என் மலர்
உள்ளூர் செய்திகள்
- வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
- போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேதாரண்யம்:
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே சிறுதலைக்காடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ராமானுஜம் (வயது 50). மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில் இவரும், அதே ஊரை சேர்ந்த லெட்சுமணன் (30), ராஜதுரை (28), ராமநாதன் (38), புகழ்ராஜ் (28), ராம பெருமாள் (26), ராமன் (26) மற்றும் பன்னாள் சக்கரம் பேட்டையை சேர்ந்த பாக்கிய ராஜ் (26) ஆகிய 8 மீனவர்களும், ராமானுஜத்திற்கு சொந்தமான படகில் நேற்று அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
அப்போது அனைவரும் சிறுதலைக்காட்டு கிராமத்திற்கு தெற்கு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கவிழ்ந்த நிலையில் இருந்த படகு ஒன்று அவர்களது வலையில் சிக்கியது. அதனை கண்ட அவர்கள் உடனடியாக தங்களது படகில் கட்டி இழுத்து நள்ளிரவு கரைக்கு வந்தனர்.
பின்னர், இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படகை கைப்பற்றி அதில் சோதனை செய்தனர். அப்போது படகில் TRB-A-1260 JFN என்றும், இரு பக்கத்திலும் Y.S.S merini என்றும் எழுதப் பட்டுள்ளது. இந்த படகு நீலம், கருப்பு, வெள்ளை நிறத்தில் இருந்தது. ஆனால் இந்த படகில் என்ஜின் மற்றும் வலைகள் ஏதும் இல்லை.
படகில் எழுதப்பட்ட படகின் எண் மற்றும் அதன் தோற்றத்தை வைத்து, அது இலங்கை நாட்டை சேர்ந்த படகு என்றும், இது கரை ஒரத்தில் மீன் பிடிக்கும் படகு என்றும் தெரிய வந்துள்ளது. இந்த படகு கள்ளக்கடத்தலுக்கு பயன்படுத்தியதா? வேறு யாரும் இலங்கையில் இருந்து வந்தார்களா? அல்லது யாழ்ப்பாணம் பகுதியில் கரையில் இருந்த படகு காற்றின் வேகத்தால் இங்கு வந்ததா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஆறுமுகத்தை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.
- போலீசார் அலங்குளம் விரைந்து சென்று, அங்கு பதுங்கி இருந்த ஆறுமுகத்தை சுற்றி வளைத்து பிடித்தனர்.
கள்ளக்குறச்சி:
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த மாதம் 18-ந் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்த 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதில் 65 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளசாராய வியாபாரிகளை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.
இதற்கிடையே, கள்ளக்குறிச்சியை அடுத்த கல்வராயன்மலை அருகே மண்மலை கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து ஆறுமுகத்தை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். இதனை அறிந்த கள்ளசாராய வியாபாரி ஆறுமுகம் தலைமறைவாகிவிட்டார்.
இந்த நிலையில் கள்ளசாராய வியாபாரி ஆறுமுகம் கேரள மாநிலம் அலங்குளத்தில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் தனிப்படை போலீசார் அலங்குளம் விரைந்து சென்று, அங்கு பதுங்கி இருந்த ஆறுமுகத்தை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர், அவரை போலீசார் கச்சிராயப்பாளையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் 110 லிட்டர் கள்ளசாராயத்தை வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து ஆறுமுகத்தை கைது செய்த போலீசார், அவர் பதுக்கி வைத்திருந்த கள்ளசாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
- ராஜீவ் காந்தி மருத்துவமனை முன்பு பகுஜன் சமாஜ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
- போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை உடைத்து விட்டு ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை:
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெரம்பூரில் உள்ள வீட்டின் முன் வைத்து நேற்று வெட்டிக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. மருத்துவமனை முன்பு ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் குவிந்து வருவதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ராஜீவ் காந்தி மருத்துவமனை முன்பு பகுஜன் சமாஜ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி அவர்கள் முழக்கமிட்டனர். மேலும் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த பொதுவான இடம் கோரி ஆதரவாளர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட வெளியே செல்ல முயன்ற ஆதரவாளர்களை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை உடைத்து விட்டு ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
- தங்கம் விலை இந்த வாரத்தில் மட்டும் சவரனுக்கு ரூ.1,080 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களாக உயர்ந்து விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில் வார இறுதி நாளான இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
தங்கம் இன்று சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,560-க்கும் கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,820-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் 60 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.99.30-க்கும் கிலோவுக்கு ரூ.1,600 உயர்ந்து பார் வெள்ளி ரூ.99,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை இந்த வாரத்தில் மட்டும் சவரனுக்கு ரூ.1,080 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- தமிழக தேர்தலில் பா.ஜ.க.வின் வாக்கு வங்கி உயரவில்லை.
- அரசியலில் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காகவே சசிகலா ஏதேதோ பேசி வருகிறார்.
கோவில்பட்டி:
சென்னை-நாகர்கோவில் இடையேயான வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டியில் நின்று செல்லும் என்று ரெயில்வே துறை அறிவிப்பினை வெளியிட்டது. இந்நிலையில் இதற்கு முயற்சி எடுத்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவை சட்டமன்ற அலுவலகத்தில் அ.தி.மு.க. மற்றும் லைன்ஸ் கிளப் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். பின்னர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கூறியதாவது:-
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை மையப்படுத்தி தான் என்றுமே தமிழக அரசியல் உள்ளது என்பதற்கு அடையாளம் தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அவரது புகைப்படத்தை பயன்படுத்தி வாக்கு சேகரித்து உள்ளதற்கு சான்று. ஜெயலலிதாவை விமர்சித்தவர்கள் எல்லாம் அவரின் பெயர், படத்தை பயன்படுத்துகிற நிலைக்கு வந்துள்ளனர். அரசியல் லாபத்திற்காக அவரது புகைப்படத்தை பயன்படுத்தி உள்ளனர்.

டி.டி.வி.தினகரனுக்கும், அ.தி.மு.க.விற்கும் எந்த தொடர்பும் இல்லை. அ.தி.மு.க.வில் உறுப்பினராக இருப்பவர் மட்டுமே ஜெயலலிதாவின் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த முடியும். தமிழர் நலன் சார்ந்த பிரச்சனைகளை பா.ஜ.க. கண்டு கொள்ளவில்லை என்ற ஒரே காரணத்திற்காக தான் கூட்டணியை விட்டு வெளியேறினோம். அண்ணாமலைக்காக அல்ல. அண்ணாமலை எல்லாம் எங்களுக்கு பொருட்டே அல்ல.
தமிழக தேர்தலில் பா.ஜ.க.வின் வாக்கு வங்கி உயரவில்லை. 12 கட்சிகளோடு கூட்டணி வைத்தும் 12 சதவீத வாக்கு வங்கியை கூட பா.ஜ.க.வால் தாண்ட முடியவில்லை. அவ்வப்போது அரசியலில் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காகவே சசிகலா ஏதேதோ பேசி வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சட்டமன்ற தேர்தலுக்கான ஒவ்வொரு வேட்பாளருக்கும், வாக்குப்பதிவு நாளன்று வாகன அனுமதி அளிக்கப்படுகிறது.
- பணியாளர்கள் பயன்பாட்டிற்கான ஒரு வாகனம் ஆகிய வாகனங்களின் அனுமதி தேர்தல் நடத்தும் அதிகாரியால் வழங்கப்படும்.
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 10-ந் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி 8-ந் தேதி மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி சில கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும்.
அதன்படி, தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது. எந்தவொரு தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம், தொலைக்காட்சி, எப்.எம். ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், எக்ஸ், குறுஞ்செய்தி மற்றும் இணையம் உள்பட அனைத்து மின்னணு வடிவிலான சாதனம் மூலமாக பொதுமக்களின் பார்வைக்கு வைக்கக்கூடாது. பொதுமக்களை ஈர்க்கிற வகையில், இசை நிகழ்ச்சி, திரையிடுதல் மற்றும் பிற கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்த அல்லது ஏற்பாடு செய்து, அதன் மூலம் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது.
இந்த கட்டுப்பாடுகள் எவ்விதத்தில் மீறப்பட்டாலும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126 (2)-ன்படி, 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவையிரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
தொகுதிக்கு வெளியே இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சி பணியாளர்கள் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் 8-ந் தேதியன்று மாலை 6 மணிக்கு மேல் அத்தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். திருமண மண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா? என்பதை கண்டறியப்படும். வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் வாகன அனுமதிகள் 8-ந் தேதி மாலை 6 மணி முதல் செயல்திறனற்றதாகிவிடும்.
சட்டமன்ற தேர்தலுக்கான ஒவ்வொரு வேட்பாளருக்கும், வாக்குப்பதிவு நாளன்று வாகன அனுமதி அளிக்கப்படுகிறது. அதன்படி, வேட்பாளரின் சொந்த பயன்பாட்டிற்கான ஒரு வாகனம், தேர்தல் முகவரின் பயன்பாட்டிற்காக ஒரு வாகனம், தேர்தல் முகவர் அல்லது அவரது பணியாளர்கள் பயன்பாட்டிற்கான ஒரு வாகனம் ஆகிய வாகனங்களின் அனுமதி தேர்தல் நடத்தும் அதிகாரியால் வழங்கப்படும்.
வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும், வாக்குச்சாவடிகளில் இருந்து அழைத்துச்செல்வதற்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கு அல்லது வாங்குவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு எந்தவொரு வேட்பாளரும் அனுமதிக்கக்கூடாது. இது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய முறைகேடான செயலாகும். 2 பேரை மட்டுமே கொண்ட, வேட்பாளர்களின் அரசியல் கட்சிகளின் தற்காலிக பிரசார அலுவலகம், வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவிற்கு வெளியே அமைக்கப்படலாம். தேவையில்லாத கூட்டத்தை அவர்கள் அனுமதிக்கக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடந்த சில ஆண்டுகளில், பல்வகையான நில ஆவணங்கள் கணினிப்படுத்தப்பட்டு இணையவழியில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
- 1 மற்றும் 2-ல் உள்ள சேவைகளை தங்கள் அருகிலுள்ள பொதுச்சேவை மையங்கள் மூலமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சென்னை:
தமிழக அரசின் நில அளவை மற்றும் நிலவரித்திட்டத்தின் இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடந்த சில ஆண்டுகளில், பல்வகையான நில ஆவணங்கள் கணினிப்படுத்தப்பட்டு இணையவழியில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நில உரிமைதாரர்கள் பயனடையும் வகையில் கீழ்க்காணும் இணையவழிச்சேவைகள் நிலஅளவை மற்றும் நிலவரித்திட்டத் துறையால் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன.
1. கிராமப்புறம், நகர்ப்புறம் மற்றும் நத்தம் ஆகிய பகுதிகளுக்கான பட்டா மாற்றம் மேற்கொள்ள https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
2. நில உரிமைதாரர்கள் புல எல்லைகளை அளந்து அத்து காட்டக்கோருவதற்கு https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
3. எங்கிருந்தும் எந்நேரத்திலும் என்ற இணையவழிச் சேவையை (https://eservices.tn.gov.in) பயன்படுத்தி, கிராமப்புற மற்றும் நத்தம் நில ஆவணங்களின் பட்டா / சிட்டா, 'அ' பதிவேடு மற்றும் புலப்படம் ஆகியவற்றையும், நகர்ப்புற நிலஅளவைப் பதிவேட்டின் நகல், நகர நிலஅளவை வரைபடம் மற்றும் புல எல்லை வரைபடம் / அறிக்கை ஆகியவற்றையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பட்டா மாற்றத்திற்கு அளித்த விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம்.
4. கிராம வரைபடங்கள் மற்றும் பழைய நிலஅளவை எண்களுக்கான புதிய நிலஅளவை எண்களின் ஒப்புமை விளக்கப்பட்டியல் போன்றவற்றை https://tnlandsurvey.tn.gov.in எனும் இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதில் 1 மற்றும் 2-ல் உள்ள சேவைகளை தங்கள் அருகிலுள்ள பொதுச்சேவை மையங்கள் மூலமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது.
- கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது.
சென்னை :
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது.
ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது.
— M.K.Stalin (@mkstalin) July 6, 2024
திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் அவரது கட்சியினர்,…
- காவல்துறையினர் முழுக்க முழுக்க திமுக நிர்வாகிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதால், அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை.
- திமுகவின் வட்டச் செயலாளர், கிளைச் செயலாளர் முதல் உயர்மட்ட நிர்வாகிகள் வரை காவல்துறைக்கு உத்தரவிடுகின்றனர்.
சென்னை :
பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தலைநகர் சென்னையில் அதுவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
எம்.எல்.ஏ.வாக உள்ள கொளத்தூர் அருகே ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் கொல்லப்பட்டிருப்பது, தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
அமைதி பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த மூன்று ஆண்டுகளாக ரவுடிகளின் அட்டகாசம் தலைதூக்கி இருக்கிறது. காவல்துறையினர் முழுக்க முழுக்க திமுக நிர்வாகிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதால், அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. திமுகவின் வட்டச் செயலாளர், கிளைச் செயலாளர் முதல் உயர்மட்ட நிர்வாகிகள் வரை காவல்துறைக்கு உத்தரவிடுகின்றனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கும் இதுதான் காரணம். தலைநகர் சென்னையில் ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் படுகொலை செய்யப்பட்டிருப்பதற்கும் இதுதான் காரணம். ஆம்ஸ்ட்ராங் படுகொலையால் சென்னை மாநகர மக்கள் குறிப்பாக வடசென்னை மக்கள் அதிர்ச்சியிலும், அச்சத்திலும் உறைந்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படுகொலையில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கண்டறிந்து கடும் தண்டனை வழங்க வேண்டும். சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது தான் ஒரு மாநில அரசின் முதல் கடமை அந்த கடமையிலிருந்து திமுக தவறியிருக்கிறது. காவல்துறையை தன் வசம் வைத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக 17ஆண்டுகளாக இருந்து வந்தார்.
- ஏராளமான இளம் வழக்கறிஞர்களை உருவாக்கி உள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெரம்பூரில் உள்ள வீட்டின் முன் வைத்து நேற்று வெட்டிக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்த பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி, ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாளை சென்னை வருகிறார்.
மாயாவதியின் நம்பிக்கையாக திகழ்ந்த ஆம்ஸ்ட்ராங், பள்ளிக் காலம் முதலே அரசியலில் ஆர்வமுடையவராக இருந்தார். சட்டம் படித்த இவர், கடந்த 2000-ம் ஆண்டு முதல் அரசியலில் ஈடுபட்டு வந்தார்.
அம்பேத்கர் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங், 2006-ல் டாக்டர் பீமாராவ் தலித் அசோசியேஷன் என்ற அமைப்பை உருவாக்கினார். 2006-ம் ஆண்டு சென்னை மாநகராட்சியின் 99-வது வார்டில் போட்டியிட்டு மாமன்ற உறுப்பினராக தேர்வானார்.
2007-ம் ஆண்டு மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். 2011-ம் ஆண்டில் அம்பத்தூர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக 17ஆண்டுகளாக இருந்து வந்தார். ஏராளமான இளம் வழக்கறிஞர்களை உருவாக்கி உள்ளார்.
தலித் மக்களுக்கு ஆதரவான போராட்டங்களை ஆம்ஸ்ட்ராங் தீர்க்கமாக முன்னெடுத்தார்.
- கடந்த 1879-ம் ஆண்டு கொடுக்கப்பட்ட 99 ஆண்டு கால குத்தகை 1978-ம் ஆண்டு முடிந்து விட்டது.
- . தற்போது வரை 23 ஆண்டுகளாக குத்தகையை புதுப்பிக்காமலும், குத்தகை தொகையை வழங்காமலும் இழுத்தடித்து வந்தது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே குதிரை பந்தய மைதானம் உள்ளது. இங்கு ஆங்கிலேயர் ஆட்சி காலம் முதல் தற்போது வரை குதிரை பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது.
சுமார் 52.34 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மைதானம் மற்றும் அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதி வருவாய்த்துறைக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் ஆகும். இந்த நிலத்தை மெட்ராஸ் ரேஸ் கிளப் குத்தகைக்கு எடுத்து ஆண்டுதோறும் கோடை சீசனின்போது ஏப்ரல், மே மாதங்களில் குதிரை பந்தயம் நடத்தி வருகிறது.
இந்தநிலையில் கடந்த 1879-ம் ஆண்டு கொடுக்கப்பட்ட 99 ஆண்டு கால குத்தகை 1978-ம் ஆண்டு முடிந்து விட்டது. மீண்டும் 1978-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை குத்தகை தொகையை ரேஸ் கிளப் நிர்வாகம் முறையாக செலுத்தி வந்தது.
இதற்கிடையே 2001-ம் ஆண்டு முதல் குத்தகை தொகை உயர்த்தப்பட்டது. அதன்பிறகு ரேஸ் கிளப் நிர்வாகம் குத்தகை தொகையை வழங்கவில்லை. தற்போது வரை 23 ஆண்டுகளாக குத்தகையை புதுப்பிக்காமலும், குத்தகை தொகையை வழங்காமலும் இழுத்தடித்து வந்தது.
இதனால் ரூ.822 கோடி குத்தகை தொகை பாக்கி இருந்தது. இது தொடர்பாக வருவாய்த்துறை சார்பில் பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனாலும் குத்தகை பாக்கியை செலுத்த ரேஸ் கிளப் நிர்வாகம் முன்வரவில்லை. அத்துடன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், குத்தகை பாக்கியை உடனே செலுத்த வேண்டும் என்றும், செலுத்தாத பட்சத்தில் நிலத்தை கையகப்படுத்தி அரசு கட்டுபாட்டில் கொண்டு வர வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு கடந்த மாதம் 24-ம் தேதி உத்தரவிட்டது.
அதன்பிறகும் குத்தகை தொகையான சுமார் ரூ.822 கோடியை அரசுக்கு செலுத்தாமல் இருந்ததால் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் ஊட்டி ஆர்.டி.ஓ. மகாராஜ், சரவணகுமார் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் குதிரை பந்தய மைதானத்துக்கு சீல் வைத்தனர். மேலும் அறிவிப்பு பலகை வைத்து, நிலத்தை கையகப்படுத்தினர்.
- விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 10-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
- அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள், அமைப்புகள், அனைத்து கல்வி நிறுவனங்கள் அனைத்தும் 10-ம் தேதியன்று மூடப்படும்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வரும் 10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 10-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. எனவே அந்த தொகுதிக்கு 10-ம் தேதியன்று பொது விடுமுறை விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி அந்த தொகுதிக்குள் உள்ள அரசு அலுவலகங்கள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள், அமைப்புகள், அனைத்து கல்வி நிறுவனங்கள் அனைத்தும் 10-ம் தேதியன்று மூடப்படும்.
மேலும், விழுப்புரம் மாவட்டம் மற்றும் அருகில் உள்ள பிற மாவட்டங்களில் பணியாற்றும் விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களுக்கு வாக்களிக்க வசதியாக, அவர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் 10-ம் தேதியன்று சம்பளத்துடன் கூடிய விடுப்பை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






