search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுராந்தகம் பகுதியில் 400 மரங்களை வெட்டி அகற்ற முடிவு
    X

    மதுராந்தகம் பகுதியில் 400 மரங்களை வெட்டி அகற்ற முடிவு

    • சாலை அகலப்படுத்தும் பணி நடைபெறும் இடங்களில் நெடுஞ்சாலைத்துறை மூலம் மொத்தம் 4,300 மரக்கன்றுகள் நடப்பட உள்ளது.
    • மரக்கன்றுகள் நடப்படுவதோடு அவற்றை பராமரித்து மரமாக உருவாகும்வரை தனி கவனம் செலுத்த வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் முதல் வெண்ணாங்குப்பட்டு வரையிலான 32 கி. மீ. தார்ச்சாலை மாநில நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பள்ளம்பாக்கம் கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதி முதல் வெண்ணாங்குப்பட்டில் உள்ள கிழக்கு கடற்கரை சாலை வரை ரோடு குறுகலாக உள்ளதால் நெடுஞ்சாலைத்துறை விரிவாக்கம் செய்ய முடிவு செய்தது.

    ஏற்கனவே இருந்த சாலையின் அகலமான 23 அடியை, தற்போது இரண்டு புறங்களிலும் தலா 5 அடி விரிவாக்கம் செய்து, 33 அடி அகல சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டு பணி நடக்கிறது. மேலும், இடைப்பட்ட துாரத்தில் குறுகலாக இருந்த பழைய 4 சிறுபாலங்கள் அகற்றப்பட்டு, புதிய பாலங்கள் அமைக்கும் பணி நடக்கிறது.

    இதேபோல் முதுகரை-கடலூர் சாலை, செய்யூர்-படாளம் சாலையும் விரிவாக்கப்பட்டு வருகின்றன. இந்த சாலைகள் ஓரமாக பசுமையான மரங்கள் உள்ளன. சாலையில் செல்வோருக்கு இதமான காற்றையும், வழி போக்கர்களுக்கு நிழலையும் தருகின்றன. இந்த மரங்களை நெடுஞ்சாலைதுறை பணியாளர்கள் பராமரித்து வருகின்றனர். இந்த சூழலில் பெருகி வரும் வாகன போக்குவரத்தால் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி உருவாகிறது. இதனால் சாலையை விரிவாக்கம் செய்வது அவசியம் என்று நெடுஞ்சாலைதுறையினர் கருதுகின்றனர். இதற்காக இந்த 3 சாலைகளும் அகலப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடக்கிறது. இந்த பணிகளுக்காக சாலை ஓரம் நிற்கும் பசுமையான மரங்களை வெட்டி அகற்ற திட்டமிடப்பட்டு உள்ளது.

    அதன்படி முதுகரை -கடலூர் சாலையில் 214 மரங்களும், மதுராந்தகம்-வெண்ணாங்குப்பட்டு சாலையில் 195 மரங்களும், செய்யூர்-படாளம் சாலையில் 12 மரங்களும் வெட்டுவதற்கு மாவட்ட பசுமைக் குழுக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில் இந்த சாலைகளின் ஓரமாக உள்ள மரங்கள் குறைந்தது 50 ஆண்டுகள் பழமையானவை. இந்த மரங்கள் இல்லாமல் போனால், இன்னும் வெப்பம் அதிகரிக்கும் என்றனர்.

    இதுபற்றி செங்கல்பட்டு மாவட்ட வன அலுவலர் ரவிமீனா கூறும்போது, சாலை அகலப்படுத்தும் பணி நடைபெறும் இடங்களில் நெடுஞ்சாலைத்துறை மூலம் மொத்தம் 4,300 மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. முதுகரை-கடலூர் சாலையில் 500 மரக்கன்றுகளும், படாளம் ஜி.எஸ்.டி. ரோடு-செய்யூர் சாலையில் 300 மரக்கன்றுகளும், வெண்ணங்குபட்டு சாலையில் 650 மரக்கன்றுகளும் நடப்படும். சாலை விரிவாக்கம் முடிந்ததும், அவர்கள் மரக்கன்றுகளை நடத்தொடங்குவார்கள் என்றார். புதிதாக நடப்படும் மரக்கன்றுகள் அடுத்த 10 ஆண்டுகளில் மரங்களாக வளரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே மரக்கன்றுகள் நடப்படுவதோடு அவற்றை பராமரித்து மரமாக உருவாகும்வரை தனி கவனம் செலுத்த வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது.

    Next Story
    ×