என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • 63 பேர் பயணித்த அந்த ரெயில் பெட்டியில் சமையல் செய்தவற்காக 5 பேர் வந்துள்ளனர்.
    • ஆன்மீக சுற்றுலா சென்றவர்கள் தீயில் கருகி பலியாகி உடல்களாக கொண்டு வரப்பட்டது

    உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு ஆன்மீக சுற்றுலா சென்றுவிட்டு, நேற்று ராமேசுவரம் செல்வதற்காக 63 பயணிகள் ரெயிலில் வந்தனர். இந்த ரெயில் பெட்டியில் நேற்று அதிகாலை டீ தயாரிப்பதற்காக சிலிண்டரை பற்ற வைத்தபோது பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    இதில் 9 பேர் உடல் கருகி பலியானார்கள். நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவத்தில் ஒருவரின் உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு காணப்பட்டது. கடைசியில் அவர் பெண் என்பது உறுதியானது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை ரெயிலில் எடுத்துச் செல்லக்கூடாது என்ற விதிகள் இருந்தும் அதனை மீறி யாத்ரீகர்கள் கொண்டு வந்த சிலிண்டர் அவர்கள் உயிரை பறித்துள்ளது.

    63 பேர் பயணித்த அந்த ரெயில் பெட்டியில் சமையல் செய்தவற்காக 5 பேர் வந்துள்ளனர். அவர்கள் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான உணவுகளை தயாரித்து கொடுத்துள்ளனர். அதேபோல் கியாஸ் அடுப்பை பயன்படுத்தாமல், சிலிண்டரிலேயே வைத்து சமையல் செய்துள்ளனர். அப்போதுதான் விபத்து ஏற்பட்டுள்ளது.

    தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புக்குழுவினர் தீயை அணைத்த பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, ஆங்காங்கே உடல்கள் கருகிய நிலையில் கிடந்தன. ஒரு சிலர் தாங்கள் படுத்திருந்த பெர்த் படுக்கையிலேயே பிணமாக கரிக்கட்டையாக கிடந்தனர்.

    அப்பர் பெர்த், லோயர் பெர்த்தில் படுத்திருந்தவர்களின் பெயர்களை வைத்தே அடையாளம் காணப்பட்டது. லேசான காயம் அடைந்தவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களை அழைத்துக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு சென்ற போலீசார், அவர்கள் மூலம் இறந்தவர்களை அடையாளம் கண்டனர்.

    அதன்படி பலியானவர்களின் விபரம் வருமாறு:-

    1.ஹரிஷ்குமார் யாசின் (வயது 62), பிரேம் நகர், சிட்டாப்பூர்.

    2.தீபக் கஸ்யாப் (21), நயபாஷி, கவுசல்யா பவன், சிட்டாப்பூர்.

    3.அன்குல் (36), சாய்பாபா ரோடு, சிட்டாப்பூர்.

    4.சத்ரு தமன் சிங் (65), மவுலா அதஸ் நகர், சிட்டாப்பூர்.

    5.பரமேஸ்வர் தயாள் சர்மா (57), மீடா டாக்கீஸ் கிராமம், ஹர்தோஸ் மாவட்டம்.

    6.மித்திலேஸ் (62), ஆதர்ஸ் நகர், செக்டார்-1, நைபாலபூர், லக்கிம்பூர் ரோடு, சிட்டாப்பூர்.

    7.சாந்திதேவி வர்மா (70), கோட்டியா, லக்கிம்பூர்.

    8.குமார் ஹிமானி பன்சால் (27), அக்ரசன் கண்டன் கல்லூரி அருகில், சவுக், லக்னோ.

    9.மனோரமா அகல்வால் (81), அக்ரசன் ஆண்டன் கல்லூரி அருகில், சவுக், லக்னோ.

    இவர்கள் 9 பேரின் உடல்களும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து முடிக்கப்பட்டது. பின்னர் அவர்களது உடல்களுக்கு அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், கலெக்டர் சங்கீதா மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து 3 ஆம்புலன்ஸ் வேன்கள் மூலம் பலியானோரின் உடல்கள் சென்னை விமான நிலையம் கொண்டு செல்லட்டது. அங்கிருந்து 2 தனி விமானங்களில் உடல்கள் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ கொண்டு செல்லப்பட்டது.

    ஆன்மீக சுற்றுலா சென்றவர்கள் தீயில் கருகி பலியாகி உடல்களாக கொண்டு வரப்பட்டது அவர்களின் உறவினர்களிடையேயும், அவர்கள் வசித்த பகுதியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • சிறப்பு கடன் உதவி முகாம் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டங்கில் நடைபெற்றது.
    • மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி தலைமை தாங்கினார்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் தொழில்துறை தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு கடன் உதவி முகாம் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டங்கில் நடைபெற்றது.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி தலைமை தாங்கினார். தொழில் முதலீட்டு கழகத்தின் சென்னை மண்டல மேலாளர் பழனிவேல், தொழில் முதலீட்டு கழக மறைமலைநகர் கிளை மேலாளர் சுந்தரம், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வித்யா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விஜயகுமார் சிப்காட் திட்ட அலுவலர் நளினி குறு சிறு தொழில் முதலீட்டு அசோசியேஷன் செயலாளர் தனசேகரன், கருங்குழி அரிசி ஆலை செயலாளர் குமார் மற்றும் தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.

    இதில் தொழில் முனைவோர்களுக்கு கடன் தொகையாக ரூ.30 கோடி வழங்கப்பட்டது.

    • 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    • கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட இளவழகனார் தெருவில் திருட்டுத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று பார்த்த போது அங்கு திருட்டுத்தனமாக மதுபானங்களை விற்பனை செய்து கொண்டிருந்த ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த பிரபு (வயது 34) என்பவரை போலீசார் கைது செய்து 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    அதே போல ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஒரு பெட்டி கடையில் திருட்டுத்தனமாக மது விற்று கொண்டிருந்த சென்னையை சேர்ந்த சிவானந்தம் (வயது 31), என்பவரை போலீசார் கைது செய்து 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஓட்டுனர் பால்பாண்டியின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தனியார் நிறுவனத்தின் பஸ் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது.
    • விபத்து குறித்து கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    காட்டாங்கொளத்தூர்:

    தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு சென்ற போது காட்டாங்கொளத்தூர் அருகே வந்த போது ஓட்டுனர் பால்பாண்டியின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தனியார் நிறுவனத்தின் பஸ் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது.

    இதில் லாரி ஓட்டுனர் பால்பாண்டிக்கு படுகாயங்கள் ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த மறைமலைநகர் தீயணைப்பு துறை ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணிநேரம் போராடி ஓட்டுனர் பால்பண்டியை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மாமல்லபுரத்தில் சர்வதேச கட்டமைப்பு நம்பகத்தன்மை மாநாடு நேற்று நிறைவடைந்தது.
    • இதில் இந்தியா, வெளிநாட்டு விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் மற்றும் சென்னை ஐ.ஐ.டி உள்ளிட்ட பிற நிறுவனங்கள் இணைந்து நடத்திய சர்வதேச கட்டமைப்பு நம்பகத்தன்மை மாநாடு நேற்றுடன் நிறைவடைந்தது.

    இந்த மாநாட்டை இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் வெங்கட்ராமன் தலைமை வகித்து நடத்தினார். அறிவியல் தொழில்துறை, ஆராய்ச்சிதுறை செயலர் மற்றும் கவுன்சில் தலைமை இயக்குனர் கலைச்செல்வி காணொலி வாயிலாக மாநாட்டை துவக்கி வைத்தார்.

    மாநாட்டு தலைவரான சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர் ரகு பிரகாஷ், இந்திய அணுமின் கழகத்தின் இன்ஜினியரிங் பிரிவு செயல் இயக்குனர் ராமமோகன், தர உறுதி செயல் இயக்குனர் தாமஸ் மேத்யூ மற்றும் இந்தியா, வெளிநாட்டு விஞ்ஞானிகள், பொறியாளர்கள், கல்வியாளர்கள், தொழில் வல்லுநர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் மாநாட்டில் பங்கேற்றனர்.

    மாநாட்டில் அணுசக்தி பாதுகாப்பு, ரசாயனம், விண்வெளி ஆய்வு, எண்ணெய் கிணறுகளின் கட்டமைப்பு, புதிய கண்டுபிடிப்புகளின் நம்பகத்தன்மை, வருங்கால அறிவியல் வளர்ச்சி உள்ளிட்ட முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது. அதற்கான ஆய்வு கட்டுரைகள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டது.

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
    • காதலனுடன் சென்ற பவித்ரா தைலாவரத்தில் தங்கி குடும்பம் நடத்தி உள்ளார்.

    வண்டலூர்:

    வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் புருஷோத்தன். இவரது மனைவி பவித்ரா (வயது 25).இவர்களுக்கு 6 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த 4 மாதத்துக்கு முன்பு பவித்ரா தனது மகளுடன் திடீரென மாயமானார். இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் பவித்ரா ஏற்கனவே கல்லூரியில் படித்தபோது உடன் படித்த வாலிபருடன் நெருங்கி பழகி வந்ததும் அவருடன் ஓட்டம் பிடித்து இருந்ததும் தெரிந்தது.

    கூடுவாஞ்சேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பவித்ரா தங்கி இருந்தார். இதற்கிடையே பவித்ரா திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவரது 6 வயது பெண் குழந்தை தவிப்பில் உள்ளது.

    இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் காதலனுடன் சென்ற பவித்ரா தைலாவரத்தில் தங்கி குடும்பம் நடத்தி உள்ளார். அப்போது அவர்களுக்கு இடையேயும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் காதலன் பிரிந்து சென்று விட்டார். பின்னர் பவித்ரா பெற்றோரை சந்தித்து பணம் கேட்டு உள்ளார். ஆனால் அவர்கள் பணம் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதில் மனவேதனை அடைந்த பவித்ரா தற்கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    • தாம்பரம் ரெயில்வே சுரங்கபாதையில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியது.
    • அதிக பட்சமாக நேற்று இரவு மேற்கு தாம்பரத்தில் 12 செ.மீ. மழை பதிவானது.

    தாம்பரம்:

    சென்னையில் கடந்த சில நாட்களாகவே இரவு மற்றும் காலை நேரங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி-மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது. சென்னையில் புரசைவாக்கம், வேப்பேரி, எழும்பூர், கோயம்பேடு, வடபழனி, பெரம்பூர், வியாசர்பாடி, மூலக்கடை உள்ளிட்ட நகரின் பெரும்பாலான பகுதிகளில் நள்ளிரவு 12 மணிக்கு பிறகு மழை பெய்தது.

    இதேபோன்று கிழக்கு கடற்கரை சாலையை யொட்டிய பகுதிகளிலும் மழை கொட்டியது. இந்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது.

    நீலாங்கரை, திருவான்மியூர், அடையாறு, செம்மஞ்சேரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் விடிய விடிய மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டது. குறிப்பாக செம்மஞ்சேரி பகுதியில் பலத்த மழை பெய்தது.

    இதனால் அப்பகுதிகளில் குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்தது. செம்மஞ்சேரி பகுதியில் மட்டும் 9.2 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    அதே நேரத்தில் தாம்பரம் புறநகர் பகுதிகளிலும், செங்குன்றம், ஆவடி சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை கொட்டியது. அதிக பட்சமாக நேற்று இரவு மேற்கு தாம்பரத்தில் 12 செ.மீ. மழை பதிவானது.

    இதன் காரணமாக தாம்பரம் ரெயில்வே சுரங்கபாதையில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த வழியாக வாகன போக்கு வரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளது. சுரங்கப் பாதை மூடப்பட்டு மாற்று வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. இதன் காரணமாக சுமார் 2 கி.மீ. தூரம் வாகனங்கள் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. கிழக்கு தாம்பரம், இரும்புலியூர், அருண்நகர், புதுப்பெருங்களத்தூர், முடிச்சூர், வரதராஜபுரம், செம்பாக்கம், காமராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளிலும் வெள்ளம் தேங்கியது. இதனால் மேற்கு தாம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகதிகளில் 1000 வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் வெளியிடங்களுக்கும் வேலைக்கும் சென்ற மக்கள் கடும் பாதிப்பை சந்தித்தனர்.

    பலத்த மழை பெய்த போதிலும் இன்று காலையில் அப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கின. இதனால் மாணவ-மாணவிகள் மழை வெள்ளத்தை கடந்து பள்ளிகளுக்கு சென்றதையும் காண முடிந்தது. தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட இந்த பகுதிகளில் மழைக் காலங்களில் இதுபோன்று தண்ணீர் தேங்குவது வாடிக்கையாகி வருவதாகவும் இதனால் கடும் பாதிப்பை சந்தித்து வருவதாகவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    கிழக்கு தாம்பரம் சுற்று வட்டார பகுதியில் தேங்கும் மழைநீர் அப்பகுதியில் உள்ள அருண்நகர் வழியாகவே அங்குள்ள ஏரிக்கு செல்லும். ஆனால் ஆக்கிரமிப்பு காரணமாக நீர்வழிப்பாதைகள் சுருங்கி ஊருக்குள் தண்ணீர் புகுந்துவிடுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை இன்று காலையிலும் பல இடங்களில் நீடித்தது. சில இடங்களில் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இப்படி சென்னையில் பெய்த மழை காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவியது.

    மழை காரணமாக சாலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்ற மாணவ-மாணவிகளும் சிரமத்தை சந்தித்தனர். திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களிலும் இரவு முழுவதும் மழை பெய்தது. காஞ்சிபுரம் கட்டப்பாக்கம் பகுதியில் பலத்த மழை பெய்தது. திருவள்ளூர் ஜமீன் கொரட்டூர் பகுதிகளிலும் இரவில் பெய்த மழை காலை வரையில் நீடித்தது.

    பூந்தமல்லி நகராட்சி ஒன்றாவது வார்டு அரசு உயர்நிலைப்பள்ளி எதிரே சாலையில் மழை நீருடன் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்பதால் பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளில் கால்வாய்கள் நிரம்பி இருக்கும் நிலையில் மழை நீருடன் கழிவுநீர் கலந்து குளம் போல் தேங்கிகிறது. இதில் பள்ளி சிறுவர் சிறுமியர்கள் நடந்து செல்வதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக பெற்றோர்கள் அச்சம் தெரிவித்தனர். சுமார் 300 மாணவர்கள் படிக்கக்கூடிய பள்ளி வளாகம் எதிரே நிலவிவரும் சுகாதார சீர்கேட்டை கருத்தில் கொண்டு பூந்த மல்லி நகராட்சி சார்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தேங்கியிருக்கும் கழிவு நீர் அருகே அடுக்கி வைக்கப்பட்டுள்ள செங்கற்கள் மீது சிறுவர்கள் கால் நனையாமல் இருக்க ஆபத்தான முறையே தாவி செல்வதால் கீழே விழுந்து காயம் ஏற்படும் சூழலும் உள்ளது. ஒவ்வொரு மழைக்கும் இந்த பகுதியில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து சாலையில் குளம் போல் தேங்கி நிற்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    சென்னை மற்றும் புற நகர் பகுதிகளிலும், திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் பெய்துள்ள மழை அளவு விவரம் வருமாறு:-

    மேற்கு தாம்பரம்-12 செ.மீ. கட்டப்பாக்கம்-9.6 செ.மீ. மீனம்பாக்கம்-5 செ.மீ. நுங்கம்பாக்கம்-4.5 செ.மீ. திருத்தணி-5 செ.மீ. சோழவரம்-4 செ.மீ. திருவள்ளூர் திரூர்-5.4 செ.மீ. கிண்டி, செங்குன்றம், தாமரைப் பாக்கம் பகுதிகளில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மழையால் இன்று காலை வெப்பம் தணிந்து 'ஜில்' என்ற காற்றும் வீசியது. வருகிற 28-ந் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • மண்டல செயலாளர் வீ.கிட்டுவின் தாயார் படத்தை வி.சி. கட்சி தலைவர் திருமாவளவன் திறந்து வைத்தார்.
    • கட்சியின் மாவட்ட செயலாளர் பதவியில் 10 சதவீதம் பெண்களுக்கு என ஒதுக்கியுள்ளோம் என்றார்.

    மாமல்லபுரம்:

    காஞ்சிபுரம்-செங்கல்பட்டு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் வீ.கிட்டுவின் தாயார் நாகம்மாளின் 16ம் நாள் படத்திறப்பு நிகழ்ச்சி மாமல்லபுரத்தில் நடைபெற்றது.

    இதில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு படத்தை திறந்து வைத்து, மலர்தூவி, மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் பேசியதாவது:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பதவியில், 10 சதவீதம் பெண்களுக்கு என ஒதுக்கியுள்ளோம். இந்திய நாட்டிலேயே எந்தக் கட்சியும் வழங்காத ஒரு வாய்ப்பை பெண்களுக்கு வழங்கியுள்ளோம்.

    பெண்கள் அரசியலுக்கு வெட்கம் இல்லாமல், தைரியமாக வரவேண்டும். இதுதவிர மாற்று சமுதாயம் சார்ந்தவர்களுக்கும் 10 சதவீதம் கொடுத்துள்ளோம் என தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் விடுதலை செழியன், இ.சி.ஆர்.அன்பு, சாலமன், ஐயப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • சுஜின், வீட்டில் இருந்த அரிவாள்மனையை எடுத்து தாரணியை கழுத்தை அறுத்து துடிக்க துடிக்க கொன்றார்.
    • சரண் அடைந்த சுஜின் மீது இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணி வழக்கு பதிவு செய்தார்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே உள்ள நின்னக்கரை ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் சுந்தர். எலக்ட்ரீசியனாக உள்ளார்.

    சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள மல்ரோஷபுரம் பகுதியை சேர்ந்தவர் சுஜின். இவர் அங்குள்ள உடற்பயிற்சி கூடத்தில் வேலை செய்து வருகிறார். இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். பள்ளி பருவத்தில் இருந்தே பழகி வந்ததால் இணை பிரியாத நண்பர்களாக இருந்து வந்தனர்.

    சுந்தருக்கு திருமணமாகி தாரணி என்ற மனைவியும் 1½ வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. நண்பன் என்ற முறையில் சுந்தரின் வீட்டுக்கு சுஜின் அடிக்கடி சென்று வந்தார். அப்போது அவரது பார்வை, நண்பனின் மனைவியான தாரணி மீது பட்டது. சுந்தர் இல்லாத நேரத்தில் சுஜின் தாரணியை பார்ப்பதற்காக சென்று வந்தார்.

    அப்போது இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது. தனிமையில் சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். இதனை சுந்தர் கண்டித்துள்ளார். ஆனால் அவரது பேச்சை கேட்காமல் இருவரும் கள்ளக்காதலை தொடர்ந்து வந்தனர்.

    இந்த நிலையில் சமீப காலமாக தாரணி, சுஜினுடன் பழகுவதை தவிர்த்து வந்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. சுந்தர் இல்லாத நேரத்தில் சுஜின் தாரணியை சந்தித்து சண்டை போட்டு வந்துள்ளார். என்னிடம் ஏன் சரியாக பேசுவதில்லை என்று கேட்டு தாரணியிடம் தகராறு செய்து வந்த சுஜின் நேற்று பிற்பகலில் கடுமையான கோபத்துடன் சுந்தரின் வீட்டுக்கு சென்றார். அங்கு தனியாக இருந்த தாரணியிடம், என்னை ஏன் வெறுக்கிறாய் என்று கேட்டு சண்டை போட்டார். அப்போது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுஜின், வீட்டில் இருந்த அரிவாள்மனையை எடுத்து தாரணியை கழுத்தை அறுத்து துடிக்க துடிக்க கொன்றார்.

    அப்போது 1½ வயதே ஆன ஆண் குழந்தை பரிதாபமாக அழுது கொண்டே இருந்தது. இதையடுத்து சுஜின், மறைமலைநகர் போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார்.

    தாரணியை கொலை செய்தது ஏன்? என்பது பற்றி சுஜின் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    தாரணி என்னுடன் பழகுவதை தவிர்த்து விட்டு வேறு ஒருவருடன் நெருங்கி பழகினார். இப்படி 3-வதாக வேறு நபருடன் பழகியது எனக்கு பிடிக்கவில்லை. இது தொடர்பாக தாரணியிடம் நான் கேட்டேன். அப்போது தாரணி தாலி கட்டிய கணவரான சுந்தரே அதுபற்றி கேட்பது இல்லை. நீ என்ன கேட்கிறாய்? என்று கேட்டு என்னை உதாசீதனப்படுத்தினார். இதனால் எனக்கு ஆத்திரம் தலைக்கேறியது. வீட்டில் இருந்த அரிவாள்மனையை எடுத்து வெட்டிக் கொன்றேன்.

    இவ்வாறு சுஜின் வாக்கு மூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    சரண் அடைந்த சுஜின் மீது இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணி வழக்கு பதிவு செய்தார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சேகர் மோட்டார் சைக்கிளை நிறுத்தியதும் மர்மநபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அமுதா அணிந்து இருந்து நகையை பறிக்க முயன்றனர்.
    • சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்ததும் வழிப்பறி கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த பெரும்பேடு லிங்கப்பயன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி அமுதா. கணவன்-மனைவி இருவரும் இரவு பொன்னேரியில் இருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    பொன்னேரி அடுத்த பெரும்பேடு மத்ராவேடு பஸ் நிறுத்தம் அருகில் சென்றபோது 3 மர்மநபர்கள் திடீரென மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர்.

    சேகர் மோட்டார் சைக்கிளை நிறுத்தியதும் மர்மநபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அமுதா அணிந்து இருந்து நகையை பறிக்க முயன்றனர். இதனை சேகர் தடுக்க முயன்றார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் சேகரை அரிவாளால் வெட்டினர். இதில் அவரது காதில் வெட்டு விழுந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அமுதா அலறினார்.

    சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்ததும் வழிப்பறி கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அரிவாள் வெட்டில் பலத்த காயம் அடைந்த சேகரை மீட்டு மேல் சிகிச்கைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரிய காவனம் பகுதியை சேர்ந்த ஜெயசாரதி என்பவரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகிறார்கள்.

    • வாலிபர் திடீரென சுகுணாவை தலையில் தாக்கி அவரது விலை உயர்ந்த செல்போனை பறித்து தப்பி ஓடிவிட்டான்.
    • ராமாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    சென்னை ராமாபுரத்தில் உள்ள விடுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவர் சுகுணா. இவர் நேற்று இரவு பணி முடிந்து அதே பகுதி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த வாலிபர் திடீரென சுகுணாவை தலையில் தாக்கி அவரது விலை உயர்ந்த செல்போனை பறித்து தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து ராமாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செங்கல்பட்டு அருகே உள்ள புதுப்பட்டு கிராமத்தில் ஸ்ரீஆனந்தவல்லி உடனுறை ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது
    • பழமையான இந்த கோவிலில் சந்திர பகவானுக்கும் தனி சன்னதி உள்ளது.

    செங்கல்பட்டு:

    சந்திரனில் சந்திரயான்-3 விண்கலம் இன்று மாலையில் தரையிறங்க உள்ளது. நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த விண்வெளி சாதனையில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று சாமானிய மக்கள் கூட மனப்பூர்வமாக வேண்டி கொண்டிருக்கிறார்கள். கூட்டு பிரார்த்தனைகள், வழிபாடுகள், சர்வ மத பிரார்த்தனை வேள்விகள் என்று வட மாநிலங்களில் வழிபாட்டு தலங்களில் நேற்று மாலை முதல் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

    செங்கல்பட்டு அருகே உள்ள புதுப்பட்டு கிராமத்தில் ஸ்ரீஆனந்தவல்லி உடனுறை ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. 1500 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் அகத்தியர் வழிபட்ட கோவில்.

    பழமையான இந்த கோவிலில் சந்திர பகவானுக்கும் தனி சன்னதி உள்ளது. இங்கு இந்திய விஞ்ஞானிகளின் முயற்சியான சந்திரயான்-3 சந்திரனில் கால் பதிக்கவும், விண்வெளி அறிவியல் மற்றும் கிரக ஆய்வுகளில் இந்தியா உலகிற்கு வழிகாட்டவும் சந்திர பகவான் வழிகாட்ட வேண்டும் என்று சந்திரன் சன்னதியில் இன்று கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

    அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் திரண்டு இந்த வழிபாட்டில் பங்கேற்று உள்ளார்கள். காலை 9 மணிக்கு தொடங்கியது. மாலை வரை இந்த பிரார்த்தனையை தொடர போவதாக கூறினார்கள்.

    ×