என் மலர்tooltip icon

    தெலுங்கானா

    • ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். இணைந்து ஆடிய நடனம் உலகம் முழுவதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
    • பார்வையாளர்கள் உற்சாகம் அடைந்து கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

    டைரக்டர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் உலக அளவில் ஹிட் ஆகி ஆஸ்கர் விருதையும் வென்றது. குறிப்பாக நாட்டு நாட்டு பாடலுக்கு ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் இணைந்து ஆடிய நடனம் உலகம் முழுவதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

    சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை குவித்த இந்த பாடலுக்கு சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், பல்வேறு நாடுகளின் தூதர்கள் என பலரும் 'ரீல்ஸ்' நடனமாடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன. இந்நிலையில் கடந்த வாரம் ஐதராபாத்தில் முதல் முறையாக நடைபெற்ற உலக பிரசித்தி பெற்ற 'டபிள்யூ.டபிள்யூ.ஈ.' போட்டிகளில் மல்யுத்த வீரர்கள் ட்ரூ மிக்கின்டைர், ஜிண்டர்மகால், சாமிஜெயின், கெவின் ஓவன்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் போட்டி நடந்த மேடையில் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடினர். இதைப்பார்த்த பார்வையாளர்கள் உற்சாகம் அடைந்து கைதட்டி ஆரவாரம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி 60 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்து வருகிறது.

    • காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி உறுப்பினர்களின் கூட்டம் ஐதராபாத்தில் நடந்தது.
    • இதில் முன்னாள் நிதி மந்திரியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் பங்கேற்றார்.

    ஐதராபாத்:

    காங்கிரஸ் கட்சியின் புதிய காரிய கமிட்டி உறுப்பினர்களின் முதல் கூட்டம் ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் தெலுங்கானா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

    இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் நிதி மந்திரியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை நாங்கள் முற்றிலுமாக நிராகரிக்கிறோம். இது அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதலாகவே பார்க்கிறோம்.

    இதைச் செயல்படுத்தக் குறைந்தது 5 அரசியலமைப்பு திருத்தங்கள் தேவைப்படும். இந்த அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களை நிறைவேற்ற பா.ஜ.க.வில் போதிய அளவில் எம்.பி.க்கள் இல்லை. இது அவர்களுக்கும் நன்கு தெரியும்.

    இருப்பினும், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற மாயையை முன்வைத்து உண்மையான பிரச்சினைகளைத் திசை திருப்பப் பார்க்கிறார்கள் என தெரிவித்தார்.

    • மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெலுங்கானாவில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஐதராபாத்தில் உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்தார்.

    ஐதராபாத்:

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெலுங்கானா மாநிலத்தில் இன்று பயணம் மேற்கொண்டுள்ளார்.

    இந்நிலையில், ஐதராபாத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

    இதுதொடர்பாக, அமித்ஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவை ஐதராபாத்தில் இன்று சந்தித்தேன். விளையாட்டுத் திறமைக்காக அவர் பெற்றுள்ள சர்வதேச அங்கீகாரத்தில் தேசம் பெருமிதம் கொள்கிறது. அவரது அர்ப்பணிப்பு, கடின உழைப்பு ஆகியவை இளைய தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.

    • தெலுங்கானா மாநில அரசு அதிகாரிகள் கடந்த ஆகஸ்டு மாதம் இறுதியில்சென்னை வந்தனர்.
    • இத்திட்டத்தை வரும் அக்டோபர் 24ம் தேதி முதல் செயல்படுத்த அரசாணை வெளியீடு.

    தமிழகத்தில் முதலமைச்சர் காலை உணவு திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 18 லட்சம் மாணவ-மாணவிகள் பயன் அடைகிறார்கள். பள்ளிக்கு காலை உணவு சாப்பிடாமல் மாணவர்கள் வருவதால் கல்வி கற்பதில் ஏற்படும் சிரமங்கள், பள்ளி இடைநிற்றலை தவிர்த்தல் போன்ற காரணத்திற்காக இத்திட்டம் செயல்படுத்துவதால் பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன.

    பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அது போலவே இத்திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துகிறார்கள் என்பதை பார்ப்பதற்காக தெலுங்கானா மாநில அரசு அதிகாரிகள் கடந்த ஆகஸ்டு மாதம் இறுதியில்சென்னை வந்தனர்.

    அவர்கள் வட சென்னை பகுதியில் காலை உணவு தயாரிக்கும் சமையல் கூடங்களை பார்வையிட்டனர். சென்னை வந்த தெலுங்கானா மாநில முதலமைச்சரின் செயலாளர் ஸ்மிதா சபர்வால், அரசு பழங்குடியினர் நலத்துறை, செயலாளர் டாக்டர்.கிறிஸ்டினா சொங்து, கல்வித்துறை செயலாளர் கருணா வக்காட்டி, முதலமைச்சரின் சிறப்புப் பணி அலுவலர் பிரியங்கா வர்கீஸ், பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் துறை அரசு சிறப்புச் செயலாளர் பாரதி ஹொல்லிக்கேரி, உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் ராயபுரத்தில் உணவு தயாரிக்கும் கூடம் மற்றும் மாநகராட்சி உருது தொடக்க பள்ளியில் திட்ட செயல்பாடுகளை பார்வையிட்டனர்.

    அவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அலுவலர் இளம்பகவத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.

    இந்நிலையில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தெலுங்கானா அரசு அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது.

    அதன்படி, 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இத்திட்டத்தை வரும் அக்டோபர் 24ம் தேதி முதல் செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    • மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 26-ஐ எட்டியுள்ளது.
    • முதல்வர் கே.சி.ஆரின் மருமகன், சுகாதாரத்துறை அமைச்சர் ஹரிஷ் ராவ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    தெலுங்கானா மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு மருத்துவக் கல்லூரியாவது நிறுவ வேண்டும் என்ற அரசின் குறிக்கோளின் ஒரு பகுதியாக, தெலுங்கானா முதல்வர் முதல்வர் கே.சி.சந்திரசேகர் ராவ் 9 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைத்தார்.

    காமரெட்டி, கரீம்நகர், கம்மம், கும்ரம் பீம் ஆசிபாபாத், ஜெயசங்கர் பூபாலப்பள்ளி, ஜங்கான், நிர்மல், ராஜண்ணா சிர்சில்லா மற்றும் விகாராபாத் ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்நிகழ்ச்சியில், முதல்வர் கே.சி.ஆரின் மருமகன், சுகாதாரத்துறை அமைச்சர் ஹரிஷ் ராவ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து முதல்வர் சந்திரசேகர் ராவ் கூறியதாவது:-

    நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தெலங்கானாவில் 34 அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 26-ஐ எட்டியுள்ளது. மேலும், 8 கல்லூரிகள் அடுத்த கல்வியாண்டு தொடக்கத்தில் திறக்கப்பட உள்ளன.

    2014-ல் மருத்துவ இடங்களின் எண்ணிக்கை 2,850 ஆக இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 8,515 ஆக அதிகரித்து உள்ளது. அடுத்த எட்டு புதிய கல்லூரிகள் திறப்பு விழாவுடன் மாநிலத்தில் ஆண்டுக்கு 10,000 மருத்துவர்களை உருவாக்கும்.

    2014ல் மாநிலத்தில் மருத்துவமனை படுக்கைகளின் எண்ணிக்கை 17,000 ஆக இருந்தது. தற்போது அது 34,000ஐ எட்டியுள்ளது. அந்த எண்ணிக்கை விரைவில் 50,000 ஐ எட்டும், மேலும் மருத்துவமனைகளில் உள்ள அனைத்து 50,000 படுக்கைகளும் விரைவில் ஆக்ஸிஜன் வசதிகளைக் கொண்டிருக்கும். எந்த நெருக்கடியான சூழலையும் சமாளிக்க தெலுங்கானா 500 டன் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கிறது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதுடன், பாராமெடிக்கல் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க நர்சிங் கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களை நிறுவுமாறு சுகாதார அமைச்சர் டி. ஹரிஷ் ராவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    சுகாதாரம் தொடர்பான குறிகாட்டிகளில் எஐடிஐ ஆயோக் வழங்கிய தரவரிசையில் தெலுங்கானா 2014ல் 11 வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு வந்துள்ளது. மாநிலத்தில் தாய் இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு விகிதம் குறைந்துள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    • போலீசார் லட்சுமிபதியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பெங்களூருவில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர்.
    • அனைத்து விசயங்களையும் தெரிந்து கொண்ட அவர் இதுபோன்று மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்றார்.

    பெங்களூரு:

    தகவல் தொழில்நுட்ப நகரான பெங்களூருவில் நாளுக்கு நாள் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பெங்களூருவில் இயங்கி வரும் ஒரு தனியார் வங்கியுடன் தொடர்புடைய தனியார் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு பரிசு கூப்பன்கள் வழங்கப்பட்டன. அந்த கூப்பன்களை சட்ட விரோதமாக பயன்படுத்தி அந்த நிறுவனத்தின் இணையதளத்தின் சர்வரை முடக்கி தங்கம், வெள்ளி, மோட்டார் சைக்கிள்கள், மடிக்கணினி உள்ளிட்ட பொருட்கள் வாங்கி மர்ம நபர் ஒருவர் மோசடி செய்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நிறுவனம் சார்பில் தென்கிழக்கு சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் தனியார் வங்கியின் தொடர்புடைய இணையதளத்தின் சர்வரை முடக்கி நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டவர் ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த லட்சுமிபதி (வயது 23) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    புகழ் பெற்ற ஒரு கல்லூரியில் கணினி அறிவியலில் பி.டெக் படித்துள்ள லட்சுமிபதி ஹேக்கராக செயல்பட்டு வந்துள்ளார். இவர் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் இணையத்தை முடக்கி, வாடிக்கையாளர்களின் பரிசுக்கூப்பன்களை திருடி பொருட்களை வாங்கி குவித்துள்ளார். மேலும் பரிசுக்கூப்பன்களுக்கு வழங்கப்படும் வெகுமதி புள்ளியை (ரிவார்டு பாயிண்ட்) பணமாக மாற்றி உள்ளார். இந்த கூப்பன்களை கணிசமான அளவு டிஜிட்டல் கரன்சியாக மாற்றியுள்ளார்.

    இதில் அவர் வாங்கி குவித்த 5 கிலோ தங்க நகைகள், தங்க கட்டிகள், வெள்ளி பொருட்கள், செல்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் 7 மோட்டார் சைக்கிள்கள், ரூ.11 லட்சம் ரொக்கம் என ரூ.4¼ கோடி பொருட்களை போலீசார் மீட்டனர். இதுமட்டுமல்லாது லட்சுமிபதிக்கு சொந்தமான வங்கி கணக்கில் இருந்த ரூ.29 லட்சம் முடக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் லட்சுமிபதியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பெங்களூருவில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர்.

    ஹேக்கர் லட்சுமி பதியிடம் இருந்து மீட்கப்பட்ட பொருட்கள் பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதனை பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் தயானந்த் பார்வையிட்டார்.

    இது குறித்து போலீஸ் கமிஷனர் கூறுகையில் பெங்களூருவில் இயங்கி வந்த பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் இணையத்தை முடக்கி ரூ.4.¼ கோடி பொருட்களை வாங்கி மோசடி செய்த ஆந்திர ஹேக்கர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது இதற்கு முன்பு பெங்களூருவில் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இதுவே முதல் வழக்கு ஆகும். இவர் துபாய் போன்ற வெளிநாடுகளில் வேலை செய்துள்ளார். 2 வருடங்களுக்கு முன்பு ஊருக்கு வந்த அவர் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்துள்ளார். அதில் அனைத்து விசயங்களையும் தெரிந்து கொண்ட அவர் இதுபோன்று மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்றார்.

    • ஓட்டல் ஊழியருக்கும், லியாகத் அலியின் நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து ஓட்டல் ஊழியர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் தராபாத், பஞ்சகுட்டா அடுத்த சந்திராயன் குட்டாவை சேர்ந்தவர் லியாகத் அலி (வயது 30).

    நேற்று முன்தினம் இரவு லியாகத் அலி அதே பகுதியில் உள்ள ஓட்டலுக்கு தனது நண்பர்களுடன் உணவு சாப்பிட சென்றார். லியாகத் அலி தனது நண்பர்கள் அனைவருக்கும் பிரியாணி ஆர்டர் செய்தார்.

    ஓட்டல் ஊழியர் பிரியாணி சப்ளை செய்தார். பிரியாணியை சாப்பிட ஆரம்பித்த லியாகத் அலி மற்றும் அவரது நண்பர்கள் பிரியாணி ருசியாக இல்லை என ஓட்டல் ஊழியரிடன் தெரிவித்தனர்.

    இதனால் ஓட்டல் ஊழியருக்கும், லியாகத் அலியின் நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தை கண்ட ஓட்டல் ஊழியர்கள் அனைவரும் ஒன்று கூடினர்.

    இதையடுத்து ஓட்டலின் ஷட்டரை இழுத்து மூடினர். பின்னர் ஓட்டல் ஊழியர்கள் ஒன்று சேர்ந்து லியாகத் அலி மற்றும் அவரது நண்பர்களை சரமாரியாக தாக்கினர். வலி தாங்க முடியாமல் கதறி துடித்தனர்.

    இருப்பினும் ஆத்திரம் தீர தாக்கிய ஓட்டல் ஊழியர்கள் பின்னர் அவர்களை வெளியே தூக்கி வீசினர். படுகாயம் அடைந்த லியாகத் அலியை மீட்ட அவரது நண்பர்கள் சிகிச்சைக்காக அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் லியாகத் அலி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் லியாகத் அலியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து ஓட்டல் ஊழியர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம்.
    • 6 மணிநேரம் தரிசனம் நிறுத்தப்பட்டது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. இதற்காக 6 மணிநேரம் தரிசனம் நிறுத்தப்பட்டது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 18-ந்தேதி முதல் 26-ந் தேதி வரை பிரம்மோற்சவம் நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. இதுகுறித்து தேவஸ்தான தலைவர் பூமண கருணாகர் ரெட்டி கூறியதாவது:-

    ஆண்டுக்கு நான்கு முறை ஆழ்வார் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம். உகாதி, ஆனிவார ஆஸ்தானம், பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறும். அதன்படி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

    காலை 6 மணி முதல் 11 மணி வரை கோவில் சுத்திகரிப்பு நிகழ்ச்சியை அர்ச்சகர்கள் செய்தனர். ஆனந்த நிலையம் முதல் தங்கவாசல் வரை, கோவிலுக்குள் உள்ள உபகோவில்கள், கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் உள்ளிட்டவை தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது. அப்போது சுவாமியின் மூலவிரட்டு முழுவதும் துணியால் மூடப்பட்டிருந்தது.

    சுத்திகரிப்புக்கு பிறகு, நாமகோபு, ஸ்ரீசூரணம், கஸ்தூரி மஞ்சள், கற்பூரம், சந்தனம், குங்குமம், கிச்சிலிக்கட்டா உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கலந்த புனித நீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது. அதையடுத்து, அர்ச்சகர்கள் சுவாமியின் மூலவிரட்டை மூடியிருந்த துணியை அகற்றி, சிறப்பு பூஜை மற்றும் பிரசாதம் வழங்கினர்.

    ஆழ்வார் திருமஞ்சனத்தை முன்னிட்டு காலை 5 மணி முதல் 11 மணிவரை 6 மணிநேரம் தரிசனம் நிறுத்தப்பட்டிருந்தது. பகல் 11 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அங்கன்வாடி ஆசிரியர்களுக்கு மாத ஊதியமாக ரூ.13,650 மற்றும் மினி அங்கன்வாடி ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.7,800 வழங்கப்படுகிறது.
    • மாநில அரசின் முடிவால் மாநிலம் முழுவதும் உள்ள 70,000 அங்கன்வாடிகள் பயன்பெறும் என்றார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் அங்கன்வாடி ஆசிரியர்கள், மினி அங்கன்வாடி ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்களின் ஓய்வுபெறும் வயது 60-ல் இருந்து 65 ஆக மாநில அரசு உயர்த்தியுள்ளது.

    இதற்கான அரசாணையை நேற்று அரசு வெளியிட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சத்யவதி ரத்தோட், இந்த நடவடிக்கைக்கு முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு நன்றி தெரிவித்தார்.

    அங்கன்வாடி ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு நாட்டிலேயே தெலுங்கானா அரசு அதிக சம்பளம் வழங்கி வருவதாக கூறிய அவர், அங்கன்வாடி ஆசிரியர்களுக்கு மாத ஊதியமாக ரூ.13,650 மற்றும் மினி அங்கன்வாடி ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.7,800 வழங்கப்படுகிறது.

    மாநில அரசின் இந்த முடிவால் மாநிலம் முழுவதும் உள்ள 70,000 அங்கன்வாடிகள் பயன்பெறும் என்றார்.

    • வங்கி ஊழியரான இவர் மங்களூருவில் நடைபெற்ற வணிக மாநாட்டில் கலந்து கொள்ள வந்ததும் தெரியவந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மங்களூரு:

    கர்நாடக மாநிலம் மங்களூருவில் பிரபல தனியார் ஓட்டல் நீச்சல் குளத்தில் வாலிபர் ஒருவர் பிணமாக மிதப்பதாக மங்களூரு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது பிணமாக கிடந்தவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கோபு ஆர்.நாயர் (38) என்பதும், வங்கி ஊழியரான இவர் மங்களூருவில் நடைபெற்ற வணிக மாநாட்டில் கலந்து கொள்ள வந்ததும் தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கோபு ஆர்.நாயர் நேற்று காலை 11 மணியளவில் ஓட்டலுக்கு வந்ததும் பின்னர் மாலை 4 மணியளவில் நீச்சல் அடிக்க சென்றபோது நீச்சல் குளத்தில் இறந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் குடிபோதையில் கட்டுப்பாட்டை இழந்து நீச்சல் குளத்தில் நீந்தியதால் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று தெரியவந்தது.

    இதையடுத்து அந்த ஓட்டலில் இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது குடிபோதையில் கோபு ஆர்.நாயர் நீச்சல் குளத்தில் இறங்கி குளித்தபோது இறந்த காட்சிகள் பதிவாகி இருந்தது. மேலும் அவர் தங்கி இருந்த அறையிலும் காலி மதுபான பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரது உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மங்களூரு தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வருண பகவானை மகிழ்விக்க மூன்று நாட்கள் மகா சாந்தி வருண யாகம்.
    • ருத்விக்குகள் வைகானச ஆகம சாஸ்திரப்படி நடத்தினர்.

    திருப்பதி:

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் அஷ்டோத்தர சத குண்டத்மக மகா சாந்தி வருண யாகம் நடந்து வந்தது. நிறைவு நாளான நேற்று திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மா ரெட்டி, அறங்காவலர் குழு தலைவர் பூமண.கருணாகர்ரெட்டி எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்று கோபூஜை செய்து, பசுக்களுக்கு வெல்லம், பச்சரிசி, பழம் ஆகியவற்றை வழங்கினர். அதன் பிறகு இருவரும் மகா பூர்ணாஹுதி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    அப்போது அறங்காவலர் குழு தலைவர் நிருபர்களிடம் பேசுகையில், வருண பகவானை மகிழ்விக்க மூன்று நாட்கள் அஷ்டோத்தர சத குண்டத்மக மகா சாந்தி வருண யாகம் நடந்தது. இந்த யாகத்தை மூன்று மாநிலங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ருத்விக்குகள் வைகானச ஆகம சாஸ்திரப்படி நடத்தினர். இதன் மூலம் போதிய மழைப் பெய்து நாடும், மாநிலமும் செழிக்க வேண்டும், என்றார்.

    யாக நிகழ்ச்சியில் தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன், சிறப்பு நிலை துணை அதிகாரி வரலட்சுமி, ஏழுமலையான் கோவில் தலைமை அர்ச்சகர்களில் ஒருவரான வேணுகோபால தீட்சிதலு, அனைத்துத் திட்ட அலுவலர் ராஜகோபால், இந்து தர்ம பிரசார பரிஷத் செயலாளர் சீனிவாசலு, உதவி அதிகாரி கோபிநாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • உடனடியாக அவனது பெற்றோர் விஜயவாடாவில் உள்ள குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • சி.ஆர்ம் எக்ஸ்ரே என்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, நவீன அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.

    தெலுங்கானா மாநிலம், கம்மம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக், இவரது மனைவி துர்கா தம்பதியின் மகன் நெகன் ஆர்யா(வயது 7).

    இவனுக்கு சில நாட்களுக்கு முன், கடும் வயிற்று வலியும், வாந்தியும் ஏற்பட்டது. உடனடியாக அவனது பெற்றோர் விஜயவாடாவில் உள்ள குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு மருத்துவர்கள் நெகனின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தனர்.

    அப்போது உருண்டை வடிவிலான பல பொருட்கள் இருப்பது தெரியவந்தது. பெற்றோரிடம் விசாரித்த போது, சிறிய காந்த உருண்டைகள் கொண்ட பொம்மைகளை வைத்து அவன் விளையாடுவது வழக்கம் என தெரிவித்தனர்.

    இதையடுத்து, சி.ஆர்ம் எக்ஸ்ரே என்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, நவீன அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. சிறுகுடல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50 காந்த உருண்டைகள் வெளியே எடுக்கப்பட்டன.

    பின்னர் சில மணிநேரம் ஐ.சி.யு வார்டில் முழு கண்காணிப்பில் வைத்தனர். இப்போது, சிறுவன் நெகன் ஆர்யா முழுமையாக குணமடைந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    ×