என் மலர்tooltip icon

    மேற்கு வங்காளம்

    • மாநில அரசை கவிழ்ப்போம் என்று நாட்டின் உள்துறை மந்திரி எப்படி பேச முடியும். நாட்டின் அரசியலமைப்பு மாறிவிட்டதா?
    • அமித்ஷாவின் பேச்சு மேற்குவங்காளத்தில் மாநில அரசை கவிழ்க்க முயற்சிகள் நடைபெறுவதை காட்டுகிறது.

    கொல்கத்தா:

    மத்திய உள்துறை மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா கடந்த வெள்ளிக்கிழமை மேற்குவங்காளத்தின் சுரியில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது, வரும் பாராளுமன்ற தேர்தலில் மேற்குவங்காளத்தில் பாஜக 35 தொகுதிகளில் வெற்றிபெறும். அவ்வாறு 35 தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்றால் மேற்குவங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி 2025-ம் ஆண்டுக்கு மேல் நிலைக்காது' என்றார்.

    இந்நிலையில், அமித் ஷாவின் பேச்சுக்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்குவங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறுகையில், கடந்த வெள்ளிக்கிழமை அமித் ஷா பேரணி ஒன்றில் பேசினார். அது பிரச்சினையில்லை. ஆனால், ஜனநாயகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை கவிழ்ப்போம் என்று நாட்டின் உள்துறை மந்திரி எப்படி பேச முடியும். நாட்டின் அரசியலமைப்பு மாறிவிட்டதா?

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக 35 இடங்களில் வெற்றிபெற்றால் மேற்குவங்காளத்தில் மாநில அரசு அதன் முழு ஆட்சி காலத்தையும் நிறைவு செய்யாது என்று அமித் ஷா பேசக்கூடாது.

    அமித் ஷாவின் பேச்சு மேற்குவங்காளத்தில் மாநில அரசை கவிழ்க்க முயற்சிகள் நடைபெறுவதை காட்டுகிறது. உள்துறை மந்திரி அமித் ஷா ரவுடி போல் பேசக்கூடாது'என்றார்.

    • அமர்த்யா சென், மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகமான விஸ்வபாரதி பல்கலைக்கழக வளாகத்தில் தங்கி இருக்கிறார்.
    • நோட்டீஸ், அமர்த்யா சென் வீட்டு கதவிலும் ஒட்டப்பட்டுள்ளது. மின்னஞ்சலிலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    கொல்கத்தா:

    நோபல் பரிசு பெற்ற பிரபல பொருளாதார நிபுணர் அமர்த்யா சென், மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகமான விஸ்வபாரதி பல்கலைக்கழக வளாகத்தில் தங்கி இருக்கிறார்.

    இந்நிலையில், 89 வயதான அவருக்கு விஸ்வபாரதி பல்கலைக்கழகம், வெளியேற்ற நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    விஸ்வபாரதி பல்கலைக்கழக வளாகத்தில் அமர்த்யா சென்னுக்கு சட்டப்படி பாத்தியப்பட்ட 1.25 ஏக்கருக்கு பதிலாக, அவர் 1.38 ஏக்கர் நிலத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். இதன்மூலம் 13 சென்ட் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளார். அந்த நிலத்தை விட்டு அவர் வெளியேற வேண்டும்.

    இவ்விவகாரத்தில் 19-ந் தேதி பகல் 12 மணிக்கு இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும். அப்போது, அமர்த்யா சென்னோ அல்லது அவருடைய வக்கீல்களோ ஆஜராக வேண்டும்.

    எழுத்துப்பூர்வமான பதிலை, 18-ந் தேதி மாலை 6 மணிக்குள் தெரிவிக்கலாம். சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்க உரிய நடவடிக்கை எடுப்போம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த நோட்டீஸ், அமர்த்யா சென் வீட்டு கதவிலும் ஒட்டப்பட்டுள்ளது. மின்னஞ்சலிலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் தற்போது வெளிநாட்டில் இருக்கிறார். நோட்டீசுக்கு இன்னும் பதில் அளிக்கவில்லை.

    இந்நிலையில், விஸ்வபாரதி பல்கலைக்கழக செய்தித்தொடர்பாளர் மஹுவா பானர்ஜி கூறியதாவது:-

    அமர்த்யா சென், இன்னும் நோட்டீசுக்கு பதில் அளிக்கவில்லை. இ்ன்னும் சில நாட்கள் காத்திருப்போம். 19-ந் தேதிக்குள் பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கிறோம். 19-ந் தேதி, இறுதி தீர்ப்பு மூலம் இப்பிரச்சினை முடித்து வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மேற்கு வங்காள மாநிலத்தில் கடும் வெப்ப அலை வீசுகிறது.
    • இதனால் அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    கொல்கத்தா:

    இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலத்தில் கடும் வெப்ப அலை வீசுகிறது. கடுமையான வெப்பம் காரணமாக மாநிலத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    வரும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒரு வாரத்திற்கு கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஊழலை பா.ஜ.க.வால் மட்டுமே தடுக்க முடியும்.
    • மாநிலத்தின் இளைஞர்கள் பற்றி மம்தாவுக்கு கவலை இல்லை.

    கொல்கத்தா :

    பா.ஜ.க. மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா, மேற்கு வங்காள மாநிலம், பிர்பூம் மாவட்டத்தில் உள்ள சூரியில் நேற்று பா.ஜ.க. அலுவலகத்தைத் திறந்து வைத்தார். தொடர்ந்து அங்கு நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் அந்த மாநிலத்தின் முதல்-மந்திரியான திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியையும், அவரது சகோதரர் மகன் அபிஷேக் பானர்ஜியையும் கடுமையாக சாடினார்.

    அவர் பேசியபோது கூறியதாவது:-

    நாட்டில் மீண்டும் மோடி பிரதமர் ஆவதை உறுதி செய்யும் வகையில் மேற்கு வங்காள மாநில மக்கள் எங்களுக்கு 35-க்கும் அதிகமான இடங்களில் (மொத்த இடங்கள் 42) வெற்றி தேடித்தருவார்கள்.

    சட்ட விரோத குடியேற்றங்களை, பசுக்கள் கடத்தப்படுவதை, ஊழலை பா.ஜ.க.வால் மட்டுமே தடுக்க முடியும். தீதி-பாட்டிஜா (மம்தா மற்றும் அவரது சகோதரர் மகன் அபிஷேக் பானர்ஜி) குற்றங்களை அகற்ற ஒரே வழி பா.ஜ.க.தான். பயங்கரவாதத்தில் இருந்து இந்த மாநிலத்தை விடுவிக்க ஒரே வழி பா.ஜ.க. 2024 தேர்தலில் எங்களுக்கு 35 இடங்களைத் தாருங்கள். 2025-ம் ஆண்டு வரை காத்திருக்கத் தேவையில்லை. 2025-க்கு முன்னதாகவே மம்தா பானர்ஜியின் அரசு வீழ்ந்து விடும்.

    மம்தா பானர்ஜி அரசின் சமரச கொள்கைகளால்தான் ராமநவமியின் போது பல்வேறு இடங்களில் கலவரங்கள் நடந்தன.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.தான் ஆட்சிக்கு வரும். ராமநவமி பேரணிகளை தாக்கும் தைரியம் யாருக்கும் வராமல் போகும்.

    மாநிலத்தின் இளைஞர்கள் பற்றி மம்தாவுக்கு கவலை இல்லை. அவரது ஒரே குறி, தனது சகோதரர் மகனை மேற்கு வங்காளத்தின் அடுத்த முதல்-மந்திரி ஆக்குவதுதான். மத்திய அரசு திட்டங்களில் மம்தா தனது படத்தை ஒட்டுவதில்தான் கவனம் செலுத்துகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போட்டியின் முதல் இன்னிங்ஸ் முடிந்த பிறகு ஹாரி புரூக், தனது காதலி முன் சதம் அடித்தது குறித்து பேட்டியில் தெரிவித்தார்.
    • அனைவரும் எனது சதத்தை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

    16வது ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 228 ரன்கள் குவித்தது.

    229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 205 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

    இந்நிலையில், இந்த போட்டியில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஐதராபாத் அணியை சேர்ந்த ப்ரூக் 55 பந்தில் சதம் அடித்து அசத்தினார். நடப்பு ஐபிஎல் தொடரில் அடிக்கப்பட்ட முதல் சதம் இதுவாகும்.

    போட்டியின் முதல் இன்னிங்ஸ் முடிந்த பிறகு ஹாரி புரூக், தனது காதலி முன் சதம் அடித்தது குறித்து பேட்டியில் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் கூறும்போது, ''எனது காதலி இங்கே இருக்கிறார். ஆனால் எனது குடும்பத்தினர் அனைவரும் ஓய்வுக்காக சென்றுவிட்டனர். அவர்கள் அனைவரும் எனது சதத்தை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்'' என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

    • 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா அணி 205 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.
    • அதிகபட்சமாக நிதிஷ் ராணா 41 பந்துகளில் 75 ரன்களை குவித்தார்.

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்று நடக்கும் 19-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

    இதில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ஐதராபாத் அணி முதலில் களமிறங்கியது.

    தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 9 ரன்னிலும், ராகுல் திரிபாதி 9 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து இறங்கிய மார்க்ரம், அதிரடியில் மிரட்டினார். அவர் 26 பந்தில் 5 சிக்சர், 2 பவுண்டரி உள்பட அரை சதமடித்து அவுட்டானார்.

    3-வது விக்கெட்டுக்கு மார்க்ரம், புரூக் ஜோடி 72 ரன்கள் சேர்த்தது. அபிஷேக் சர்மா 17 பந்தில் 32 ரன் எடுத்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஹாரி புரூக் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார்.

    அவர் 55 பந்துகளில் 100 ரன்களுடனும், கிளாசன் 16 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இறுதியில், ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 228 ரன்களை குவித்தது. இதையடுத்து, 229 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.

    இதில், அதிகபட்சமாக நிதிஷ் ராணா 41 பந்துகளில் 75 ரன்களை குவித்தார். அடுத்ததாக, ரங்கு சிங் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் விளையாடினார். பின்னர், ஜகதீசன் 36 ரன்களும், ஷர்துல் தாகூர் 12 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 10 ரன்களும், ஆண்டிரே ரூச்சல் 3 ரன்களும் எடுத்தனர்.

    இறுதியில், 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா அணி 205 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

    இதன்மூலம், ஐதராபாத் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி அசத்தலாக வெற்றி பெற்றுள்ளது.

    • டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய ஐதராபாத் 228 ரன்கள் குவித்தது.

    கொல்கத்தா:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்று நடக்கும் 19-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, ஐதராபாத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 9 ரன்னிலும், ராகுல் திரிபாதி 9 ரன்னிலும் வெளியேறினர்.

    அடுத்து இறங்கிய மார்க்ரம், அதிரடியில் மிரட்டினார். அவர் 26 பந்தில் 5 சிக்சர், 2 பவுண்டரி உள்பட அரை சதமடித்து அவுட்டானார்.

    3-வது விக்கெட்டுக்கு மார்க்ரம், புரூக் ஜோடி 72 ரன்கள் சேர்த்தது.

    அபிஷேக் சர்மா 17 பந்தில் 32 ரன் எடுத்தார்.

    மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஹாரி புரூக் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 55 பந்துகளில் 100 ரன்களுடனும், கிளாசன் 16 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இறுதியில், ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 228 ரன்களை குவித்தது. இதையடுத்து, 229 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்குகிறது.

    • கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பா.ஜனதா கோரிக்கை விடுத்துள்ளது.
    • வாகனங்களில் சென்றவர்கள் கண்டும், காணாமல் சென்றது போலவும் இடம் பெற்று இருந்தது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் தன்பான் பகுதியை சேர்ந்த பழங்குடி இனத்தை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 4 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரதியஜனதா கட்சியில் இணைந்தனர்.

    இதற்கிடையில் அந்த பெண்களை ரோட்டில் தவழ வைத்து நூதன தண்டனை கொடுப்பது போன்ற வீடியோவை மேற்கு வங்காள மாநில பாரதிய ஜனதா தலைவர் சுகந்தா மஜூம்தார் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

    அந்த வீடியோவில் 3 பெண்களும் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும் ரோட்டில் படுத்து தவழ்ந்து ,தவழ்ந்து செல்வதும், இதனை அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் கண்டும், காணாமல் சென்றது போலவும் இடம் பெற்று இருந்தது.

    இந்த வீடியோ பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 3 பழங்குடி இன பெண்கள் பாரதியஜனதா கட்சியில் சேர்ந்ததால் ஆத்திரம் அடைந்த திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் அவர்களை மீண்டும் தங்கள் கட்சியில் சேருமாறு இந்த தண்டனையை கொடுத்ததாக பா.ஜனதா குற்றம்சாட்டி உள்ளது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பா.ஜனதா கோரிக்கை விடுத்துள்ளது. 

    • நமது நாட்டில் ஒரு ஆற்றின் கீழே சுரங்கப்பாதை அமைத்து மெட்ரோ ரெயில் இயக்குவது இதுவே முதல் முறை.
    • கொல்கத்தா மெட்ரோ ரெயில் சேவை புதிய சரித்திரம் படைத்துள்ளது.

    கொல்கத்தா :

    பொதுவாக மெட்ரோ ரெயில்கள் பூமியின் கீழே சுரங்கப் பாதை அமைத்தும், உயர் மட்டத்தில் தடம் அமைத்தும் (பறக்கும் பாதை) செல்கின்றன.

    இந்த நிலையில் மேற்கு வங்காள மாநிலத்தில் கொல்கத்தாவில் இருந்து ஹவுராவுக்கு மெட்ரோ ரெயில் இயக்குவதற்காக ஹூக்ளி ஆற்றின் கீழே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

    நமது நாட்டில் ஒரு ஆற்றின் கீழே சுரங்கப்பாதை அமைத்து மெட்ரோ ரெயில் இயக்குவது இதுவே முதல் முறை.

    அந்த வகையில் கொல்கத்தா மெட்ரோ ரெயில் சேவை நேற்று புதிய சரித்திரம் படைத்துள்ளது.

    கொல்கத்தாவின் மகாகரன் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து ஹவுரா மைதான மெட்ரோ ரெயில் நிலையம் வரையில் இந்த சுரங்கப்பாதையில் நேற்று மெட்ரோ ரெயில் வெள்ளோட்டம் விடப்பட்டது. அதில் மெட்ரோ ரெயில்வே பொது மேலாளர் உதய்குமார் ரெட்டி, அதிகாரிகள் மற்றும் என்ஜினீயர்கள் பயணம் செய்தனர்.

    இதுபற்றி மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், "கொல்கத்தா மற்றும் அதன் புறநகர் மக்களுக்கு நவீன போக்குவரத்துச் சேவையை வழங்குவதில் இது ஒரு புரட்சிகரமான நடவடிக்கை" என பெருமிதத்துடன் தெரிவித்தார்.

    • கொல்கத்தா ஐகோர்ட்டு வக்கீல் உள்பட பலரும் பாரக்பூர் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தனர்.
    • தகவல் வெளியானதும் மாணவிகள் இருவரும் தாங்கள் பதிவிட்ட வீடியோவை நீக்கி விட்டனர்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மாணவிகள் 2 பேர் சிகரெட் புகைத்தபடி தேசிய கீதம் பாடிய வீடியோ வெளியானது.

    அந்த வீடியோவில் மாணவிகள் 2 பேரும் அருவருக்கத்தக்க அங்க அசைவுகளுடன் கைகளில் சிகரெட் வைத்தப்படி தேசிய கீதம் பாடுகிறார்கள். மாணவிகள் பாடும் விதம் தேசிய கீதத்தை அவமரி யாதை செய்வதாக இருந்தது.

    இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து தேசிய கீதத்தை அவமரியாதை செய்ததாக அந்த மாணவிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இது தொடர்பாக கொல்கத்தா ஐகோர்ட்டு வக்கீல் உள்பட பலரும் பாரக்பூர் போலீஸ் கமிஷனரிடம் இது தொடர்பாக புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்ட மாணவிகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்தனர்.

    இதுபற்றிய தகவல் வெளியானதும் அந்த மாணவிகள் இருவரும் தாங்கள் பதிவிட்ட வீடியோவை நீக்கி விட்டனர். மேலும் இன்னொரு சமூக வலைதளத்தில் நேரலையாக தோன்றி விளக்கமும் அளித்தனர். அதில் விளையாட்டு தனமாக இப்படி செய்து விட்டதாகவும், இதற்காக வருந்துவதாகவும் கூறியுள்ளனர்.

    இதற்கிடையே பாரக்பூர் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். இதில் மாணவிகள் பற்றிய விபரங்கள் தெரியவந்தது. மேலும் அவர்கள் இருவர் மீதும் தேசிய சின்னங்களை அவமதிப்பது தொடர்பான சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்களை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்கு வங்காளத்தில் குர்மி சமூக மக்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.
    • குர்மலி மொழியை அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம், ஒடிசா, ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் குர்மி சமூக மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும், தங்களது மொழியான குர்மலி மொழியை அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் இணைக்க வேண்டும் என்றும் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், பழங்குடியினர் அங்கீகாரம், சர்னா மதத்தை அங்கீகரித்தல் மற்றும் அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் குர்மலி மொழியைச் சேர்ப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்கு வங்காளத்தில் குர்மி சமூக மக்கள் தீவிரமாக போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் நீடிக்கிறது.

    தென்கிழக்கு ரெயில்வேயின் முக்கியமான வழித்தடங்களான காரக்பூர்-டாடாநகர் மற்றும் ஆத்ரா-சண்டில் வழித்தடங்களில் பல்வேறு குர்மி அமைப்பினர் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக 64 எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதாக தென்கிழக்கு ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பல்வேறு இடங்களில் நடைபெற்ற ரெயில் மறியல் காரணமாக ஏப்ரல் 5ம் தேதி முதல் இதுவரை 225 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    மாநிலத்தின் தக்க்ஷின் தினாஜ்பூர், புருலியா, ஜார்கிராம் மற்றும் பாஸ்சிம் மேதினிபூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் குர்மி அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. குர்மி சமூகத்தினர் தற்போது ஓபிசி என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    • கணவர் ஜூடான் மகாதோவை அவரது மனைவி உத்தராவே கொலை செய்திருப்பது தெரியவந்தது.
    • கொலையை மறைக்க உத்தராவே உப்பை தூவி தடயங்களை அழித்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலம் புருலியாவை சேர்ந்தவர் ஜூடான் மகாதோ. இவரது மனைவி உத்தரா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    ஜூடான் மகாதோ கடந்த சில வாரங்களாக வீட்டிற்கு வரவில்லை. இதனை அறிந்த குடும்பத்தினர் அவரை பல இடங்களிலும் தேடினர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது மகனும் தந்தையை பல இடங்களில் தேடினார்.

    அப்போது வீட்டுக்கு வெளியே தந்தையின் உடல் அழுகிய நிலையில் கிடப்பதை கண்டார். அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் ஜூடான் மகாதோ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

    இதில் ஜூடான் மகாதோவின் மனைவி உத்தரா மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரது நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்த போது அவர் அதே பகுதியை சேர்ந்த சேத்திரபால் என்பவருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. எனவே போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.

    இதில் கணவர் ஜூடான் மகாதோவை அவரது மனைவி உத்தராவே கொலை செய்திருப்பது தெரியவந்தது. மேலும் கொலையை மறைக்க அவர் உப்பை தூவி தடயங்களை அழித்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்த போது, உத்தராவுக்கும் சேத்திரபாலுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்தது. இதனை அறிந்த ஜூடான் மகாதோ மனைவியை கண்டித்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த உத்தரா, கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க இடைஞ்சலாக இருந்த கணவரை கொல்ல முடிவு செய்துள்ளார்.

    இதையடுத்து கள்ளக்காதலன் துணையுடன் கணவர் ஜூடான் மகாதோவை கொலை செய்து பிணத்தை வெளியே வீசியுள்ளார். அதன்பின்பு ஜார்கண்ட் மாநிலம் சென்று அங்கு கள்ளக்காதலனுடன் வாழ்க்கை தொடர முடிவு செய்துள்ளார். ஆனால் போலீசாரின் விசாரணையில் அவர் சிக்கி கொண்டார்.

    இதையடுத்து போலீசார் உத்தராவை கைது செய்தனர். மேலும் ஜார்கண்டில் பதுங்கி இருந்த அவரது கள்ளக்காதலன் சேத்திரபாலுவும் கைது செய்யப்பட்டார். மேற்கு வங்காளத்தில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×