search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிழக்கு தாம்பரம் குடியிருப்புகளில் 1000 வீடுகளை சூழ்ந்த மழை வெள்ளம்
    X

    கிழக்கு தாம்பரம் குடியிருப்புகளில் 1000 வீடுகளை சூழ்ந்த மழை வெள்ளம்

    • தாம்பரம் ரெயில்வே சுரங்கபாதையில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியது.
    • அதிக பட்சமாக நேற்று இரவு மேற்கு தாம்பரத்தில் 12 செ.மீ. மழை பதிவானது.

    தாம்பரம்:

    சென்னையில் கடந்த சில நாட்களாகவே இரவு மற்றும் காலை நேரங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி-மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது. சென்னையில் புரசைவாக்கம், வேப்பேரி, எழும்பூர், கோயம்பேடு, வடபழனி, பெரம்பூர், வியாசர்பாடி, மூலக்கடை உள்ளிட்ட நகரின் பெரும்பாலான பகுதிகளில் நள்ளிரவு 12 மணிக்கு பிறகு மழை பெய்தது.

    இதேபோன்று கிழக்கு கடற்கரை சாலையை யொட்டிய பகுதிகளிலும் மழை கொட்டியது. இந்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது.

    நீலாங்கரை, திருவான்மியூர், அடையாறு, செம்மஞ்சேரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் விடிய விடிய மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டது. குறிப்பாக செம்மஞ்சேரி பகுதியில் பலத்த மழை பெய்தது.

    இதனால் அப்பகுதிகளில் குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்தது. செம்மஞ்சேரி பகுதியில் மட்டும் 9.2 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    அதே நேரத்தில் தாம்பரம் புறநகர் பகுதிகளிலும், செங்குன்றம், ஆவடி சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை கொட்டியது. அதிக பட்சமாக நேற்று இரவு மேற்கு தாம்பரத்தில் 12 செ.மீ. மழை பதிவானது.

    இதன் காரணமாக தாம்பரம் ரெயில்வே சுரங்கபாதையில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த வழியாக வாகன போக்கு வரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளது. சுரங்கப் பாதை மூடப்பட்டு மாற்று வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. இதன் காரணமாக சுமார் 2 கி.மீ. தூரம் வாகனங்கள் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. கிழக்கு தாம்பரம், இரும்புலியூர், அருண்நகர், புதுப்பெருங்களத்தூர், முடிச்சூர், வரதராஜபுரம், செம்பாக்கம், காமராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளிலும் வெள்ளம் தேங்கியது. இதனால் மேற்கு தாம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகதிகளில் 1000 வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் வெளியிடங்களுக்கும் வேலைக்கும் சென்ற மக்கள் கடும் பாதிப்பை சந்தித்தனர்.

    பலத்த மழை பெய்த போதிலும் இன்று காலையில் அப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கின. இதனால் மாணவ-மாணவிகள் மழை வெள்ளத்தை கடந்து பள்ளிகளுக்கு சென்றதையும் காண முடிந்தது. தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட இந்த பகுதிகளில் மழைக் காலங்களில் இதுபோன்று தண்ணீர் தேங்குவது வாடிக்கையாகி வருவதாகவும் இதனால் கடும் பாதிப்பை சந்தித்து வருவதாகவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    கிழக்கு தாம்பரம் சுற்று வட்டார பகுதியில் தேங்கும் மழைநீர் அப்பகுதியில் உள்ள அருண்நகர் வழியாகவே அங்குள்ள ஏரிக்கு செல்லும். ஆனால் ஆக்கிரமிப்பு காரணமாக நீர்வழிப்பாதைகள் சுருங்கி ஊருக்குள் தண்ணீர் புகுந்துவிடுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை இன்று காலையிலும் பல இடங்களில் நீடித்தது. சில இடங்களில் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இப்படி சென்னையில் பெய்த மழை காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவியது.

    மழை காரணமாக சாலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்ற மாணவ-மாணவிகளும் சிரமத்தை சந்தித்தனர். திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களிலும் இரவு முழுவதும் மழை பெய்தது. காஞ்சிபுரம் கட்டப்பாக்கம் பகுதியில் பலத்த மழை பெய்தது. திருவள்ளூர் ஜமீன் கொரட்டூர் பகுதிகளிலும் இரவில் பெய்த மழை காலை வரையில் நீடித்தது.

    பூந்தமல்லி நகராட்சி ஒன்றாவது வார்டு அரசு உயர்நிலைப்பள்ளி எதிரே சாலையில் மழை நீருடன் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்பதால் பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளில் கால்வாய்கள் நிரம்பி இருக்கும் நிலையில் மழை நீருடன் கழிவுநீர் கலந்து குளம் போல் தேங்கிகிறது. இதில் பள்ளி சிறுவர் சிறுமியர்கள் நடந்து செல்வதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக பெற்றோர்கள் அச்சம் தெரிவித்தனர். சுமார் 300 மாணவர்கள் படிக்கக்கூடிய பள்ளி வளாகம் எதிரே நிலவிவரும் சுகாதார சீர்கேட்டை கருத்தில் கொண்டு பூந்த மல்லி நகராட்சி சார்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தேங்கியிருக்கும் கழிவு நீர் அருகே அடுக்கி வைக்கப்பட்டுள்ள செங்கற்கள் மீது சிறுவர்கள் கால் நனையாமல் இருக்க ஆபத்தான முறையே தாவி செல்வதால் கீழே விழுந்து காயம் ஏற்படும் சூழலும் உள்ளது. ஒவ்வொரு மழைக்கும் இந்த பகுதியில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து சாலையில் குளம் போல் தேங்கி நிற்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    சென்னை மற்றும் புற நகர் பகுதிகளிலும், திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் பெய்துள்ள மழை அளவு விவரம் வருமாறு:-

    மேற்கு தாம்பரம்-12 செ.மீ. கட்டப்பாக்கம்-9.6 செ.மீ. மீனம்பாக்கம்-5 செ.மீ. நுங்கம்பாக்கம்-4.5 செ.மீ. திருத்தணி-5 செ.மீ. சோழவரம்-4 செ.மீ. திருவள்ளூர் திரூர்-5.4 செ.மீ. கிண்டி, செங்குன்றம், தாமரைப் பாக்கம் பகுதிகளில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மழையால் இன்று காலை வெப்பம் தணிந்து 'ஜில்' என்ற காற்றும் வீசியது. வருகிற 28-ந் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×