மகனை அணைத்தார். உடனடியாக செயல்பட்ட ரெயில்வே போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.
- பல்லாவரம் அடுத்த திரிசூலம் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி.
- ஆழமான பகுதிக்கு சென்ற பழனிசாமி தண்ணீரில் மூழ்கி பலியானார்.
தாம்பரம்:
பல்லாவரம் அடுத்த திரிசூலம் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது68).
இன்று காலை அவர், அதே பகுதி கண்ணபிரான் கோவில் தெருவில் உள்ள கல்குவாரி தண்ணீரில் குளிக்க சென்றார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற பழனிசாமி தண்ணீரில் மூழ்கி பலியானார்.
- விபத்தில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி முழுவதும் நொறுங்கியது.
- தகவல் அறிந்ததும் மதுராந்தகம் போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
மதுராந்தகம்:
நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி அரசு விரைவு பஸ் வந்து கொண்டு இருந்தது. சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
இன்று காலை 8.30 மணியளவில் அதிகாலை மதுராந்தகம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் முன்னாள் சென்று கொண்டு இருந்த டெம்போ வேன் மீது பயங்கரமாக மோதியது. இதனால் டெம்போ வேன் முன்னால் சென்ற சுற்றுலா பஸ்சின் பின்பகுதியில் மோதியது.
இந்த விபத்தில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி முழுவதும் நொறுங்கியது. டெம்போ வேனில் பயணம் செய்தவர்கள் மற்றும் பஸ் பயணிகள் என சுமார் 10 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய அரசு பஸ், டெம்போ வேன், சுற்றுலா பஸ் என 3 வாகனங்களும் அடுத்தடுத்து சாலையின் குறுக்கே நின்றன. இதனால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் மதுராந்தகம் போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்திய பின்னரே போக்குவரத்து நெரிசல் சீரானது. விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டில் யாரும் இல்லாதபோது திடீரென வேதம் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
- தற்கொலை குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றம் அடுத்த சின்ன இரும்பேடு பகுதியை சேர்ந்தவர் வேதம் (வயது60). திருமணமாகாத அவர் சகோதரர் கருணாகரன் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது திடீரென வேதம் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சென்னை, புதுச்சேரி செல்லும் பயணிகள் பஸ்சுக்காக அங்கு பயத்துடன் காத்து நிற்கின்றனர்.
- ஹெல்மெட் அணிந்து கொண்டு பைக்கில் சந்தேகத்துக்கு இடமான செயின் பறிப்பு நபர்கள் சுற்றுவதாகவும் கூறப்படுகிறது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை பையாஸ் பகுதியில் உள்ள மின் விளக்குகள் ஒரு வாரமாக எரியாததால் அப்பகுதி இருட்டாக காணப்படுகிறது.
சென்னை, புதுச்சேரி செல்லும் பயணிகள் பஸ்சுக்காக அங்கு பயத்துடன் காத்து நிற்கின்றனர்.
சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களில் அதிகளவில் மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகளும் அங்கு பஸ்சுக்கு குடும்பமாக, குழந்தைகளுடன் நிற்கின்றனர். போதை ஆசாமிகள் அவர்கள் வெளியூர் ஆட்கள் என தெரிந்து கொண்டு, அவர்களிம் மது அருந்த பணம் கேட்பதாகவும், ஹெல்மெட் அணிந்து கொண்டு பைக்கில் சந்தேகத்துக்கு இடமான செயின் பறிப்பு நபர்கள் சுற்றுவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாமல்லபுரம் இ.சி.ஆர் மின் விளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- தமிழ்செல்வியின் வலது கையில் கத்தி குத்து விழுந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தாம்பரம்:
செங்கல்பட்டு சுந்தரமூர்த்தி வினாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது பேரனுக்கு மொட்டை அடிக்கும் நிகழ்ச்சிக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக சுந்தரமூர்த்தி நேற்று இரவு வெளியில் சென்றார். பின்னர் பொருட்களை வாங்கிக்கொண்டு மூர்த்தி, அவரது மனைவி தமிழ்செல்வி, மற்றும் மகள் ஆகியோர் பஸ்சில் வீடு திரும்பினர். போக்குவரத்து நெரிசல் காரணமாக பெருங்களத்தூர் ரெயில் நிலையம் அருகே இறங்கி 3 பேரும் ரெயிலில் செல்ல முடிவு செய்தனர். இதற்காக பெருங்களத்தூர் ரெயில் நிலையத்துக்கு சென்றனர். பின்னர் தமிழ் செல்வியை 1- வது நடைமேடையில் நிற்குமாறு கூறிவிட்டு மூர்த்தியும் அவரது மகளும் டிக்கெட் எடுப்பதற்காக சென்றனர்.
அப்போது தமிழ்செல்வி நின்று கொண்டிருந்த 1- வது நடை மேடையில் மர்ம நபர் ஒருவர் சுற்றிக்கொண்டிருந்தார். அவர் திடீரென தமிழ்செல்வியின் மீது தாக்குதலில் ஈடுபட்டார்.
தான் கையில் வைத்திருந்த கத்தி போன்ற கூர்மையான ஆயுதத்தால் குத்தினார். இதில் தமிழ்செல்வியின் வலது கையில் கத்தி குத்து விழுந்தது. இதில் காயம் அடைந்த அவர் வலியால் அலறி துடித்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் மர்ம நபர் அங்கிருந்து ஓடி விட்டார். பின்னர் படுகாயம் அடைந்த தமிழ்செல்வியை மீட்டு தாம்பரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது தொடர்பாக தாம்பரம் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக போலிசார் கூறும்போது மனநிலை பாதிக்கப்பட்ட நபர்தான் தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர். அவரைடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வியாபாரம் முடிந்ததும் வழக்கம்போல் ஊழியர்கள் ஜவுளிக்கடையை மூடிச் சென்றனர்.
- தீவிபத்தால் பழைய மாமல்லபுரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்போரூர்:
சென்னை தி.நகரைச் சேர்ந்தவர்கள் ஜாகிர் உசேன், அப்துல்லா. இவர்கள் பழைய கேளம்பாக்கம், மாமல்லபுரம் சாலையில் 2 மாடிகள் கொண்ட ஜவுளிக் கடை நடத்தி வருகின்றனர்.
இங்கு துணிகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் வழக்கம்போல் ஊழியர்கள் ஜவுளிக்கடையை மூடிச் சென்றனர்.
இந்த நிலையில் இன்று காலை சுமார் 6 மணியளவில் கடையில் இருந்து கரும்புகை வெளியே வந்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி 2 மாடிகளும் பற்றி எரிந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சிறுசேரி, திருப்போரூர், மேடவாக்கம் உள்ளிட்ட பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள், தீயணைப்பு துறை உதவி அலுவலர் திருநாவுக்கரசு தலைமையில் விரைந்து வந்தனர். கடை இருந்த இடம் குறுகலான இடம் என்பதால் பொக்லைன் இயந்திரம் மூலம் கடையின் ஷட்டரை உடைத்தனர். பின்னர் அதன் வழியாக தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.
கடையில் இருந்த துணிகள், பிளாஸ்டிக் பொருட்கள் பற்றி எரிந்ததால் அப்பகுதிய முழுவதும் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. சுமார் 4 மணிபோராடி தீயை அணைத்தனர். எனினும் கடையில் இருந்த அணைத்து பொருட்களும் எரிந்து சாம்பலானது. தீ விபத்தை பார்த்து கடையின் உரிமையாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் கதறி அழுதனர்.
சேதமதிப்பு ரூ.1 கோடிக்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது. மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் கேளம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தீவிபத்தால் பழைய மாமல்லபுரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னையில் இருந்து திருப்போரூர் நோக்கி வந்த பஸ்கள் அனைத்தும் மாற்றுப் பாதை வழியாக திருப்பி விடப்பட்டன. மேலும் பழைய மாமல்லபுரம் சாலையில் வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.
- இந்திய வீரர்கள் 70 பேரை தேர்வு செய்யும் "நேஷனல் லெவல்" போட்டி இன்று மாமல்லபுரத்தில் துவங்கியது.
- பல்வேறு பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட சர்பிங் வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் வரும் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை சர்வதேச கடல் அலைச்சறுக்கு (சர்பிங்) போட்டி கடற்கரை கோயில் வடபகுதி கடலோரத்தில் நடைபெற உள்ளது.
இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில் இந்திய வீரர்களும் பங்கேற்கிறார்கள்.
சர்வதேச போட்டியில் பங்கேற்க தகுதியான இந்திய வீரர்கள் 70 பேரை தேர்வு செய்யும் "நேஷனல் லெவல்" போட்டி இன்று மாமல்லபுரத்தில் துவங்கியது.
இதில், கோவா, பாண்டிச்சேரி, மங்களூர், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஒரிசா, சென்னை, கோவளம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட சர்பிங் வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
குறிப்பிட்ட நிமிடத்தில் வரும், அலை கணக்கை வைத்து அதில் விழாமல் அதிக நேரம் சர்ப் செய்வதை கணக்கிட்டு, மாநிலம் வாரியாக சர்வதேச வீரர்களை, சர்பிங் பெடரேசன் ஆப் இந்தியா, தமிழ்நாடு சர்ப் அசோசியேசன் அமைப்பினர் இன்று காலையில் இருந்து தேர்வு செய்து வருகின்றனர்.
- மோகன்ராஜ் தலைமையில் தனிப்படை போலீசார் மோட்டார் சைக்கிள்கள் திருடும் கும்பலை தொடர்ச்சியாக கண்காணித்து வந்தனர்.
- 18 மோட்டார் சைக்கிளில் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கூடுவாஞ்சேரி:
தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் எல்லைக்குட்பட்ட வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, காட்டாங்கொளத்தூர், மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில் உள்பட பல்வேறு இடங்களில் அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருடு போகும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் கூடுவாஞ்சேரி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையில் தனிப்படை போலீசார் மோட்டார் சைக்கிள்கள் திருடும் கும்பலை தொடர்ச்சியாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று ஊரப்பாக்கம் ரெயில் நிலையம் அருகே சந்தேகப்படும்படி சுற்றி திரிந்து கொண்டிருந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்த போது அவர்கள் இருவரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்தனர். இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்த போது அவர்கள் பூந்தமல்லி அருகே உள்ள மலையம்பாக்கம், மாங்காடு மெயின் ரோடு பகுதியை சேர்ந்த மாரிராஜ் (வயது 31), தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை இளங்காடு கிராமத்தை சேர்ந்த அய்யாபிள்ளை (30) என்பதும், ரெயில் நிலையம் மற்றும் கூடுவாஞ்சேரி சுற்றுவட்டாரங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரிய வந்தது. இது குறித்து கூடுவாஞ்சேரி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட மாரிராஜ், அய்யா பிள்ளை ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவர்களிடமிருந்து 18 மோட்டார் சைக்கிளில் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
- உண்டியல் உடைக்கும் சத்தம் கேட்டு கோவில் அருகே உள்ள வீடுகளில் இருந்தவர்கள் எழுந்து வந்தனர்.
- அணைக்கட்டு போலீசார் ஹேமத்குமாரை கைது செய்து கோவில் உண்டியலை உடைத்து திருடிய ரூ.15 ஆயிரத்தை மீட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த பவுஞ்சூர் அருகே கடுகுபட்டு கிராமத்தில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வளாகத்தில் காணிக்கை உண்டியல் உள்ளது. நேற்று இரவு அதே பகுதியைச் சேர்ந்த ஹெமத்குமார் என்பவர் மது போதையில் கோவில் எதிரே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கோவில் சுற்றுச்சுவரை ஏரி குதித்து உள்ளே சென்றார்.
பின்னர் அங்கிருந்த உண்டியல் பூட்டை உடைத்து பணத்தை திருட முயன்றார். உண்டியல் உடைக்கும் சத்தம் கேட்டு கோவில் அருகே உள்ள வீடுகளில் இருந்தவர்கள் எழுந்து வந்தனர். அவர்கள் வருவதை கண்ட ஹெமத்குமார் உண்டியலில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அங்கு வந்த கிராம மக்கள் அங்கு நின்றிருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரித்த போது அதே பகுதியை சேர்ந்த ஹேமத்குமார் என்பது தெரிந்தது. இதுகுறித்த புகாரின் போரில் அணைக்கட்டு போலீசார் ஹேமத்குமாரை கைது செய்து கோவில் உண்டியலை உடைத்து திருடிய ரூ.15 ஆயிரத்தை மீட்டனர்.
- செங்கல்பட்டு நகரின் அருகே அமைந்துள்ள கொளவாய் ஏரியானது கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக மாசடைந்து வருகிறது.
- மழைக்காலங்களில் கொளவாய் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரானது நீஞ்சல் மதகு வழியாக பாலாற்றில் சென்று கலக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டம் மிகப்பெரிய ஏரிகள் மற்றும் குளங்கள் நிறைந்த மாவட்டமாகும். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் அருகே மதுராந்தகம் ஏரி உள்ளது. இதற்கடுத்ததாக செங்கல்பட்டில் உள்ள பெரிய ஏரி கொளவாய் ஏரி. இது 882 ஏக்கர் பரப்பளவுடன் 15 அடி ஆழம் கொண்ட ஏரியாகும்.
ஏரியின் கொள்ளளவு 476 கன அடியாகும். கொளவாய் ஏரியை சுற்றி அமனம்பாக்கம் ஏரி, குன்னவாக்கம் ஏரி, அஞ்சூர் ஏரி, வீராபுரம் ஏரி, மேலமையூர் ஏரி, வல்லம் ஏரி, பட்டரவாக்கம் ஏரி, அனுமந்தை ஏரி, குண்டூர் ஏரி உள்பட பெரிய ஏரி மற்றும் சிற்றேரி என 23 ஏரிகள் அமைந்துள்ளன. மழைக்காலங்களில் 23 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டிய பிறகு வெளியேறும் உபரி நீரானது கொளவாய் ஏரியை சென்றடைகிறது.
கொளவாய் ஏரி முழு கொள்ளளவை எட்டிய பிறகு உபரி நீரானது நீஞ்சல் மதகு வழியாக பொன்விளைந்த களத்தூர் ஏரி மற்றும் பாலாறு பகுதியில் சென்று கலக்கிறது. செங்கல்பட்டு நகரின் அருகே அமைந்துள்ள கொளவாய் ஏரியானது கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக மாசடைந்து வருகிறது.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி, நகரில் உள்ள 10-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவ மனைகள், கல்லூரி மற்றும் பள்ளிகள் ரெயில்வே குடியிருப்பு, திரையரங்குகள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் மற்றும் லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இந்த செங்கல்பட்டு நகரத்தில் அனைத்து கழிவுநீர் மற்றும் மழைநீர் கொளவாய் ஏரியில் சென்று கலந்து வருகிறது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொளவாய் ஏரியை கரைகளை பலப்படுத்தி ஏரியை தூர்வாரி படகு குழாம், கரையில் இருந்து ஏரியின் நடுவே நடந்து சென்று வர பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பாலம், உணவு விடுதி உயர் கோபுர கடிகாரம் மற்றும் பூங்காக்கள் அமைப்பதற்கு ரூபாய் 60 கோடி நிதி நீர்வளத்துறை சார்பில் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு பணிகள் ஆமைவேகத்தில் செல்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கொளவாய் ஏரியில் சென்று கலக்கின்ற கழிவுநீரை தடுத்து நிறுத்த வேண்டும். கொளவாய் ஏரி அதை ஒட்டி உள்ள அகழி குளம் ஆகியவை குப்பைகள் மற்றும் கோழி இறைச்சி, ஆடு மற்றும் மாடுகள் கழிவுகளை கொட்டும் இடமாக கடந்த 20 ஆண்டுகளாக காணப்பட்டு வருகிறது என்று அப்பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபடுகின்ற பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மழைக்காலங்களில் கொளவாய் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரானது நீஞ்சல் மதகு வழியாக பாலாற்றில் சென்று கலக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 75 சதவீதம் மக்கள் குடிநீர் ஆதாரமாக இந்த ஏரி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தை உள்ளடக்கிய ஆலந்தூர், மீனம்பாக்கம், பல்லாவரம், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், சிங்க பெருமாள் கோவில் உள்பட செங்கல்பட்டு மாவட்டத்தில் 75 சதவீதம் மக்கள் குடிநீர் விநியோகம் பாலாற்றின் மூலமாகவே அப்பகுதி மக்களுக்கு நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
சுற்றுலா துறை சார்பில் படகு குழாம் அமைப்பதற்கு ரூபாய் ஒன்றரை கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுற்றுலா துறை பொறியாளர் தெரிவித்து உள்ளார்.
மாசடைந்த கொளவாய் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் பாலாற்றில் சென்று கலக்காதவாறு நீர் வளத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக இதை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






