என் மலர்
செங்கல்பட்டு
கேளம்பாக்கம் அருகே செங்கண்மால் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் ஏராளமான சாப்ட்வேர் பணியாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
சென்னை அசோக் நகரைச் சேர்ந்த காசி விஸ்வநாதன் (30) என்ற சாப்ட்வேர் என்ஜினீயர் தனது மனைவியுடன் வசிக்கிறார். அவருடைய குடியிருப்புக்கு எதிரே சென்னை தரமணியில் பணிபுரியும் கணவன்-மனைவி வசித்து வருகின்றனர்.
காசி விஸ்வநாதன் மனைவி வேறொரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவர் தினமும் வேலைக்கு சென்று விடுவார். அதேபோன்று எதிர் வீட்டில் வசித்த வாலிபர் தரமணிக்கு வேலைக்கு செல்வார். காசி விஸ்வநாதன் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் வேலை பார்த்து வந்தார். அப்போது எதிர் வீட்டில் வசித்த பெண்ணுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் பலமுறை ஒன்றாக இருந்து. அதை தனது செல்போனில் காசி விஸ்வநாதன் படம் பிடித்துள்ளார்.
பின்னர் அதை ஆன்லைனில் வெளியிடுவதாகவும், உனது கணவரிடம் சொல்லி விடுவேன் என்றும் கூறி அந்த பெண்ணை மிரட்டி பலமுறை அவருடன் ஒன்றாக இருந்துள்ளார். மேலும், அவ்வப்போது தனது செலவுக்கு பணம் வேண்டும் என்று கேட்டு மிரட்டி உள்ளார்.
ஒரு கட்டத்தில் பணம் இல்லாததால் அந்த பெண் தனது நகைகளை கொடுத்துள்ளார். 55 பவுன் நகைகளுக்கு மேல் கொடுத்து விட்ட பிறகும் மேலும் பணம் கேட்டு மிரட்டியதால் வேறு வழியின்றி அந்த பெண் தனது கணவரிடம் உண்மையை கூறி உள்ளார். இதையடுத்து கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்கு பதிவு செய்து காசி விஸ்வநாதனை கைது செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் காசி விஸ்வநாதனின் செல்போனில் ஏராளமான ஆபாச வீடியோக்களும், புகைப்படங்களும் இருந்தது தெரிய வந்தது. மேலும் அந்த பெண்ணிடம் இருந்து வாங்கிய நகைகளை விற்று ஜாலியாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காசி விஸ்வநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் இருந்து புதுச்சேரி வரையான 95கி.மீ., தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக, தேசிய நெடுஞ்சாலைத்துறை 1,200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அதன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சுற்றுலா தலமான மாமல்லபுரத்தின் நுழைவு வாயில் பகுதிகளில் ஏற்படும் விபத்துக்களை தடுக்க மேற்கு நுழைவு வாயில் பகுதியான பூஞ்சேரி, ஓ.எம்.ஆர், திருக்கழுக்குன்றம் என மூன்று சாலை சந்திப்பு பகுதியில் 1,000 மீட்டர் நீளத்திற்கு வளைவு மேம்பாலம்., மாமல்லபுரம்கிழக்கு கடற்கரை சாலை புறவழி வடக்கு நுழைவு வாயில் பகுதியில் 1,300 மீட்டர் நீளத்திற்கு ஒரு மேம்பாலம், என 2 புதிய மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளன.
இதற்கான அளவீடு, வடிவமைப்பு, மணல் பரி சோதனை, போன்ற முதற்கட்ட ஆய்வுப்பணிகளை தனியார் ஒப்பந்த நிறுவனம் 3 நாட்களாக செய்து வருகிறது.
மதுராந்தகம்:
சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ் அதிகாலை 2 மணிக்கு விழுப்புரம் நோக்கி புறப்பட்டது. இந்த பஸ்சை விழுப்புரம் பணிமனையை சேர்ந்த டிரைவர் குணசேகரன் ஓட்டினார். கண்டக்டராக பெருமாள் (வயது 56) என்பவர் இருந்தார். அதிகாலை 3:30 மணிக்கு மதுராந்தகம் புறவழிச்சாலையில் பயணி ஒருவர் ஏறினார்.
இவரிடம் கண்டக்டர் பெருமாள் டிக்கெட் வாங்குமாறு வலியுறுத்தியுள்ளார். பயணி அளவுக்கு அதிகமான மது போதையில் இருந்ததால் டிக்கெட் எடுக்க மறுத்தார். அத்துடன் கண்டக்டர் பெருமாளுடன் தகராறு செய்தார். இதனால் கண்டக்டர் பெருமாளுக்கும் பயணிக்கும் வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டது.
மதுபோதையில் இருந்த பயணி கண்டக்டர் பெருமாளை அடித்துள்ளார். இதனால் பஸ்சில் பயணம் செய்த மற்ற பயணிகள் மது போதையில் இருந்த பயணியை மதுராந்தகம் அருகே அய்யனார் கோயில் என்ற இடத்தில் இறக்கி விட்டுள்ளனர். மேல்மருவத்தூர் நோக்கி பஸ் சென்ற போது கண்டக்டர் பெருமாள் மயக்கம், தலைசுற்றல் ஏற்பட்டு பஸ்சில் சரிந்து விழுந்துள்ளார்.
உடனடியாக மேல்மருவத்தூர் பஸ் நிலையத்தில் பஸ் நிறுத்தப்பட்டது. கண்டக்டர் பெருமாள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பெருமாள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
பஸ்சில் பயணம் செய்த மற்ற பயணிகளை பேருந்து டிரைவர் குணசேகரன் மாற்று பஸ் மூலம் பயணிகளை அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்தனர். விசாரணையில் கண்டக்டரை தாக்கியது சூனாம்பேடு பகுதியைச் சேர்ந்த முருகன் என்பது தெரிய வந்துள்ளது. அவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த கண்டக்டர் பெருமாள் கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் ஆவார்.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28ந்தேதி முதல் ஆகஸ்டு 10ந்தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடக்கிறது.
இந்தப் போட்டியை நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 23 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. இது தொடர்பான ஆய்வு கூட்டங்களை தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகள் அவ்வப்போது நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் போட்டியை சிறப்பாக நடத்துவதற்கு 18 வகையான குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுஉள்ளது. இது குறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள உத்தரவு வருமாறு:-
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க வரும் வீரர் வீராங்கனைகள், முக்கிய பிரமுகர்கனை வரவேற்க வரவேற்பு குழு சாலை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள தனிக்குழு, போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை கண்காணிக்க தனிக்குழு என மொத்தம் 18 வகையான குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இந்த குழுக்களின் தலைவர்களாக சம்மபந்தப்பட்ட துறைகளை சேர்ந்த செயலாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
வரவேற்பு குழுவுக்கு டி.ஜெகநாதனும், போக்குவரத்துக்கு கே.கோபாலும், ஸ்பான்சர் ஷிப்புக்கு எஸ்.கிருஷ்ணனும், தொடக்க மற்றும் நிறைவு விழா குழுவுக்கு டி.கார்த்திகேயனும், சாலை, குடிநீர் சப்ளை, தூய்மை பணிக்கு சிவ்தாஸ் மீனாவும், விருந்தோம்பல் நிகழ்ச்சி மேலாண்மை, கலைநிகழ்ச்சி, பரிசளிப்பு ஆகியவற்றின் குழுவுக்கு பி.சந்திரமோகனும் தலைவர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
ஊடகம், விளம்பரத்துக்கு வி.பி.ஜெயசீலனும், பாதுகாப்புக்கு டி.ஜி.பி.சைலேந்திரபாபுவும், தங்குமிடம், உணவுக்கு குமார் ஜெயந்தும், சுகாதாரம், மருத்துவ பணிக்கு பி.செந்தில்குமாரும், அரங்கு ஏற்பாடுக்கு தயாளந்த் கட்டாரியாவும், நிதி, டெண்டருக்கு பிரசாந்த் வாட்நேரையும், மின்சாரத்துக்கு ராஜேஷ் லக்கானியும், சாலை மேம்பாட்டுக்கு தீரஜ்குமாரும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்பதற்கான குழுவுக்கு காகர்லா உஷாவும், சர்வதேச செஸ் கூட்டமைப்புக்கு ஆர்.ஆனந்த குமாரும், செஸ் ஒலிம்பியாட் கட்டுப்பாட்டு அறைக்கு ஏ.கே.கமல்கிஷோரும், தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பணிக்கு நீரஜ் மித்தலும் தலைவர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தாம்பரம்:
ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் இன்று காலை மனைவியுடன் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். குரோம்பேட்டை ஜி.எஸ்.டி.சாலையில் வந்த போது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கரும், அவரது மனைவியும் உடனடியாக காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி கார் முழுவதும் பற்றி எரிந்தது. தகவல் அறிந்ததும் தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். காரில் தீப்பற்றிய உடன் சங்கரும் அவரது மனைவியும் இறங்கியதால் உயிர் தப்பினர். இதுகுறித்து குரோம்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருக்கழுக்குன்றத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கபிலன் (வயது22). தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவர் கல்லூரிக்கு காரில் செல்வது வழக்கம்.
இன்று காலை அவர் வழக்கம் போல் வீட்டில் இருந்து கல்லூரிக்கு காரில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். காலை 7 மணியளவில் திருக்கழுக்குன்றம் அடுத்த கீரப்பாக்கம் என்ற இடத்தில் சென்றபோது, சென்னையில் இருந்து கல்பாக்கம் நோக்கி வந்த அரசு பஸ்சும், காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கிய கபிலன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். தகவல் அறிந்ததும் திருக்கழுகுன்றம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். கிரேன் உதவியுடன் கார் மீட்கப்பட்டது.
கபிலனின் உடல் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பலியான கபிலன், திமுக முன்னாள் எம்.எல்.ஏ. தமிழ்மணியின் மகள் வழி பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பல்லாவரம், ரேடியல் சாலையில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக 20 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு, கான்கீரிட் போடப்பட்டுள்ளது.
எனினும் காங்கிரீட்டின் பக்கவாட்டில் உள்ள பள்ளம் முழுமையாக மூடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் இன்று காலை பாதாள சாக்கடை பணியில் கொல்கத்தாவை சேர்ந்த கூலித்தொழிலாளியான திரேஸ் சர்க்கார்(50) மற்றும் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென பக்கவாட்டில் இருந்த மண்சரிந்து விழுந்தது. இதில் தொழிலாளி திரஸ்சர்க்கார் சிக்கிக்கொண்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த மற்ற ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்க முயன்றனர். ஆனால் சம்பவ இடத்திலேயே திரஸே்சர்க்கார் பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த 2 நாட்களாக பெய்த மழை காரணமாக மண் ஈரப்பதமாக மாறி இருந்ததால் சரிந்து விழுந்து இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிட்லபாக்கம் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழா நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடைபெற்றதால் லட்சக்கணக்கான பக்தர்கள் திருக்கழுக்குன்றத்தில் குவிந்தனர்.
வேதகிரீஸ்வரர் எழுந்தருளிய தேரின் வடத்தை பக்தர்கள் பிடித்து இழுத்து சென்றனர். பக்தர்கள் கூட்டத்தால் திருக்கழுக்குன்றம் நகரமே விழாக்கோலமாக காணப்பட்டது.
இதற்கிடையே தேரை வடம் பிடித்து இழுத்து சென்றபோது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மகும்பல் திருக்கழுக்குன்றம் வெள்ளாள தெருவை சேர்ந்த செல்லம்மாள், உட்பட 3 பெண்களிடம் 8 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
இதுகுறித்து நகையை பறிகொடுத்தவர்கள் திருக்கழுக்குன்றம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து நகை பறித்து சென்ற கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரி. ஜி.எஸ்.டி. சாலையில் 14 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
இங்கு பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஓம் சாகர் சந்தோ(வயது19) என்பவர் நண்பர்களுடன் தங்கி இருந்தார். அவர் 4வது மாடியில் தங்கி இருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு 10.30 மணி அளவில் அடுக்குமாடி குடியிருப்பின் 13வது மாடியில் இருந்து மாணவர் ஓம் சாகர் சந்தோ திடீரென கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடியிருப்பில் வசிப்பவர்கள் கூடுவாஞ்சேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பலியான ஓம் சாகர் சந்தோ 13வது மாடிக்கு எதற்காக சென்றார்? அவர் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை யாராவது தள்ளிவிட்டு கொலை செய்தார்களா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம், தேவநேரி கிழக்கு கடற்கரை சாலையில் ருக்மாந்கதன் என்பவர் கருங்கல் சிலைகள் செதுக்கும் கூடம் வைத்துள்ளார். இந்த சிற்ப கூடத்தில் இருந்த அம்மன், மதுரை வீரன், அயகிரிவரர் உள்ளிட்ட மூன்று சாமி சிலைகள் திருடு போனது. இதுகுறித்து மாமல்லபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இது தொடர்பாக பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த திருநங்கையான சந்திரலேகாவை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலை திருட்டுக்கு உடந்தையாக இருந்த அவரது கூட்டாளி புகழ் என்பவரை தேடி வருகின்றனர். மோட்டார்சைக்கிள் மற்றும் சாமி சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மாமல்லபுரம்:
கூவத்தூர் அருகே கடலோரத்தில் ஆலிக்குப்பம், கடலூர் சின்னகுப்பம், பெரியகுப்பம் ஆகிய மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் தொடர்ந்து கடல் அரிப்பு ஏற்பட்டு வருவதால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
கடற்கரை ஓரம் வீடுகட்டி குடியிருக்கும் மீனவர்களின் வீடுகள் ஏற்கனவே சேதமடைந்து பாதுகாப்பற்ற நிலை இருந்து வருகிறது.
தற்போது வலைகளை காயவைக்கும் கட்டிடம் மற்றும் பிடித்து வரும் மீன்களை ஏலம் விடும் கூடாரம் என அனைத்து கட்டிடங்களும் இடிந்து கடலில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கத்தை விட சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு கடல் அரிப்பு ஏற்பட்டு அலைகள் கரைக்கு வந்துள்ளன.
தற்போது அசானி புயல் காரணமாக கடலில் கூடுதலா அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் கடல் அரிப்பு மேலும் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமான கடலோரத்தில் படகுகளை நிறுத்த இடம் இல்லாமல் ரோட்டில் நிறுத்தும் நிலை உருவாகி உள்ளது. மேலும் பஸ் போக்குவரத்தும் மீனவ கிராமங்களுக்கு வருவது நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக ஆலிக்குப்பம், கடலூர் சின்னகுப்பம், பெரியகுப்பம் ஆகிய 3 மீனவ கிராமமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். புயல், கடல் சீற்றம் ஏற்படும் போது உயிர் பயத்தில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுமுபோது, இந்த 3 மீனவ கிராமங்களிலும் விரைவில் தூண்டில் வளைவு அமைக்க வில்லை என்றால், கரையோர கட்டிடங்கள் படிப்படியாக கடலில் மூழ்கும். எனவே விரைவில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்றனர். மீன்வளத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு இப்பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டு மக்களின் கருத்துக்களை கேட்டு மத்திய, மாநில அரசிடம் ஆய்வறிக்கை சமர்பித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஆலம்பரை குப்பத்தில் மத்திய மீன்வ ளத்துறை சார்பில் கட்டப்பட இருக்கும் மீன்பிடி துறைமுகம் பணிகள் தொடங்கும் போது இந்த பகுதியில் தூண்டில் வளைவு கட்டும் பணியும் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் 183 வகையான சுமார் 2,350 விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கொரோனாவுக்கு முன்னர் தினந்தோறும் சுமார் 6 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பூங்காவுக்கு வந்து சென்றனர்.
கொரோனா கட்டுப்பாடுகளால் சரிந்து இருந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தற்போது மெல்ல, மெல்ல அதிகரித்து வருகிறது. இப்போது தினந்தோறும் சராசரியாக 4,500 பேர் பூங்காவை ரசித்து செல்கிறார்கள்.
கோடைகாலம் தொடங்கி உள்ளதால் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. யானைகள் உல்லாச குளியல் போட ஷவர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதே போல் பறவைகள் இருக்கும் இடங்களில் அவ்வப்போது தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது. சிங்கம், புலி உள்ளிட்ட விலங்குள் மீது சூட்டை தணிப்பதற்காக தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படுகிறது. மனித குரங்கு, கரடிகளுக்கு நீர்ச்சத்தை அதிகரிக்கும் தர்பூசணி உள்ளிட்ட பழங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கோடை விடுமுறை நாட்களில் வண்டலூர் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கவும், அவர்களை ஈர்க்கவும் மேலும் 6 இடங்களை சுற்றுலா பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே சிறுவர் பூங்கா, இரவுநேர விலங்குகள் இல்லம், பாம்பு பண்ணை ஆகியவை பொதுமக்கள் பார்வைக்காக சமீபத்தில் திறக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் மீன் கண்காட்சி, லயன் சபாரி, மற்றும் வண்ணத்துப்பூச்சி பூங்கா ஆகியவை சுற்றுலா பயணிகள் பார்வைக்கு விரைவில் திறக்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் முழுவதும் முடிவடைந்து இருக்கிறது.
பூங்காவில் ஏராளமான வயதான விலங்குகள் உள்ளன. இதையடுத்து புதிய விலங்குளை பரிமாற்ற அடிப்படையில் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சிங்கம், பல்வேறு பறவைகள், வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கி உள்ளிட்ட விலங்குள் மங்களூரு, கோரக்பூர், திருவனந்தபுரம் ஆகிய உயிரியல் பூங்காக்க ளில் இருந்து விரைவில் கொண்டு வரப்பட உள்ளன.
மேலும் 3 வயதான வங்காள புலி, 2 ஜோடி காட்டு நாய்கள், 2 ஜோடி கீல்பேக் பாம்புகள் மங்களூரில் உள்ள பில்லிகுலா உயிரியல் பூங்காவில் இருந்து வர இருக்கிறது.
இது தொடர்பாக பூங்கா அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வண்டலூர் பூங்காவுக்கு கோடை விடுமுறை காரணமாக இந்த மாதம் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கிறோம். குழந்தைகள் விளையாடும் பகுதி, இரவு நேர விலங்குகள் இல்லம் மற்றும் பாம்பு பண்ணை ஆகியவை திறக்கப்பட்டு உள்ளது.
மேலும், மான் மற்றும் சிங்கம் சபாரி, மீன் கண்காட்சி மற்றும் வண்ணத்துப்பூச்சி பூங்கா ஆகியவற்றுக்கான பணிகள் முடிவடைந்து உள்ளன. இவற்றை இந்த மாதத்தில் திறக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இது பார்வையாளர்களை அதிகளவில் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு உயிரியல் பூங்காக்களுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம். அங்கிருந்து சிங்கம், வரிக்குதிரை மற்றும் ஒட்டகச்சிவிங்கியைப் பெற திட்டமிட்டுள்ளோம். பெறப்படும் மற்ற விலங்குகளுக்கு ஈடாக புலிகளை கொடுக்க நாங்கள் விரும்புகிறோம். இந்த நடைமுறைக்கு சில மாதங்கள் ஆகும். இது தொடர்பாக பாட்னா, கோரக்பூர் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள உயிரியல் பூங்காக்களுடன் நாங்கள் பேசி வருகிறோம்.
கொரோனா நோய் தொற்று பரவலின் போது மூடப்பட்ட சபாரிகள் மற்றும் வண்ணத்துப்பூச்சி பூங்கா விரைவில் மீண்டும் திறக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






