என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து நகை மற்றும் 8000 பணத்தை கொள்ளையடித்துவிட்டு வெளியே வந்தனர்.
    • தப்பி ஓடிய கூட்டாளியின் பெயர் ஆனந்த் என்கிற ஆடு ஆனந்த் என்பதும் தெரிய வந்தது.

    குரோம்பேட்டை சாஸ்திரி காலனி 1-வது தெரு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் கார் விற்பனை நிலையத்தில் இன்சூரன்ஸ் ஏஜெண்டாக பணி புரிந்து வருகிறார். 2 மகள்கள் மற்றும் தனது தாய் சகுந்தலாவுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

    நேற்று சகுந்தலா மட்டும் வீட்டில் இருந்துள்ளார். மாலையில் சகுந்தலா வீட்டை பூட்டிவிட்டு கல்லூரியில் இருந்து வரும் தனது பேத்திகள் அழைத்து வருவதற்காக வெளியே சென்றார்.

    அப்போது மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து 11 சவரன் தங்க நகை மற்றும் 8000 பணத்தை கொள்ளையடித்துவிட்டு வெளியே வந்தனர்.

    கல்லூரி முடிந்து தனது பேத்திகளுடன் வீட்டிற்கு வந்த சகுந்தலா மாடிப்படியில் இருந்து இறங்கி வந்தவர்களை விசாரித்த போது அதில் இருந்து ஒருவர் தப்பி ஓடியுள்ளார். இதை பார்த்த சகுந்தலா மற்றும் கல்லூரி மாணவிகளான பேத்திகள் இருவரும் சேர்ந்து கொள்ளையனை மடக்கி பிடித்துக்கொண்டு கூச்சலிட்டனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் வந்து பிடித்து தர்ம அடி கொடுத்து குரோம்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் பிடிப்பட்டவனின் பெயர் ஆலந்தூர் பகுதியை சேர்ந்த தணமூர்த்தி (வயது 23) என்பது தெரியவந்தது. தப்பி ஓடிய கூட்டாளியின் பெயர் ஆனந்த் என்கிற ஆடு ஆனந்த் என்பதும் தெரிய வந்தது.

    தப்பி ஓடிய கொள்ளையனிடம் திருடிய நகை மற்றும் பணம் உள்ளதும் தெரிய வந்தது இதன் அடிப்படையில் குரோம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து வலை வீசி தேடி வருகின்றனர்.

    • லாரி மோதியதில் மோட்டார் சைக்கிள்கள் தூள், தூளாக நொறுங்கி கிடந்தன.
    • விபத்து தொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்து மேலும் விசாரித்து வருகிறார்கள்.

    வண்டலூர்:

    சென்னை மறைமலைநகர் அருகே பொத்தேரி பகுதியில் இன்று காலை லாரி மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பொத்தேரி வழியாக செங்கல்பட்டு நோக்கி இன்று காலை (வெள்ளிக்கிழமை) 10 மணியளவில் டிப்பர் லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது.

    பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரி அருகே வாகன ஓட்டிகள், பொது மக்கள் சாலையை கடந்து செல்ல பாதை உள்ளது. அதில் சாலையை கடப்பதற்காக 10-க்கும் மேற்பட்டோர் மோட்டார் சைக்கிளிலும், நடந்தும் செல்ல காத்திருந்தனர்.

    அப்போது அதிவேகத்தில் வந்த டிப்பர் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கடந்து செல்ல காத்திருந்த பயணிகள் கூட்டத்தில் புகுந்தது.

    தாறுமாறாக ஓடிய லாரி 3 மோட்டார்சைக்கிள்களில் இருந்தவர்கள் மற்றும் நடந்து செல்ல இருந்தவர்கள் மீது மோதி அருகில் இருந்த சிக்னல் கம்பத்தை இடித்து தள்ளிவிட்டு சர்வீஸ் சாலை தடுப்பு சுவரில் மோதி நின்றது.

    இந்த விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 5-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் பலியானவர்களின் உடல்கள் சாலையில் சிதறி கிடந்தன. அப்பகுதி முழுவதும் ரத்தமாக காணப்பட்டது.

    மேலும் லாரி மோதியதில் மோட்டார் சைக்கிள்கள் தூள், தூளாக நொறுங்கி கிடந்தன.

    தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து பலியான 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 5-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

    அதிவேகத்தில் லாரியை டிரைவர் ஓட்டி வந்ததே விபத்துக்கு காரணம் என்று தெரிகிறது. பலியானவர்கள் பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை. அவர்கள் பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

    விபத்து தொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்து மேலும் விசாரித்து வருகிறார்கள்.

    இந்த கோர விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • திடீரென அந்த மாடி படிக்கட்டு இடிந்து, மழைக்காக ஒதுங்கி நின்ற கல்லூரி மாணவர்கள் மீது விழுந்தது.
    • அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பொக்லைன் எந்திரம் மூலம் கட்டிட இடிபாடுகளை அகற்றி 4 பேரையும் வெளியே மீட்டனர்.

    தாம்பரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த தென்னேரி பகுதியை சேர்ந்தவர் பிரென்ச் ஜெபரி தவமணி (வயது 23), சென்னை மீனம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் திமோ மில்கி (19), பூந்தமல்லி பகுதியை சேர்ந்தவர் அஸ்வின் (19), சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்தவர் சாய் கவுசிகன் (19). இவர்கள் 4 பேரும் சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் பி.எஸ்சி 3-ம் ஆண்டு படித்து வந்தனர்.

    நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் இவர்கள் உள்பட 6 பேர் 3 இருசக்கர வாகனங்களில் சேலையூர் போலீஸ் நிலையம் எதிரே உள்ள ஏரிக்கரை தெருவில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென மழை பெய்ததால் அவர்கள் அங்கிருந்த பழைய கட்டிடத்தின் மாடி படிக்கட்டுக்கு கீழே சென்று மழைக்காக ஒதுங்கி நின்றனர். திடீரென அந்த மாடி படிக்கட்டு இடிந்து, மழைக்காக ஒதுங்கி நின்ற கல்லூரி மாணவர்கள் மீது விழுந்தது.

    இதில் பிரென்ச் ஜெபரி தவமணி, திமோ மில்கி, அஸ்வின், சாய் கவுசிகன் ஆகிய 4 பேரும் கட்டிட இடுபாடுக்குள் சிக்கி கொண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற 2 மாணவர்களும் ஓடிச்சென்று அங்கிருந்த பொதுமக்கள், தாம்பரம் தீயணைப்பு படையினர் மற்றும் சேலையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதற்குள் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பொக்லைன் எந்திரம் மூலம் கட்டிட இடிபாடுகளை அகற்றி 4 பேரையும் வெளியே மீட்டனர். பின்னர் மீட்கப்பட்ட 4 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    ஆனால் மாணவர்கள் பிரென்ச் ஜெபரி தவமணி, திமோ மில்கி ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அஸ்வின், சாய் கவுசிகன் ஆகியோர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சம்பவம் குறித்து சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பலியான மாணவர்களின் உடல்களை பார்த்து அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    சேலையூர் போலீஸ் நிலையம் எதிரில் உள்ள சேலையூர் ஏரிக்கரை பகுதியில் இருசக்கர வாகனங்களில் வரும் இளைஞர்கள் மது அருந்துவது, கஞ்சா புகைப்பது உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் தான் கல்லூரி மாணவர்கள் கல்லூரிக்கு சம்பந்தமே இல்லாத இந்த ஏரிக்கரை பகுதியில் வந்து மழைக்கு ஒதுங்கியபோது பலியாகி உள்ளனர். அவர்கள் மது அருந்த வந்தார்களா? என்பது குறித்தும் சேலையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • ஆழ்கடல் மீன்கள், சிறு நண்டுகள் தற்போது காலநிலை மாற்றம், கடல் சீற்றம் காரணமாக கரையோரம் சிக்குகிறது.
    • பாறை, வஞ்சரம், இறால், மத்தி மீன்கள் போன்று அதிக விலைக்கு போகவில்லை.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் நாட்டு படகுகளில் கடலுக்கு சென்று கரையோரம் மீன்பிடிக்கும் மீனவர்கள் வலைகளில் தொடர்ந்து, ஆழ்கடலில் கானப்படும் திருக்கை மீன்களின், குஞ்சு மீன்கள், நாக்கு மீன்கள் மட்டுமே சிக்குகிறது, இவற்றுடன் நண்டும் பிடிபடுகிறது. இவ்வகை ஆழ்கடல் மீன்கள், சிறு நண்டுகள் தற்போது காலநிலை மாற்றம், கடல் சீற்றம் காரணமாக கரையோரம் சிக்குகிறது.

    ஆனால் பாறை, வஞ்சரம், இறால், மத்தி மீன்கள் போன்று இந்த மீன்கள் அதிக விலைக்கு போகாததால், குறைந்த விலைக்கு கொடுக்கின்றனர். இதனால் போதிய வருவாய் கிடைப்பதில்லை என்று அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

    • விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • படாளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுராந்தகம்:

    கோயம்புத்தூரில் இருந்து சென்னை நோக்கி தனியார் ஆம்னிபஸ் இன்று காலை வந்து கொண்டு இருந்தது. சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    இன்று காலை 6.15 மணியளவில் மதுராந்தகம் அருகே மாமண்டூர் என்னும் இடத்தில் ஆம்னி பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

    அந்த பஸ் சாலையை விட்டு இறங்கி அங்கிருந்த மரத்தில் மோதி நின்றது. இதில் பஸ்சின் முன்பகுதி நொறுங்கியது.

    பஸ்சில் இருந்த 10 பயணிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை அவ்வழியே வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து படாளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 16 வயது சிறுமிக்கு, முதியவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.
    • இன்ஸ்பெக்டர் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அந்தோணியை கைது செய்தார்.

    மாமல்லபுரம்:

    மதுராந்தகத்தை சேர்ந்தவர் அந்தோணி (வயது67). பிரபல தனியார் நிறுவனங்களுக்கு தொழிலாளர்களை சேர்த்து விடும் ஏஜெண்டாக இருந்தார். இவர் திருக்கழுக்குன்றத்தில் உள்ள தனியார் நர்சிங் அகாடமி ஒன்றில் பெண்களை சேர்த்து விட வந்தபோது அங்கிருந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.

    இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் நடராஜன் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அந்தோணியை கைது செய்தார்.

    • ஆலையின் கட்டுமான பணிகள் 42 மாதங்களில் நிறைவடைந்து, சென்னை மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது.
    • சூலேரிக்காட்டில் நடைபெற்று வரும் 2வது ஆலையின் பணிகளையும் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த பேரூர் கிழக்கு கடற்கரை சாலையில் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில், 4276.44 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நாள் ஒன்றிற்கு 40 கோடி லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும், 3வது புதிய ஆலைக்கு வரும் 21ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். இந்த ஆலையின் கட்டுமான பணிகள் 42 மாதங்களில் நிறைவடைந்து, சென்னை மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது.

    இந்த விழா நடைபெறும் பகுதி மற்றும் அங்கு அமைக்கப்பட்டு வரும் தற்காலிக அலுவலக கட்டிடம் கட்டும் பகுதிகளை இன்று அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் சூலேரிக்காட்டில் நடைபெற்று வரும் 2வது ஆலையின் பணிகளையும் ஆய்வு செய்தனர்.

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், போலீஸ் எஸ்.பி. சாய் பிரணீத், திருப்போரூர் எம்.எல்.ஏ பாலாஜி, திருப்போரூர் ஒன்றிய தலைவர் இதயவர்மன், பையனூர் சேகர், மாமல்லபுரம் விசுவநாதன், மாமல்லபுரம் பேரூராட்சி கவுன்சிலர் மோகன் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    முன்னதாக மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன், இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், உளவுத்துறை போலீசார் உள்ளிட்டோர், வரும் 21ம் தேதி முதலமைச்சர் பங்கேற்கும் விழாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மேடை, அரங்கம் அமைக்கும் ஒப்பந்ததாரர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

    • பணத்தை திருப்பி தராமல் பல மாதங்களாக ஏமாற்றி வந்துள்ளனர்.
    • போலி ஆவணத்தை காட்டி பணத்தை பறித்த திருமணி, ஸ்ரீதேவி ஆகிய இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    கூடுவாஞ்சேரி:

    செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே உள்ள பழைய பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார் (வயது 40). இவரிடம் தாம்பரம் கடப்பேரி பகுதியை சேர்ந்த திருமணி, பீர்க்கன்காரணை பகுதியை சேர்ந்த ஸ்ரீதேவி ஆகிய இருவரும் சேர்ந்து ஊரப்பாக்கம் அருகே காரணைப்புதுச்சேரி மயிலியம்மன் நகர் பகுதியில் உள்ள ஒரு மனையின் போலி ஆவணத்தை காட்டி, இந்த மனையை உங்களுக்கு வாங்கி தருகிறோம் என்று கூறி ரூ.30 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை ஆன்லைன் மூலமாக பெற்றுக்கொண்டனர்.

    பின்னர் பணத்தை திருப்பி தராமல் பல மாதங்களாக ஏமாற்றி வந்துள்ளனர். இதுகுறித்து தினேஷ் குமார் கூடுவாஞ்சேரி குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் செய்தார். குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம், சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து போலி ஆவணத்தை காட்டி பணத்தை பறித்த திருமணி, ஸ்ரீதேவி ஆகிய இருவரையும் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    • பேரூராட்சி தலைவர் யுவராஜ் பேரூராட்சி பணியாளர்களை வரவழைத்து, அவர்களுடன் நீர்தேக்த தொட்டிக்குள் இறங்கினார்.
    • தலைவரே களம் இறங்கி தூய்மை செய்யும் இந்த செயலை வெகுவாக பாராட்டினார்கள்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக்கு உட்பட்ட காக்கைக்குன்று குடிநீர் தேக்க தொட்டியில் இருந்து விநியோகம் செய்யப்படும், குடிநீரில் பாசிகள் கலந்து வருவதாக அப்பகுதி மக்களிடம் இருந்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது. இதையடுத்து உடனடியாக பேரூராட்சி தலைவர் யுவராஜ் பேரூராட்சி பணியாளர்களை வரவழைத்து, அவர்களுடன் நீர்தேக்த தொட்டிக்குள் இறங்கினார்.

    பின்னர் அங்கு படிந்திருந்த சுவர் பாசிகளை அகற்றி, பிளிச்சிங் பவுடர் தூவி சுத்தம் செய்யும் தூய்மை பணியிலும் ஈடுபட்டார். இதை பார்த்த வார்டு உறுப்பினர்கள் மற்றும் பகுதி மக்கள், தலைவரே களம் இறங்கி தூய்மை செய்யும் இந்த செயலை வெகுவாக பாராட்டினார்கள்.

    • தலையில் பலத்த காயம்அடைந்த ஏழுமலை பலியானார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் அடுத்த கிளாப்பாக்கத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது55) சலூன்கடை நடத்தி வந்தார். இவர் அப்பகுதியில் நடந்த கோவில் விழாவில் கலந்து விட்டு நள்ளிரவில் அங்குள்ள சிறு பாலத்தின் தடுப்பு சுவரில் தூங்கினார்.

    அப்போது தூக்கத்தில் இருந்த ஏழுமலை உருண்டு வாய்க்கால் பாலத்தில் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம்அடைந்த ஏழுமலை பலியானார். இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரு கடையில் சோதனை நடத்தியபோது குட்கா, புகையிலை பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.
    • கடையின் உரிமையாளர் தங்கதுரை, சிவலிங்கம் .ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    வண்டலூர்:

    வண்டலூர் அடுத்த பொத்தேரி பாரதியார் தெருவில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் ஒரு கடையில் சோதனை நடத்தியபோது அங்கு மூட்டை முட்டைகளாக குட்கா, புகையிலை பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. சுமார் 210 கிலோ குட்கா, புகையிலையை பறிமுதல் செய்து கடையின் உரிமையாளர் தங்கதுரை, சிவலிங்கம் .ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    • தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.
    • வெளி மாநிலத்தை சேர்ந்த மயக்கவியல் தொழிற்நுட்ப மாணவ, மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த பையணூரில் விநாயகா மிஷன் கல்லூரி வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் மயக்கவியல் தொழிற்நுட்பம் மற்றும் அறுவை சிகிச்சை அரங்க தொழிற்நுட்ப பிரிவின் சார்பில், தேசிய மயக்கவியல் மற்றும் அறுவை சிகிச்சை அரங்க பிரிவு தொழிற்நுட்பவியலாளர்கள் தினத்தை முன்னிட்டு, தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சென்னை, சேலம், புதுச்சேரி மற்றும் பல்வேறு வெளி மாநிலத்தை சேர்ந்த மயக்கவியல் தொழிற்நுட்ப மாணவ, மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    கருத்தரங்கில் மயக்கவியல், அறுவை சிகிச்சை அரங்க தொழிற்நுட்ப பிரிவுகளில் தற்போது ரோபோக்களின் பயன்பாடு அதிகமாக இருப்பது குறித்தும், அதை நோயாளிகளிடம் டிஜிட்டல் மூலம் எப்படி பயன்படுத்துவது என்பது குறித்த விளக்கங்களையும் மாணவர்களுக்கு அத்துறை சார்ந்த வல்லுநர்கள் எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில் டீன் பேராசிரியர் டாக்டர். செந்தில்குமார், இயக்குனர் ஆண்ட்ரூ ஜான் சில்வஸ்டர், டாக்டர்கள் கிருஷ்ணபிரசாத், கோகுல்ராம், அஸ்வந்த், ரேஷ்மா, நவீன்குமார் சேரன், பொறுப்பாளர் வினோத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    ×