search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை கொள்ளையடிக்கப்பட்ட பீரோ
    X
    நகை கொள்ளையடிக்கப்பட்ட பீரோ

    என்ஜினீயர் வீட்டில் 30 பவுன் கொள்ளை - நள்ளிரவில் மர்ம நபர்கள் துணிகரம்

    அரியலூர் மாவட்டம் செந்துறையில் என்ஜினீயர் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறையில் இருந்து இலங்கைச்சேரி செல்லும் பாதையில் உள்ள பாரதியார் நகரை சேர்ந்தவர் காமராஜ் (வயது 54). ஜெயங்கொண்டம் ஒன்றிய அலுவலகத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மனைவி எழிலரசி மற்றும் இரண்டு மகள்களுடன் இங்கே வசித்து வருகிறார்.

    இதனிடையே காமராஜ் ஊரக உள்ளாட்சியில் இன்று நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தல் பணிக்காக சென்று விட்டார். அதனால் அவரது மனைவி, தனது மகளுடன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள அவரது தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    இந்த நிலையில் நேற்று இரவு வீட்டின் பின்பக்கம் வழியாக உள்ளே புகுந்த கொள்ளையர்கள் வீட்டின் கதவுகளை போலி சாவி கொண்டு திறந்து நுழைந்தனர். அங்கு தனி அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த 30 பவுன் தங்க நகை மற்றும் அரைகிலோ வெள்ளி பொருட்களை கொள்ளை அடித்து சென்று விட்டனர்.

    மேலும் உடைக்கப்பட்ட வீட்டின் பூட்டுகளை அங்கிருந்த தண்ணீர் வாளியில் போட்டுவிட்டு சென்றிருந்தனர்.

    இன்று காலை எழிலரசி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் திறக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து வந்த உறவினர்கள் திரண்டு சென்று செந்துறை போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    கொள்ளை குறித்து காமராஜின் உறவினர் கொளஞ்சியப்பா கூறுகையில், செந்துறை தாலுகா அலுவலகம் அருகே உள்ள சில வீடுகளில் இதே போன்று தொடர்ந்து பல்வேறு கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் இதுவரை எந்த ஒரு குற்றவாளியும் கைது செய்யப்படவில்லை. அதனாலேயே தொடர்ந்து கொள்ளை சம்பவம் நடைபெறுகிறது.

    எனவே போலீசார் துரிதமாக செயல்பட்டு கொள்ளையர்களை கைது செய்து பொருட்களை மீட்க வேண்டும். அப்போதுதான் இப்பகுதி பொதுமக்கள் அச்சமின்றி வாழமுடியும் என்றார்.

    Next Story
    ×