என் மலர்
செங்கல்பட்டு
- மாமல்லபுரத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
- ராட்சத அலையில் சிக்கி வெங்கட ரோஹித் கடலுக்குள் மூழ்கினார்.
மாமல்லபுரம்:
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் வெங்கட ரோஹித் (வயது 19). இவர் மாமல்லபுரத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று மதியம் அவர் கல்லூரி நண்பர்களுடன் மாமல்லபுரம் கடற்கரை கோவில் அருகில் கடலில் குளித்தார். அப்போது ராட்சத அலையில் சிக்கி வெங்கட ரோஹித் கடலுக்குள் மூழ்கினார்.
நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. மீனவர்கள் உதவியுடன் மாமல்லபுரம் போலீசார் கடலில் மூழ்கிய மாணவரை தேடி வருகின்றனர்.
- நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது திடீரென முருகன் படகில் மயங்கி விழுந்து இறந்தார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அடுத்த சதுரங்கபட்டிணத்தை சேர்ந்தவர் முருகன் (வயது45). உறவினர்களுடன் கடலுக்குள் படகில் மீன் பிடிக்க சென்றார்.
நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது திடீரென முருகன் படகில் மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்து சதுரங்கபட்டிணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சோர்வாக காணப்பட்ட புலிக்கு கால்நடை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
- வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணிபுரியும் பணியாளர்கள் பயிற்சி கொடுப்பார்கள்.
வண்டலூர்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சிற்றாறு சிலோன் காலனியில் புலி ஒன்று ஆடுகள், நாய்களை வேட்டையாடி பொதுமக்களை அச்சுறுத்தியது. கடந்த 4 நாட்களுக்கு முன்னர் அந்த புலியை பேச்சிப்பாறை கல்லறை வயல் பகுதியில் வனத்துறை அதிகாரிகள் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். சுமார் 13 வயதுடைய அந்த ஆண் புலி மிகவும் பலவீனமாக காணப்பட்டது. இதைத்தொடர்ந்து புலி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கடந்த 10-ந்தேதி கொண்டுவரப்பட்டது.
சோர்வாக காணப்பட்ட புலிக்கு கால்நடை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். தற்போது அந்த புலி நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக வண்டலூர் பூங்கா அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். புலிக்கு உணவாக இறைச்சிகள் வழங்கப்படுகின்றன.
இதுகுறித்து பூங்கா அதிகாரிகள் கூறும்போது, கன்னியாகுமரியில் இருந்து கொண்டுவரப்பட்ட புலிக்கு மருத்துவர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து முழு கண்காணிப்பில் உள்ளது. மேலும் அதற்கான உணவுகளும் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்த ஆண் புலி பூரண குணமடைந்து விடும். அதற்கு வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணிபுரியும் பணியாளர்கள் பயிற்சி கொடுப்பார்கள். பின்னர் அந்த புலி பார்வையாளர்கள் காண்பதற்காக விடப்படும் என்றார்.
- மாமல்லபுரத்தில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி இன்று தொடங்குகிறது.
- இந்தப் போட்டி வரும் 20 -ம் தேதி வரை நடைபெற உள்ளது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் சர்வதேச அலைசறுக்கு போட்டி இன்று தொடங்கி வரும் 20- ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதற்கான தொடக்க விழா சென்னையை அடுத்த கோவளத்தில் நடைபெற்றது. இதில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
இதில் இந்தியா தரப்பில் 15 வீரர்கள் உள்பட தாய்லாந்து, சிங்கப்பூர் மலேசியா, வங்காளதேசம், மியன்மார் உள்ளிட்ட 12 நாடுகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட சர்வதேச அலைச்சறுக்கு வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
3000 தர புள்ளிகளைக் கொண்ட இந்த சர்வதேச போட்டியானது முதல் முறையாக இந்தியாவில் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறுவதன் மூலம் உலக அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை வீரர்கள் பெறுவர்.
- ராட்சத "ஆக்டோபஸ்" பட்டம் சுற்றுலா பயணிகள், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
- 100க்கும் மேற்பட்ட பட்டம் விடும் கலைஞர்கள் மாமல்லபுரம் வந்துள்ளனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், குளோபல் மீடியா பாக்ஸ் தனியார் நிறுவனமும் இணைத்து நடத்தும், சர்வதேச பட்டம் விடும் திருவிழாவை குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார்.
வரும் 15ம் தேதிவரை இத்திருவிழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, வியட்நாம், தாய்லாந்து, உள்ளிட்ட வெளிநாடுகள் மற்றும் தமிழகம், குஜராத், ஒரிசா, பஞ்சாப், கோவா மாநிலங்கள் என 100க்கும் மேற்பட்ட பட்டம் விடும் கலைஞர்கள் மாமல்லபுரம் வந்துள்ளனர்.
கடல்குதிரை, கார்ட்டூன், தேசியகொடி, திமிங்கலம், டிராகன், சூப்பர் மேன், கரடி, சுறா மீன்கள், கிருஸ்மஸ் தாத்தா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பட்டங்களை வானில் பறக்க விட்டனர். இதில் ராட்சத "ஆக்டோபஸ்" பட்டம் சுற்றுலா பயணிகள், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி, காஞ்சிபுரம் எம்.பி செல்வம், திருப்போரூர் எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி, கலெக்டர் ராகுல்நாத், திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் இதயவர்மன், திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவர் யுவராஜ், மாமல்லபுரம் விசுவநாதன், மல்லை சத்யா, பையணூர் சேகர், சுற்றுலா அலுவலர் சக்திவேல் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
- அலைச்சறுக்கு போட்டிக்கான துவக்க விழா கோவளத்தில் நடைபெற்றது.
- 11 நாடுகளை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
யுனெஸ்கோ பாரம்பரிய நகரான மாமல்லபுரத்தில் முதல் முறையாக சர்வதேச அலைச்சறுக்கு போட்டி நடைபெற உள்ளது. நாளை முதல் 20ம் தேதி வரை போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் 11 நாடுகளை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இப்போட்டிக்கான துவக்க விழா கோவளத்தில் இன்று நடைபெற்றது. விழாவில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு போட்டியை துவக்கி வைத்தார்.
- அவரது அறையில் இருந்த லேப்டாப் மற்றும் செல்போன் திருடு போனது.
- பொன்னேரி பகுதியை சேர்ந்த சுகன் என்பவரை கைது செய்தனர்.
பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் நிதிஷ்குமார் என்பவர் தைலாவரம் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் அவரது அறையில் இருந்த லேப்டாப் மற்றும் செல்போன் திருடு போனது. இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவை வைத்து திருட்டில் ஈடுபட்ட பொன்னேரி பகுதியை சேர்ந்த சுகன்(27) என்பவரை கைது செய்தனர்.
- சிறு தானியங்கள் அற்புத ஊட்டச்சத்து உறைவிடம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை கொடியை அசைத்து தொடங்கி வைத்தார்.
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிறு தானியங்கள் அற்புத ஊட்டச்சத்து உறைவிடம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாவட்ட கலெக்டர் ஏ.ஆர்.ரகுமான் தலைமை தாங்கினார். செல்வம் எம்.பி., செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி, முன்னிலை வகித்தனார். மாவட்ட உணவு வழங்கல் துறை அலுவலர் வரவேற்புரை வழங்கினர். சிறப்பு அழைப்பாளராக சிறு தொழில் துறை நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்துகொண்டு இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை கொடியை அசைத்து தொடங்கி வைத்தார்.
விழாவில் மறைமலை நகராட்சி நகர மன்ற தலைவர் சண்முகம், வடக்கு ஒன்றிய செயலாளரும் ஒன்றிய குழு துணை தலைவருமான வி.எஸ்.ஆராமுதன், ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் முத்தமிழ் செல்வி விஜயராஜ், பவானி கார்த்தி, வானதி சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- முறையாக பராமரிக்காததால் சுவர் விரிசல் விட்டு, சிமெண்ட் பூச்சு உதிர்ந்து காணப்படுகிறது.
- பலமுறை புகார் கூறியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஓ.எம்.ஆர். பகுதி பவழக்காரன் சத்திரம், கங்கையம்மன் கோயில் தெருவில் உள்ள அங்கன்வாடி கட்டிடம் கடந்த 2012-2013ல் தொகுதி எம்.எல்.ஏ நிதியில் 2.50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. கட்டிடத்தை முறையாக பராமரிக்காததால் 10 ஆண்டுகளில் சுவர் விரிசல் விட்டு, சிமெண்ட் பூச்சு உதிர்ந்து காணப்படுகிறது. அருகில் தெரு விளக்கு சுவிட்ச் பாக்ஸ் திறந்த நிலையில் கிடக்கிறது. குடிநீர் தொட்டியும் பாசிப்பிடித்து கிடக்கிறது.
அங்கன்வாடிக்கு குழந்தைகளை விடுவதற்கு வரும் தாய்மார்கள் பலமுறை புகார் கூறியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மழைக்காலம் துவங்கும் முன் குழந்தைகள் பாதுகாப்பு கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- லஞ்சம் கொடுக்க விரும்பாத சுப்பிரமணி, இதுபற்றி செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் கூறினார்.
- சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினார்.
காட்டாங்கொளத்தூர்:
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 36). இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகையை பெற ஆன்லைன் மூலம் காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள சமூகநல அலுவலருக்கு விண்ணப்பித்திருந்தார்.
இது தொடர்பாக சமூக நல அலுவலர் கஸ்தூரியை நேரில் சந்தித்து விண்ணப்ப நிலை குறித்து கேட்டார். அப்போது கஸ்தூரி ரூ.2 ஆயிரம் கொடுத்தால் உடனடியாக உங்கள் விண்ணப்பம் ஏற்று கொள்ளப்படும் என்று சுப்பிரமணியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதற்கு அவர், ரூ.1,800 தருகிறேன் என்று கூறிவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியே வந்தார்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சுப்பிரமணி, இதுபற்றி செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் கூறினார். செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சுப்பிரமணியிடம் ரசாயனம் தடவிய 1,800 ரூபாய் நோட்டுகளை அவரிடம் கொடுத்து அனுப்பினர். அவர் அந்த பணத்தை நேற்று மாலை காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள சமூக நல அலுவலர் கஸ்தூரியிடம் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர்.
செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மற்றும் 7 பேர் கொண்ட குழுவினர் சமூக நலத்துறை அறையில் வைக்கப்பட்டிருந்த அனைத்து கோப்புகளையும் ஆய்வு செய்தனர். சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினார்.
- சாலை பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், மருத்துவ வசதிகள் மற்றும் காவல் நிலையம் குறித்து ஆலோசனை செய்தார்.
- கூட்டத்தில் பஸ்களை இயக்கும் பணியினை படிப்படியாக இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக இயக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
சென்னை கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் மற்றும் சாலைப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் சேகர் பாபு தலைமையில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் கிளாம்பாக்கம் புதிய பஸ் முனையத்திலிருந்து பஸ்கள் போக்குவரத்து நெரிசலின்றி செல்வதற்காக சாலை பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், மருத்துவ வசதிகள் மற்றும் காவல் நிலையம் குறித்து ஆலோசனை செய்தார். மேலும் இக்கூட்டத்தில் பஸ்களை இயக்கும் பணியினை படிப்படியாக இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக இயக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, போக்குவரத்து ஆணையர் அ.சண்முக சுந்தரம், தலைமை வனப்பாது காவலர் கீதாஞ்சலி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- விபத்து நடந்த இடத்தில் திடீரென 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு மறியலில் ஈடுபட்டனர்.
- விபத்து நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
பொத்தேரியில் லாரி மோதிய விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விபத்து நடந்த இடத்தில் சிதறி கிடந்த பலியானவர்களின் உடல்களை போலீசார் மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர். இந்த நிலையில் இன்று மதியம் 12.30 மணியளவில் விபத்து நடந்த இடத்தில் திடீரென 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு மறியலில் ஈடுபட்டனர்.
இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அப்போது, சாலையை கடக்கும் இடத்தில் சிக்னல் அமைக்க வேண்டும், காலை, மாலை நேரத்தில் அங்கு போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபடவேண்டும், மீண்டும் இது போல் விபத்து நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்தை நடத்தினர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.






