search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    தோழியை கொன்று நகை கொள்ளை அரசு பள்ளி ஊழியர் வாலிபருடன் கைது

    ஜெயங்கொண்டத்தில் தோழியை கொன்று நகை கொள்ளையடித்த வழக்கில் அரசு பள்ளி ஊழியர், வாலிபருடன் கைது செய்யப்பட்டார். 2 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கியுள்ளனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுதநகர் 5-வது கிராசை சேர்ந்தவர் குணசேகரன். இவர் பேரூராட்சியில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பாரதி. இவர்களுக்கு ஆதித்யன், ஆர்த்தி என்ற குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாரதியை மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு வீட்டிலிருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.1.5 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். இது குறித்து அப்போதைய எஸ்.பி., அபிநவ்குமார் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர். ஆனால் கொலையாளிகளை பிடிக்க முடியவில்லை.

    இந்தநிலையில் தற்போதைய எஸ்.பி சீனிவாசன் இவ்வழக்கின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை அமைத்து விசாரிக்க உத்தர விட்டார். விசாரணை நடத்திய தனிப்படை போலீசார் பாரதியின் எதிர் வீட்டில் வசித்து வந்த செந்தில்குமார் மனைவி ஜெயந்தி (47) மீது சந்தேகப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குபின் முரணாக பேசினார். தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஒக்கநத்தம் கிராமத்தை சேர்ந்த காமராஜ் மகன் சின்ராசு(22) என்பவருடன் சேர்ந்து பாரதியை கொலை செய்து, 15 பவுன் நகை மற்றும் ரூ. 1.5 லட்சம் பணத்தை கொள்ளையடித்ததை ஜெயந்தி ஒப்புக் கொண்டார். 

    இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து 15 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். பாரதியை , ஜெயந்தி கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்தது.

     கொலை செய்யப்பட்ட பாரதியும், ஜெயந்தியும் நெருங்கிய தோழிகளாக பழகி வந்த நிலையில் பாரதி வீட்டிற்கு ஜெயந்தி அடிக்கடி சென்று வந்தார். இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பரிவர்த்தனை இருந்து வந்தது. பாரதி வசதியுடன் இருந்த நிலையில், அவர் அணிந்திருந்த நகைகள் மீது ஜெயந்திக்கு ஆசை ஏற்பட்டது. இதையடுத்தே ஒக்கநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சின்ராசு என்பவரின் துணையுடன் பாரதியை கொலை செய்து நகையை கொள்ளையடித்துள்ளார். 

    கைதான ஜெயந்தி அவரது தந்தை இறந்ததால் கருணை அடிப்படையில் அரசு வேலை பெற்று ஜெயங்கொண்டம் அரசு பள்ளி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். பணியில் இருக்கும் போது அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் மோசடி செய்ததாக அவர் மீது புகார் எழுந்ததை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர். பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த அவர் தோழியை கொன்ற வழக்கில் மீண்டும் கைதாகியுள்ளார். பாரதியை கொன்ற ஜெயந்தி. சின்ராசு ஆகிய இருவரும் போலீஸ் பிடியில் சிக்காமல் 2 ஆண்டுகளாக சுதந்திரமாக சுற்றி திரிந்துள்ளனர். தற்போது போலீசார் விசாரணையில் சிக்கிக் கொண்டனர். 
    Next Story
    ×