என் மலர்
செங்கல்பட்டு
- பேரூராட்சியை நகராட்சியாக மாற்ற, பேரூராட்சி ஒப்புதல் தேவை.
- மாமல்லபுரம் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் பேரூராட்சி 15வார்டுகளை கொண்ட சிறப்பு நிலை பேரூராட்சியாக உள்ளது. இங்குள்ள மாமல்லபுரம், வெண்புருஷம், பூஞ்சேரி, தேவநேரி, பவழக்காரன் சத்திரம் பகுதிகளில் 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.
சர்வதேச சுற்றுலா பகுதியின் முக்கியத்துவம் கருதி தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மாமல்லபுரத்தை நகராட்சியாக மாற்ற முடிவெடுத்து உள்ளது. அதற்கான பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை செய்துவருகிறது.
இந்நிலையில் பேரூராட்சியை நகராட்சியாக மாற்ற, பேரூராட்சி ஒப்புதல் தேவை. இதற்கான அவசர கூட்டம் நேற்று மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ், துணைத் தலைவர் ராகவன், செயல் அலுவலர் கணேஷ், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் வழங்கினர். மாமல்லபுரம் பேரூராட்சி, நகராட்சியாக மாறுவதால் பொதுசுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, துப்புரவு, கழிவுநீர் அகற்றல், கழிப்பறை வசதி, குடிநீர் வழங்கல், கழிவுநீர் வெளியேற்றல், தெரு விளக்கு, சாலை வசதி, சாலை அமைத்தல், உள்ளிட்ட கூடுதல் வசதிகள் மாமல்லபுரம் பகுதி மக்களுக்கு கிடைக்கும் என நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் மாமல்லபுரம் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
- வாயலூர், வல்லிபுரம் தடுப்பணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் கல்பாக்கம், உய்யாலிகுப்பம் முகத்துவாரம் வழியாக கடலில் கலந்து வருகிறது.
- வாயலூர் பாலாற்றில் இருகரைகளிலும் நீர்வரத்து அதிகரிப்பால் தண்ணீர் நிரம்பியுள்ளதால் பாலாறு கடல் போல் காட்சியளிக்கிறது.
கல்பாக்கம்:
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் பாலாற்றுக்கு நீர்வரத்து அதிகரித்து கல்பாக்கம் அடுத்த வல்லிபுரம் மற்றும் வாயலூர் தடுப்பணையில் 4 அடி உயரத்துக்கு தண்ணீர் நிரம்பி, உபரிநீர் வெளியேறுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குறிப்பாக வாயலூர், வல்லிபுரம் தடுப்பணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் கல்பாக்கம், உய்யாலிகுப்பம் முகத்துவாரம் வழியாக கடலில் கலந்து வருகிறது. வல்லிபுரம் தடுப்பணையில் இருந்து உபரிநீர் வெளியேறினால், தடுப்பணைக்கு கீழே உள்ள கிராமங்களின் நூற்றுக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும். பாலாற்று நீர் வரத்து அதிகரித்துள்ளதால் வாயலூர், வல்லிபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களான இரும்புலிசேரி, நல்லாத்தூர், ஆயப்பாக்கம், கல்பாக்கம் போன்ற பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் அந்த பகுதி குடியிருப்புவாசிகளும் குடிநீர் தேவைக்கு பஞ்சம் ஏற்படாது என்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் வாயலூர், வல்லிபுரம் தடுப்பணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் வீணாக கடலில் கலந்து வருவதால் கூடுதலாக வாயலூர் கடற்கரை அருகில் இரண்டு, மூன்று இடங்களில் தடுப்பணைகள் கட்டி உபரி நீரை சேமிக்கவேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தற்போது வாயலூர் பாலாற்றில் இருகரைகளிலும் நீர்வரத்து அதிகரிப்பால் தண்ணீர் நிரம்பியுள்ளதால் பாலாறு கடல் போல் காட்சியளிக்கிறது. ஒருபுறம் தடுப்பனைகளில் இருந்து வெளியேறும் உபரிநீர் பகுதியில் பொதுமக்களும், இளைஞர்களும் அருவிகளில் குளிப்பது போன்று குளித்து மகிழ்ச்சியடைகின்றனர். நீச்சல் தெரியாத சிறுவர்கள் பலர் ஆபத்தை உணராமல் இங்கு குளித்து வருவதையும் காண முடிகிறது.
- ஏரி தண்ணீரில் அதிக அளவு ரசாயன கழிவு நீர் கலப்பதாக கூறப்படுகிறது.
- ரசாயன கழிவு நீர் கலப்பே இதற்கு காரணம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
தாம்பரம்:
பல்லாவரம் அடுத்த துரைப்பாக்கம் 200 அடி சாலை அருகே புத்தேரி ஏரி உள்ளது. இந்த ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் பல்லாவரம் பெரியஏரி, கீழ்கட்டளை ஏரி, நாராயணபுரம் ஏரி, பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பகுதிக்கு செல்லும்.
புத்தேரி ஏரி தண்ணீரில் அதிக அளவு ரசாயன கழிவு நீர் கலப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஏரியில் இருந்து உபரிநீர் செல்லும் பாதையில் தண்ணீர் நுரையாக வெளியேறி வருகிறது. ரசாயன கழிவு நீர் கலப்பே இதற்கு காரணம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
பல்லாவரத்தை சுற்றி ஏராளமான லெதர் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இதேபோல் புத்தேரி ஏரியை சுற்றிலும் குடியிருப்புகள் அதிகம் உள்ளது. இங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் ஏரியில் கலந்து வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே உபரிநீர் வெளியேறும் கால்வாய் அருகே செல்லும் பாதை ரேடியல் சாலையை இணைக்கும் சாலையாக உள்ளது. இதனால் அவ்வழியே வாகன போக்குவரத்து அதிகம் இருக்கும். ஏரியில் இருந்து வெளியேறும் நுரை தண்ணீர் காற்றில் பறந்து வந்தது. இதையடுத்து தண்ணீர் நுரை காற்றில் பறந்து வாகன ஓட்டிகள் மற்றும் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மீது விழுவதை தடுக்கும் வகையில் உபரிநீர் வெளியேறும் கால்வாய் பகுதியை வலையால் அதிகாரிகள் மூடி உள்ளனர்.

மேலும் ஏரியின் கரை யோரத்தில் காணப்படும் ஆகாயதாமரை செடிகளையும் அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் புத்தேரி ஏரியில் தண்ணீரின் பாதிப்பை அறிய அதன் மாதிரியை மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எடுத்து உள்ளனர். இதுகுறித்து தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் அழகுமீனா கூறும்போது, புத்தேரி ஏரியில் தண்ணீர் மாசு பற்றி புகார்கள் வந்து உள்ளன.
இதுபற்றி சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. தற்போது இது தீவிரமான பிரச்சினையாக மாறவில்லை. எனினும் தண்ணீரின் தண்மை குறித்து அறிய மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். அவர்கள் அளிக்கும் பரிசோதனை முடிவை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- 297 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பி உள்ளன.
- வாயலூர் தடுப்பணை முழு கொள்ளளவை எட்டி 2170 கன அடி நீர் உபரி வெளியேறி வருகிறது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள 909 ஏரிகளில் 140 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.
மேலும் 161 ஏரிகள் 75 சதவீதமும், 221 ஏரிகள் 50 சதவீதமும், 297 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பி உள்ளன. இதேபோல் செங்கல்பட்டு,காஞ்சிபுரம் மாவட்டங்களில் செல்லக்கூடிய பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்ட வாயலூர் தடுப்பணை முழு கொள்ளளவை எட்டி 2170 கன அடி நீர் உபரி வெளியேறி வருகிறது.
- ஆத்திரம் அடைந்த சந்திரசேகரன் இரும்பு கம்பியால் முத்துப்பாண்டியின் தலையில் தாக்கினார்.
- செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி அங்குள்ள கிளை சிறையில் அடைத்தனர்.
வண்டலூர்:
கூடுவாஞ்சேரி அருகே உள்ள காயரம்பேடு ஊராட்சி, மூலக்கழனி பகுதியில் வசித்து வருபவர் சந்திரசேகரன். இவர் அப்பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டுக்கு தீபாவளியையொட்டி உறவினரான திருநெல்வேலி மாவட்டம், திசையன் விளையை சேர்ந்த முத்துப்பாண்டி (வயது 45) வந்து இருந்தார். கடந்த 14-ந் தேதி சந்திர சேகரனும், முத்துப்பாண்டியும் சேர்ந்து கடையில் இருந்த போது மதுகுடித்தனர். அப்போது மது போதையில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சந்திரசேகரன் இரும்பு கம்பியால் முத்துப்பாண்டியின் தலையில் தாக்கினார்.
இதில் பலத்த காயம் அடைந்த முத்துப்பாண்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முத்துப்பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கூடுவாஞ்சேரி போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து சந்திரசேகரனை நேற்று மாலை கைது செய்தனர். பின்னர் அவரை செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி அங்குள்ள கிளை சிறையில் அடைத்தனர்.
- இந்தியா முழுவதும் மத்திய தொல்லியல் துறை சார்பில் நவம்பர் 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை உலக பாரம்பரிய வாரம் கடை பிடிக்கப்படுகிறது.
- பள்ளி மாணவர்களும் அதிக அளவில் இலவச அனுமதியை பயன்படுத்தி சுற்றுலா வந்த அவர்கள் ஆர்வமுடன் புராதன சின்னங்களை கண்டுகளித்து சென்றனர்.
மாமல்லபுரம்:
சர்வதேச நாடுகளில் உள்ள சரித்திர கால பாரம்பரிய கலைச்சின்னங்கள் அந்த பகுதியின் பழமை, கலாசாரம், வாழ்க்கை முறையை உணர்த்துகின்றன. அத்தகைய நினைவு சின்னங்களை வருங்கால தலைமுறையினர் அறியவும், அவற்றின் முக்கியத்துவம் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றன.
அவற்றை பாதுகாப்பது குறித்து ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் மத்திய தொல்லியல் துறை சார்பில் நவம்பர் 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை உலக பாரம்பரிய வாரம் கடை பிடிக்கப்படுகிறது. பாரம்பரிய வாரம் நேற்று நாடு முழுவதும் தொடங்கப்பட்டது.
பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை நேற்று ஒரு நாள் மட்டும் நுழைவுக்கட்டணம் இன்றி சுற்றுலா பயணிகள் இலவசமாக கண்டுகளிக்கலாம் என மாமல்லபுரம் தொல்லியல் துறை அறிவித்து இருந்தது.
அதன்படி நேற்று காலை 8 மணி முதல் சுற்றுலா வந்த வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் நுழைவு கட்டணம் எடுக்காமல் கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணெய் உருண்டைக்கல், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை பார்த்து ரசித்தனர். பள்ளி மாணவர்களும் அதிக அளவில் இலவச அனுமதியை பயன்படுத்தி சுற்றுலா வந்த அவர்கள் ஆர்வமுடன் புராதன சின்னங்களை கண்டுகளித்து சென்றனர்.
குறிப்பாக ஜப்பான் நாட்டு சுற்றுலா பயணிகள் 50 பேர் நேற்று குழுவாக சுற்றுலா வந்தனர். அவர்கள் தலா ஒருவருக்கு ரூ.600 கட்டணம் செலுத்தாமல் இலவசமாக சுற்றி பார்த்துவிட்டு சென்றனர். இலவச அனுமதியால் அந்த ஜப்பான் நாட்டு குழுவினருக்கு மொத்தம் ரூ.30 ஆயிரம் மிச்சமானது. இலவச அனுமதியால் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
மாமல்லபுரம் பாரம்பரிய சின்னங்களை கண்டுகளிக்க உள்நாட்டு பயணிகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.40-ம், வெளிநாட்டு பயணிகளுக்கு தலா ரூ.600-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கதாகும். நேற்று மாலை 6 மணியுடன் இலவச அனுமதி முடிவுற்றது என்றும், இன்று (திங்கட்கிழமை) முதல் வழக்கம் போல் சுற்றுலா வரும் பயணிகள் ரூ.40 நுழைவு கட்டணம் செலுத்திதான் புராதன சின்னங்களை காண முடியும் என்றும் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
- சுனில்குமார் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடியபடி கிடந்தார்.
- விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வண்டலூர்:
செங்கல்பட்டு அருகே உள்ள திம்மாவரம் பகுதியை சேர்ந்தவர்கள் ஏழுமலை (வயது28), விமல்ராஜ்(23). இவர்கள் மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தனர்.
நேற்று இரவு அவர்கள் பணிமுடிந்ததும் உடன் வேலைபார்க்கும் நண்பரான செய்யூரை சேர்ந்த சுனில்குமார் என்பவருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டு இருந்தார்.
இரவு 11.30 மணியளவில் அவர்கள் மறைமலைநகர் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள கார் கம்பெனி அருகில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற லாரியின் பின்பக்கம் பயங்கரமாக மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த ஏழுமலை, விமல்ராஜ், சுனில்குமார் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர்.
படுகாயம் அடைந்த ஏழுமலை மற்றும் விமல் ராஜ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். சுனில்குமார் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடியபடி கிடந்தார்.
தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த சுனில் குமாரும் அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- நகராட்சி ஆணையர் தாமோதரன் தலைமை தாங்கினார்.
- சிறப்பு அழைப்பாளராக நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர் மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.
நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு கே.ஜே.நகரில் கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.28 லட்சம் மதிப்பில் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நகராட்சி ஆணையர் தாமோதரன் தலைமை தாங்கினார் துணைத் தலைவர் வழக்கறிஞர் ஜி.கே.லோகநாதன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர் மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.
இதில் நகராட்சி பொறியாளர் வெங்கடேசன், திட்ட இயக்குனர் பாஸ்கரன், மேலும் எம்.கே.டி.சரவணன் 9-வது வார்டு தி.மு.க. வட்ட செயலாளர் ஜினோ, அவைத்தலைவர் கணேசன், இளைஞரணி நிர்வாகிகள் பிரபு, ரவி பங்கேற்றனர்.
- விபத்தில் விமானப்டை வீரர்கள் வந்த வாகனத்தின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது.
- போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
தாம்பரம்:
கிழக்கு தாம்பரம், வேளச்சேரி சாலையில் விமானப் படை தளம் உள்ளது. இங்கு உள்ள வீரர்கள் வெளியில் வாகனத்தில் சென்று திரும்புவது வழக்கம்.
இந்த நிலையில் ஆவடியில் இருந்து விமானப்படை வீரர்களுடன் வாகனம் ஒன்று தாம்பரம் அடுத்த வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் முடிச்சூர் அருகே உள்ள சுங்கச்சாவடியில் வந்தது.
அப்போது முன்னால் வண்டலூர் நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி சுங்கசாவடி கட்டணம் செலுத்துவதற்காக நின்றது. அந்த நேரத்தில் வேகமாக வந்த விமானப்படை வீரர்கள் இருந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சுங்கச்சாவடியில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்பகுதியில் மோதியது. இதில் ராணுவ வாகனத்தை ஓட்டி வந்த விமானப்படை வீரர், அதில் இருந்த வீரர்கள் பலத்த காயமின்றி தப்பினர்.
இதனால் சுங்கச்சாவடியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் விமானப்டை வீரர்கள் வந்த வாகனத்தின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. இது தொடர்பாக புகார் எதுவும் செய்யப்படவில்லை. தாம்பரம் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விபத்தின் கண்காணிப்பு கேமரா காட்சி தற்போது வெளியாகி உள்ளது.
- மாவட்ட கவுன்சிலருமான ரத்தினமங்கலம் கஜா என்ற கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
- காயரம்பேடு ஊராட்சியில் 7 பூத் கமிட்டி நிர்வாகிகள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கூடுவாஞ்சேரி:
காட்டாங்கொளத்தூர் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய அ. தி.மு.க. சார்பில் காரணைப் புதுச்சேரி, பெருமாட்டுநல்லூர் மற்றும் காயரம்பேடு ஆகிய ஊராட்சிகளில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் வடக்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான ரத்தினமங்கலம் கஜா என்ற கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
காயரம்பேடு ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சம்பத்குமார் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான சிட்லபாக்கம் ராஜேந்திரன், முன்னாள் எம். எல்.ஏ. தன்சிங், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் காட்டூர் கன்னியப்பன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சண்முகம், காயரம்பேடு ஊராட்சி மன்ற துணை தலைவர் திருவாக்கு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், மாநில வர்த்தக பிரிவு செயலாளருமான செல்ல பாண்டியன் கலந்துகொண்டு பூத் கமிட்டி கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் காரணைப்புதுச்சேரி ஊராட்சியில் 11 பூத் கமிட்டி நிர்வாகிகளும், பெரு மாட்டுநல்லூர் ஊராட்சியில் 6 பூத் கமிட்டி நிர்வாகிகளும், காயரம்பேடு ஊராட்சியில் 7 பூத் கமிட்டி நிர்வாகிகள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கிளை பூத் கமிட்டி நிர்வாகிகளிடம் முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன், முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. மதன்சிங் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இதில் வேங்கடமங்கலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவி, நிர்வாகிகள் ரங்கன், பொன்.தர்மராஜ், துளசிங்கம், கார்த்திக் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- தாம்பரம் பகுதியை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவரின் தொலைபேசி எண்ணை வைத்து போலீசார் அவரை தேடி வந்தனர்.
- போதைப்பொருள் விற்பனையில் சம்பந்தப்பட்ட முகமது ரபிக் மற்றும் யூனுஸ் ஆகியோரை தேடி வருகின்றனர்.
தாம்பரம்:
தாம்பரம் ஓஎம்ஆர், கிழக்கு கடற்கரை சாலை, திருவல்லிக்கேணி மற்றும் மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் ஐ.டி. ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்வதாக தாம்பரம் பகுதியில் உள்ள சங்கர் நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் தாம்பரம் பகுதியை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவரின் தொலைபேசி எண்ணை வைத்து போலீசார் அவரை தேடி வந்தனர்.
அப்போது அவர் சென்னை மெரினா கடற்கரையில் இருப்பது தெரியவந்தது. பின்பு சங்கர் நகர் போலீசார் மெரினா கடற்கரையில் அவரை பிடித்து விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்தார். சந்தேகம் அடைந்த போலீசார் அவரது இருசக்கர வாகனம் மற்றும் கையில் வைத்திருந்த பையை சோதனை செய்து பார்த்தபோது இந்தியாவில் தடை செய்யப்பட்ட போதைப்பொருளான மெத்தமெட்டமைன் வைத்திருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து சூரியமூர்த்தியிடம் போலீசார் விசாரித்தபோது கொடுங்கையூரை சேர்ந்த யூனுஸ் என்ற நபரிடம் இருந்து போதைப்பொருளை வாங்கி சூரியமூர்த்தியும், சென்னை ஜாம்பஜாரை சேர்ந்த முகமது ரபீக் என்பவரும் தாம்பரம் ஓஎம்ஆர், கிழக்கு கடற்கரை சாலை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் ஆகிய இடங்களில் உள்ள ஐ.டி. ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து சூரியமூர்த்தியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பிலான 5 கிலோ 800 கிராம் எடை கொண்ட மெத்தபெட்டமைன் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். மேலும் போதைப்பொருள் விற்பனையில் சம்பந்தப்பட்ட முகமது ரபிக் மற்றும் யூனுஸ் ஆகியோரை தேடி வருகின்றனர்.
- நவம்பர் 19-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை உலக பாரம்பரிய வாரமாக அறிவித்து ஆண்டுதோறும் தொல்லியல்துறை விழாவாக நடத்தி வருகிறது.
- மாமல்லபுரத்தில் பாரம்பரிய வாரம் துவக்க நாளான நாளை ஒருநாள் மட்டும், அனைத்து சுற்றுலா பயணிகளும் அங்குள்ள புராதன சின்னங்களை இலவசமாக பார்க்கலாம்.
மாமல்லபுரம்:
நவம்பர் 19-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை, உலக பாரம்பரிய வாரமாக அறிவித்து அந்த நாட்களில் புராதன சின்னங்கள் குறித்து கட்டுரை, ஓவியம் போன்ற கலைத்திறன் போட்டிகள் நடத்தி ஆண்டுதோறும் தொல்லியல்துறை விழாவாக நடத்தி வருகிறது.
மாமல்லபுரத்தில் பாரம்பரிய வாரம் துவக்க நாளான நாளை ஒருநாள் மட்டும், அனைத்து சுற்றுலா பயணிகளும் அங்குள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோயில், அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டைக்கல், புலிக்குகை, ஐந்துரதம் பகுதிகளை இலவசமாக பார்க்கலாம் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது.






