என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • வழிப்பாதை அடைக்கப்பட்டதால் கிறிஸ்துதாசின் உடலை வெளியில் கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டது.
    • உடலை எடுத்து செல்ல வழி ஏற்படுத்தவில்லை எனில் தந்தையின் உடலை வீட்டிற்குள் புதைக்கப்போவதாக எசேக்கியேல் கூறினார்.

    தாம்பரம்:

    பல்லாவரம், குளத்துமாநகர், வேம்புலியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் எசேக்கியேல். இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிப்பவருக்கும் இடையே பல ஆண்டுகளாக வழிப்பாதை தொடர்பாக பிரச்சினை உள்ளது.

    இதைத்தொடர்ந்து கடந்த 4 ஆண்டுக்கு முன்பு எசேக்கியேல் வீட்டுக்கு செல்லும் வழி அடைக்கப்பட்டதாக தெரிகிறது. இதன் பின்னர் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு நடந்து செல்லும் வகையில் 1½ அடி அகலத்தில் மட்டும் சென்று வர வழி ஒதுக்கப்பட்டது. இந்த பாதை வழியாக எசேக்கியேல் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்று வந்தனர்.

    இந்த நிலையில் எசேக்கியேலின் தந்தை கிறிஸ்துதாஸ் (73) என்பவர் உடல் நலக்குறைவால் வீட்டில் இறந்து போனார். அவரது உடலை புதைக்க உறவினர்கள் முடிவு செய்தனர்.

    ஆனால் வழிப்பாதை அடைக்கப்பட்டதால் கிறிஸ்துதாசின் உடலை வெளியில் கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டது. இது பற்றி எசேக்கியேல் மற்றும் அவரது உறவினர்கள் பக்கத்து வீட்டில் வசிப்பவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே போலீசார் விரைந்து வந்து இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    உடலை எடுத்து செல்லும் வகையில் ஒரு நாள் மட்டும் போதிய அளவில் வழிவிடுமாறு எதிர்தரப்பினரிடம் போலீசார் தெரிவித்தனர். இதனை அவர் ஏற்றுக்கொண்டார். பல்லாவரம் போலீசிலும் புகார் செய்யப்பட்டது.

    அப்போது உடலை எடுத்து செல்ல வழி ஏற்படுத்தவில்லை எனில் தந்தையின் உடலை வீட்டிற்குள் புதைக்கப்போவதாக எசேக்கியேல் கூறினார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

    இதைத்தொடர்ந்து போதிய வழி ஏற்படுத்தப்பட்டதால் பிரச்சினை முடிவுக்கு வந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
    • கொள்ளையர்கள் குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாம்பரம்:

    தாம்பரம் அடுத்த வேங்கைவாசல், பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் பாபு. என்ஜினீயரான இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொது மேளாளராக பணி செய்து வருகிறார். இவரது மனைவி சகுந்தலா. தனியார் பள்ளி ஆசிரியையாக உள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நேற்று காலை அவர்கள் வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றனர். மாலையில் கல்லூரி முடிந்ததும் பாபுவின் மகள் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது 2 பீரோக்களில் இருந்த 75 பவுன் நகை கொள்ளை போய் இருப்பது தெரிந்து.

    இதுகுறித்து சேலையூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. உதவி கமிஷனர் முருகேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் நகையை அள்ளிச்சென்று இருப்பது தெரிந்தது.

    கொள்ளையர்கள் குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • உடல்நலம் பாதிக்கப்பட்ட 4 பேரும் கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
    • இந்த ஓட்டலில் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே பிரபல தனியார் ஓட்டலில் கடந்த 13-ஆம் தேதி மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த மோகன் (வயது 27) தனது குடும்பத்துடன் கோழி இறைச்சியில் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களை சாப்பிட்டு விட்டு இரவு வீட்டுக்கு சென்றார். நள்ளிரவில் ஓட்டலில் சாப்பிட்ட 4 பேரும் வாந்தி வயிற்றுப்போக்கால் உடல் நலம் பாதிக்கப்பட்டனர். உடனடியாக 4 பேரும் கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இது குறித்து மோகன் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்தில் உள்ள ஓட்டலுக்கு நேரில் சென்று விசாரித்துவிட்டு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். இந்த சம்பவம் ஊரப்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஓட்டலில் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:-

    ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் சைவம் மற்றும் அசைவ ஓட்டல்கள் உள்ளன பெரும்பாலான ஓட்டல்களில் தரமான உணவுகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறதா? என்பது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அடிக்கடி வந்து நேரில் ஆய்வு செய்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • நதியாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அஸ்வினி அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
    • அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடிய நதியாவை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் பூஞ்சேரி நரிக்குறவர் பகுதியை சேர்ந்தவர் அஸ்வினி. இவர் மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் அன்னதானம் மறுக்கப்பட்டதாக கூறி சமூக வலைதளங்களில் பிரபலமானவர்.

    நேற்று மாலை கடற்கரை கோவில் நடைபாதையில் கடை வைப்பதில் இவருக்கும் திருக்கழுக்குன்றம் கொத்தி மங்கலம் பகுதியை சேர்ந்த நரிக்குறவர் பெண் நதியா (33) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த அஸ்வினி தனது கையில் வைத்து இருந்த கத்தியால் நதியாவின் தோள்பட்டை, வயிறு, கை உள்ளிட்ட பகுதியில் குத்தி கிழித்தார். இதில் நதியாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அஸ்வினி அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

    அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடிய நதியாவை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பூஞ்சேரி பகுதியில் இருந்த அஸ்வினியை மாமல்லபுரம் போலீசார் கைது செய்தனர்.

    அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. கைதான அஸ்வினி மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு வண்டலூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் பலத்த மழை கொட்டியது.
    • தண்ணீரை வடிகால்வாய் அமைத்து அடையாறு ஆற்று படுகையில் கொண்டு செல்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    வண்டலூர்:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் பிரமாண்ட புறநகர் பஸ்நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதில் வெளியூர் செல்லும் பஸ்களை நிறுத்தவும், பயணிகளுக்கும் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் கட்டுமான பணிகள் 90 சதவீதம் முடிந்த நிலையில் விரைவில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வண்டலூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் பலத்த மழை கொட்டியது. அப்போது கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலைய பகுதி மற்றும் நுழைவுவாயில், ஜி.எஸ்.டி.சாலை உள்ளிட்ட இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது. மேலும் பஸ்நிலையத்தை சுற்றி உள்ள பகுதியில் தண்ணீர் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வண்டலூர் மேம்பாலம், தாம்பரம் பைபாஸ்சாலை, திருப்போரூர்-வண்டலூர் சாலை, மண்ணிவாக்கம் இணைப்பு சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சுமார் 3 மணிநேரத்துக்கும் மேல் வாகன நெரிசல் ஏற்பட்டது.

    ஒரு நாள்மழைக்கே கிளாம்பாக்கம் பஸ் நிலையம் பகுதி மழைநீரில் தத்தளித்ததால் பொது மக்கள், வாகனஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. இதைத்தொடர்ந்து கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலைய பகுதியில் மழை நீர் தேங்காமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் மழை நீர்கால்வாய் அமைப்பது குறித்த ஆய்வு செய்து வந்தனர்.

    இந்த நிலையில் கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் இன்று காலை நகராட்சிகளின் நிர்வாக இணை இயக்குனர் ஜான் லூயிஸ் ஆய்வு செய்தார். பஸ்நிலைய கட்டுமான பணி மற்றும் மழைநீர் கால்வாய் அமைப்பது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது,சி.எம். டி. ஏ. அதிகாரி சீனிவாச ராவ், செயற்பொறியாளர் ராஜன் பாபு, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி துறை மற்றும் வருவாய் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    தண்ணீரை வடிகால்வாய் அமைத்து அடையாறு ஆற்று படுகையில் கொண்டு செல்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    • ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையில் வந்து கொண்டு இருந்தபோது அங்கு சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
    • ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையில் வந்து கொண்டு இருந்தபோது அங்கு சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

    வண்டலூர்:

    தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜ்குமார் (வயது 27), வினோத்(26). என்ஜினீயர்களான இருவரும் நண்பர்கள். அவர்கள் சென்னை துரைப்பாக்கம் பகுதியில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.

    கடந்த 12-ந்தேதி இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றனர். பின்னர் அவர்கள் நேற்று இரவு சென்னை நோக்கி திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

    நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் கூடுவாஞ்சேரி அடுத்த ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையில் வந்து கொண்டு இருந்தபோது அங்கு சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த லாரி மீது மோதியது. இதில் நணபர்கள் ராஜ்குமார், வினோத் ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிய 2 பேரையும் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி ராஜ்குமாரும், வினோத்தும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் நண்பர்கள் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மாமல்லபுரம் நோக்கி வேகமாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • விபத்து குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் அடுத்த நடுவக்கரை பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது62). மண்பானை செய்யும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி கஸ்தூரி. நேற்று மாலை கணவன்-மனைவி இருவரும் வியாபாரம் சம்பந்தமாக ஒரே மோட்டார் சைக்கிளில் புலியூர் நோக்கி சென்றனர்.

    திருக்கழுக்குன்றம் அருகே சென்றபோது மாமல்லபுரம் நோக்கி வேகமாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் முனுசாமியும், அவரது மனைவி கஸ்தூரியும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த அவர்கள் இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே முனுசாமி பரிதாபமாக இறந்தார். கஸ்தூரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரவு நேரங்களில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ரோட்டில் படுத்து கிடக்கும் மாடுகளால் விபத்தில் சிக்குகிறார்கள்.
    • போக்குவரத்து இடையூறு ஏற்படுவது மட்டுமல்லாமல் மாடுகள் அல்லது பொது மக்களும் காயம் அடைவார்கள் என்று மக்கள் கூறுகின்றனர்.

    சென்னை நகர பகுதியில் மாடு வளர்ப்பவர்கள் மாடுகளை அவிழ்த்து விடுவதால் சாலைகளில் சுற்றித்திரிகிறது. இது போக்குவரத்துக்கு இடையூறு செய்வதோடு மட்டுமல்லாமல் கோபக் கார மாடுகள் பொது மக்களை முட்டியும் பதம் பார்க்கிறது. சமீபத்தில் அரும்பாக்கத்தில் ரோட்டில் நடந்து சென்ற சிறுமியை மாடு ஒன்று முட்டி தூக்கி போட்டு பந்தாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து ரோடுகளில் அலையும் மாடுகளை பிடித்து உரிமையாளர்களுக்கு மாநகராட்சி அபராதம் விதித்து வருகிறது.

    இதே போல் பழைய மகாபலிபுரம் சாலையும் மாடுகளின் பிடியில் சிக்கி இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகிறார்கள். இதில் பெரும்பாலான பகுதிகள் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து பகுதிகள் ஆகும். கேளம்பாக்கம், சிறுசேரி, நாவலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஐ.டி. நிறுவனங்கள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பணிபுரிகிறார்கள். இரவு நேரங்களில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ரோட்டில் படுத்து கிடக்கும் மாடுகளால் விபத்தில் சிக்குகிறார்கள்.

    களிப்பட்டூரில் ஏழெட்டு மாடுகள் இரவில் சாலையில் படுத்து கிடந்ததாகவும் ஒரு மாடு ரத்தபோக்கு ஏற்பட்டு கிடந்ததாகவும் அதை பார்த்த பயணி ஒருவர் கூறினார்.

    இதை தடுக்காவிட்டால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவது மட்டுமல்லாமல் மாடுகள் அல்லது பொது மக்களும் காயம் அடைவார்கள் என்று மக்கள் கூறுகின்றனர்.

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களையும் சாலைகளில் மாடுகள் நடமாடுவதை கண்காணிக்கும் படி உத்தரவிட்டுள்ளார்.

    தையூர் பஞ்சாயத்துச் செயலாளர் குமரேசன் அந்த பகுதியில் மாடுகள் சுற்றித் திரிந்ததால் 2 உரிமையாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து இருப்பதாக கூறினார்.

    ரோடுகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து சென்றால் அடைத்து வைக்கும் பவுண்டு வசதி பஞ்சாயத்தில் இல்லை என்றும் இதனால் மாடுகளை பிடிப்பதும் அபராதம் விதிப்பதும் சவாலாக இருப்பதாக கூறப்படுகிறது.

    பஞ்சாயத்துகள் கால்நடைகள் தொல்லையை சமாளிக்க தங்களுக்கு வசதிகள் இல்லை என்று கூறுவதற்கு நிதிபற்றாக் குறையை காரணம் காட்ட முடியாது. தேவையறிந்து வரி வசூலில் தீவிரம் காட்ட வேண்டும். மாட்டு உரிமையாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் என்பதை ரூ.10 ஆயிரமாக உயர்த்தலாம் என்கிறார் முன்னாள் நகராட்சி நிர்வாகத்துறை கூடுதல் இயக்குனர் சிவசாமி.

    • சுதந்திர தினவிழாவில் பங்கேற்று திரும்பிய மாணவர் அரசு பஸ் மோதி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • கல்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கத்தை சேர்ந்தவர் சுஜாதா. இவர் கல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ஷரவன் (வயது10). இவர், அணுசக்தி ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள மத்திய அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று சுதந்திர தினவிழா பள்ளியில் நடைபெற்றது. இதில் பங்கேற்க மாணவர் ஷரவன் தனது சைக்கிளில் தேசியக்கொடி கட்டிக்கொண்டு பள்ளிக்கு சென்றார். விழா முடிந்ததும் அவர் வீட்டுக்கு செல்வதற்காக சைக்கிளில் புறப்பட்டார். அப்போது அங்குள்ள சாலையை கடந்த போது சென்னையில் இருந்து கல்பாக்கம் நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக சைக்கிள் மீது மோதியது. இதில் மாணவர் ஷரவன் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

    கல்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுதந்திர தினவிழாவில் பங்கேற்று திரும்பிய மாணவர் அரசு பஸ் மோதி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ராமநாதபுரத்தில் இருந்து வந்த கார் விபத்தில் சிக்கியது
    • காரில் பயணம் செய்த மூவரும் பலியான சோகம்

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 6 மணி அளவில் கார் ஒன்று சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த காரில் டிரைவரோடு சேர்ந்து 3 பேர் பயணமானார்கள்.

    அய்யனார் கோவில் அருகே சாலையின் இடது புறத்தில் மழை நீர் செல்லும் கால்வாய் ஒன்று உள்ளது. இதன் அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் சீறிப்பாய்ந்தது. இதில் பறந்து சென்ற கார் 20 அடி ஆழ கால்வாய் பள்ளத்தில் போய் விழுந்தது.

    டமார் என்ற பயங்கர சத்தத்துடன் விழுந்ததில் கார் அப்பளம் போல நொறுங்கியது. இதைப் பார்த்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தனர். அப்போது காரில் 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்து கிடந்தனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் சிக்கிய 3 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான 3 பேரும் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து ஒன்றாக சேர்ந்து சென்னைக்கு பயணமானது தெரிய வந்தது.

    3 பேரின் சட்டை பையிலும் ஆதார் மற்றும் அடையாள அட்டைகள் இருந்தன. அதனை வைத்து உயிரிழந்தவர்கள் யார்-யார்? என்பது பற்றிய விவரங்களை போலீசார் கண்டுபிடித்தனர்.

    காரை ஓட்டி வந்த வாலிபரின் செல்போன் மட்டும் விபத்தில் சேதம் அடையாமல் இருந்தது. இதையடுத்து அவரது செல்போனில் மனைவி புவனேஸ்வரியை போலீசார் தொடர்பு கொண்டனர். இதன் மூலமும் பலியானவர்களின் முழு விவரங்கள் கிடைத்தன.

    காரை ஓட்டி வந்தவரின் பெயர் கதிரவன் (30) என்பது தெரிய வந்தது. இவரது சொந்த ஊர் திண்டுக்கல் நிலக்கோட்டை அருகே உள்ள பச்சைமலையான் கோட்டை திம்மி நாயக்கன்பட்டி என்பது தெரிய வந்தது. அவருடன் பயணித்த மற்ற இருவரும் நந்தகுமார், கார்த்திக் என்ப தும் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களில் நந்தகுமார் மன்னார்குடி அருகே உள்ள ஆலங்கோட்டையை சேர்ந்தவர் ஆவார். கார்த்திக் நெல்லை மாவட்டம் பத்தமடை சிவானந்தா தெருவைச் சேர்ந்தவர்.

    கதிரவன், கார்த்திக் இருவரும் சென்னையில் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேருவதற்காக வந்தவர்கள் என்பதும், அப்போதுதான் விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியாகி இருப்பதும் தெரிய வந்து உள்ளது.

    இது தொடர்பாக 3 பேரின் உறவினர்களுக்கும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் சென்னை வந்து கொண்டிருக்கிறார்கள். பிரேத பரிசோதனைக்கு பிறகு 3 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    ஐ.டி. வேலைக்காக சென்னை நோக்கி வந்த வாலிபர்கள் இருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கும் சம்பவம் அவர்களது குடும்பத்தினரை கடும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவர்களது சொந்த ஊர்களில் கண்ணீர் விட்டு கதறி அழுதபடி உள்ளனர்.

    • சர்வதேச பட்டம் விடும் திருவிழா 4 நாட்கள் நடைபெற்றது.
    • கடைசி நாளான நேற்று மக்கள் குவிந்ததால் இசிஆரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், குளோபல் மீடியா பாக்ஸ் தனியார் நிறுவனமும் இணைந்து 4 நாட்கள் நடத்திய சர்வதேச பட்டம் விடும் திருவிழா நேற்று இரவுடன் நிறைவடைந்தது.

    கடைசி நாளான நேற்று ஏராளமான மக்கள் குவிந்ததால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, வியட்நாம், தாய்லாந்து, உள்ளிட்ட வெளிநாடுகள் மற்றும் தமிழகம், குஜராத், ஒடிசா, பஞ்சாப், கோவா பகுதிகளில் இருந்து வந்திருந்த பட்டம் விடும் கலைஞர்களுக்கு, சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மாமல்லபுரம் கடற்கரை கோவில் சிலையை பரிசாக வழங்கி பாராட்டினார்.

    சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி, மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்

    • வீட்டில் ஆட்கள் இருந்த போதே குடியிருப்புகள் நெருக்கமாக உள்ள வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுராந்தகம்:

    அச்சரப்பாக்கம், மேற்கு மாட வீதியில் வசிப்பவர் பாலாஜி. இவர்அச்சரபாக்கத்தில் பஜார் வீதியில் காப்பி தூள் கடை மற்றும் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ரேகா.இவர்களது மகன் அரவிந்த்.

    நேற்று இரவு பாலாஜி வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு தூங்கினர். நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் வீட்டின் கதவு பூட்டை உடைத்து புகுந்தனர்.

    பாலாஜி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் உள்ள மற்றொரு அறையில் தூங்கியதால் கொள்ளையர்கள் வந்தது தெரியவில்லை. இதனை சாதகமாக பயன் படுத்திய கொள்ளைகும்பல் வீட்டில் உள்ள பீரோவை உடைத்தனர். மேலும் உணவு பொருள் டப்பாக்களில் மறைத்து வைத்திருந்த வைரநகை உள்ளிட்ட 28 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை சுருட்டி மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர். அதிகாலை பாலாஜி எழுந்தபோது வீட்டில் உள்ள பொருட்கள் சிதறி கிடப்பதையும் நகை-பணம் கொள்ளை போய் இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து பாலாஜி அச்சரப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் மோப்பநாயுடன் வந்து விசாரணை நடத்தினர்.கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.

    வீட்டில் ஆட்கள் இருந்த போதே குடியிருப்புகள் நெருக்கமாக உள்ள வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×