என் மலர்
செங்கல்பட்டு
- மாவட்ட மகளிர் அணி அமைப்பாளரும், ஒன்றிய குழு பெருந்தலைவருமான உதயாகருணாகரன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
- முடிவில் வண்டலூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் கவிதா சத்யநாராயணன் நன்றி கூறினார்.
கூடுவாஞ்சேரி:
வண்டலூர் ஊராட்சியில் மு.க.ஸ்டாலின் பிரதான சாலையை ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கவும், வண்டலூர்- வாலாஜாபாத் நோக்கி செல்லும் மேம்பாலம் கீழ்பகுதியில் காஞ்சிபுரம் எம்.பி.யின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்தம் அமைப்ப தற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா காட்டாங் கொளத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், ஒன்றிய குழு துணை பெருந்தலைவருமான வி.எஸ்.ஆராமுதன் தலைமையில் நடைபெற்றது. வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ் செல்வி விஜயராஜ், தி.மு.க. கிளை செயலாளர்கள் சத்ய நாராயணன், வாசு, காசி, லோகநாதன், குணசேகரன், கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட மகளிர் அணி அமைப்பாளரும், ஒன்றிய குழு பெருந்தலைவருமான உதயாகருணாகரன் அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில் செல்வம் எம்.பி., வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு சாலை மற்றும் பேருந்து நிறுத்தம் அமைப்பதற்காக பூமி பூஜை போட்டு, அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றினர்.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ட ராகவன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மண்ணிவாக்கம் கெஜலட்சுமி சண்முகம், நெடுங்குன்றம் வனிதா ஸ்ரீசீனிவாசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் வண்டலூர் குணசேகரன், காரணைப் புதுச்சேரி பத்மநாபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் வண்டலூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் கவிதா சத்யநாராயணன் நன்றி கூறினார்.
- தினந்தோறும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும், சுமார் 500-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் உள்ளனர்.
- ஆபத்தான கட்டத்தில் உள்ள நோயாளிகள் சென்னைக்கு சென்று சேர்வதற்குள் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி 65 ஆண்டுகளுக்கு முன்னர் கடந்த 1967-ம்ஆண்டு 100 படுக்கை வசதியுடன் உருவானது. தற்போது மருத்துவக்கல்லூரியுடன் சுமார் 240 ஏக்கரில் செயல்படுகிறது. இந்த ஆஸ்பத்திரியில் நவீன சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. தற்போது 1500 படுக்கை வசதியுடன் உள்ளது. அனைத்து துறையை சேர்ந்த 30 மூத்த டாக்டர்கள் மற்றும் 90 உதவி மருத்துவர்கள், 140 செவிலியர்கள் ஆகியோர் தற்போது அரசு மருத்துவமனையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு செங்கல்பட்டு மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதி மக்கள் மற்றும் விழுப்புரம், திருவண்ணாமலை , காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டம் மற்றும் சென்னை புறநகரை சேர்ந்த நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். தினந்தோறும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும், சுமார் 500-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் உள்ளனர்.
அவசர சிகிச்சை பிரிவு, புறநோயாளிகள் பிரசவ வார்டு, எலும்பு முறிவு , இருதய அறுவை சிகிச்சை பிரிவு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிவு, காய்ச்சல், கொரோனா சிகிச்சை உள்பட அனைத்துக்கும் தனித்தனி பிரிவுகள் உள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய மருத்துவ கல்லூரி எனினும் இந்த ஆஸ்பத்திரியில் தீக்காய பிரிவு மற்றும் தலை காய அவசர சிகிச்சை பிரிவு இல்லை. இதனால் தீக்காயம் மற்றும் விபத்துக்களில் தலையில் பலத்த காயம் அடைந்து வருபவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாத நிலை இருக்கிறது.
நோயாளிகளை சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பும் நிலை தொடர்கிறது. இதனால் ஆபத்தான கட்டத்தில் உள்ள நோயாளிகள் சென்னைக்கு சென்று சேர்வதற்குள் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியிலேயே தீக்காயம் மற்றும் தலைக்காயம் சிறப்பு சிகிச்சை பிரிவுகள் தொடங்கப்பட்டால் உயிரிழப்புகளை குறைக்க முடியும் என்று நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இது தொடர்பாக பொதுமக்கள் கூறும்போது, செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தீக்காயம், மற்றும் தலைக்காயம் சிகிச்சை பிரிவை தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போது உள்ள வாகன நெரிசலில் உயர்சிகிச்சைக்கு சென்னை சென்று சேர்வதற்குள் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. மேலும் பிரசவ வார்டில் எல்லாவற்றிற்கும் பணம் கேட்டு தொல்லை கொடுக்கிறார்கள். கழிப்பறைகளில் கதவுகள் இல்லை. தண்ணீர் பற்றாக்குறையும் உள்ளது என்றனர்.
- சாலை அகலப்படுத்தும் பணி நடைபெறும் இடங்களில் நெடுஞ்சாலைத்துறை மூலம் மொத்தம் 4,300 மரக்கன்றுகள் நடப்பட உள்ளது.
- மரக்கன்றுகள் நடப்படுவதோடு அவற்றை பராமரித்து மரமாக உருவாகும்வரை தனி கவனம் செலுத்த வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது.
மதுராந்தகம்:
மதுராந்தகம் முதல் வெண்ணாங்குப்பட்டு வரையிலான 32 கி. மீ. தார்ச்சாலை மாநில நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பள்ளம்பாக்கம் கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதி முதல் வெண்ணாங்குப்பட்டில் உள்ள கிழக்கு கடற்கரை சாலை வரை ரோடு குறுகலாக உள்ளதால் நெடுஞ்சாலைத்துறை விரிவாக்கம் செய்ய முடிவு செய்தது.
ஏற்கனவே இருந்த சாலையின் அகலமான 23 அடியை, தற்போது இரண்டு புறங்களிலும் தலா 5 அடி விரிவாக்கம் செய்து, 33 அடி அகல சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டு பணி நடக்கிறது. மேலும், இடைப்பட்ட துாரத்தில் குறுகலாக இருந்த பழைய 4 சிறுபாலங்கள் அகற்றப்பட்டு, புதிய பாலங்கள் அமைக்கும் பணி நடக்கிறது.
இதேபோல் முதுகரை-கடலூர் சாலை, செய்யூர்-படாளம் சாலையும் விரிவாக்கப்பட்டு வருகின்றன. இந்த சாலைகள் ஓரமாக பசுமையான மரங்கள் உள்ளன. சாலையில் செல்வோருக்கு இதமான காற்றையும், வழி போக்கர்களுக்கு நிழலையும் தருகின்றன. இந்த மரங்களை நெடுஞ்சாலைதுறை பணியாளர்கள் பராமரித்து வருகின்றனர். இந்த சூழலில் பெருகி வரும் வாகன போக்குவரத்தால் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி உருவாகிறது. இதனால் சாலையை விரிவாக்கம் செய்வது அவசியம் என்று நெடுஞ்சாலைதுறையினர் கருதுகின்றனர். இதற்காக இந்த 3 சாலைகளும் அகலப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடக்கிறது. இந்த பணிகளுக்காக சாலை ஓரம் நிற்கும் பசுமையான மரங்களை வெட்டி அகற்ற திட்டமிடப்பட்டு உள்ளது.
அதன்படி முதுகரை -கடலூர் சாலையில் 214 மரங்களும், மதுராந்தகம்-வெண்ணாங்குப்பட்டு சாலையில் 195 மரங்களும், செய்யூர்-படாளம் சாலையில் 12 மரங்களும் வெட்டுவதற்கு மாவட்ட பசுமைக் குழுக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில் இந்த சாலைகளின் ஓரமாக உள்ள மரங்கள் குறைந்தது 50 ஆண்டுகள் பழமையானவை. இந்த மரங்கள் இல்லாமல் போனால், இன்னும் வெப்பம் அதிகரிக்கும் என்றனர்.
இதுபற்றி செங்கல்பட்டு மாவட்ட வன அலுவலர் ரவிமீனா கூறும்போது, சாலை அகலப்படுத்தும் பணி நடைபெறும் இடங்களில் நெடுஞ்சாலைத்துறை மூலம் மொத்தம் 4,300 மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. முதுகரை-கடலூர் சாலையில் 500 மரக்கன்றுகளும், படாளம் ஜி.எஸ்.டி. ரோடு-செய்யூர் சாலையில் 300 மரக்கன்றுகளும், வெண்ணங்குபட்டு சாலையில் 650 மரக்கன்றுகளும் நடப்படும். சாலை விரிவாக்கம் முடிந்ததும், அவர்கள் மரக்கன்றுகளை நடத்தொடங்குவார்கள் என்றார். புதிதாக நடப்படும் மரக்கன்றுகள் அடுத்த 10 ஆண்டுகளில் மரங்களாக வளரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே மரக்கன்றுகள் நடப்படுவதோடு அவற்றை பராமரித்து மரமாக உருவாகும்வரை தனி கவனம் செலுத்த வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது.
- மாணவர் சூப்பர் சீனியர் பிரிவில் மாமல்லபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி முதலிடம் பிடித்தது.
- மாணவியர் சூப்பர் சீனியர், ஜூனியர் பிரிவில் திருக்கழுக்குன்றம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதலிடம் பிடித்தது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திருக்கழுக்குன்றம் குறுவட்ட பள்ளிகள் இடையே பூப்பந்து போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியை மாமல்லபுரம் பேரூராட்சி தலைவி வளர்மதி எஸ்வந்தராவ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோதண்டபாணி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
மாணவர் சூப்பர் சீனியர் பிரிவில் மாமல்லபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியும், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில் மாமல்லபுரம் செயின்ட் மேரீஸ் பள்ளியும் முதலிடம் பிடித்தது.
மாணவியர் சூப்பர் சீனியர், ஜூனியர் பிரிவுகளில் திருக்கழுக்குன்றம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், சீனியர் பிரிவில் குழிப்பாந்தண்டலம் அரசு உயர்நிலைப் பள்ளியும் முதலிடம் பிடித்தது.
இப்பள்ளிகள் மாவட்ட அளவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்கும் தகுதியைப் பெற்றுள்ளது.
- இ.சி.ஆரில் கடல்நீரை குடிநீராக்கும் புதிய ஆலை அமைக்கப்பட்டு வருகிறது.
- புதிய ஆலையை வரும் 21-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கிறார்.
மாமல்லபுரம் :
மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி பேரூர் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் சென்னை குடிநீர் வாரியம் 4,276.44 கோடி ரூபாய் மதிப்பில், 85.51 ஏக்கர் நிலத்தில் புதிய கடல்நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்கவுள்ளது.
இந்த ஆலையை வரும் 21-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கிறார்.
இந்நிலையில், விழா நடைபெறும் பகுதியை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் இன்று ஆய்வு செய்தார்.
விழா ஏற்பாடு, பாதுகாப்பு, பார்வையாளர் பகுதி, முக்கிய பிரமுகர்கள் வருகை உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, அப்பகுதியை ஆய்வு செய்தார்.
அப்போது மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன், திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் இதயவர்மன், சென்னை குடிநீர் வாரியம் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- காலிறுதி போட்டி இன்றுடன் நிறைவு பெற்றது.
- ஜப்பான் நாட்டு வீரர், வீராங்கனைகள் வென்று முதலிடத்தில் உள்ளனர்.
மாமல்லபுரம்:
தமிழ்நாடு அலைச்சறுக்கு சங்கம் மற்றும் இந்திய அலைச்சறுக்கு கூட்டமைப்பு இணைந்து சர்வதேச லீக் போட்டியை மாமல்லபுரத்தில் நடத்தி வருகிறது.
காலிறுதி போட்டி இன்றுடன் நிறைவு பெற்றது, அதில் ஜப்பான் நாட்டு வீரர், வீராங்கனைகள் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளனர்.
இந்நிலையில், நாளை காலை கடலின் அலையைப் பொறுத்து குறிப்பிட்ட நேரத்தில் அரையிறுதிப் போட்டி தொடங்க உள்ளது.
இப்போட்டியில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சுமோமோ சாடா, கன நகாஷியோ, ஷினோ மட்சுடா, சாரா வாகிடா உள்ளிட்டோர் அரையிறுதிக்கு தேர்வாகி அலைச்சறுக்கு சாகசம் செய்ய உள்ளனர்.
தொடர்ந்து இறுதிச்சுற்றுடன் சர்வதேச லீக் போட்டி நாளை முடிகிறது. நாளை மறுநாள் பரிசுக்கோப்பை வழங்கப்படுகிறது.
- மறைமலைநகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் திருடியது தெரியவந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
மறைமலைநகர்:
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போகும் சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இது குறித்த புகாரின் பேரில் மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மறைமலைநகர் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது அந்த வழியாக சந்தேகப்படும்படி வந்த 2 வாலிபர்களை போலீசார் வழிமறித்து விசாரித்த போது முன்னுக்குபின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் படப்பை அருகே உள்ள சிறுமாத்தூர் கிராமத்தை சேர்ந்த பூபாலன் (வயது 37), ஆத்தனஞ்சேரி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் (29) என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரும் சேர்ந்து மறைமலைநகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் திருடியது தெரியவந்தது.
இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிளை போலீசார் கைப்பற்றினர்.
- பஸ்நிலையத்தை சுற்றி உள்ள பகுதியில் தண்ணீர் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- தண்ணீர் செல்லும் பாதையில் அடைப்புகள் மற்றும் அதன் அகலம் மிகவும் குறுகலாக உள்ளன.
வண்டலூர்:
சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பளவில் ரூ.393.74 கோடி மதிப்பில் பிரமாண்ட புறநகர் பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
இதில் வெளியூர் செல்லும் பஸ்களை நிறுத்தவும், பயணிகளுக்கும் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் கட்டுமான பணிகள் 90 சதவீதம் முடிந்த நிலையில் விரைவில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த வாரத்தில் பெய்த பலத்த மழையின் போது கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலைய பகுதி மற்றும் நுழைவுவாயில், ஜி.எஸ்.டி.சாலை உள்ளிட்ட இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது. மேலும் பஸ்நிலையத்தை சுற்றி உள்ள பகுதியில் தண்ணீர் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. இதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் நகராட்சிகளின் நிர்வாக இணை இயக்குனர் ஜான் லூயிஸ் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவும் வண்டலூர் மற்றும் சுற்றி உள்ள பகுதியில் கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் முன்பு மீண்டும் மழை நீர் வெள்ளமாக தேங்கியது. முழங்கால் அளவுக்கு மேல் தண்ணீர் செல்ல வழியில்லாமல் நின்றது. இதனால் அவ்வழியே சென்ற வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. மழைநின்ற பின்னரே தண்ணீர் மெல்ல மெல்ல வடிந்தது. கிளாம்பாக்கம் பஸ்நிலையம் முன்பகுதி மிகவும் தாழ்வாக இருப்பதே தண்ணீர் தேங்குவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் அங்கு உள்ள மழைநீர் கால்வாய் மிகவும் குறுகலாகவும் பல்வேறு இடங்களில் அடைப்புகள் ஏற்பட்டு உள்ளதால் தண்ணீர் செல்வதில் தடை ஏற்படுவதும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
விரைவில் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறக்கப்பட உள்ள நிலையில் வருகிற நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிடும். ஒரு நாள் மழைக்கே தண்ணீர் தேங்குவதால் பருவ மழையின் போது பாதிப்பு அதிகம் இருக்கும் என்று தெரிகிறது.
இதைத்தொடர்ந்து பஸ்நிலைய பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் புதிய மழை நீர்கால்வாய் அமைப்பது குறித்து அதிகாரிகள் தீவிர ஆய்வு செய்து வருகிறார்கள்.
இதுகுறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது கூறியதாவது:-
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் உள்ள பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட மழைநீர் செல்லும் 4 கல்வெட்டுகளும் சிதலமடைந்து உள்ளது.
தண்ணீர் செல்லும் பாதையில் அடைப்புகள் மற்றும் அதன் அகலம் மிகவும் குறுகலாக உள்ளன. எனவே சென்னை மாநகர வளர்ச்சி குழுமம் புதிதாக மழைநீர் கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைப்பதற்கான பணிகளை ரூ13 கோடியில் செயல்படுத்த திட்டமிட்டு உள்ளது. இதற்கான பணி விரைவில் தொடங்க உள்ளது. அகலமான புதியகால்வாய் மற்றும் கல்வெட்டு அமைப்பதன் மூலம் கிளாம்பாக்கம் பஸ்நிலைய பகுதியில் மழை நீர் தேங்காமல் அந்த தண்ணீரை எதிரில் உள்ள ரெயில்வே பாதையை கடந்து அடையாறு ஆற்றுப்படுகையில் கலக்க திட்டம் தீட்டப்பட்ட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 3 நடைமேடை கொண்ட கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தின் கட்டுமான பணிகளை, ஓராண்டுக்குள் முடிக்க ரெயில்வே திட்டமிட்டுள்ளது.
- சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகர் ரெயில்கள் கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் பிரமாண்ட புறநகர் பஸ்நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதில் வெளியூர் செல்லும் பஸ்களை நிறுத்தவும், பயணிகளுக்கும் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் கட்டுமான பணிகள் 90 சதவீதம் முடிந்த நிலையில் விரைவில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ரூ.20 கோடி செலவில் கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலையம் அமைக்கும் பணிகள் 4 மாதங்களில் தொடங்க உள்ளது. புதிய பேருந்து முனையம் கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் வசதிக்காக புதிய ரெயில் நிலையம் அமைக்கப்படவுள்ளது.
3 நடைமேடை கொண்ட கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தின் கட்டுமான பணிகளை, ஓராண்டுக்குள் முடிக்க ரெயில்வே திட்டமிட்டுள்ளது. சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகர் ரெயில்கள், இந்த ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.
முதற்கட்டமாக ரூ.40 லட்சம் நிதியை ரெயில்வே நிர்வாகத்திற்கு, சி.எம்.டி.ஏ வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- அனைத்து வயது பிரிவிலும் இந்தியா இறுதிச்சுற்று தகுதியை இழந்தது.
- அனைத்திலும் ஜப்பான் வீரர்கள் மட்டுமே இன்று வரை முன்னிலையில் இருந்தனர்.
மாமல்லபுரம்:
தமிழ்நாடு அலைசறுக்கு சங்கம் மற்றும் இந்திய அலைசறுக்கு கூட்டமைப்பு இணைந்து, சர்வதேச லீக் போட்டியை மாமல்லபுரத்தில் நடத்துகிறது. கடந்த 14ம் தேதி போட்டியின் இயக்குனர் டைராபர்ட் சோராட்டி போட்டியை துவக்கி வைத்தார்.
இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், இந்தோனேசியா, மடகாஸ்கர், பிலிப்பைன்ஸ், ஜப்பான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மாலத்தீவு உள்ளிட்ட 10 நாடுகளில் இருந்து ஆண்கள்-பெண்கள் என 70 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில் 4வது நாளான இன்று முதல் முறையாக பெண்கள் அணியினர் களம் இறங்கி சாகசம் செய்தனர். அனைத்து வயது பிரிவிலும் இந்தியா இறுதிச்சுற்று தகுதியை இழந்தது. அனைத்திலும் ஜப்பான் வீரர்கள் மட்டுமே இன்று வரை முன்னிலையில் இருந்தனர். இறுதிச்சுற்றுக்கான தகுதியையும் பெற்றுள்ளனர்.
இப்போட்டிகள் நாளை மறுநாள் வரை நடைபெறுகிறது. கடற்கரை கோயில் வடபகுதியில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து போட்டியை பார்க்க பிரத்யேக மேடை அமைக்கப்பட்டுள்ளது. கட்டணம் ஏதும் கிடையாது.
- செங்கல்பட்டு மாவட்ட "ரிசர்வ்டு" பகுதிகளை மாவட்ட போலீசார் உதவியுடன் ஆய்வு செய்தனர்.
- மாமல்லபுரம் புராதன சின்னம் பகுதிகளில் நேற்று இரவு பரபரப்பு கானப்பட்டது.
மாமல்லபுரம்:
மத்திய ரிசர்வ் போலீசின் ஒரு பிரிவான "ரேபிட் ஃபோர்ஸ்" அதிரடிப்படை என்பது தேர்தல், பேரிடர், கலவரம், தீவிரவாத தாக்குதல் உள்ளிட்ட அவசர நிலை பாதுகாப்பிற்கு மத்திய அரசு பிரகடனம் செய்யும் போது ராணுவத்திற்கு இணையாக களமிறங்கும் படையாகும். இப்படையினர் ஆண்டிற்கு ஒருமுறை பல்வேறு மாநிலங்களில் இருக்கும் ரிசர்வ்டு பகுதிகளை ஆய்வு செய்து ஒத்திகை போன்று பாதுகாப்பு பயிற்சி எடுப்பது வழக்கம்.
அதேபோல் நேற்று செங்கல்பட்டு மாவட்ட "ரிசர்வ்டு" பகுதிகளை மாவட்ட போலீசார் உதவியுடன் ஆய்வு (பயிற்சி) செய்தனர். அதில் முக்கிய இடமாக மாமல்லபுரம் புராதன சின்னங்களான அர்சுனன்தபசு, ஐந்துரதம், கடற்கரை கோயில் ஆகியவை இடம் பெற்றிருந்தது.
இதையடுத்து, நேற்று மாலை அப்பகுதிகளை கோவையில் இருந்து, துணை கமெண்டோ ஜின்சி பிலிப் தலைமையில் வந்திருந்த 30 ரேபிட் ஃபோர்ஸ் வீரர்கள் நவீன ரக துப்பாக்கிகளுடன், திபு திபு என வாகனத்தில் இருந்து இறங்கி ஆய்வு பயிற்சியை மேற்கொண்டனர்.
பின்னர், அப்பகுதிகளை சுற்றி பார்த்து, நுழைவு வாயில், அவசர நிலை வெளியேற்று பகுதி, தற்போதைய பாதுகாப்பு, காவல் நிலைய தூரம், மருத்துவமனை தூரம், உள்ளிட்டவை குறித்து கள ஆய்வு செய்தனர். கடைசியாக கடற்கரை கோயிலை சுற்றி பார்த்து ஆய்வு பயிற்சி செய்த பின்னர் அனைவரும் குழுவாக புகைப்படம் எடுத்தனர்.
இதனால் மாமல்லபுரம் புராதன சின்னம் பகுதிகளில் நேற்று இரவு பரபரப்பு கானப்பட்டது. பின்னர் இது அவசரநிலை பாதுகாப்பு பயிற்சி ஒத்திகை என்பது பகுதி மக்களுக்கு தெரியவந்தது.
- பகலில் கொத்தனார் வேலைக்கு சென்றுவரும் அவர் கொள்ளையடித்த நகை, பணத்தில் நண்பர்களிடம் ஜாலியாக சுற்றி செலவு செய்து வந்தார்.
- தற்போது செலவுக்கு பணம் இல்லாததால் கொள்ளையடித்த நகைகளை அடகு வைக்க வந்தபோது சூர்யா போலீசாரிடம் சிக்கி இருப்பது விசாரணையில் தெரிந்தது.
வண்டலூர்:
கூடுவாஞ்சேரி பஸ்நிலைய பகுதியில் இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் மற்றும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றிய வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர், கூடுவாஞ்சேரி அப்துல்லா தெருவை சேர்ந்த சூர்யா (22) என்பதும் கூடுவாஞ்சேரி பகுதியில் பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு தொடர்ந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.
பகலில் கொத்தனார் வேலைக்கு சென்றுவரும் அவர் கொள்ளையடித்த நகை, பணத்தில் நண்பர்களிடம் ஜாலியாக சுற்றி செலவு செய்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மீனாட்சி நகர், செல்லப்பா தெருவில் உள்ள ஒரு வீட்டில் நகை-பணத்தை திருடி நண்பர்களுக்கு மது விருந்து வைத்து உள்ளார்.
தற்போது செலவுக்கு பணம் இல்லாததால் கொள்ளையடித்த நகைகளை அடகு வைக்க வந்தபோது சூர்யா போலீசாரிடம் சிக்கி இருப்பது விசாரணையில் தெரிந்தது.
அவர் வேறு எந்தெந்த இடங்களில் கொள்ளையடித்து உள்ளார்? கூட்டாளிகள் யார்? யார்? என்பது குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.






