என் மலர்
அரியலூர்
- ஆண்டிமடம் அருகே மாணவர்களுக்கான கண்காட்சி போட்டி நடைபெற்றது
- வட்டார கல்வி அலுவலர் முனியம்மாள் விழாவினை துவக்கி வைத்து அறிவியல் கண்காட்சியை பார்வையிட்டு மாணவர்களை பாராட்டினார்
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் அருகே உள்ள பட்டணங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு கண்காட்சி போட்டி நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர் முனியம்மாள் விழாவினை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து அறிவியல் கண்காட்சியை பார்வையிட்டு மாணவர்களை பாராட்டினார். கண்காட்சியில் மனித உறுப்பு மண்டலம், ஊசித் துளை கேமரா, செயற்கை சூழ்நிலை மண்டலம், எரிமலை சூரிய கிரகணம், பலூன் லிப்ட், இதயதுடிப்பு மானி, பாட்டில் நீர் வீழ்ச்சி, அமில கார சோதனை போன்ற பல்வேறு படைப்புகள் மாணவர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு செய்முறை குறித்து விளக்கி கூறினர்.
முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் கண்ணகி அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவி, துணைத் தலைவி, ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் கண்காட்சியை பார்வையிட்டு மாணவர்களை பாராட்டினர். முடிவில் ஆசிரியர் சவிதா ரோஸி நன்றி கூறினார்.
- ஜெயங்கொண்டம் கழுமலை நாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது
- இதில் நந்திக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பல வண்ண மலர்களால் அலங்கரித்து தீபாராதணை காட்டப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் உள்ள பெரியநாயகி உடனுறை கழுமலை நாதர் மற்றும் விருகாம்பிகை உடனுறை பலமலைநாதர் திருக்கோவிலில் மகா சனி பிரதோஷ வழிபாடு மிக விமர்சையாக நடைபெற்றது. இதில் நந்திக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பல வண்ண மலர்களால் அலங்கரித்து தீபாராதணை காட்டப்பட்டது. தொடர்ந்து சுவாமி கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- அரியலூர் மாவட்டத்தில் அரசு பணியாளர்களுக்கான பயிற்சி நடைபெற்றது
- அரசுப் பணியாளர்கள் அனைவரும் அரசாணைகளுக்கு கட்டுப்பட்டவர்கள் என்றார்
அரியலூர்
அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் தமிழில் பெயர் பலகைகள் வைக்க வேண்டும் என்று தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் துரை தம்புசாமி ஆட்சிமொழி சட்ட வாரத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்களில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 3-வது நாளாக நடைபெற்ற அரசு பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பில் அவர் கலந்து கொண்டு மேலும் பேசுகையில்,அரசுப் பணியாளர்கள் அனைவரும் அரசாணைகளுக்கு கட்டுப்பட்டவர்கள்.
அதன்படி அலுவலக நடைமுறைகளை தமிழில் செயல்படுத்த வேண்டும். அனைத்து அலுவலகங்களிலும் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும். தமிழில் உரையாடல் வேண்டும். கோப்புகைளை தமிழிலில் கையாள வேண்டும் என்றார். தொடர்ந்து அவர், அரசுப் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தார்.அரியலூர் அரசு கலைக் கல்லூரி தமிழத் துறை உதவிப் பேராசிரியர் க.தமிழ்மாறன் கலந்து கொண்டு, மொழிப் பயிற்சி, மொழிபெயர்ப்பும், கலைச்சொல்லாக்கமும் என்ற தலைப்பில் பயிற்சி அளித்தார். கோப்புகளில் பிற மொழிகளைக் கலக்காமல் தூய தமிழில் கையாள வேண்டுமேன்றும், வார்த்தைகளை மொழி பெயர்க்கும் போது அதன் பொருள் மாறாமல் மொழி பெயர்க்க வேண்டும் என்றார். முன்னதாக தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் (பொ) க.சித்ரா வரவேற்றார்.
- அரசுப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
- நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக செவித் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர்கள் பேசினர். தொடர்ந்து அவர்கள் மாணவ, மாணவிகளுக்கு செவித்திறனை பரிசோதனை செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் தனலட்சுமி, ரமேஷ், பத்மாவதி, தங்கபாண்டி, வீரபாண்டி, கபிலேஷா ஆகியோர் செய்திருந்தனர்.
- அரியலூர் மாவட்டத்தில் மேலும் 9 கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கபட உள்ளது
- வரும் 6-ந் தேதி முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளதால்,விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் கரீப் கேஎம்எஸ் 2022-2023 சம்பா பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெல்லினை கொள்முதல் செய்வதற்கு 4 ஆம் கட்டமாக அரியலூர் வட்டத்தில் மஞ்சமேடு, தூத்தூர், கள்ளுர், முடிகொண்டான், திருவெங்கனூர், திருமானூர், கரைவெட்டி, குந்தபுரம் மற்றும் செந்துறை வட்டத்தில், படைவெட்டிகுடிகாடு, ஆகிய 9 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட கிராமங்களில் வரும் 6-ந் தேதி முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளதால், அருகில் உள்ள விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.
- ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலியானார்
- இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பாப்பாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி மகன் கார்த்தி (வயது32). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தவர். இவர் திருமணம் செய்வதற்காக சொந்த ஊருக்கு வந்து 6 மாதங்கள் ஆகிறது. அவர் அவ்வப்போது கூலி வேலைக்கு சென்று வருவதாக உறவினர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் கார்த்தி கழுவதோண்டி கரைமேடு சாலையில் உள்ள கட்டிடத்தில் பெயிண்டிங் வேலை செய்து கொண்டிருந்தார்.அப்போது அருகிலுள்ள மின்சார ஒயரில் தலை உரசவே மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே கார்த்தி உயிரி்ழந்தார்.
இச்சம்பவம் அறிந்து இடத்திற்கு சென்ற ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் ஜெகநாத், உதவி ஆய்வாளர் இளங்கோவன் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உறவினர்கள் மின்சாரத்துறையிடம் மின் ஒயரை மாற்ற பலமுறை கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததே காரணம் என உறவினர்கள் வேதனை தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
- கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மக திருவிழா நடைபெற்றது
- பக்தர்கள் சுவாமி அம்பாளுக்கு மேளதாளத்துடன் கல்யாணத்திற்கு சீர் வரிசைகள் கொண்டுவந்தனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மாதம் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 11 நாள் விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் நடைபெற்று, தொடர்ந்து மூலவர் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து பக்தர்கள் சுவாமி அம்பாளுக்கு மேளதாளத்துடன் கல்யாணத்திற்கு சீர் வரிசைகள் கொண்டுவந்தனர்.
இதில் மலர் அலங்காரத்தில் வீற்றிருந்த சுவாமி அம்பாளுக்கு அக்கினி வார்த்து வேத மந்திரங்கள் முழுங்க திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதனைத்தொடர்ந்து சுவாமி அம்பாள் கோவில் உள் பிரகாரத்தில் வீதியுலா நடைபெற்றது. இந்த திருக்கல்யாண உற்சவத்தை காண சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- செந்துறை பகுதியில் நாளை மின்தடை ஏற்படும்
- காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை துணைமின் நிலையத்திற்கு வரும் 33கி.வா மின் பாதையில் தற்போது நடைபெற்று வரும் நான்கு வழிச்சாலைக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களால் இடமாற்றும் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இங்கிருந்து மின் விநியோகம் பெரும் செந்துறை, இலங்கைச்சேரி, நல்லாம்பாளையம், உஞ்சினி, சிறுகடம்பூர், வீராக்கன், பிலாக்குறிச்சி, நாகல்குழி, கீழமாளிகை, மத்துமடக்கி, மருதூர், பொன்பரப்பி, சிறுகளத்தூர், மருவத்தூர், ராயம்புரம், சென்னிவனம், ஆனந்தவாடி, சோழன்குறிச்சி, நக்கம்பாடி, வஞ்சினபுரம், இலைக்கடம்பூர், பெரியாக்குறிச்சி, நல்லநாயகபுரம், மணப்பத்தூர், சோழன்குடிக்காடு, அயன்தத்தனூர், வங்காரம், முல்லையூர் ஆகிய பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என செந்துறை உதவி செயற்பொறியாளர் பொன்சங்கர் தெரிவித்துள்ளார்.
- அரியலூர் அருகே பாலியல் வழக்கில் கைதான வாலிபருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது
- பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு அரசு ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அடுத்த கோக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹென்றிசேவியர் மகன் ஹெலிலன்ராஜ்(வயது23). இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு 9 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அரியலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ஹெலிலன்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் குற்றவாளி ஹெலிலன்ராஜ்க்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி அனந்தன் தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு அரசு ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து ஹெலிலன்ராஜ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் ம.ராஜா ஆஜராகினார்.
- செந்துறையில் மருத்துவமனைக்கு செல்ல வழி இல்லாததால் சாலையிலேயே ஆம்புலன்ஸ் நிறுத்தும் அவலம் ஏற்பட்டது
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறையில் வட்டார தலைமை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு செந்துறை காவல் நிலையத்திலிருந்து 200 மீட்டர் தூரத்திற்கு உள்ளே செல்ல வேண்டும். அதே போன்று இந்த மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் டீக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்கள் உள்ளன. இதனால் மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சாலை பகுதியிலேயே நிறுத்தப்பட்டு இருக்கிறது.
தலைமை மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டு இருந்தபோதிலும் இந்த மருத்துவமனைக்கு வரும் அனைத்து நோயாளிகளும் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் பணியில் இருக்கும் செவிலியர்களால் அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் அடிக்கடி இந்த மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் வந்து செல்கின்றன. இருப்பினும் சாலைகளில் ஆம்புலன்ஸ்களுக்கு இடையூறாக இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து நிறுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஆம்புலன்ஸ் செல்ல வழி இல்லாததால் ஓட்டுனர் வேலு ஆம்புலன்ஸை சாலையிலேயே நிறுத்திவிட்டு மருத்துவமனைக்கு சென்றார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனவே உடனடியாக இந்த மருத்துவமனையில் போதிய மருத்துவர்களை நியமித்து 24 மணி நேரமும் மருத்துவமனை இயங்க நடவடிக்கை எடுப்பதோடு 108 ஆம்புலன்ஸ் செல்லும் பாதையில் இடையூறு இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஜெயங்கொண்டம் அருகே தந்தை பணம் தராததால் மகன் தற்கொலை செய்து கொணடார்
- மனமுடைந்த அந்தோணி வீட்டில் உள்ள பூச்சி மருந்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் உடையார்பாளையம் அருகே சவேரியார்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் அந்தோணி(வயது40). இவரது மனைவி குளோரி கிளாரா(37). இவர்களுக்கு 8ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து குழந்தை இல்லாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் அந்தோணி அவரது சகோதரர் இருவருடைய தந்தை ஆரோக்கியசாமி வாய்மொழியாக பாகம் பிரித்து கொடுத்தார். இதை ஆரோக்கியசாமி அனுபவித்துவிட்டு சொத்தை விற்று செலவு செய்து வந்துள்ளார். இந்நிலையில் அந்தோணியும் அவரது மனைவி குளோரிகிளாராவும் சேர்ந்து ஆரோக்கிய சாமியிடம் டெஸ்ட் டியூப் பேபி மூலம் குழந்தை பெற பணம் கேட்டுள்ளனர்.
இதற்கு அவர் பணம் தர மறுத்து விட்டார். இதனால் மனமுடைந்த அந்தோணி வீட்டில் உள்ள பூச்சி மருந்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். பின்னர் அவரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அந்தோணி பரிதாபமாக இறந்தார். இது குறித்து உடையார்பாளையம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் எஸ்.ஐ. மாரியப்பன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஜெயங்கொண்டத்தில் துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
- ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் முன்பு துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. மாவட்டத் துணைத் தலைவர் சிலம்புச்செல்வி தலைமை தாங்கினார். இதில் ஏ.ஐ.டி.யு.சி. மாநில பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் பணி நிரந்தரம் செய்யாமல் இருப்பதையும், ஆள் குறைப்பு நடவடிக்கையை கண்டித்தும், அரசாணை 139 மற்றும் 152ஐ மாநில அரசு ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் சி.பி.ஐ. மாவட்ட செயலாளர் ராமநாதன், சி.பி.ஐ. ஒன்றிய செயலாளர் ராஜா பெரியசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.






