என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

செங்கல்பட்டு அருகே சந்திரயான்-3 வெற்றிகரமாக இறங்க சந்திரன் கோவிலில் கூட்டு பிரார்த்தனை
- செங்கல்பட்டு அருகே உள்ள புதுப்பட்டு கிராமத்தில் ஸ்ரீஆனந்தவல்லி உடனுறை ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது
- பழமையான இந்த கோவிலில் சந்திர பகவானுக்கும் தனி சன்னதி உள்ளது.
செங்கல்பட்டு:
சந்திரனில் சந்திரயான்-3 விண்கலம் இன்று மாலையில் தரையிறங்க உள்ளது. நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த விண்வெளி சாதனையில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று சாமானிய மக்கள் கூட மனப்பூர்வமாக வேண்டி கொண்டிருக்கிறார்கள். கூட்டு பிரார்த்தனைகள், வழிபாடுகள், சர்வ மத பிரார்த்தனை வேள்விகள் என்று வட மாநிலங்களில் வழிபாட்டு தலங்களில் நேற்று மாலை முதல் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.
செங்கல்பட்டு அருகே உள்ள புதுப்பட்டு கிராமத்தில் ஸ்ரீஆனந்தவல்லி உடனுறை ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. 1500 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் அகத்தியர் வழிபட்ட கோவில்.
பழமையான இந்த கோவிலில் சந்திர பகவானுக்கும் தனி சன்னதி உள்ளது. இங்கு இந்திய விஞ்ஞானிகளின் முயற்சியான சந்திரயான்-3 சந்திரனில் கால் பதிக்கவும், விண்வெளி அறிவியல் மற்றும் கிரக ஆய்வுகளில் இந்தியா உலகிற்கு வழிகாட்டவும் சந்திர பகவான் வழிகாட்ட வேண்டும் என்று சந்திரன் சன்னதியில் இன்று கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் திரண்டு இந்த வழிபாட்டில் பங்கேற்று உள்ளார்கள். காலை 9 மணிக்கு தொடங்கியது. மாலை வரை இந்த பிரார்த்தனையை தொடர போவதாக கூறினார்கள்.






