என் மலர்
புதுச்சேரி
- மோட்டார் சைக்கிளில் காரைக்கால் முள்ளியம்மாள் வாய்க்கால் ஓரம் சென்றார்.
- விபத்தை ஏற்படுத்திய, சிறுவனின் பெரியப்பா மூர்த்தி(55) மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
காரைக்கால்:
காரைக்காலை அடுத்த நெடுங்காடு காஞ்சிபுரம் கோவில்பத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது தந்தை துரைசாமி(வயது53). விவசாயியான துரைசாமி, நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் காரைக்கால் முள்ளியம்மாள் வாய்க்கால் ஓரம் சென்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த நெடுங்காடு கீழ்பொன் பேத்தியைச்சேர்ந்த சுப்பிரமணியனின் 17 வயது மகன் மோதினார். இதில், துரைசாமி மார்பு, இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் காயம் அடைந்தார். தகவல் அறிந்த வேல்முருகன், தந்தையை காரைக்கால் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர், சிறுவனிடம் மோட்டார் சைக்கிளை கொடுத்து, விபத்தை ஏற்படுத்திய, சிறுவனின் பெரியப்பா மூர்த்தி(55) மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என, காரைக்கால் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் மூர்த்தி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ஆரோவில் சர்வதேச நகரின் 55-ம் ஆண்டுவிழாவை கொண்டாட ஆரோவில்வாசிகள் தயாராகி வருகின்றனர்.
- 8 நாள் விழாவில் மகாலட்சுமி, மகாசரஸ்வதி, மகாகாளி, மகேஸ்வரி ஆகிய பிரபஞ்ச அன்னையின் செயல்வடிவங்களை பிரதிபலிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவையிலிருந்து 12 கி.மீ. தொலைவில் ஆரோவில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது.
அன்னையின் முயற்சியால் 1968-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந் தேதி ஆரோவில் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
தாமரை மொட்டு வடிவில் சலவை கல்லால் ஆன ஒரு தாழியில் உலகத்தின் 121 நாடுகள், இந்தியாவின் 25 மாநிலங்களின் மண் இடப்பட்டது. சர்வதேச நகரில் 50 ஆயிம் பேர் வசிக்க திட்டமிட்டு பணிகள் நடந்தது. நகரின் மையத்தில் ஆரோவில் ஆன்மாவாகிய மாத்ரி மந்திர் அமைந்துள்ளது. அதை சுற்றிலும் பூந்தோட்டங்கள் உள்ளன.
இந்த மைய பகுதியை பேரமைதி என அழைக்கின்றனர். இப்போது பல்வேறு நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இங்கு வசித்து வருகின்றனர்.
ஆரோவில் சர்வதேச நகரின் 55-ம் ஆண்டுவிழாவை கொண்டாட ஆரோவில்வாசிகள் தயாராகி வருகின்றனர். நாளை (செவ்வாய்க்கிழமை) அன்னையின் பிறந்தநாள் முதல் ஆரோவில் தினமான 28-ந் தேதி வரை தொடர்ந்து கொண்டாட்டங்கள் நடக்கிறது.
8 நாள் விழாவில் மகாலட்சுமி, மகாசரஸ்வதி, மகாகாளி, மகேஸ்வரி ஆகிய பிரபஞ்ச அன்னையின் செயல்வடிவங்களை பிரதிபலிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது.
இதனால் ஆரோவில் சர்வதேச நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. ஆரோவில் உதயதினமான 28-ந் தேதி போன்பயர் எனப்படும் தீ மூட்டி கூட்டு தியானத்தில் ஆசிரம பக்தர்கள் ஈடுபட உள்ளனர். நாள்தோறும் பல்வேறு விவாதம், சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
- ஆசைவார்த்தை கூறி காதலிப்பதாக நாடகமாடி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததை பாபு ஒப்புக்கொண்டார்.
- பல பெண்களை பாபு ஏமாற்றினாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர்:
புதுவை அரியாங்குப்பத்தை அடுத்த நோணாங்குப்பம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி மணவெளி தந்தை பெரியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு படித்து வருகிறார்.
இந்த மாணவி நேற்று முன்தினம் இரவு சிவராத்திரியை முன்னிட்டு கோவிலுக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி சென்றார். ஆனால் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
பல்வேறு கோவில்களிலும் தேடிப்பார்த்தும் மாணவி கிடைக்காததால் பெற்றோர் அரியாங்குப்பம் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகார் அடிப்படையில் யாரேனும் மாணவியை கடத்தி சென்றார்களா என்ற கோணத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் மாணவி சுண்ணாம்பாற்று பாலத்தின் மீது இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை முயற்சி செய்தார். உடனே அங்கிருந்தவர்கள் ஆற்றில் குதித்து அந்த மாணவியை மீட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் தவளக்குப்பம் மற்றும் அரியாங்குப்பம் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து வந்தனர்.
ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட மாணவிக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி தற்கொலை முயற்சி குறித்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் தீவிர விசாரணைக்கு பிறகு பல்வேறு தகவல் தெரிய வந்தது. அதில் தற்கொலை முயற்சி மேற்கொண்ட மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதும் கரிக்கலாம்பாக்கம் பகுதியை சேர்ந்த தனியார் பஸ் டிக்கெட் பரிசோதகர் பாபு அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து பாபு மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். மேலும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மாணவி குழந்தைகள் நல பாதுகாப்பு குழு சார்பில் புதுவை மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் தலைமையிலான போலீசார் அரியாங்குப்பம் சந்திப்பில் நின்றிருந்த பாபுவை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில் ஆசைவார்த்தை கூறி காதலிப்பதாக நாடகமாடி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததை பாபு ஒப்புக்கொண்டார். மேலும் பாபுவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் பஸ்சில் பழக்கம் ஏற்பட்ட ஒரு பெண்ணை பாபு 2-வது திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.
மேலும் இதுபோல் பல பெண்களை பாபு ஏமாற்றினாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தேவநாதன் பின்பக்கமாக சென்று பெண்ணை கட்டியணைத்துள்ளார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து தேவநாதனை தேடி வருகிறார்கள்.
மதகடிப்பட்டு:
புதுவை அருகே தமிழக பகுதியான கண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஒரு பெண். கணவரை இழந்த இவர் அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
அவருக்கு கணவரின் சகோதரர் உதவி செய்து வந்தார். இதற்கிடையே கணவரின் சகோதரரை சந்திக்க அவரது நண்பரான எம்.என்.குப்பத்தை சேர்ந்த தேவநாதன்(27) என்பவர் அடிக்கடி வருவார்.
அப்போது நண்பரின் தம்பி மனைவியை தவறான கண்ணோட்டத்தில் தேவநாதன் பார்த்து வந்தார். ஒருமுறை அந்த பெண்ணை ஆசைக்கு இணங்குமாறு தேவநாதன் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு பெண் சம்மதிக்கவில்லை என தெரிகிறது.
இந்நிலையில் தேவநாதன் சம்பவத்தன்று அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்தார். அப்போது அந்த பெண் தனது கணவரின் சகோதரர் இங்கு இல்லை என தெரிவித்துவிட்டு சமையல் அறைக்கு சென்று சமையல் செய்து கொண்டிருந்தார்.
அப்போது தேவநாதன் பின்பக்கமாக சென்று அந்த பெண்ணை கட்டியணைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அலறல் சத்தம் போட்டார். இதையடுத்து தேவநாதன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இதையடுத்து அந்த பெண் நடந்த சம்பவம் குறித்து கண்டமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேவநாதனை தேடி வருகிறார்கள்.
- இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கடலில் மீன்பிடித்தபோது, இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்து மாற்றுத்திறனாளியானார்..
- அபிநயா கணவருடன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார்அபிநயா இரவு வெகுநேரம் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை.,
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த மண்டபத்தூர் சுனாமி நகரைச்சேர்ந்தவர் சவுந்தரராஜ் (வயது 37). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கடலில் மீன்பிடித்தபோது, இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்து மாற்றுத்திறனாளியானார். இதனால் மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2018-ல் நாகப்பட்டினம் வெள்ளப்பள்ளத்தைச்சேர்ந்த ஜெயபால் மகள் அபிநயாவை (28) இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயது மற்றும் 2 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளது. அபிநயா கணவருடன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். கடந்த பிப்ரவரி 1-ந் தேதி நாகப்பட்டினம் செல்வதாக கூறி, 2 குழந்தைகளோடு வெளியில் சென்ற அபிநயா இரவு வெகுநேரம் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை. தொடர்ந்து, சவுந்தரராஜ் அபிநயா வீட்டில் கேட்டபோது இங்கு வரவில்லையென கூறியுள்ளனர். கடந்த 2 வாரமாக பல்வேறு உறவினர்கள் வீட்டில் தேடியும் அபிநயா கிடைக்காதததால், சவுந்தரராஜ், காரைக்கால் கோட்டுச்சேரி செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அபிநயா மற்றும் 2 குழந்தைகளை தேடிவருகின்றனர்.
- அரசு பள்ளி மாணவிகளுக்கான செயல் விளக்க கருத்தரங்கு பஸ் நிலையம் பின்புறம் உள்ள மங்கலட்சுமி திருமண நிலையத்தில் இன்று நடைபெற்றது.
- மின்கசிவு ஏற்பட்டு மின் சாதன பொருட்களில் தீ விபத்து ஏற்பட்டது.
புதுச்சேரி:
செயற்கைக்கோளின் செயல்பாடு மற்றும் அதை விண்ணில் ஏவுவது குறித்து மாணவர்களுக்கு நேரடியாக விளக்க பயிற்சியை அப்துல்கலாம் அறக்கட்டளை நடத்தி வருகிறது.
புதுவை அரசு பள்ளி மாணவிகளுக்கான செயல் விளக்க கருத்தரங்கு பஸ் நிலையம் பின்புறம் உள்ள மங்கலட்சுமி திருமண நிலையத்தில் இன்று நடைபெற்றது.
சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
கணினி மற்றும் எல்.இ.டி. ஸ்கிரீன் மூலம் மாணவர்களுக்கு விளக்கம் செய்யப்பட்டு கொண்டிருந்த போது திடீரென மின்கசிவு ஏற்பட்டு மின் சாதன பொருட்களில் தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் ஆசிரியர்களும் மாணவியரும் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். அதற்குள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மின் கசிவு, தீ விபத்தையும் தடுத்தனர்.
இதனால் அப்பகுதியில் 10 நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது. மின்துறைக்கு தகவல் தெரிவித்தவுடன், அதிகாரிகள் நேரில் வந்து மின் இணைப்பை சரி செய்தனர். 15 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிகழ்ச்சி தொடர்ந்தது.
- கலால்துறை அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி:
புதிய மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலால்துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
புதுவை சாமிபிள்ளை தோட்டத்தில் புதிதாக மதுக்கடை திறக்க அரசு அனுமதி அளித்து இருந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் சமூக நல அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே இப்பகுதியில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை உள்ள நிலையில் புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டால் தினமும் மோதல் உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறும் என்பதால் புதிதாக மதுக்கடை திறக்ககூடாது என்று பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
எனினும் அரசு இதில் செவி சாய்க்காததால் அப்பகுதி மக்கள் இன்று கலால்துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
கலால்துறை அலுவலகம் முன்பு அவர்கள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- புதுவையில் மின்துறையை தனியார் மயமாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
- கவர்னர் உத்தரவின்படி, புதுவை மின்துறை பொது சேவை நிறுவனமாக தொடர்கிறது.
புதுச்சேரி:
புதுவையில் மின்துறையை தனியார் மயமாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதை கண்டித்து மின்துறை ஊழியர்கள் கூட்டு போராட்டக்குழுவை அமைத்து போராட்டம் நடத்தினர். புதுவை மின்துறையை தனியார்மயமாக்கக்கூடாது என வலியுறுத்தி தொழிலாளர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இவ்வழக்கு நிலுவையில் உள்ளது.
மின்துறை முன்பு போராட்டத்தை தடுக்கும் வகையில் மின்துறை பொது சேவை நிறுவனமாக அறிவிக்கப்பட்டு மின்துறை முன்பு போராட்டம் நடத்த ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த தடை உத்தரவு மேலும் 6 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுவை கவர்னர் உத்தரவின்படி, புதுவை மின்துறை பொது சேவை நிறுவனமாக தொடர்கிறது. இந்த அறிவிப்பு 19.1.23 முதல் 18.7.2023 வரை அமலில் இருக்கும் என மின்துறை சார்பு செயலர் முருகேசன் வெளியிட்டுள்ளார். இதனால் புதுவை மின்துறை முன்பு போராட்டம் நடத்த 6 மாதத்துக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- மாதந்தோறும் 15ம் தேதி அரசு அலுவலகங்களில் மக்கள் சந்திப்பு நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார்.
- விதவை பெண் தனக்கு வருமானம் கிடைக்கும் வகையில் வேலை வாங்கித்தரும்படி கோரிக்கை வைத்தார்.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் தமிழிசை மாதத்தின் முதல்நாள் அரசு ஊழியர்கள் பாரம்பரிய உடை அணிந்து அலுவலகம் வர வேண்டும்.
மாதந்தோறும் 15-ந் தேதி அரசு அலுவலகங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த வேண்டும். அதில் உயரதிகாரிகள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில் இம்மாதம் 15-ந் தேதியான இன்று புதுவையில் உள்ள அரசு அலுவலகங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
கவர்னர் மாளிகையில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, கல்மேடுபட்டு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மனைவி அஞ்சலை(67). கவர்னரிடம் மனு அளித்தார். அதில், தனது வீட்டையும், சுற்றியுள்ள நிலத்தையும் 2-வது மகள் அபகரித்துவிட்டதாகவும், அதை மீட்டுத்தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இதேபோல கோர்க்காடை சேர்ந்த விதவை பெண், தனது மகனை தனியார் பள்ளியில் படிக்க வைப்பதாகவும், கட்டணம் செலுத்த முடியாததால் பள்ளியிலிருந்து வெளியே அனுப்பிவிட்டதால், அரசு பள்ளியில் சேர்க்க உதவ வேண்டும். தனக்கு வருமானம் கிடைக்கும் வகையில் வேலை வாங்கித்தரும்படியும் கோரிக்கை வைத்தார்.
இதேபோல் பெரியவர் ஒருவர் தன்னுடைய பக்கத்து வீட்டுக்காரர் மிரட்டுவதாக பென்டிரைவ்வில் ஆதாரத்துடன் புகார் செய்தார்.
கவர்னர் மாளிகையில் சந்தித்த பலர் நிலமோசடி தொடர்பாகவே புகார் அளித்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கவர்னர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். சம்பந்த ப்பட்ட அதிகாரிகளுக்கு மனுவை அனுப்பி வைத்தார்.
புதுவை தலைமை செயலகம், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் இன்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளித்தனர்.
- புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் தணிக்கை அதிகாரி ஜெகன்நாதன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் தணிக்கை செய்தனர்.
- அறநிலையைத்துறை சார்பில் உள்ள அனைத்து கோவில்களிலும் தணிக்கை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுவையில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் சுமார் 243 கோவில்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான கோயில்கள் ஒவ்வொன்றுக்கும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.
இதன் மூலம் வரும் வருமானம் மற்றும் கோவில் உண்டியல்கள் மூலம் வரும் வருமானம் ஆகியவற்றை ஆண்டுதோறும் தணிக்கை செய்ய கணக்கு மற்றும் கருவூலத்துறையில் கோவில் தணிக்கை பிரிவு செயல்பட்டு வருகிறது.
கோவில்கள் தணிக்கை தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் விண்ணப்பித்து தகவல் கேட்டபோது 10 ஆண்டுகளுக்கு மேலாக கோவில் கணக்குகள் தணிக்கை செய்யப்படாதது தெரியவந்தது. இதுதொடர்பாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோருக்கு புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் தணிக்கை அதிகாரி ஜெகன்நாதன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் தணிக்கை செய்தனர். மணக்குள விநாயகர் கோவில் தங்க பொருட்கள், வெள்ளி பொருட்கள், கோவில் சிலைகள், வருவாய் உள்ளிட்ட கணக்கு தணிக்கை செய்யப்பட்டது. தொடர்ந்து அறநிலையைத்துறை சார்பில் உள்ள அனைத்து கோவில்களிலும் தணிக்கை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- திண்டிவனத்தில் வேலையை முடித்துவிட்டு வானூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
- அந்த வழியாக வந்த டிராக்டர் மீது மோட்டார்சைக்கிள் மோதியது.
புதுச்சேரி:
புதுவை மாநிலம் சந்தை புதுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பாவாடை ராயன் (வயது 27). இவரது நண்பர் வேல்முருகன் (30). இவர் வானூர் பகுதியை சேர்ந்தவர்.இவர்கள் 2 பேரும் நேற்று இரவு திண்டிவனத்தில் வேலையை முடித்துவிட்டு வானூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். வானூர் அருகே தென்கோடிபாக்கம் மெயின்ரோட்டில் சென்ற போது அந்த வழியாக வந்த டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் 2 ேபரும் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாவாடைராயன் இறந்தார். வேல்முருகன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து கிளியனூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மணி கண்டன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- தொடர்ந்து தியானம் செய்பவர்களின் நினைவாற்றல், புரிதல் திறன், மூளைத்திறன் மற்றவர்களை விட அதிகமாக இருப்பதை கண்டு பிடித்திருக்கிறார்கள்.
- மனித வாழ்க்கைக்கான விழிப்புணர்வை, ஆன்மீக செய்தியை உலகம் முழுதும் எடுத்துச் செல்ல வேண்டும்.
புதுச்சேரி:
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பவுன்டேஷன், யூனிட்டி கட்டிடத்தில் இன்று சர்வதேச ஆன்மிக மாநாடு தொடக்க விழா நடந்தது.
ஆரோவில் செயலர் ஜெயந்திரவி வரவேற்றார். தமிழக கவர்னர் ஆர்.என். ரவி, புதுவை கவர்னர் தமிழிசை, ஆரோவில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், ஆரோவில் வாசிகள் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் புதுவை கவர்னர் தமிழிசை பேசியதாவது:-
ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 2 லட்சம் மக்கள் தற்கொலை செய்து கொண்டதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. இதில் இளைஞர்கள் அதிகம். இது மிகவும் அச்சம் தரக்கூடிய ஒன்று. இளைஞர்களுக்கு வாழ்க்கையில் வரும் சவால்களை எதிர்கொள்ள கற்றுக் கொடுக்க வேண்டும். அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
தியானம் செய்வதால் ஏற்படும் நன்மைகளை பற்றி சொல்ல வேண்டும். தியானம் செய்வதால் மனது அமைதி பெறுகிறது. நம்முடைய உணர்வுகள் பண்படுகிறது. அதிக ஆற்றலோடு, ஆக்கப் பூர்வமாக செயல்பட உதவுகிறது. நம்முடைய நினைவாற்றலை, கவனத் திறனை பலப்படுத்துகிறது. இந்த உண்மையை இளைஞர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்.
இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று.
இத்தாலியில் நடந்த ஆராய்ச்சியில், தொடர்ந்து தியானம் செய்பவர்களின் நினைவாற்றல், புரிதல் திறன், மூளைத்திறன் மற்றவர்களை விட அதிகமாக இருப்பதை கண்டு பிடித்திருக்கிறார்கள். புதுவைக்கு வேதபுரி என்று பெயர் உண்டு. இது ஆன்மீக பூமி.
இங்கு 30 முதல் 40 சித்தர் பீடங்கள் இருக்கின்றன. ஆரோவில் நகரமும் இந்த பகுதியில்தான் இருக்கிறது. இங்கிருந்து, மனித வாழ்க்கைக்கான விழிப்புணர்வை, ஆன்மீக செய்தியை உலகம் முழுதும் எடுத்துச் செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.






