என் மலர்tooltip icon

    அரியலூர்

    அரியலூர் மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.ஆயிரத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழாவினை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், பொய்யூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னவளையம் ஆகிய கிராமங்களில் பொது வினியோக திட்ட அங்காடிகளில் தமிழக முதல்- அமைச்சரின் ஆணையின்படி, பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா கலெக்டர் ரத்னா தலைமையில் நடந்தது. ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.ஆயிரத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி- சேலைகளையும் வழங்கி பேசுகையில், தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 2 அடி நீளமுள்ள கரும்பு துண்டு, தலா 20 கிராம் முந்திரி, திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் மற்றும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.ஆயிரமும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் செயல்படும் 440 பொதுவினியோத் திட்ட அங்காடிகளில் இணைக்கப்பட்டுள்ள 2,28,736 குடும்ப அட்டைதாரர்களுக்கு முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்பு, சர்க்கரை மற்றும் பச்சரிசியுடன், தலா ரூ.ஆயிரம் வீதம் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி- சேலைகள் வழங்கப்படுகிறது.

    மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களை பொதுமக்கள் சிரமமின்றி பெறுவதற்கு ஏதுவாக முதல் நாள் முழுநேர ரே‌‌ஷன் கடைகளில் 1,000 குடும்ப அட்டைகளுக்கும், 2-ம் நாள் முதல் 800 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள ரே‌‌ஷன் கடைகளில் ஒரு நாளைக்கு 300 குடும்ப அட்டைகள் என சுழற்சி முறையில் வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி அரியலூர் மாவட்ட குடும்ப அட்டைதாரர்கள் வருகிற 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை 4 நாட்களிலும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம். இதில் சுழற்சி முறையில் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் 13-ந் தேதி பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம் என்றார். விழாவில் வட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) பாலாஜி, உடையார்பாளையம் கோட்டாட்சியர் பூங்கோதை, ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் கலைவாணன், ஜெயங்கொண்டம் கூட்டுறவு சங்க தலைவர் ஜெகன்ராஜ், மாவட்ட துணை செயலாளர் தங்க பிச்சைமுத்து, மாவட்ட அம்மா பேரவை மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் தனியார் சிமெண்டு ஆலை ஊழியர் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    அரியலூர்:

    அரியலூர் அருகே உள்ள கொல்லாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் பாரதிராஜா (வயது 20). ஐ.டி.ஐ. படித்துள்ள பாரதிராஜா, அதே பகுதியில் உள்ள தனியார் சிமெண்டு ஆலையில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வேலையை முடித்து கொண்டு பாரதிராஜா வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அரியலூர்-செந்துறை சாலையில் சென்ற போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், பாரதிராஜா ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதின.

    இதில் படுகாயம் அடைந்த பாரதிராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த மாக்காய்குளத்தை சேர்ந்த ஜானகிராமன், பின்னால் அமர்ந்து பயணம் செய்த பெரம்பலூர் மாவட்டம் நல்லறிக்கையை சேர்ந்த சக்தி ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூரில் மாவட்ட கலெக்டர் ரத்னா வீட்டை முற்றுகையிட்ட தி.மு.க.வினர் 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடைபெற்று, நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் திருமானூர் ஒன்றிய மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளரின் வெற்றியை அறிவிக்காமல் தாமதித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அக்கட்சியின் மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமையில், தி.மு.க.வினர் சிலர் ஒன்று திரண்டு நேற்று முன்தினம் நள்ளிரவு ஜெயங்கொண்டம் சாலையில் உள்ள மாவட்ட கலெக்டர் ரத்னா வீட்டின் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் கலெக்டருக்கு எதிராக பல்வேறு கோ‌‌ஷங்களை எழுப்பினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் உடன்பாடு ஏற்படாததால் மாவட்ட செயலாளர் சிவசங்கர் உள்பட போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களை போலீஸ் வாகனத்தில் ஏற்றிச்சென்று அருகே உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் நேற்று காலை விடுவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    தமிழக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் தம்பி மனைவி வெற்றி பெற்றுள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் சன்னாசி நல்லூர் (1-வது வார்டு) ஒன்றியக் குழு உறுப்பினர் பதவி தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் தம்பி செங்குட்டுவனின் மனைவி செல்வி போட்டியிட்டார். அவருக்கு குலையுடன் கூடிய தென்னை மரம் சின்னம் ஒதுக்கப்பட்டு இருந்தது. 

    சன்னாசிநல்லூர், அயன்தத்தனூர் ஆகிய கிராம ஊராட்சிகளை கொண்ட இந்த ஒன்றியக்குழுவில் 2,446 வாக்குகள் பெற்று செல்வி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் பெ.செல்வி 1,084 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். 
    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வாக்கு எண்ணும் மையத்தில் காலை உணவு வழங்கக்கோரி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் வாக்கு எண்ணும் பணியில் சுமார் 15 நிமிடம் வரை தாமதம் ஏற்பட்டது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றிய ஊரக உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பெட்டிகள் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டது.

    இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க இருந்த நிலையில், அப்பணியில் ஈடுபடும் ஊழியர்கள் அதிகாலையிலேயே அங்கு வந்தனர். 8 மணியளவில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த அறையின் சீல் உடைக்கப்பட்டு அங்கிருந்த வாக்குப்பெட்டிகள் எடுக்கப்பட்டு வாக்கு எண்ணும் அறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அந்த பணிகள் முடிவடைந்து 8.10 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட இருந்த நிலையில், அப்பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் திடீரென வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாங்கள் அதிகாலையிலேயே பணிக்கு வந்து விட்டோம். ஆனால் எங்களுக்கு காலை உணவு இதுவரையில் வழங்கப்படவில்லை.

    எனவே உடனே உணவு வழங்க வேண்டும். அதுவரை வாக்கு எண்ணும் பணியை தொடங்க மாட்டோம் என்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் , ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உணவு வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதாக தெரிவித்தனர்.

    அதன்பிறகு ஊழியர்கள் வாக்கு எண்ணும் பணியை தொடங்கினர். இதனால் வாக்கு எண்ணும் பணியில் சுமார் 15 நிமிடம் வரை தாமதம் ஏற்பட்டது.

    மீன்சுருட்டியில் லாரி மோதி 17 மின் கம்பங்கள் சாய்ந்ததால் குடிநீர் தட்டுப்பாட்டு ஏற்பட்டது. இந்த நிலையில் குடிநீர் வழங்கக்கோரி தனியார் நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த மீன்சுருட்டி வழியாக சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலைகள் அகலப்படுத்தும் பணிக்காக விக்ரவாண்டி முதல் தஞ்சாவூர் வரை தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை பட்டேல் என்ற தனியார் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறது.

    இந்நிலையில் மீன்சுருட்டி அருகே சொக்கலிங்கபுரம் கிராமத்தின் அருகே சாலை பணிகளுக்காக அந்நிறுவனம் சார்பில் மூலப்பொருள் தயாரிக்கும் உற்பத்தி கிடங்கு அமைக்கப்பட்டு அங்கு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அங்கு மூலப்பொருளை எடுத்துச்சென்ற ஒரு லாரி உற்பத்தி கிடங்கில் அருகில் செல்லும் ஒரு உயர் அழுத்த மின்கம்பத்தின் மீது மோதியது. இதை கவனிக்காத அந்த லாரி டிரைவர் மின்கம்பத்தை இழுத்தபடியே சென்றுவிட்டார்.

    இதன் காரணமாக அந்த மின் கம்பம் கீழே சரிந்து அந்த பாதையில் செல்லும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள மின்கம்பங்கள் சரிந்தன. இதில் 17 மின் கம்பங்கள் ஆங்காங்கே சரிந்து விழுந்தன. அப்போது மின்சாரம் இணைப்பில் இருந்தது. இதையடுத்து உடனே அந்த பகுதியில் செல்லும் மின்சாரத்தை மின்சார வாரிய ஊழியர்கள் உடனடியாக துண்டித்தனர். நள்ளிரவு என்பதால் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் நடமாட்டம் இல்லாததால் பெருத்த உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மறுநாள் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. பின்னர் வாக்குச்சாவடிக்கு போதிய மின்சாரம் வேண்டும் என்பதால் மின்சார வாரியத்தின் மூலம் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஆங்காங்கே உள்ள வாக்குச்சாவடிகளுக்கு மின்சார இணைப்பு உடனடியாக கொடுக்கப்பட்டன. இருப்பினும் கிராமங்களில் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் தவித்தனர்.

    பின்னர் மின்சார வாரிய ஊழியர்கள் சாய்ந்து கிடந்த மின்கம்பங்களை சரிபார்க்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். இருந்தபோதும், சில கிராமங்களுக்கு மட்டும் மின்சாரம் கொடுக்கப்பட்டது. இதனால் மின்சாரம் இல்லாத பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சிலர் சொக்கலிங்கபுரம் கிராமத்தில் உள்ள அந்த தனியார் நிறுவனத்தின் முன்பு குடிநீர் வழங்கக்கோரி முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது மின்சார வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சமாதானப்படுத்தி உங்களுக்கு தேவையான மின்சார இணைப்பை சீக்கிரமாக கொடுத்து விடுவோம் என்று உறுதி அளித்ததின் அடிப்படையில், பொதுமக்கள் கலைந்து சென்றனர். ஆனால் சாலை போடும் நிறுவனம் இதை சரியாக கண்டு கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

    இந்த சம்பவத்தின் காரணமாக நேற்று முன்தினம் நடைபெற்ற வாக்குப்பதிவில் போதிய மின்சாரம் இல்லாததால் சிறிது நேரம் வாக்குப்பதிவு செய்வதற்கு சிரமங்கள் ஏற்பட்டது. பின்னர் மாற்றுப்பாதையில் மின்சாரம் உடனடியாக தரப்பட்டதால் அதன் பிறகு சகஜ நிலைக்கு திரும்பியது.

    நள்ளிரவில் இந்த விபத்து நடைபெற்றதால் அப்போது பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் நடமாட்டம் ஏதுமில்லை. இதனால் பெருத்த உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த மின் கம்பம் அருகே பாலமுருகன்(வயது 38) என்பவரின் வீடு அருகிலேயே விழுந்தது. அப்போது அனைவரும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்ததால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. 
    செந்துறையில் தேர்தல் பணிக்கு சென்ற என்ஜினீயர் வீட்டில் 30 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம், செந்துறையில் இருந்து இலங்கைச்சேரி செல்லும் பாதையில் உள்ள பாரதியார் நகரை சேர்ந்தவர் காமராஜ்(வயது 54). இவர் ஜெயங்கொண்டம் ஒன்றிய அலுவலகத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் காமராஜ் உள்ளாட்சி தேர்தல் பணிக்காக நேற்று முன்தினம் சென்று விட்டார். மேலும் அவரது மனைவி எழிலரசியும் தனது 2 மகள்களுடன் அப்பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள அவரது தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனை அறிந்த மர்மநபர்கள் நேற்று முன்தினம் இரவு பின்பக்கம் வழியாக சென்று, கதவுகளை போலி சாவி கொண்டு திறந்து உள்ளே சென்றனர். பின்னர் வீட்டில் இருந்த பீரோவை திறந்து அதிலிருந்த 30 பவுன் நகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

    பின்னர் கைரேகை பதிவு கிடைக்காமல் இருப்பதற்காக வீட்டின் பூட்டுகளை மர்மநபர்கள் அருகே இருந்த தண்ணீர் வாளியில் போட்டுவிட்டு சென்று விட்டனர். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் எழிலரசி வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவுகள் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் இதுகுறித்து தனது உறவினர்கள் மற்றும் செந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், செந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து மேப்பநாய் டிக்சி வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் சம்பவ இடத்தை மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இதுகுறித்து செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    அரியலூர் மாவட்டம் செந்துறையில் என்ஜினீயர் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறையில் இருந்து இலங்கைச்சேரி செல்லும் பாதையில் உள்ள பாரதியார் நகரை சேர்ந்தவர் காமராஜ் (வயது 54). ஜெயங்கொண்டம் ஒன்றிய அலுவலகத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மனைவி எழிலரசி மற்றும் இரண்டு மகள்களுடன் இங்கே வசித்து வருகிறார்.

    இதனிடையே காமராஜ் ஊரக உள்ளாட்சியில் இன்று நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தல் பணிக்காக சென்று விட்டார். அதனால் அவரது மனைவி, தனது மகளுடன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள அவரது தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    இந்த நிலையில் நேற்று இரவு வீட்டின் பின்பக்கம் வழியாக உள்ளே புகுந்த கொள்ளையர்கள் வீட்டின் கதவுகளை போலி சாவி கொண்டு திறந்து நுழைந்தனர். அங்கு தனி அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த 30 பவுன் தங்க நகை மற்றும் அரைகிலோ வெள்ளி பொருட்களை கொள்ளை அடித்து சென்று விட்டனர்.

    மேலும் உடைக்கப்பட்ட வீட்டின் பூட்டுகளை அங்கிருந்த தண்ணீர் வாளியில் போட்டுவிட்டு சென்றிருந்தனர்.

    இன்று காலை எழிலரசி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் திறக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து வந்த உறவினர்கள் திரண்டு சென்று செந்துறை போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    கொள்ளை குறித்து காமராஜின் உறவினர் கொளஞ்சியப்பா கூறுகையில், செந்துறை தாலுகா அலுவலகம் அருகே உள்ள சில வீடுகளில் இதே போன்று தொடர்ந்து பல்வேறு கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் இதுவரை எந்த ஒரு குற்றவாளியும் கைது செய்யப்படவில்லை. அதனாலேயே தொடர்ந்து கொள்ளை சம்பவம் நடைபெறுகிறது.

    எனவே போலீசார் துரிதமாக செயல்பட்டு கொள்ளையர்களை கைது செய்து பொருட்களை மீட்க வேண்டும். அப்போதுதான் இப்பகுதி பொதுமக்கள் அச்சமின்றி வாழமுடியும் என்றார்.

    ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு தெருக்களில் பன்றிகள் நடமாட்டம் மிகவும் அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு தெருக்களில் பன்றிகள் நடமாட்டம் மிகவும் அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த பன்றிகள் சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகளை கிளறுவதன் மூலம் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மழைக்காலங்களில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    அரியலூர் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடி மையத்தினையும், அரியலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களையும் மாவட்ட கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், திருமானூர் மற்றும் செந்துறை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் முதல் கட்டமாக நேற்று 522 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும் ஜெயங்கொண்டம், தா.பழூர் மற்றும் ஆண்டிமடம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு வருகிற 30-ந் தேதி 495 வாக்குச்சாவடிகளில் 2-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

    நேற்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற செந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடி மையத்தினையும், அரியலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களையும் மாவட்ட கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார். மேலும் திருமானூர், செந்துறை ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையமான கீழப்பழூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களையும் கலெக்டர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அதிகாரி (பொறுப்பு) பாலாஜி, வட்டாட்சியர் தேன்மொழி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், போலீசார் பலர் உடனிருந்தனர்.
    ஜெயங்கொண்டத்தில் பன்றிகளை திருட முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த சரக்கு வேனையும் பறிமுதல் செய்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூரியமனால் கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா(வயது 35). இவர் பன்றிகள் வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவரது பன்றிகள் அடிக்கடி திருடுபோனது. இதுகுறித்து அவர் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமே‌‌ஷ்பாபு தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை ஜெயங்கொண்டம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் ஒரு சரக்கு வேனில் 3 பேர் சேர்ந்து பன்றிகளை ஏற்றிக்கொண்டிருந்தனர்.

    இதனை கண்ட போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் 3 பேரும் பன்றிகளை திருடி செல்ல முயன்றது தெரிய வந்தது. மேலும் அவர்கள் திருவாரூர் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ராஜா(35), கும்பகோணத்தை சேர்ந்த நாகே‌‌ஷ் மகன் தர்மா(25), கும்பகோணத்தை சேர்ந்த மாசிலாமணி மகன் மணிகண்டன்(21) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்து, சரக்கு வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
    சாரண- சாரணிய பொறுப்பாசிரியர்களுக்கான அடிப்படை பயிற்சி முகாம் இலையூர் வாரியங்காவல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
    ஜெயங்கொண்டம்:

    உடையார்பாளையம் மற்றும் செந்துறை கல்வி மாவட்டங்களை சேர்ந்த சாரண- சாரணிய பொறுப்பாசிரியர்களுக்கான அடிப்படை பயிற்சி முகாம் இலையூர் வாரியங்காவல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் செல்வவிநாயகம் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் பொய்யாமொழி முன்னிலை வகித்தார். துணை ஆய்வாளர் இளங்கோவன் வரவேற்றார்.

    முகாமில் சாரண இயக்க வரலாறு, சாரண உறுதிமொழி, சட்டம், கொடி ஏற்றும் முறை, பாடல்கள், படை கூட்டம் நடத்தும் முறை, வழிநடைப்பயணம் மேற்கொள்ளுதல், தலைமை பண்பு, கூடாரம் அமைத்தல், விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவது முதலியன குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமில் மாவட்ட கல்வி அலுவலர் சுந்தர்ராஜூ வாழ்த்தி பேசினார். இதில் சாரண- சாரணியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×