என் மலர்tooltip icon

    அரியலூர்

    விருத்தாசலத்தில் இருந்து சேலம் செல்லும் பயணிகள் ரெயிலை அரியலூரில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரெயில்வே பொதுமேலாளர் ஜான்தாமஸ் கூறினார்.
    அரியலூர்:

    அரியலூர் ரெயில் நிலையம் “ஆதார்ஸ்“ ரெயில் நிலையமாக மேம்படுத்தப்பட்டுள்ளதையடுத்து ரெயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை நேற்று தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஜான்தாமஸ் ஆய்வு செய்தார். இதில் ரெயில்வே மேம்பாலம், பதிவேடுகள், பாதுகாப்பு வழிமுறைகள், பயணிகளின் வசதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்து, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    பின்னர் ரெயில் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள ரூ.18 லட்சம் மதிப்பிலான ரெயில் நிலைய மேலாளர் அறை மற்றும் சிறப்பு விருந்தினர்கள் தங்கும் அறை ஆகியவற்றை திறந்து வைத்தார். தொடர்ந்து பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட பொதுமேலாளர், அவற்றை பரிசீலத்து நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார். இதையடுத்து ஜான்தாமஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தென்னக ரெயில்வேயில் நடப்பாண்டில் 148 ரெயில்வே கிராசிங்கிற்கு பணியாளர்கள் நியமிக்க உத்திரவிடப்பட்டுள்ளது. இப்பணிகள் வருகிற மார்ச் மாதத்தில் நிறைவடையும். இப்பணிகள் முடிவுற்றால் தென்னக ரெயில்வேயில் 100 சதவீதம் அனைத்து ரெயில்வே கிராசிங்களும் பணியாளர்கள் உள்ளவையாக மாற்றப்படும். மேலும் நடப்பாண்டில் இரட்டை ரெயில் பாதை திட்டம் மதுரையில் 43 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டிற்கு 74 கிலோ மீட்டர் தூரம் இரட்டை ரெயில்பாதை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    கடந்த ஆண்டு தென்னக ரெயில்வேயில் 5 ரெயில் விபத்துகள் நடைபெற்றது. எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் நடப்பாண்டில் ஒரு விபத்து மட்டுமே நடைபெற்றுள்ளது. அரியலூர் ரெயில் நிலையத்தில் அனைத்து சிறப்பு ரெயில்கள் நின்று செல்லவும், விருத்தாசலத்தில் இருந்து சேலம் செல்லும் பயணிகள் ரெயிலை அரியலூரில் இருந்து இயக்க வும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் உள்பட உயர் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். அப்போது அவரிடம் அரியலூர் மாவட்ட வணிகர் சங்க தலைவர் ராஜபாண்டியன், செயலாளர் ராமலிங்கம், மாவட்ட காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் சிவகுமார் மற்றும் பலர் கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர்.
    ஜெயங்கொண்டம் அருகே பெண்ணை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் செல்வராணி(வயது 35). இவர் தனது வீட்டில் பாத்திரம் தேய்த்து கொண்டிருந்தார். அப்போது அருகில் வசிக்கும் பேபி என்பவர், செல்வராணியிடம் உனது செல்போனை காணவில்லை என்று கூறினாயே, கண்டுபிடித்து விட்டாயா? என்று கேட்டதாகவும், அதற்கு செல்வராணி உனது மகன் மணிகண்டன்தான்(22) எடுத்து மறைத்து வைத்திருப்பான் என்று கூறியதாகவும் தெரிகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், செல்வராணியை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து செல்வராணி, ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு வழக்குப்பதிந்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ஜெயங்கொண்டம் அருகே கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள தத்தனூர் பொட்ட கொள்ளை கிராமத்தை சேர்ந்தவர் ரவி மகன் ரஞ்சித்(வயது 26). இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி அன்று இரவு துக்க காரியம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக அதே ஊரை சேர்ந்த வைத்திலிங்கம் மகன் இளங்கோவன்(68) என்பவருடைய வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது இளங்கோவனுக்கும், ரஞ்சித்திற்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றியது. இதில் ரஞ்சித்தை, இளங்கோவன் திட்டி தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ரஞ்சித் உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதுகுறித்து அப்போது இருந்த போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்குப்பதிவு செய்து ஜெயங்கொண்டம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி திருமணி, கொலை முயற்சியில் ஈடுபட்ட இளங்கோவனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து போலீசார் இளங்கோவனை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
    உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பொது மக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று தேர்தல் பார்வையாளர் ராஜசேகர் கூறியுள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணும் மையமான அரியலூர் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை தேர்தல் பார்வையாளர் ராஜசேகர், மாவட்ட கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தனர். ஆய்வின்போது தேர்தல் பார்வையாளர் ராஜசேகர் கூறியதாவது:-

    அரியலூர் மாவட்டத்தில் 12 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 113 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 201 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 1662 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி யிடங்களுக்கும் என அரியலூர், செந்துறை மற்றும் திருமானூர் ஆகிய ஒன்றியங்களுக்கு வருகிற 27-ந் தேதியும், ஜெயங்கொண்டம், தா.பழூர் மற்றும் ஆண்டிமடம் ஆகிய ஒன்றியங்களுக்கு வருகிற 30-ந் தேதியும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரியலூர் ஒன்றிய வாக்கு எண்ணும் மையமான அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பெட்டி பாதுகாப்பு அறையினை பார்வையிடப்பட்டது. இந்த மையம் முழுவதையும் கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணித்திட உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதி பெற்ற நபர்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

    மேலும், அரியலூர் ஒன்றியத்திற்கு மொத்தம் 168 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அரியலூர் ஒன்றியத்தில் 2 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் வார்டுகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதில் ஒவ்வொரு வார்டுக்கும் வாக்குச்சீட்டுகளை பிரிப்பதற்கு 15 மேஜைகளும், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கான வாக்குகளை எண்ண 6 மேஜைகளும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கான வாக்குகளை எண்ண 6 மேஜைகளும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 6 மேஜைகளும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 10 மேஜைகளும் அமைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படவுள்ளன.

    அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அரியலூர் ஒன்றியத்திற்கான வேட்பு மனு பரிசீலனையும், மேலும் தயார் நிலையில் உள்ள வாக்குப்பெட்டிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களுக்கு 9840361218 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பழனிசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர், வளர்ச்சி, வருவாய்த்துறை அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.
    அரியலூரில் போலீசாரை கண்டித்து வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    தாமரைக்குளம்:

    அரியலூரில் வசித்து வருபவர் செல்வராஜ்(வயது 50). வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் தலைவராவார். இந்நிலையில் இவர் கடந்த 14-ந் தேதி நீதிமன்றத்துக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அப்போது, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஒருவர், இந்த வழியாக செல்லக்கூடாது என தெரிவித்துள்ளார்.

    அப்போது, பிரிவு சாலையில் தடுத்து அனுப்பியிருந்தால் அப்படியே சென்றிருப்பேன். அங்கே விட்டு விட்டு இங்கு வந்து தடுத்து திருப்பி அனுப்பினால் எவ்வளவு தூரம் திரும்பி செல்வது. மேலும், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தற்போது கூட்டமும் இல்லை. எனவே, இந்த வழியாக நான் சென்று விடுகிறேன் என கூறியதாகவும், அதற்கு முடியாது என அந்த போலீஸ்காரர் தெரிவிக்க, அந்த இடத்துக்கு வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விடுங்கள் போகட்டும் என கூறியுள்ளார். அப்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த பேரிகார்டை போலீஸ்காரர் தனது காலால் உதைத்து கீழே தள்ளிவிட்டு வழிவிட்டதாக தெரிகிறது.

    இவ்வாறு நடந்து கொண்ட போலீஸ்காரரை கண்டித்தும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், கோர்ட்டு பணியை புறக்கணித்து வக்கீல்கள் நேற்று கோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வழக்கறிஞர் சங்க கூட்டமைப்பின் துணைத்தலைவர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் போலீசாரை கண்டித்து பல்வேறு கோ‌‌ஷங்களை எழுப்பினர். இதில் வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.
    அரியலூர் மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்ற 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    ஆன்லைன் லாட்டரியால் விழுப்புரத்தில் நகை வியாபாரி குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தமிழகத்தில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

    அரியலூர் மாவட்டத்தில் எஸ்.பி. ஸ்ரீநிவாசன் உத்தரவின்பேரில் டி.எஸ்.பி. மோகன்தாஸ் அறிவுறுத்தலின் பேரில் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், மீன் சுருட்டி, உடையார்பாளையம், தா.பழூர் பகுதிகளில் உளவுத்துறை சப்-இன்ஸ்பெக்டர் ரவி, ஜெயங்கொண்டம் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு ஆகியோர் தலைமையிலான போலீசார் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மேலக்குடியிருப்பு நடுத்தெருவைச்சேர்ந்த ராஜா (வயது 50), மேட்டுத் தெருவைச் சேர்ந்த விஜயகுமார் (50), தேவாங்கர் புதுத்தெருவைச் சேர்ந்த பார்த்திபன் (58), சின்னவளையம் கீழத்தெருவை சேர்ந்த ஆனந்த் (35) மற்றும் ஆண்டிமடம்-விளந்தை கிராமம் பழனி ஆண்டவர் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் (26), சூனாபுரி கிராமம் சின்னத்துரை (58) ஆகியோர் ஆன்லைனில் லாட்டரி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து லாட்டரிச்சீட்டு விற்று வைத்திருந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் யாரேனும் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருகிறார்களா? என போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
    உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள ஆண்டிமடம்- ஜெயங்கொண்டம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கான வாக்கு எண்ணும் மையங்களை கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார்.
    அரியலூர்:

    உள்ளாட்சி தேர்தலில் அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணும் மையமான விளந்தை அரசு மேல்நிலைப்பள்ளியையும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணும் மையமான ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியையும் கலெக்டர் ரத்னா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசனுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார். வாக்கு எண்ணும் மையங்களான விளந்தை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்படவுள்ள வரவேற்பு மையங்கள், வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் மற்றும் அலுவலர்கள் செல்லும் வழித்தடங்கள் அமைக்கும் பணிகளையும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவுள்ள இடங்களையும் கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார். மேலும் அவர் வாக்கு மையத்தில் மேஜைகள் அமைத்தல் மற்றும் தடுப்புகள் அமைக்க உள்ள இடங்களையும் ஆய்வு செய்தார்.

    இதையடுத்து கலெக்டர் ரத்னா கூறுகையில், உள்ளாட்சி தேர்தலில் அரியலூர் மாவட்டத்தில் 12 மாவட்ட ஊராட்சி உறுப்பினர், 113 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 201 கிராம ஊராட்சி தலைவர், 1,662 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவியிடங்களுக்கு போட்டியிடுபவர்களுக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு 2 மாவட்ட ஊராட்சி உறுப்பினர், 19 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 30 கிராம ஊராட்சி தலைவர், 249 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவியிடங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் வருகிற 30-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதில், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்தில் 44,589 ஆண் வாக்காளர்களும், 45,347 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 89,936 பேர் 158 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க உள்ளனர்.

    இதேபோல் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் 2 மாவட்ட ஊராட்சி உறுப்பினர், 19 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 35 கிராம ஊராட்சி தலைவர், 294 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவியிடங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் வருகிற 30-ந் தேதி நடக்கிறது. இதில், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் 46,201 ஆண் வாக்காளர்களும், 46,489 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 92,690 பேர் 180 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க உள்ளனர்.

    ஆய்வின்போது, திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு பெரியய்யா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குருநாதன் (ஆண்டிமடம்) சந்தானம் (ஜெயங்கொண்டம்), வட்டாட்சியர் குமரய்யா உள்பட பலர் உடனிருந்தனர்.
    ஜெயங்கொண்டத்தில் தோழியை கொன்று நகை கொள்ளையடித்த வழக்கில் அரசு பள்ளி ஊழியர், வாலிபருடன் கைது செய்யப்பட்டார். 2 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கியுள்ளனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுதநகர் 5-வது கிராசை சேர்ந்தவர் குணசேகரன். இவர் பேரூராட்சியில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பாரதி. இவர்களுக்கு ஆதித்யன், ஆர்த்தி என்ற குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாரதியை மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு வீட்டிலிருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.1.5 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். இது குறித்து அப்போதைய எஸ்.பி., அபிநவ்குமார் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர். ஆனால் கொலையாளிகளை பிடிக்க முடியவில்லை.

    இந்தநிலையில் தற்போதைய எஸ்.பி சீனிவாசன் இவ்வழக்கின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை அமைத்து விசாரிக்க உத்தர விட்டார். விசாரணை நடத்திய தனிப்படை போலீசார் பாரதியின் எதிர் வீட்டில் வசித்து வந்த செந்தில்குமார் மனைவி ஜெயந்தி (47) மீது சந்தேகப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குபின் முரணாக பேசினார். தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஒக்கநத்தம் கிராமத்தை சேர்ந்த காமராஜ் மகன் சின்ராசு(22) என்பவருடன் சேர்ந்து பாரதியை கொலை செய்து, 15 பவுன் நகை மற்றும் ரூ. 1.5 லட்சம் பணத்தை கொள்ளையடித்ததை ஜெயந்தி ஒப்புக் கொண்டார். 

    இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து 15 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். பாரதியை , ஜெயந்தி கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்தது.

     கொலை செய்யப்பட்ட பாரதியும், ஜெயந்தியும் நெருங்கிய தோழிகளாக பழகி வந்த நிலையில் பாரதி வீட்டிற்கு ஜெயந்தி அடிக்கடி சென்று வந்தார். இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பரிவர்த்தனை இருந்து வந்தது. பாரதி வசதியுடன் இருந்த நிலையில், அவர் அணிந்திருந்த நகைகள் மீது ஜெயந்திக்கு ஆசை ஏற்பட்டது. இதையடுத்தே ஒக்கநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சின்ராசு என்பவரின் துணையுடன் பாரதியை கொலை செய்து நகையை கொள்ளையடித்துள்ளார். 

    கைதான ஜெயந்தி அவரது தந்தை இறந்ததால் கருணை அடிப்படையில் அரசு வேலை பெற்று ஜெயங்கொண்டம் அரசு பள்ளி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். பணியில் இருக்கும் போது அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் மோசடி செய்ததாக அவர் மீது புகார் எழுந்ததை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர். பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த அவர் தோழியை கொன்ற வழக்கில் மீண்டும் கைதாகியுள்ளார். பாரதியை கொன்ற ஜெயந்தி. சின்ராசு ஆகிய இருவரும் போலீஸ் பிடியில் சிக்காமல் 2 ஆண்டுகளாக சுதந்திரமாக சுற்றி திரிந்துள்ளனர். தற்போது போலீசார் விசாரணையில் சிக்கிக் கொண்டனர். 
    அரியலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாக்கு எண்ணும் மையத்தினை கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், செந்துறை, திருமானூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இந்த ஒன்றியங்களில் உள்ள 12 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், 113 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 201 கிராம ஊராட்சி தலைவர்கள், 1,662 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 1,988 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளன.

    இதற்கான வேட்பு மனு தாக்கல் மாவட்ட ஊராட்சி அலுவலகம், 6 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 201 கிராம ஊராட்சி மன்ற அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. இதில் அரியலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு 2 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், 17 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 37 கிராம ஊராட்சி தலைவர்கள், 167 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகிய பதவியிடங்களுக்கு வருகிற 27-ந் தேதி முதற் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 43,016 ஆண் வாக்காளர்களும், 42,022 பெண் வாக்காளர்களும், 3 மூன்றாம் பாலின வாக்காளர்களும் மொத்தம் 85,041 பேர் 168 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க உள்ளனர்.

    அரியலூர் ஒன்றிய வாக்கு எண்ணும் மையமான அரசு கலைக்கல்லூரியில் பதிவான வாக்குப்பெட்டிகளை பாதுகாப்பாக வைப்பதற்கான அறையினையும், வாக்கு சீட்டுகள் பிரிக்கும் அறையினையும், வாக்கு எண்ணும் அறையினையும் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார்.

    மேலும், அங்கு வாக்குப்பெட்டி பாதுகாப்பு அறையிலிருந்து, வாக்கு எண்ணும் அறைகளுக்கு பெட்டி எடுத்து செல்பவர்களுக்கும், வாக்கு எண்ணிக்கையை பார்வையிட வரும் வேட்பாளர்களின் முகவர்களுக்கும் தனி வழி அமைப்பதையும், பத்திரிகை மற்றும் ஊடக மையம் அமைப்பதற்கான அறையினையும், மேலும் குடிநீர், மின்சாரம், பாதுகாப்பு வசதி போன்ற அடிப்படை வசதிகள் அமைக்கப் படவுள்ளதையும் கலெக்டர் ரத்னா பார்வையிட்டார்.

    ஆய்வின்போது, திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பழனிசாமி, கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு பெரியய்யா, வட்டார வளர்ச்சி அலுவலர் அருளப்பன் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
    அரியலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாக்கு எண்ணும் மையத்தினை கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், செந்துறை, திருமானூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இந்த ஒன்றியங்களில் உள்ள 12 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், 113 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 201 கிராம ஊராட்சி தலைவர்கள், 1,662 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 1,988 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளன.

    இதற்கான வேட்பு மனு தாக்கல் மாவட்ட ஊராட்சி அலுவலகம், 6 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 201 கிராம ஊராட்சி மன்ற அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. இதில் அரியலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு 2 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், 17 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 37 கிராம ஊராட்சி தலைவர்கள், 167 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகிய பதவியிடங்களுக்கு வருகிற 27-ந் தேதி முதற் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 43,016 ஆண் வாக்காளர்களும், 42,022 பெண் வாக்காளர்களும், 3 மூன்றாம் பாலின வாக்காளர்களும் மொத்தம் 85,041 பேர் 168 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க உள்ளனர்.

    அரியலூர் ஒன்றிய வாக்கு எண்ணும் மையமான அரசு கலைக்கல்லூரியில் பதிவான வாக்குப்பெட்டிகளை பாதுகாப்பாக வைப்பதற்கான அறையினையும், வாக்கு சீட்டுகள் பிரிக்கும் அறையினையும், வாக்கு எண்ணும் அறையினையும் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார்.

    மேலும், அங்கு வாக்குப்பெட்டி பாதுகாப்பு அறையிலிருந்து, வாக்கு எண்ணும் அறைகளுக்கு பெட்டி எடுத்து செல்பவர்களுக்கும், வாக்கு எண்ணிக்கையை பார்வையிட வரும் வேட்பாளர்களின் முகவர்களுக்கும் தனி வழி அமைப்பதையும், பத்திரிகை மற்றும் ஊடக மையம் அமைப்பதற்கான அறையினையும், மேலும் குடிநீர், மின்சாரம், பாதுகாப்பு வசதி போன்ற அடிப்படை வசதிகள் அமைக்கப் படவுள்ளதையும் கலெக்டர் ரத்னா பார்வையிட்டார்.

    ஆய்வின்போது, திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பழனிசாமி, கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு பெரியய்யா, வட்டார வளர்ச்சி அலுவலர் அருளப்பன் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
    செந்துறை அருகே மாட்டிற்கு தண்ணீர் வைக்க சென்ற இளம்பெண் மின்சாரம் பாய்ந்து பலியானார்.
    செந்துறை:

    அரியலூர்  மாவட்டம் செந்துறை அருகே உள்ள சென்னிவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி ஜோதி (வயது 40). கணவரை இழந்த இவர் மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தனது மகள் சந்திரலேகாவுடன் வசித்து வந்தார். பிழைப்புக்காக அவர் கறவை மாடுகள் வைத்து உள்ளார். அதன் மூலம் தனது குடும்பத்தை நடத்தி, மகளையும் வளர்த்து வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை வழக்கம் போல் கறவை மாட்டிற்கு தண்ணீர் வைப்பதற்கு வீட்டின் முன்பு இருந்த அன்னக்கூடையை எடுத்துள்ளார். 

    அப்போது அங்கு  வீட்டிற்கு வரும் மின்சார வயர் அறுந்து கிடந்ததுள்ளது. இதனை கவனிக்காமல் அலுமினிய அன்னக்கூடையை ஜோதி எடுத்தபோது அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். ஜோதியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை. 

    இது குறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜோதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
    அரியலூர் அருகே அரசு பஸ் மீது மாணவர்கள் கற்களை வீசியதால் கண்ணாடி உடைந்தது. மேலும் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சிலால் கிராமம் உள்ளது. இப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் பலர் கும்பகோணத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். தினமும் ஜெயங்கொண்டத்தில் இருந்து சிலால் கிராமம் வழியாக கும்பகோணத்திற்கு செல்லும் அரசு பஸ்சில் செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் அரசு பஸ் சிலால் கிராமத்திற்கு சரியான நேரத்திற்கு வராததால் மாணவர்கள் பலர் பள்ளி, கல்லூரிகளுக்கு சரியான நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் அரசு பஸ் டிரைவர், சிலால் கிராமத்தில் பஸ்சை நிறுத்தாமல் செல்வதாக மாணவர்கள் புகார் தெரிவித்ததுடன், இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர். இருப்பினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இன்று காலை ஜெயங்கொண்டத்தில் இருந்து கும்பகோணத்திற்கு அரசு பஸ் புறப்பட்டது. சிலால் கிராமத்திற்கு வரும்போது, டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிலர் கற்களை எடுத்து பஸ் மீது வீசினர். இதில் பஸ்சின் பின்புற கண்ணாடிகள் உடைந்தது.

    மேலும் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு தா. பழுர் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சுமூக முடிவு ஏற்பட்டதையடுத்து மாணவர்கள் மறியலை கைவிட்டனர். மேலும் பஸ் மீது கல் வீசிய மாணவர்கள் தப்பியோடி விட்டனர்.

    அவர்கள் யாரென்று போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


    ×