search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வண்ணத்துப்பூச்சி
    X
    வண்ணத்துப்பூச்சி

    வண்டலூர் பூங்காவில் மீன்-வண்ணத்துப்பூச்சி பூங்கா விரைவில் திறப்பு

    வண்டலூர் பூங்காவுக்கு கோடை விடுமுறை காரணமாக இந்த மாதம் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கிறோம்.


    வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் 183 வகையான சுமார் 2,350 விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கொரோனாவுக்கு முன்னர் தினந்தோறும் சுமார் 6 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பூங்காவுக்கு வந்து சென்றனர்.

    கொரோனா கட்டுப்பாடுகளால் சரிந்து இருந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தற்போது மெல்ல, மெல்ல அதிகரித்து வருகிறது. இப்போது தினந்தோறும் சராசரியாக 4,500 பேர் பூங்காவை ரசித்து செல்கிறார்கள்.

    கோடைகாலம் தொடங்கி உள்ளதால் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. யானைகள் உல்லாச குளியல் போட ஷவர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதே போல் பறவைகள் இருக்கும் இடங்களில் அவ்வப்போது தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது. சிங்கம், புலி உள்ளிட்ட விலங்குள் மீது சூட்டை தணிப்பதற்காக தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படுகிறது. மனித குரங்கு, கரடிகளுக்கு நீர்ச்சத்தை அதிகரிக்கும் தர்பூசணி உள்ளிட்ட பழங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் கோடை விடுமுறை நாட்களில் வண்டலூர் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கவும், அவர்களை ஈர்க்கவும் மேலும் 6 இடங்களை சுற்றுலா பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே சிறுவர் பூங்கா, இரவுநேர விலங்குகள் இல்லம், பாம்பு பண்ணை ஆகியவை பொதுமக்கள் பார்வைக்காக சமீபத்தில் திறக்கப்பட்டு உள்ளது.

    இதேபோல் மீன் கண்காட்சி, லயன் சபாரி, மற்றும் வண்ணத்துப்பூச்சி பூங்கா ஆகியவை சுற்றுலா பயணிகள் பார்வைக்கு விரைவில் திறக்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் முழுவதும் முடிவடைந்து இருக்கிறது.

    பூங்காவில் ஏராளமான வயதான விலங்குகள் உள்ளன. இதையடுத்து புதிய விலங்குளை பரிமாற்ற அடிப்படையில் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சிங்கம், பல்வேறு பறவைகள், வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கி உள்ளிட்ட விலங்குள் மங்களூரு, கோரக்பூர், திருவனந்தபுரம் ஆகிய உயிரியல் பூங்காக்க ளில் இருந்து விரைவில் கொண்டு வரப்பட உள்ளன.

    மேலும் 3 வயதான வங்காள புலி, 2 ஜோடி காட்டு நாய்கள், 2 ஜோடி கீல்பேக் பாம்புகள் மங்களூரில் உள்ள பில்லிகுலா உயிரியல் பூங்காவில் இருந்து வர இருக்கிறது.

    இது தொடர்பாக பூங்கா அதிகாரி ஒருவர் கூறியதாவது:

    வண்டலூர் பூங்காவுக்கு கோடை விடுமுறை காரணமாக இந்த மாதம் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கிறோம். குழந்தைகள் விளையாடும் பகுதி, இரவு நேர விலங்குகள் இல்லம் மற்றும் பாம்பு பண்ணை ஆகியவை திறக்கப்பட்டு உள்ளது.

    மேலும், மான் மற்றும் சிங்கம் சபாரி, மீன் கண்காட்சி மற்றும் வண்ணத்துப்பூச்சி பூங்கா ஆகியவற்றுக்கான பணிகள் முடிவடைந்து உள்ளன. இவற்றை இந்த மாதத்தில் திறக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இது பார்வையாளர்களை அதிகளவில் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    நாடு முழுவதும் உள்ள பல்வேறு உயிரியல் பூங்காக்களுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம். அங்கிருந்து சிங்கம், வரிக்குதிரை மற்றும் ஒட்டகச்சிவிங்கியைப் பெற திட்டமிட்டுள்ளோம். பெறப்படும் மற்ற விலங்குகளுக்கு ஈடாக புலிகளை கொடுக்க நாங்கள் விரும்புகிறோம். இந்த நடைமுறைக்கு சில மாதங்கள் ஆகும். இது தொடர்பாக பாட்னா, கோரக்பூர் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள உயிரியல் பூங்காக்களுடன் நாங்கள் பேசி வருகிறோம்.

    கொரோனா நோய் தொற்று பரவலின் போது மூடப்பட்ட சபாரிகள் மற்றும் வண்ணத்துப்பூச்சி பூங்கா விரைவில் மீண்டும் திறக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×