என் மலர்
தெலுங்கானா
- கன்னட அமைப்பினரின் எதிர்ப்பைத் தொடர்ந்து மேடையில் இருந்து நடிகர் சித்தார்த் வெளியேறினார்.
- சித்தார்த்தை தொந்தரவு செய்வதை ஏற்க முடியாது என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி', 'சிந்துபாத்' உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்துள்ள திரைப்படம் 'சித்தா'. இந்த படத்தை நடிகர் சித்தார்த் தன்னுடைய இடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.
இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நேற்று வெளியாகி உள்ளது. இந்த நிலையில் 'சித்தா' படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகர் சித்தார்த் பெங்களூரு சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு நடிகர் சித்தார்த் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த கன்னட அமைப்பினர் இந்த புரொமோஷன் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். காவிரி விவகாரத்தில் கன்னட அமைப்பினர், தமிழ்நாட்டிற்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தமிழ் நடிகரான சித்தார்த்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கன்னட அமைப்பினரின் எதிர்ப்பைத் தொடர்ந்து மேடையில் இருந்து நடிகர் சித்தார்த் வெளியேறினார். இதையடுத்து அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் சித்தார்த்தை தொந்தரவு செய்வதை ஏற்க முடியாது என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "நீண்ட காலமாக இருக்கும் பிரச்சனையை தீர்க்காமல் வைத்திருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும், மத்திய அரசை தலையிட வைக்க அழுத்தம் கொடுக்காத எம்.பி.க்களையும் கேட்பதற்கு பதிலாக, சாதாரண மக்களையும் , சித்தார்த் போன்ற கலைஞர்களையும் தொந்தரவு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு கன்னடராக அனைத்து கன்னட மக்களின் சார்பாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்று அதில் பிரகாஷ் ராஜ் பதிவிட்டுள்ளார்.
Instead of questioning all the political parties and its leaders for failing to solve this decades old issue.. instead of questioning the useless parliamentarians who are not pressurising the centre to intervene.. Troubling the common man and Artists like this can not be… https://t.co/O2E2EW6Pd0
— Prakash Raj (@prakashraaj) September 28, 2023
- அலுவலகத்தில் இருந்து வீடு திரும்ப சுமார் 5 மணிநேரம் ஆனதாக பலர் தெரிவித்தனர்.
- சில பள்ளி பஸ்கள் இரவு 8 மணிக்கே மாணவ-மாணவிகளை வீடுகளில் இறக்கி விட்டுள்ளன.
பெங்களூரில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மதியத்துக்கு பிறகு சாலைகளில் வாகனங்களில் சென்றவர்கள் கடுமையான சிரமத்திற்குள்ளானார்கள். போக்குவரத்து நெரிசல் காரணமாக பல மணி நேரமாக வாகனங்கள் சாலைகளில் சிக்கி திணறின.
சுமார் 5 மணிநேரத்துக்கு மேலாகவும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர். அலுவலகத்தில் இருந்து வீடு திரும்ப சுமார் 5 மணிநேரம் ஆனதாக பலர் தெரிவித்தனர்.
பெங்களூர் வெளிவட்ட சாலைகளில் போக்குவரத்து மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. அலுவலகத்துக்கு சென்றவர்களும், வீடுகளுக்கு சென்றவர்களும் பல மணி நேரம் சாலையிலேயே தவித்தனர். 1 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க சுமார் 2 மணி நேரம் வரை ஆனதாக வாகன ஓட்டிகள் கூறினர்.
இதனால் வேலைக்கு சென்றவர்கள் இரவு 9 மணிக்கு முன்பு அலுவலகத்தை விட்டு வெளியேற வேண்டாம் என்றும், வெளி வட்ட சாலை, மாரத்த ஹள்ளி, சர்ஜபுரா மற்றும் சில்க் போர்டு சாலைகளை பயன் படுத்த வேண்டாம் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதே போல் பள்ளிக் குழந்தைகள் மாலையில் பள்ளி முடித்து வீடு திரும்புவதிலும் அதிக தாமதம் ஏற்பட்டது. சில பள்ளி பஸ்கள் இரவு 8 மணிக்கே மாணவ-மாணவிகளை வீடுகளில் இறக்கி விட்டுள்ளன.
பெல்லந்தூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக இரு சக்கர வாகனங்கள் அனைத்தும் நடைபாதையிலேயே சென்றன. இதனால் பொது மக்கள் நடந்து செல்லக் கூட முடியவில்லை.
பெங்களூர் வெளி வட்ட சாலையில் நகைச்சுவை நடிகர் டிரேவர் நோவா பங்கேற்ற நிகழ்ச்சி நடை பெறுவதாக இருந்தது. அவரது நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கிய பலர் தங்கள் அலுவலகங்களை விட்டு சீக்கிரமே கிளம்பினர். டிரேவர் நோவாவும் நெரிசலில் சிக்கினார். இதனால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் வெளிவட்ட சாலை வழியாக சென்றதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் தொடர் விடுமுறை காரணமாக பலர் வெளியிங்களுக்கு வாகனங்களில் சென்றனர். பல இடங்களில் வாகனங்கள் பழுதடைந்து சாலைகளில் நின்றன. பெரும்பாலான பகுதிகளில் விநாயகர் ஊர்வலம் நடந்தது. பல சாலைகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது.
மேலும் வழக்கமாக சாலையில் 1½ லட்சம் முதல் 2 லட்சம் வாகனங்கள் செல்லும். நேற்று 3.59 லட்சம் வாகனங்கள் சென்றன. இதனால் பெங்களூரு நகரம் நேற்று கடும் போக்குவரத்து நெரிசலை சந்தித்ததாக கூறப்படுகிறது.
- ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் பச்சோந்தி போல நிறம் மாறக்கூடிய சேலை செய்ய விஜயிடம் அணுகினார்.
- விஜய் தற்போது ரூ.25 லட்சம் மதிப்பில் ஒரு சேலையை நெசவு செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் நல்ல விஜய். இவர் விதவிதமான சேலைகளை தயாரித்து வருகிறார். கடந்த காலங்களில் இவர் மணம் வீசக்கூடிய சேலைகளை தயாரித்தார்.
இதற்காக மூலிகைகளை பயன்படுத்தினார். மேலும் ஊசி முனையில் நுழையக்கூடிய புடவை ஒன்றையும் உருவாக்கி சாதனை படைத்தார்.
இந்த நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் இவரிடம் பச்சோந்தி போல நிறம் மாறக்கூடிய சேலை செய்ய அணுகினார்.
இதனை தொடர்ந்து விஜய் ரூ.2.80 லட்சம் செலவில் நிறம் மாறக்கூடிய சேலை ஒன்றை தயாரித்தார்.
இந்த சேலையை தயாரிக்க 30 கிராம் தங்கம் மற்றும் 500 கிராம் வெள்ளியை உருக்கி கலவையாக சேர்த்துள்ளார். பகல், இரவு மற்றும் மின் வெளிச்சத்திற்கு ஏற்றபடி இந்த புடவை 3 விதமான நிறங்களில் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும் என தெரிவித்தனர்.
பச்சோந்தி போல நிறம் மாறக்கூடிய சேலை வெகுவாக கவர்ந்துள்ளது. அவரிடம் தொழிலதிபர் ரூ.2.80 லட்சம் கொடுத்து சேலையை பெற்றுக் கொண்டார்.
விஜய் தற்போது ரூ.25 லட்சம் மதிப்பில் ஒரு சேலையை நெசவு செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
- திட்டத்திற்கு அரசு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
- உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் வரை காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் தொடங்கப்பட்ட உடனே தெலுங்கானா மாநிலத்தில் இருந்து அதிகாரிகள் தமிழகம் வந்தனர். அவர்கள் சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் செயல்ப டுத்தப்படும் காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வருகிற அக்டோபர் 24-ந் தேதி முதல் தெலுங்கானா மாநில அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்படுகிறது.
இந்த திட்டத்திற்கு அரசு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் வரை காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
- குமாரசாமியை முதல்-மந்திரி ஆக்க வேண்டும் என்று நாங்கள் யாருடைய வீட்டிற்கும் செல்லவில்லை.
- காங்கிரஸ் ஒரு குடும்பத்திற்காக அரசியல் செய்கிறது.
பெங்களூரு:
முன்னாள் பிரதமர் தேவகவுடா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
எனது 60 ஆண்டு கால அரசியல் போராட்டத்தில் எந்த சமுதாயத்திற்கும் அநீதி ஏற்பட ஜனதா தளம் (எஸ்) விடவில்லை. கர்நாடகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அமைந்தது. 14 மாதங்களில் அந்த அரசு கவிழ்ந்தது. கூட்டணி ஆட்சியை கலைத்தவர்கள் யார்?. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை மும்பைக்கு அனுப்பி வைத்தவர்கள் யார்?. பா.ஜனதா ஆட்சி அமைய யார் காரணம்?. குமாரசாமியை முதல்-மந்திரி ஆக்க வேண்டும் என்று நாங்கள் யாருடைய வீட்டிற்கும் செல்லவில்லை.
ஆனால் அவரை முதல்-மந்திரி ஆக்குமாறு காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தினர். எக்காரணம் கொண்டும் காங்கிரஸ் சகவாசம் வேண்டாம் என்று நான் கூறினேன். இதை காங்கிரஸ் தலைவர்கள் ஏற்கவில்லை. இப்போது பா.ஜனதாவுடன் ஜனதா தளம் (எஸ்) கூட்டணி வைத்தது ஏன்? என்று காங்கிரசார் கேள்வி எழுப்புகிறார்கள். எங்கள் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ., எம்.எல்.சி.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்களிடம் ஆலோசனை நடத்தியே முடிவு எடுத்தோம்.
குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சியை கவிழ்த்தது யார் என்பது குறித்து விவாதிக்க வேண்டியது அவசியம். ராகுல் காந்தி பேசும்போது, ஜனதா தளம் (எஸ்) கட்சியை பா.ஜனதாவின் 'பி-டீம்' என்று பேசினார். அவர் பேசுவதற்கு முன்பு உண்மை நிலையை ஆராய்ந்து பேசி இருக்க வேண்டும். காங்கிரசால் மதச்சார்பின்மை, ஜனநாயகத்தை காப்பாற்ற முடியுமா?. காங்கிரஸ் ஒரு குடும்பத்திற்காக அரசியல் செய்கிறது.
மாநிலங்களவை தேர்தலில் பாரூக்கை நிறுத்தினோம். அவரை காங்கிரஸ் தோற்கடித்தது. குமாரசாமியால் அரசியல் வாழ்க்கை பெற்ற செலுவராயசாமியை மந்திரி ஆக்கியுள்ளனர். எங்கள் கட்சிக்கு காங்கிரஸ் மோசம் செய்தது தொடர்பாக 100 உதாரணங்களை என்னால் கூற முடியும். எல்லா கட்சிகளும் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்த கட்சிகள் தான்.
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியை தோற்கடிக்க அங்கு பா.ஜனதாவுடன் கம்யூனிஸ்டு கட்சிகள் சேர்ந்து செயல்பட்டது அனைவருக்கும் தெரியும். நாங்கள் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்தாலும், மதசார்பற்ற கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டோம். இதுகுறித்து உள்துறை மந்திரி அமித்ஷாவிடமே கூறியுள்ளேன்.
இவ்வாறு தேவகவுடா கூறினார்.
- பிரதமர் மோடி பங்கேற்கும் வகையில் பிரமாண்டமான பொதுக்கூட்டங்களை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
- ஏற்பாடுகளை பாஜக எம்.பி. லட்சுமணன் மற்றும் மாநில பா.ஜ.க தலைவர் கிஷன்ரெட்டி ஆகியோர் செய்து வருகின்றனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.க. பல்வேறு வீயூகங்களை வகுத்து வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி பங்கேற்கும் வகையில் பிரமாண்டமான பொதுக்கூட்டங்களை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
அதன்படி வருகிற 1-ந் தேதி தெலுங்கானா மாநிலம் மகபூப்நகர் மற்றும் 3-ந் தேதி நிஜமாபாத்தில் பா.ஜ.க பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.
இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேச உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை பாஜக எம்.பி. லட்சுமணன் மற்றும் மாநில பா.ஜ.க தலைவர் கிஷன்ரெட்டி ஆகியோர் செய்து வருகின்றனர்.
- பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு காலை உணவு ஓட்டல்களில் தயார் செய்து வழங்கப்பட்டது.
- செத்த எலி கிடந்த உணவு வினியோகித்த ஓட்டல் உரிமையாளர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்படும்.
பெங்களூரு:
தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிடுவதை கண்டித்து பெங்களூருவில் நேற்று விவசாய சங்கங்கள் சார்பில் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
மேலும் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு காலை உணவு ஓட்டல்களில் தயார் செய்து வழங்கப்பட்டது. இதில் பெங்களூரு யஷ்வந்தபுரம் யார்டு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு மதிய உணவாக தக்காளி சாதம் வழங்கப்பட்டது. இதில் யஷ்வந்தபுரம் போக்குவரத்து போலீசாருக்கு வழங்கிய தக்காளி சாதத்தில் செத்த எலி கிடந்தது.
இதை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்த சாப்பாட்டை சாப்பிடாமல் தூக்கி வீசினர். இந்த தகவல் போலீசாருக்கு பரவியதால், மற்ற போலீசாரும் உணவை சாப்பிடாமல் குப்பையில் போட்டுள்ளனர். இந்த தக்காளி சாதம் யஷ்வந்தபுரத்தில் உள்ள அசோக் டிபன் சென்டரில் இருந்து போலீசாருக்கு வழங்கப்பட்டதும், அதில் தான் செத்த எலி கிடந்ததும் தெரியவந்தது. இந்த டிபன் சென்டரில் இருந்து 180 போலீசாருக்கு உணவு ஆர்டர் செய்யப்பட்டு வினியோகம் செய்யப்பட்டுள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து அறிந்ததும் யஷ்வந்தபுரம் போக்குவரத்து பிரிவு போலீஸ் அதிகாரிகளை, பெங்களூரு மாநகர போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர் அனுஜித் கடுமையாக கடிந்து கொண்டார். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு ஒரு நாள் சாப்பாட்டுக்கு ரூ.200 அரசு சார்பில் வழங்கப்படுகிறது. அப்படி இருந்தும் ஏன் போலீசாருக்கு தரமான உணவு வழங்கவில்லை என சரமாரி கேள்வி எழுப்பி டோஸ் விட்டுள்ளார். சம்பவம் பற்றி போக்குவரத்து இணை கமிஷனர் அனுஜித் நிருபர்களிடம் கூறுகையில், யஷ்வந்தபுரம் போக்குவரத்து போலீசாருக்கு வழங்கப்பட்ட உணவு பொட்டலத்தில் செத்த எலி கிடந்துள்ளது. முழுஅடைப்பையொட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு வழங்கிய உணவிலேயே செத்த எலி கிடந்துள்ளது. நல்ல வேளையாக அந்த உணவை யாரும் சாப்பிடவில்லை. அந்த உணவை யாராவது சாப்பிட்டு இருந்தால் உடல் நலக்குறைவு ஏற்பட்டியிருக்கும். எனவே செத்த எலி கிடந்த உணவு வினியோகித்த ஓட்டல் உரிமையாளர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக யஷ்வந்தபுரம் போக்குவரத்து இன்ஸ்பெக்டருக்கு, மாநகர போக்குவரத்து இணை கமிஷனர் அனுஜித் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் போலீசார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செத்த எலி கிடந்த உணவு வினியோகித்த ஓட்டல் உரிமையாளர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்படும்.
- நீச்சல் தெரிந்தவர்கள் குளத்தில் இறக்கி தண்ணீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
- லட்சுமி, பாலாமணி, லாவண்யா ஆகியோர் குளத்தில் இருந்து சடலமாக மீட்டனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டம், ரங்கைய்யா பள்ளியை சேர்ந்தவர் சந்திரய்யா. இவரது மனைவி லட்சுமி. அந்த பகுதியில் நேற்று கோவில் திருவிழா நடந்தது.
கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள தனது தம்பிகள் மனைவிகளான லட்சுமி, பாலாமணி, அவரது மகன் சரண், லட்சுமி மகள் லாவண்யா ஆகியோர் வந்திருந்தனர்.
நேற்று லட்சுமி, பாலாமணி, சரண், லாவண்யா ஆகியோர் அங்குள்ள கோவில் குளத்திற்கு சென்றனர்.
லட்சுமி, பாலாமணி, லாவண்யா ஆகியோர் துணி துவைத்துக் கொண்டு இருந்தனர். சிறுவன் சரண் கோவில் குளத்தின் கரையோரம் விளையாடிக் கொண்டு இருந்தான். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக சரண் கோவில் குளத்தில் விழுந்து மூழ்கி உயிருக்கு போராடினான்.
இதனை கண்ட அவரது தாய் பாலாமணி மகனை காப்பாற்ற முயன்றார். அவரும் தண்ணீரில் மூழ்கினார். இதனைக் கண்ட லட்சுமி மற்றும் லாவண்யா இருவரையும் காப்பாற்ற முயன்றனர். அவர்களும் தண்ணீரில் மூழ்கினர்.
அருகில் இருந்தவர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். நீச்சல் தெரிந்தவர்களை குளத்தில் இறக்கி தண்ணீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
லட்சுமி, பாலாமணி, லாவண்யா ஆகியோர் குளத்தில் இருந்து சடலமாக மீட்டனர்.
குளத்தில் அதிக அளவு களிமண் உள்ளதால் சிறுவன் களிமண்ணில் சிக்கிக் கொண்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இன்று காலையில் சிறுவனின் உடலை தேடும் பணி நடந்தது.
- கட்டுப்பாட்டு அறையில் அமெரிக்க பென்டகன் நகரில் உள்ள ராணுவ மையம் போல அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
- ஐதராபாத் நகரில் நுழையக்கூடிய ஒவ்வொரு வாகனங்களையும் தனித்தனியாக கண்காணிக்க முடியும்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் காவல்துறை புதிய கட்டுப்பாட்டு அலுவலகம் ரூ.500 கோடியில் கட்டப்பட்டுள்ளது.
20 மாடிகள் இந்த கட்டிடத்தில் உள்ளன. முழுவதும் அதிநவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளது
இந்த கட்டிடத்தில் 4-வது மாடியில் டி.ஜி.பி அலுவலகம் 18-வது தளத்தில் கமிஷனர் அலுவலகம் இயங்குகிறது. மற்ற உயர்மட்ட அதிகாரிகளின் அறைகள் 7-வது மாடியில் உள்ளன. இந்த கட்டுப்பாட்டு அறையில் அமெரிக்க பென்டகன் நகரில் உள்ள ராணுவ மையம் போல அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த கட்டிடத்தின் மொட்டை மாடியில் ஹெலிகாப்டர்கள் இறங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இது தவிர மாநிலம் முழுவதும் பொருத்தப்பட்டுள்ள 5 லட்சத்திற்கும் அதிகமான கேமராக்களை இந்த அலுவலகத்திலிருந்து கண்காணிக்க முடியும். ஐதராபாத் நகரில் நுழையக்கூடிய ஒவ்வொரு வாகனங்களையும் தனித்தனியாக கண்காணிக்க முடியும்.
பேரழிவு ஏற்பட்டால் அனைத்து செயல்பாடுகளையும் மையமாக கட்டுப்படுத்தும் வகையில் இந்த அறை அதிநவீன வசதிகளுடன் இயங்குகிறது.
கடுமையான வானிலை நிகழ்வுகளை முன்கூட்டியே கணிக்கக்கூடிய வானிலை முன்னறிவிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய அலுவலகம் தெலுங்கானா மாநிலத்துக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அரணாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பல மாநிலங்களிலிருந்து 28 கட்சிகள் ஒன்று சேர்ந்து I.N.D.I.A. கூட்டணியை அமைத்துள்ளது
- பா.ஜ.க. ஏ.ஐ.எம்.ஐ.எம். மற்றும் பாரத் ராஷ்டிர சமிதி ஆகிய 3 கட்சிகளையும் காங்கிரஸ் எதிர்க்கிறது
வரும் 2024 இந்திய பாராளுமன்ற தேர்தலுக்காக தேசிய ஜனநாயக கூட்டணியையும், அதனை சேர்ந்த மத்தியில் ஆளும் பா.ஜ.க.வையும் எதிர்த்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கி I.N.D.I.A. கூட்டணி எனும் எதிர்கட்சிகள் கூட்டணி மிக தீவிரமாக களமிறங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ஆங்காங்கே பிரச்சாரம் செய்து வருகிறார்.
தெலுங்கானாவில் உள்ள துக்குகுடா பகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர் அம்மாநில கட்சிகளையும் விமர்சித்து பேசினார்.
அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:
பா.ஜ.க. கூட்டணி கட்சிகளுக்கும் அக்கட்சியை மறைமுகமாக ஆதரிக்கும் கட்சிகளுக்கும், அத்தகைய கட்சிகளின் தலைவர்களுக்கும் எதிராக எந்த வழக்கும் எந்த மத்திய விசாரணை அமைப்பாலும் பதிவு செய்யபடுவதில்லை. ஹைதராபாத் பாராளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஒவைசி இதுவரை ஒரு வழக்கையும் சந்திக்கவில்லை. தெலுங்கானா முதல்வரையும், ஒவைசியையும் மோடி தனது அணியை சேர்ந்தவராகவே பார்க்கிறார். அதனால் அவர்கள் மீது வழக்குகள் கிடையாது. ஆனால் எதிர்கட்சி கூட்டணியை சேர்ந்தவர்கள் குறி வைத்து தாக்கப்படுகிறார்கள். காங்கிரஸ் கட்சி பா.ஜ.க.வை மட்டுமல்ல, ஆளும் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி ஆகிய கட்சிகளையும் சேர்த்து எதிர்க்கிறோம். அவை தனித்தனி கட்சிகளாக இயங்கினாலும் மறைமுகமாக மூன்றும் கை கோர்த்து இயங்குகின்றன.
இவ்வாறு ராகுல் விமர்சனம் செய்தார்.
நேற்று, இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய ஒவைசி தெரிவித்ததாவது:
ராகுல் அவர்களே, நீங்கள் தொடர்ந்து பெரிதாக பேசுகிறீர்கள். இனிமேல் கேரளாவில் உள்ள உங்கள் தற்போதைய தொகுதியான வயநாட்டிலிருந்து போட்டியிடாதீர்கள். உங்களுக்கு துணிச்சல் இருந்தால் ஹைதராபாத் தொகுதிக்கு வந்து என்னை எதிர்த்து போட்டியிட்டு காட்டுங்கள்.
இவ்வாறு சவால் விடும் வகையில் ஒவைசி பதிலளித்தார்.
எதிர்கட்சிகள் கூட்டணியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 25 கட்சிகளுக்கும் மேல் ஒன்றிணைந்து பா.ஜ.க.வின் தேசிய கூட்டணியை எதிர்த்து வருகிறது. ஆனால், இக்கூட்டணியில் சேருமாறு ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிக்கு அழைப்பு கூட விடப்படவில்லை என ஒவைசி சில நாட்களுக்கு முன் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்களை வரவேற்று பல இடங்களில் கட்-அவுட் பேனர்கள் வைத்திருந்தனர்.
- தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்களை வரவேற்று பல இடங்களில் கட்-அவுட் பேனர்கள் வைத்திருந்தனர். அதில் சோனியா காந்தியை அம்மன் வேடத்தில் சித்தரித்து கட் அவுட்டுகள் பேனர்கள் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.
சோனியா காந்தி அம்மன் வேடத்தில் நகை கிரீடம் அணிந்தபடி அதில் காட்சியளித்தார்.
மேலும் அவரது வலது கையில் இருந்து தெலுங்கானா தோன்றுவது போல வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது.
பெரிய அளவில் சோனியா காந்தியை தெலுங்கானா மாநிலத்தின் அன்னை என அதில் எழுதியுள்ளனர்.
இது தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அந்த மாநில பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மத்திய சுற்றுலாத்துறை மந்திரியும், தெலுங்கானா மாநில பாஜக தலைவருமான ஜி.கிஷன் ரெட்டி, சோனியா காந்தியை 'தெலுங்கானா தாய்' போல் சித்தரிப்பது சனாதன தர்மத்தை அவமதிக்கும் செயல் என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
"பாரதம் முழுவதும், சக்தி பெண் வடிவமும், தாய் தேவியின் பல்வேறு வெளிப்பாடுகளும் சனாதன தர்மத்தில் வழிபடப்படுகின்றன. தெலுங்கானாவில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கிராம தேவதை உள்ளது, அந்த கிராமத்தை காக்கும் மற்றும் மக்களுக்கு பலம் தரும் தெய்வம். கிராமத்து மக்கள் தெய்வத்தின் ஆசீர்வாதத்தை தவறாமல் நாடுகிறார்கள்.
"ஊழல் காங்கிரஸ் தலைவரை தெலுங்கானா அன்னையாக சித்தரித்து ஒரு குடும்பத்திற்காக காங்கிரஸ் கட்சி சனாதன தர்மத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்வது அதிர்ச்சியளிக்கிறது" என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பாரத் மாதா கி ஜெய் என்பது கட்சி ஒழுக்கத்திற்கு எதிரானது என ஒரு காலத்தில் கூறினார்கள். தற்போது சோனியா காந்தியை பாரதமாதாவிற்கு இணையாக சமன் செய்வது போல அம்மன் வேடத்தில் சித்தரித்துள்ளனர்.
இது முற்றிலும் வெட்கக்கேடானது என கடுமையாக பா.ஜ.க.வினர் விமர்சனம் செய்துள்ளனர்.
- 2023 இறுதிக்குள் 5 மாநில சட்டசபை தேர்தல் நடைபெற போகிறது
- மகாலஷ்மி திட்டத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.2500 வழங்கப்படும்
இந்தியாவின் 18-வது மக்களவை தேர்தல் அடுத்த வருடம் நடைபெறவிருக்கிறது. தற்போதைய ஆளும் பா.ஜ.க.வின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்த்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து 25-க்கும் மேற்பட்ட கட்சிகள், "இந்தியா கூட்டணி" எனும் பெயரில் எதிர்கட்சிகள் கூட்டணி ஒன்றை உருவாக்கியுள்ளது.
இதற்கிடையே, இந்தியாவில் இந்த வருட இறுதிக்குள் சட்டீஸ்கர், ம.பி., மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநில சட்டசபைகளுக்கான தேர்தலும் நடைபெறவிருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக இன்று தெலுங்கானாவில் ரங்காரெட்டி மாவட்டத்தில் துக்குகுடா நகரில் விஜயபேரி சபாவில் ஒரு மிக பெரும் கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உரையாற்றினார்.
அக்கூட்டத்தில் அவர் அம்மாநில மக்களுக்கு பல சலுகைகளை அறிவித்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:
தெலுங்கானா மக்களுக்கு 5 உத்திரவாதங்களை வழங்குகிறேன். அவை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றப்படும். மகாலஷ்மி திட்டம் எனும் திட்டத்தின்படி தெலுங்கானாவில் உள்ள பெண்களுக்கு மாதம் ரூ.2500 வழங்கப்படும். சமையல் கியாஸ் ரூ.500 தொகையில் வழங்கப்படும். தெலுங்கானா மாநில அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். தெலுங்கானாவில் அனைத்து தரப்பு மக்களுக்காகவும் உழைக்க காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் என நான் விரும்புகிறேன்.
இவ்வாறு சோனியா காந்தி அறிவித்தார்.
தெலுங்கானாவில் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர் ராவ் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.






