search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்கு எண்ணும் மையத்தை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா பார்வையிட்ட போது எடுத்த படம்.
    X
    வாக்கு எண்ணும் மையத்தை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா பார்வையிட்ட போது எடுத்த படம்.

    வாக்கு எண்ணும் மையங்களை கலெக்டர் ரத்னா ஆய்வு

    உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள ஆண்டிமடம்- ஜெயங்கொண்டம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கான வாக்கு எண்ணும் மையங்களை கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார்.
    அரியலூர்:

    உள்ளாட்சி தேர்தலில் அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணும் மையமான விளந்தை அரசு மேல்நிலைப்பள்ளியையும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணும் மையமான ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியையும் கலெக்டர் ரத்னா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசனுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார். வாக்கு எண்ணும் மையங்களான விளந்தை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்படவுள்ள வரவேற்பு மையங்கள், வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் மற்றும் அலுவலர்கள் செல்லும் வழித்தடங்கள் அமைக்கும் பணிகளையும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவுள்ள இடங்களையும் கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார். மேலும் அவர் வாக்கு மையத்தில் மேஜைகள் அமைத்தல் மற்றும் தடுப்புகள் அமைக்க உள்ள இடங்களையும் ஆய்வு செய்தார்.

    இதையடுத்து கலெக்டர் ரத்னா கூறுகையில், உள்ளாட்சி தேர்தலில் அரியலூர் மாவட்டத்தில் 12 மாவட்ட ஊராட்சி உறுப்பினர், 113 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 201 கிராம ஊராட்சி தலைவர், 1,662 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவியிடங்களுக்கு போட்டியிடுபவர்களுக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு 2 மாவட்ட ஊராட்சி உறுப்பினர், 19 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 30 கிராம ஊராட்சி தலைவர், 249 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவியிடங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் வருகிற 30-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதில், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்தில் 44,589 ஆண் வாக்காளர்களும், 45,347 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 89,936 பேர் 158 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க உள்ளனர்.

    இதேபோல் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் 2 மாவட்ட ஊராட்சி உறுப்பினர், 19 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 35 கிராம ஊராட்சி தலைவர், 294 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவியிடங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் வருகிற 30-ந் தேதி நடக்கிறது. இதில், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் 46,201 ஆண் வாக்காளர்களும், 46,489 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 92,690 பேர் 180 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க உள்ளனர்.

    ஆய்வின்போது, திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு பெரியய்யா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குருநாதன் (ஆண்டிமடம்) சந்தானம் (ஜெயங்கொண்டம்), வட்டாட்சியர் குமரய்யா உள்பட பலர் உடனிருந்தனர்.
    Next Story
    ×