என் மலர்
உள்ளூர் செய்திகள்

செங்கல்பட்டு பகுதியில் ஒரு மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை
- சுமார் 1 1/2 மணி நேரம் பெய்த கனமழை காரணமாக சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
- மின்வினியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மின்தடை ஏற்பட்டதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
செங்கல்பட்டு:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒருவாரமாக இரவு நேரத்தில் விட்டு, விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. இதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்திலும் மழை வெளுத்துவாங்கி வருகிறது.
இந்தநிலையில் செங்கல்பட்டு பகுதியில் நேற்று மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பலத்த மழை கொட்டியது. பலத்தகாற்று மற்றும் இடி-மின்னலுடன் மழை வெளுத்துவாங்கியது.
சுமார் 1 1/2 மணி நேரம் பெய்த கனமழை காரணமாக சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கின. பலத்த மழை காரணமாக சின்ன நத்தம், பெரிய நத்தம், காத்தான் தெரு, தூக்குமரக்குட்டை, நத்தம் மேட்டு தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. மழைவிட்ட பிறகும் மின்சாரம் சப்ளை சீராகவில்லை. இரவு 11 மணிவரை செங்கல்பட்டு நகரத்தில் பெரும்பாலான இடங்கள் இருளில் மூழ்கி இருந்தன. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
மின்வினியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மின்தடை ஏற்பட்டதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் இரவு 11 மணிக்கு பின்னர் மின்சாரம் சப்ளை சீரானது.






