என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மாடுகளின் பிடியில் பழைய மகாபலிபுரம் சாலை- வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்குவதாக புகார்
- இரவு நேரங்களில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ரோட்டில் படுத்து கிடக்கும் மாடுகளால் விபத்தில் சிக்குகிறார்கள்.
- போக்குவரத்து இடையூறு ஏற்படுவது மட்டுமல்லாமல் மாடுகள் அல்லது பொது மக்களும் காயம் அடைவார்கள் என்று மக்கள் கூறுகின்றனர்.
சென்னை நகர பகுதியில் மாடு வளர்ப்பவர்கள் மாடுகளை அவிழ்த்து விடுவதால் சாலைகளில் சுற்றித்திரிகிறது. இது போக்குவரத்துக்கு இடையூறு செய்வதோடு மட்டுமல்லாமல் கோபக் கார மாடுகள் பொது மக்களை முட்டியும் பதம் பார்க்கிறது. சமீபத்தில் அரும்பாக்கத்தில் ரோட்டில் நடந்து சென்ற சிறுமியை மாடு ஒன்று முட்டி தூக்கி போட்டு பந்தாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து ரோடுகளில் அலையும் மாடுகளை பிடித்து உரிமையாளர்களுக்கு மாநகராட்சி அபராதம் விதித்து வருகிறது.
இதே போல் பழைய மகாபலிபுரம் சாலையும் மாடுகளின் பிடியில் சிக்கி இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகிறார்கள். இதில் பெரும்பாலான பகுதிகள் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து பகுதிகள் ஆகும். கேளம்பாக்கம், சிறுசேரி, நாவலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஐ.டி. நிறுவனங்கள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பணிபுரிகிறார்கள். இரவு நேரங்களில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ரோட்டில் படுத்து கிடக்கும் மாடுகளால் விபத்தில் சிக்குகிறார்கள்.
களிப்பட்டூரில் ஏழெட்டு மாடுகள் இரவில் சாலையில் படுத்து கிடந்ததாகவும் ஒரு மாடு ரத்தபோக்கு ஏற்பட்டு கிடந்ததாகவும் அதை பார்த்த பயணி ஒருவர் கூறினார்.
இதை தடுக்காவிட்டால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவது மட்டுமல்லாமல் மாடுகள் அல்லது பொது மக்களும் காயம் அடைவார்கள் என்று மக்கள் கூறுகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களையும் சாலைகளில் மாடுகள் நடமாடுவதை கண்காணிக்கும் படி உத்தரவிட்டுள்ளார்.
தையூர் பஞ்சாயத்துச் செயலாளர் குமரேசன் அந்த பகுதியில் மாடுகள் சுற்றித் திரிந்ததால் 2 உரிமையாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து இருப்பதாக கூறினார்.
ரோடுகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து சென்றால் அடைத்து வைக்கும் பவுண்டு வசதி பஞ்சாயத்தில் இல்லை என்றும் இதனால் மாடுகளை பிடிப்பதும் அபராதம் விதிப்பதும் சவாலாக இருப்பதாக கூறப்படுகிறது.
பஞ்சாயத்துகள் கால்நடைகள் தொல்லையை சமாளிக்க தங்களுக்கு வசதிகள் இல்லை என்று கூறுவதற்கு நிதிபற்றாக் குறையை காரணம் காட்ட முடியாது. தேவையறிந்து வரி வசூலில் தீவிரம் காட்ட வேண்டும். மாட்டு உரிமையாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் என்பதை ரூ.10 ஆயிரமாக உயர்த்தலாம் என்கிறார் முன்னாள் நகராட்சி நிர்வாகத்துறை கூடுதல் இயக்குனர் சிவசாமி.






