search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மழையால் நீர்வரத்து அதிகரித்தது: வேடந்தாங்கல் ஏரிக்கு 5 ஆயிரம் வெளிநாட்டு பறவைகள் வருகை
    X

    மழையால் நீர்வரத்து அதிகரித்தது: வேடந்தாங்கல் ஏரிக்கு 5 ஆயிரம் வெளிநாட்டு பறவைகள் வருகை

    • தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வேடந்தாங்கல் ஏரியில் தண்ணீர் நிரம்பி உள்ளன.
    • வரும் நாட்களில் வெளிநாடுகளில் இருந்து மேலும் ஏராளமான பறவைகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கலில் புகழ்பெற்ற பறவைகள் சரணாலயம் உள்ளது. இயற்கையான குளிர்ச்சியான சூழ்நிலை, உணவு மற்றும் இனப்பெருக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இங்கு வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பல்லாயிரம் கிலோ மீட்டர்களை தாண்டி ஆண்டுதோறும் ஏராளமான பறவைகள் வருவது வழக்கம்.

    வடகிழக்கு பருவமழையால் வேடந்தாங்கல் ஏரிக்கு நீர் வரத்தாலும், பருவமழைக்கு பின்னர் காணப்படும் இயற்கையான குளிர்ச்சியான சூழ்நிலைக்காக அக்டோபர் மாதத்தின் கடைசி வாரத்தில் பறவைகளின் வருகை இருக்கும்.

    தொடர்ந்து 6 மாதம் பறவைகள் தங்கி இருக்கும் பல்வேறு வகையான வெளிநாட்டு பறவைகள் குஞ்சு பொரித்து மே அல்லது ஜூன் மாதம் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பி செல்லும்.

    இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் பறவைகள் மட்டும் இன்றி மட்டுமின்றி பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, சைபிரியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து பறவை மற்றும் வாத்து வகை இனங்கள் உள்ளிட்ட 23 அரிய வகை பறவையினங்கள் வரும்.

    இந்த நிலையில் தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வேடந்தாங்கல் ஏரியில் தண்ணீர் நிரம்பி உள்ளன. இதனால் கடந்த சில நாட்களாக வேடந்தாங்கல் ஏரிக்கு வெளிநாடுகளில் இருந்து பறவைகள் வரத்தொடங்கி உள்ளன.

    இதில் கூழைக்கடா, மிளிர் உடல் அரிவாள் மூக்கன், பாம்பு தாரா, நத்தக்குத்தி நாரை, கரண்டிவாயன், தட்டவாயன், நீர்காகம், வக்கா, உள்ளிட்ட 8 வகையான பறவைகள் அடங்கும்.

    வரும் நாட்களில் வெளிநாடுகளில் இருந்து மேலும் ஏராளமான பறவைகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது வந்துள்ள பறவையினங்கள் மரத்தில் கூடுகட்டி உள்ளன. மரங்களில் பறவைகள் கூட்டமாக அமர்ந்து இருப்பதை பார்த்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    தற்போதுவரை வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பறவைகள் வந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து வேடந்தாங்கல் வனச்சரக அலுவலர் லெஸ்லி கூறியதாவது:-

    வேடந்தாங்கல் ஏரிக்கு வளையப்புத்தூரில் இருந்து வரக்கூடிய நீர்வரத்து கால்வாய் சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏரிக்கு நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. அருகில் உள்ள மதுராந்தகம் ஏரி பறவைகளுக்கு அதிக அளவிலான மீன் மற்றும் பூச்சி இனங்கள் கிடைக்கும் பகுதியாக இருந்து வந்தது.

    தற்போது கடந்த இரண்டு வருடங்களாக மதுராந்தகம் ஏரியில் தூர்வாரும் பணி நடைபெறுவதால் அங்கு தண்ணீர் இல்லை.

    எனவே பறவைகளின் உணவு தேவைக்காக 3 மாதத்துக்கு ஒரு முறை 50 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்படுகின்றன. வரும் நாட்களில் கூடுதலாக வெளிநாடுகளில் இருந்து கூடுதலாக பறவையினங்கள் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×