search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் முன்பு மழைநீர் தேங்க காரணம் என்ன?- ரூ.13 கோடியில் புதிய கால்வாய் அமைக்க திட்டம்
    X

    கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் முன்பு மழைநீர் தேங்க காரணம் என்ன?- ரூ.13 கோடியில் புதிய கால்வாய் அமைக்க திட்டம்

    • பஸ்நிலையத்தை சுற்றி உள்ள பகுதியில் தண்ணீர் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    • தண்ணீர் செல்லும் பாதையில் அடைப்புகள் மற்றும் அதன் அகலம் மிகவும் குறுகலாக உள்ளன.

    வண்டலூர்:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பளவில் ரூ.393.74 கோடி மதிப்பில் பிரமாண்ட புறநகர் பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

    இதில் வெளியூர் செல்லும் பஸ்களை நிறுத்தவும், பயணிகளுக்கும் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் கட்டுமான பணிகள் 90 சதவீதம் முடிந்த நிலையில் விரைவில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த வாரத்தில் பெய்த பலத்த மழையின் போது கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலைய பகுதி மற்றும் நுழைவுவாயில், ஜி.எஸ்.டி.சாலை உள்ளிட்ட இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது. மேலும் பஸ்நிலையத்தை சுற்றி உள்ள பகுதியில் தண்ணீர் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. இதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் நகராட்சிகளின் நிர்வாக இணை இயக்குனர் ஜான் லூயிஸ் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவும் வண்டலூர் மற்றும் சுற்றி உள்ள பகுதியில் கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் முன்பு மீண்டும் மழை நீர் வெள்ளமாக தேங்கியது. முழங்கால் அளவுக்கு மேல் தண்ணீர் செல்ல வழியில்லாமல் நின்றது. இதனால் அவ்வழியே சென்ற வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. மழைநின்ற பின்னரே தண்ணீர் மெல்ல மெல்ல வடிந்தது. கிளாம்பாக்கம் பஸ்நிலையம் முன்பகுதி மிகவும் தாழ்வாக இருப்பதே தண்ணீர் தேங்குவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் அங்கு உள்ள மழைநீர் கால்வாய் மிகவும் குறுகலாகவும் பல்வேறு இடங்களில் அடைப்புகள் ஏற்பட்டு உள்ளதால் தண்ணீர் செல்வதில் தடை ஏற்படுவதும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

    விரைவில் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறக்கப்பட உள்ள நிலையில் வருகிற நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிடும். ஒரு நாள் மழைக்கே தண்ணீர் தேங்குவதால் பருவ மழையின் போது பாதிப்பு அதிகம் இருக்கும் என்று தெரிகிறது.

    இதைத்தொடர்ந்து பஸ்நிலைய பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் புதிய மழை நீர்கால்வாய் அமைப்பது குறித்து அதிகாரிகள் தீவிர ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இதுகுறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது கூறியதாவது:-

    கிளாம்பாக்கம் பஸ் நிலையம் உள்ள பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட மழைநீர் செல்லும் 4 கல்வெட்டுகளும் சிதலமடைந்து உள்ளது.

    தண்ணீர் செல்லும் பாதையில் அடைப்புகள் மற்றும் அதன் அகலம் மிகவும் குறுகலாக உள்ளன. எனவே சென்னை மாநகர வளர்ச்சி குழுமம் புதிதாக மழைநீர் கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைப்பதற்கான பணிகளை ரூ13 கோடியில் செயல்படுத்த திட்டமிட்டு உள்ளது. இதற்கான பணி விரைவில் தொடங்க உள்ளது. அகலமான புதியகால்வாய் மற்றும் கல்வெட்டு அமைப்பதன் மூலம் கிளாம்பாக்கம் பஸ்நிலைய பகுதியில் மழை நீர் தேங்காமல் அந்த தண்ணீரை எதிரில் உள்ள ரெயில்வே பாதையை கடந்து அடையாறு ஆற்றுப்படுகையில் கலக்க திட்டம் தீட்டப்பட்ட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×