என் மலர்
ராஜஸ்தான்
- போலீசார் விசாரணையில் கூலிப்படை மூலம் கணவர் மனைவியை கார் ஏற்றி கொன்றது கண்டுபிடிக்கப்பட்டது.
- மனைவியை கொலை செய்வதற்காக கூலிப்படைக்கு ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் சந்த். இவரது மனைவி ஷாலு.
கடந்த அக்டோபர் மாதம் 5-ந்தேதி ஷாலு தனது உறவினர் ராஜூவுடன் கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது கார் ஒன்று அவர்கள் மீது மோதியது. இதில் இருவருமே சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இதை போலீசார் சாலை விபத்தாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த வழக்கும் நிறைவு பெற்றுவிட்டது.
இதற்கிடையே ஷாலு மரணம் அடைந்தால் அவரது பெயரில் இருந்த இன்சூரன்ஸ் பணமான ரூ.1.90 கோடியை மகேஷ் சந்த் பெற்றார். இந்த விவரம் போலீசாருக்கு தெரிந்தபோது விபத்து வழக்கை மீண்டும் விசாரித்தனர்.
போலீஸ் விசாரணையில் அது விபத்து அல்ல என்றும், மனைவி ஷாலுவை திட்டமிட்டு அவரது கணவர் மகேஷ் சந்த் படுகொலை செய்ததும், தெரியவந்தது.
தனது மனைவி பெயரில் இருந்த காப்பீட்டு தொகையை பெறுவதற்காக அவர் சாலை விபத்து போல நாடகமாடியது அம்பலமாகி உள்ளது.
கூலிப்படை மூலம் அவர் மனைவியை கார் ஏற்றி கொன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக அவர் கூலிப்படைக்கு ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக போலீசார் மகேஷ் சந்த் மற்றும் கூலிப்படையை சேர்ந்த 4 பேரை கைது செய்துள்ளனர்.
- பயிற்சியில் கலந்து கொள்ள ஆஸ்திரேலிய ராணுவ வீரர்கள் இந்தியா வருகை
- இரு ராணுவங்களின் அனைத்து படைகளும் இதில் கலந்து கொள்கின்றன.
இந்திய மற்றும் ஆஸ்திரேலிய ராணுவத்திற்கு இடையே ஆஸ்த்ரா ஹிந்த் 22 என்ற ஆண்டுதோறும் ஆஸ்திரலியாவிலும் இந்தியாவிலும் மாறி மாறி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான கூட்டு பயிற்சி ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று தொடங்கி டிசம்பர் 11 ந்தேதி வரை நடைபெற உள்ளது.
இரு ராணுவங்களின் அனைத்து படைகளும் முதன்முறையாக இந்த பயிற்சியில் கலந்து கொள்கின்றன. இதில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய ராணுவத்தின் 2-வது பிரிவின் 13-வது படையைச் சேர்ந்த வீரர்கள் குழு ராஜஸ்தான் சென்றடைந்தது.
நேர்மறையான ராணுவ உறவைக் கட்டமைப்பது, சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுவது மற்றும் இணைந்து பணியாற்றும் திறனை ஊக்குவிப்பது முதலியவை இந்தப் பயிற்சியின் நோக்கமாகும். உத்திகள், தொழில்நுட்பங்கள் மற்றும் நடைமுறைகளை இரு ராணுவங்களும் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை இந்தக் கூட்டு பயிற்சி வழங்கும்.
இரு ராணுவங்களுக்கு இடையேயான புரிதல் மற்றும் இயங்கு தன்மையை இந்த பயிற்சி ஊக்குவிப்பதோடு, இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆம்புலன்சில் நோயாளியை ஏற்றிய உறவினர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
- டீசல் இல்லாததால் நடுரோட்டில் நின்ற ஆம்புலன்சை நோயாளி உறவினர்கள் தள்ளிச் சென்றனர்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டம் தனப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் தேஜ்யா (40). நேற்று வீட்டில் இருந்தபோது இவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து 108 தனியார் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே வந்த ஆம்புலன்சில் தேஜ்யாவை ஏற்றிய உறவினர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில், தனப்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் திடீரென நடுரோட்டில் நின்றுவிட்டது. டீசல் தீர்ந்ததால் ஆம்புலன்ஸ் நடுவழியில் நின்றது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கீழே இறங்கி ஆம்புலன்சை தள்ளிக்கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்ல தாமதமானதால் மயக்க நிலையில் இருந்த தேஜ்யா ஆம்புலன்சிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
டீசல் இல்லாததால் ஆம்புலன்ஸ் நடு வழியில் நின்றதே உயிரிழப்புக்கு காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டீசல் இல்லாமல் நடுரோட்டில் நின்றதால் ஆம்புலன்சில் நோயாளி உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஜோத்பூர் விமானப்படைத் தளத்தில் இரு நாட்டு விமானப்படைகளும் பயிற்சியில் ஈடுபட்டன.
- சுகோய், ரபேல், தேஜாஸ் மற்றும் ஜாகுவார் போர் விமானங்கள் பங்கேற்பு.
இந்திய விமானப்படை பல்வேறு நாடுகளின் விமானப்படையினருடன் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்திய விமானப் படை மற்றும் பிரெஞ்சு வான்வெளிப் படையின் 7-வது கூட்டு விமானப் பயிற்சி ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் நடைபெற்று வந்தது.
கருடா-VII என்ற பெயரில் நடைபெற்ற இந்த பயிற்சியில் பிரான்ஸ் விண்வெளிப் படையின் ரபேல் போர் விமானம் மற்றும் ஏ-330 பல்திறன் அம்சங்களுடன் கூடிய போர் விமானம் போன்றவைகள் பங்கேற்றன. இந்திய விமானப்படை சார்பாக சுகோய்-30, ரபேல், தேஜாஸ் மற்றும் ஜாகுவார் போர் விமானங்களும்,மி-17 ரக ஹெலிகாப்டர்களும் பங்கேற்றன.

இரு நாட்டு விமானப் படைகளுக்கும் இடையே தொழில் முறையிலான தொடர்பை ஏற்படுத்தவும், செயல்பாட்டுத் திறன் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பையும் இந்த பயிற்சி வழங்கியதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சியின் போது இருநாட்டு விமானப்படை வீரர்களும் வான்வெளிப் போர் நடவடிக்கைகளின் நுட்பங்களை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். மேலும் இந்த பயிற்சியானது இரு நாட்டு விமானப்படை வீரர்களுக்கு இடையேயான கலாச்சார பரிமாற்றத்திற்கான சூழலை வழங்கியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- நான் எப்போதும் ஒரு ஆணாக இருக்கவே விரும்பினேன்.
- அவர் அறுவை சிகிச்சை செய்யாவிட்டாலும், நான் அவரை திருமணம் செய்திருப்பேன்.
ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியையாக பணிபுரிந்தவர் மீரா. பள்ளியில் உடற்கல்வி வகுப்புகளின்போது மீரா மாணவி கல்பனாவை சந்தித்துள்ளார். அப்போது அவர் கல்பனா மீது காதல் வயப்பட்டுள்ளார்.
பள்ளி காதல் நீண்ட ஆண்டுகளாக தொடர்ந்த நிலையில், கல்பனாவை திருமணம் செய்துக்கொள்ள தான் ஆணாக மாற மீரா பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துக்கொண்டுள்ளார்.
"காதலில் எல்லாம் நியாயமானது. அதனால்தான் நான் என் பாலினத்தை மாற்றிக் கொண்டேன்" என்று ஆணாக மாறி ஆரவ் என்று பெயர் மாற்றிக்கொண்ட மீரா தெரிவித்துள்ளார்.
மேலும் ஆரவ் கூறுகையில், "நான் பெண்ணாக பிறந்தேன். ஆனால் நான் எப்போதும் ஒரு ஆணாக இருக்கவே விரும்பினேன். இதற்காக பாலினத்தை மாற்ற அறுவை சிகிச்சை செய்து கொள்ள திட்டமிட்டேன். கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் எனது முதல் அறுவை சிகிச்சையை செய்தேன்" என்றார்.
இதுகுறித்து கல்பனா கூறுகையில், " நான் அவரை ஆரம்பத்திலிருந்தே விரும்பினேன். அவர் இந்த அறுவை சிகிச்சை செய்யாவிட்டாலும், நான் அவரை திருமணம் செய்திருப்பேன். அறுவை சிகிச்சைக்கு அவருடன் சென்றேன்," என்றார்.
கல்பானா மாநில அளவில் கபடி விளையாடிய நிலையில், வரும் ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச கபடி போட்டிக்காக துபாய் செல்லவுள்ளார்.
- சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 13 மாதங்கள்தான் உள்ளன.
- கட்சியின் சட்ட திட்டங்களும், விதிகளும் எல்லோருக்கும் ஒன்றுதான்.
ஜெய்ப்பூர் :
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக்கெலாட் போட்டியிட விரும்பினார். ஒருவருக்கு ஒரு பதவி என்பதில் காங்கிரஸ் மேலிடம் உறுதியாக இருப்பதால், அவர் கட்சித்தலைவர் பதவிக்கு போட்டியிட்டால், அங்கு முதல்-மந்திரியை மாற்றி விடலாம் என முடிவுக்கு வந்தது. குறிப்பாக நீண்ட காலமாக அந்தப் பதவி மீது கண் வைத்துள்ள சச்சின் பைலட்டை முதல்-மந்திரி ஆக்க முடிவு எடுத்தது. இதற்காக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தி புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்ய மேலிடம் மல்லிகார்ஜூன கார்கேயையும், அஜய் மக்கானையும் ராஜஸ்தான் அனுப்பியது.
ஆனால் முதல்-மந்திரி பதவியை விட்டுக்கொடுக்க அசோக் கெலாட் முன்வரவில்லை. எனவே மேலிட முடிவுக்கு எதிராக அசோக் கெலாட் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியதுடன், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை புறக்கணித்தனர். மேலும் போட்டி கூட்டமும் நடத்தினர். இது கட்சி விரோத செயலுக்காக பார்க்கப்பட்டது.
இதையொட்டி மந்திரிகள் சாந்தி தாரிவால், மகேஷ் ஜோஷி, ராஜஸ்தான் சுற்றுலா வளர்ச்சி கழக தலைவர் தர்மேந்திர ரத்தோர் உள்ளிட்டோருக்கு காங்கிரஸ் மேலிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால் அசோக் கெலாட், சோனியா காந்தியை சந்தித்து பேசி தனது ஆதரவாளர்களின் செயல்களுக்கு தார்மீகப்பொறுப்பேற்று மன்னிப்பு கேட்டதுடன், காங்கிரஸ் தலைவர் போட்டியில் இருந்து பின்வாங்கினார். இத்துடன் இந்த விவகாரம் முடிவுக்கு வந்து விட்டது என கருதப்பட்டது.
ஆனால் அது நீறுபூத்த நெருப்பாக தொடர்கிறது.
இந்த விவகாரத்தில் இப்போது சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கி உள்ளார். காங்கிரஸ் தலைமையின் முடிவுக்கு எதிராக செயல்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:-
கட்சி விரோத நடவடிக்கைக்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டவர்கள் மீது கட்சித்தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 13 மாதங்கள்தான் உள்ளன. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் போன்று என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை விரைவாக எடுக்க வேண்டும்.
கட்சியின் சட்ட திட்டங்களும், விதிகளும் எல்லோருக்கும் ஒன்றுதான். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விரைவாக முடிவு எடுக்க வேண்டும்.
ஒரு நிகழ்ச்சியின்போது ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட்டை பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார். இதை எளிதாக எடுத்துக்கொண்டு விட முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விவகாரத்தில் சச்சின் பைலட்டின் போர்க்கொடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
- ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டம் மங்காருக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்றார்.
- பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் 3 மாநில முதல் மந்திரிகள் கலந்து கொண்டனர்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டம் மங்காருக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்றார்.
அங்கு 1913-ம் ஆண்டு சமூக சீர்திருத்தவாதி கோவிந்த் குரு தலைமையில் போராடிய 1,500 பழங்குடியினரை ஆங்கிலேயே ராணுவம் கொன்று குவித்தது. அவர்களின் நினைவாக மங்காரில் பழங்குடியினர் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். அவருடன் ஒரே மேடையில், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களின் முதல் மந்திரிகள் அசோக் கெலாட், சிவராஜ்சிங் சவுகான், பூபேந்திர படேல் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், மங்கார் நினைவிடத்தை பிரதமர் மோடி தேசிய நினைவுச்சின்னமாக அறிவித்தார். அப்போது அவர் பேசுகையில், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய 4 மாநிலங்களும் மத்திய அரசின் தலைமையில் ஒன்றிணைந்து மங்கார் நினைவிடத்தை மேம்படுத்த வேண்டும். அதன்மூலம் இந்த இடத்துக்கு உலக அளவில் ஒரு அடையாளம் கிடைக்கும். நாம் அனைவரும் இந்த இடத்தை புதிய உயரத்துக்கு இட்டுச்செல்வோம். அதற்கு மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என தெரிவித்தார்.
- 10 ஆண்டுகளாக இந்த சிலை அமைக்கும் பணிகள் நடைபெற்றன.
- சிலைக்கு உள்ளே சென்று பக்தர்கள் பார்க்க லிப்ட் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் உலகிலேயே உயரமான சிவன் சிலை அமைக்கப் பட்டுள்ளது. தியான தோற்றத்தில் ஒரு குன்றின் மீது சிவன் அமர்ந்திருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலை 369 அடி உயரமுள்ளது. ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள நத்வாரா நகரில், அமைக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட சிலைக்குள் 4 லிப்டுகள், 3 வரிசை படிக்கட்டுகளும் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் பக்தர்கள் சிலைக்கு உள்ளே சென்று பார்க்கலாம்.
சிலைக்கு உள்ளே ஒரு அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3 ஆயிரம் டன் உருக்கு மற்றும் இரும்பு, கான்கிரீட் மற்றும் மணல் ஆகியவற்றை பயன்படுத்தி, 10 ஆண்டுகளில் இந்த சிலை கட்டமைக்கப்பட்டுள்ளது. . இரவிலும் இந்தச் சிலையை காணக்கூடிய வகையில் லேசர் ஒளி விளக்குகள் சிலையை சுற்றி அமைக்கப்பட்டுள்ளன.
இந்த சிலை அமைந்துள்ள பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இன்று நடைபெறும் சிலை திறப்பு விழாவில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் முதலமைச்சர் அசோக் கெலாட் கலந்து கொள்கிறார்.
- உலகம் முழுவதும் ஆன்மிக நற்சிந்தனையை பிரம்மகுமாரிகள் பரப்பி வருகின்றனர்.
- ஆன்மிகம் ஒரு நபரை முழுமையான மனிதன் ஆக்குகிறது.
அபுநகர்:
ராஜஸ்தான் மாநிலம் மவுண்ட் அபு நகரில் பிரம்ம குமாரிகளின் இயக்கத்தின் 85-வது ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளதாவது:
பிரம்ம குமாரிக்ள் அமைப்பு மனித குலத்திற்கு மட்டுமின்றி, அனைத்து உயிரினங்களுக்கும் ஆதரவு காட்டுகிறது. உலகம் முழுவதும் ஆன்மிகத்தையும், நற்சிந்தனையையும் பிரம்மகுமாரிகள் பரப்பி வருகின்றனர். பருவநிலை மாற்றத்தை முறியடிக்க இருபது லட்சம் மரக்கன்றுகள் நட்டிய அவர்களது பணி பாராட்டுக்குரியது. சரியான கல்வி, சரியான சிந்தனை, சரியான ஞானம் மட்டுமே தமது தேசத்தை ஆற்றல் மிக்கதாக மாற்றும்.
நாட்டில் இருந்து முறையற்ற தன்மையையும், நீதியற்ற நடத்தையையும் எதிர்மறை போக்கையும் களைவதற்கு சமூகத்தில் ஆன்மிக மனநிலையை வளர்ப்பது அவசியம். ஆன்மிகம் இல்லாத வாழ்க்கை நிறைவு பெறாது. உலகம் முழுவதும் தற்போது தொழில்நுட்ப மாற்றம் மக்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நமது கல்வியில் ஆன்மிகம் என்பது இன்றியமையாத பகுதி, இது ஒரு நபரை முழுமையான மனிதன் ஆக்குகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- முதலமைச்சர் கெலாட் நகரத்தில் மற்ற ஆறு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
- உயர்மட்ட சாலையால் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெய்ப்பூர் நகரில் 2.8 கிமீ நீளமுள்ள உயர்மட்ட சாலையை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் நேற்று திறந்து வைத்தார். முன்னதாக சோடாலா உயர்த்தப்பட்ட சாலை என்று அழைக்கப்பட்ட நிலையில், இந்த சாலைக்கு 'பாரத் ஜோடோ சேது' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
காங்கிரஸின் தற்போதைய 'பாரத் ஜோடோ யாத்ரா' மத்தியில் இந்த மறுபெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
250 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த சாலை, அம்பேத்கர் வட்டம் அருகே உள்ள எல்ஐசி கட்டிடம் மற்றும் அஜ்மீர் சாலைக்கு இடையே உள்ள பாதையில் அமைந்துள்ளது. இந்த சாலையால் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், முதலமைச்சர் கெலாட் நகரத்தில் மற்ற ஆறு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
- மெதுவாக பறக்கும் விமானம், ரிமோட் மூலம் இயக்கப்படும் விமானம் ஆகியவற்றுக்கு எதிராக பயன்படுத்தலாம்.
- இந்திய விமானப்படையில் இந்த ஹெலிகாப்டர் இன்று முறைப்படி சேர்க்கப்பட்டது.
பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் இலகுரக போர் ஹெலிகாப்டர்களை தயாரித்துள்ளது. இது 5.8 டன் எடையுள்ள இரட்டை என்ஜின் ஹெலிகாப்டர். ஏவுகணைகள் மற்றும் இதர ஆயுதங்களை இதில் பொருத்தி தாக்குதல் நடத்தமுடியும்.
இந்த ஹெலிகாப்டர், உயரமான மலைப்பகுதிகளில் பயன்படுத்தக்கூடிய வகையிலான அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து வானிலையிலும் இயங்கக்கூடியது. இரவு நேரத்திலும், காடுகளிலும் பயன்படுத்தலாம். மெதுவாக பறக்கும் விமானம், ரிமோட் மூலம் இயக்கப்படும் விமானம் ஆகியவற்றுக்கு எதிராக பயன்படுத்தலாம்.
இந்த ஹெலிகாப்டரில் பல்வேறு வகையான ஆயுதங்களை பொருத்தி ஏற்கனவே பலகட்ட சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்திய விமானப்படையில் இந்த ஹெலிகாப்டர் இன்று முறைப்படி சேர்க்கப்பட்டது. இதற்கான விழா ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங், விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த விழாவில், இலகு ரக போர் ஹெலிகாப்டர்களை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இருந்து அசோக் கெலாட் பின்வாங்கினார்.
- புதிய முதல்-மந்திரி விவகாரத்தில் சச்சின் பைலட் மீது அவர் மறைமுகமாக சாடியுள்ளார்.
ஜெய்ப்பூர்
ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டிருந்தார். இதனால் ராஜஸ்தான் முதல்-மந்திரியாக தற்போதைய துணை முதல்-மந்திரி சச்சின் பைலட் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியானது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சுமார் 90 பேர் பதவி விலக முடிவு செய்தனர். இதனால் மாநிலத்தில் அரசியல் குழப்பம் ஏற்படவே, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இருந்து அசோக் கெலாட் பின்வாங்கினார்.
இந்த நிலையில் புதிய முதல்-மந்திரி விவகாரத்தில் சச்சின் பைலட் மீது அவர் மறைமுகமாக சாடியுள்ளார். இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், 'ஒரு முதல்-மந்திரி மாற்றப்படும்போது 80 முதல் 90 எம்.எல்.ஏ.க்கள் அணி மாற முன்வந்திருக்கின்றனர். அவர்கள் புதிய முதல்-மந்திரிக்கு எதிராக திரும்பியுள்ளனர். இது தவறு என நானும் நினைக்கவில்லை. ஆனால் ஒரு புதிய முதல்-மந்திரியின் பெயரை கேட்டதுமே எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ராஜஸ்தானில் இது முதல்முறை' என சச்சின் பைலட் பெயரை குறிப்பிடாமல் குற்றம் சாட்டினார்.
மாநிலத்தில் முதல்-மந்திரி மாற்றம் நிகழுமா? என்ற கேள்விக்கு, 'அது குறித்து கட்சித்தலைமைதான் முடிவு எடுக்கும், நான் எனது பணிகளை செய்கிறேன்' என்று பதிலளித்தார்.






