என் மலர்
நீங்கள் தேடியது "தேசிய நெடுஞ்சாலை விபத்து"
- ராமநாதபுரத்தில் இருந்து வந்த கார் விபத்தில் சிக்கியது
- காரில் பயணம் செய்த மூவரும் பலியான சோகம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 6 மணி அளவில் கார் ஒன்று சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த காரில் டிரைவரோடு சேர்ந்து 3 பேர் பயணமானார்கள்.
அய்யனார் கோவில் அருகே சாலையின் இடது புறத்தில் மழை நீர் செல்லும் கால்வாய் ஒன்று உள்ளது. இதன் அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் சீறிப்பாய்ந்தது. இதில் பறந்து சென்ற கார் 20 அடி ஆழ கால்வாய் பள்ளத்தில் போய் விழுந்தது.
டமார் என்ற பயங்கர சத்தத்துடன் விழுந்ததில் கார் அப்பளம் போல நொறுங்கியது. இதைப் பார்த்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தனர். அப்போது காரில் 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்து கிடந்தனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் சிக்கிய 3 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான 3 பேரும் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து ஒன்றாக சேர்ந்து சென்னைக்கு பயணமானது தெரிய வந்தது.
3 பேரின் சட்டை பையிலும் ஆதார் மற்றும் அடையாள அட்டைகள் இருந்தன. அதனை வைத்து உயிரிழந்தவர்கள் யார்-யார்? என்பது பற்றிய விவரங்களை போலீசார் கண்டுபிடித்தனர்.
காரை ஓட்டி வந்த வாலிபரின் செல்போன் மட்டும் விபத்தில் சேதம் அடையாமல் இருந்தது. இதையடுத்து அவரது செல்போனில் மனைவி புவனேஸ்வரியை போலீசார் தொடர்பு கொண்டனர். இதன் மூலமும் பலியானவர்களின் முழு விவரங்கள் கிடைத்தன.
காரை ஓட்டி வந்தவரின் பெயர் கதிரவன் (30) என்பது தெரிய வந்தது. இவரது சொந்த ஊர் திண்டுக்கல் நிலக்கோட்டை அருகே உள்ள பச்சைமலையான் கோட்டை திம்மி நாயக்கன்பட்டி என்பது தெரிய வந்தது. அவருடன் பயணித்த மற்ற இருவரும் நந்தகுமார், கார்த்திக் என்ப தும் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களில் நந்தகுமார் மன்னார்குடி அருகே உள்ள ஆலங்கோட்டையை சேர்ந்தவர் ஆவார். கார்த்திக் நெல்லை மாவட்டம் பத்தமடை சிவானந்தா தெருவைச் சேர்ந்தவர்.
கதிரவன், கார்த்திக் இருவரும் சென்னையில் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேருவதற்காக வந்தவர்கள் என்பதும், அப்போதுதான் விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியாகி இருப்பதும் தெரிய வந்து உள்ளது.
இது தொடர்பாக 3 பேரின் உறவினர்களுக்கும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் சென்னை வந்து கொண்டிருக்கிறார்கள். பிரேத பரிசோதனைக்கு பிறகு 3 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
ஐ.டி. வேலைக்காக சென்னை நோக்கி வந்த வாலிபர்கள் இருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கும் சம்பவம் அவர்களது குடும்பத்தினரை கடும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவர்களது சொந்த ஊர்களில் கண்ணீர் விட்டு கதறி அழுதபடி உள்ளனர்.






