என் மலர்tooltip icon

    ஒடிசா

    • இரண்டு பயணிகள் ரெயில் என்பதால் 1000-க்கும் மேற்பட்டோர் காயம்
    • விபத்து குறித்து உயர்மட்ட குழு விசாரணை நடத்தி வருகிறது

    ஒடிசாவில் நிகழ்ந்த கோர ரெயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. அவர்களது உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். பலரது உடல்கள் சிதைந்துள்ளதால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இன்று காலை வரை இன்னும் 101 உடல்கள் அடையாளம் காணப்படவில்லை என்று கிழக்கு மத்திய ரெயில்வே பிரிவு மானேஜர் ரிங்கேஷ் ராய் தெரிவித்துள்ளார்.

    மேலும் காயம் அடைந்தவர்கள், சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரங்கள் குறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    ஒடிசா ரெயில் விபத்தில் சுமார் 1100 பேர் காயம் அடைந்தனர். அதில் 900 பேர் முதல் உதவி உள்ளிட்ட லேசான சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இன்னும் 200 பயணிகள் பல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 278 பேர் உயிரிழந்துள்ளனர். 101 உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

    இவ்வாறு தெரிவித்தார்.

    புவனேஸ்வர் நகராட்சியின் கமிஷனர் விஜய் அம்ரித் குலாங்கே கூறியதாவது:-

    193 உடல்கள் புவனேஸ்வரில் உள்ள மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ளது. அதில் 80 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. 55 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 200-க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் உதவி எண் 1929-க்கு வந்துள்ளன. உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களுடன் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு தெரிவித்தார்.

    • இந்த விபத்தில் மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 275 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    புவனேஷ்வர்:

    ஒடிசாவில் கடந்த 2-ம் தேதி பாலசோர் மாவட்டத்தில் பயணிகள் ரெயில் உள்பட 3 ரெயில்கள் தடம்புரண்டு மோதியதில் பயங்கர விபத்து நிகழ்ந்தது. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 275 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 1,175 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ரெயில் விபத்து இந்திய வரலாற்றில் மிக மோசமான விபத்துகளில் ஒன்றாக பதிவாகி இருக்கிறது. நவீன தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலத்தில் இவ்வளவு பெரிய விபத்து நிகழ்ந்திருப்பது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

    உடனடியாக உயர்மட்ட விசாரணைக்கு ரெயில்வே அமைச்சகம் உத்தரவிட்டது. தென்கிழக்கு வட்டத்தின் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் சவுத்ரி தலைமையிலான குழுவினர் இந்த விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த விபத்து தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக கட்டாக் காவல் நிலையம் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் மீது ரெயில்வே சட்டம் 153, 154 மற்றும் 175 உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • கோரமண்டல உள்பட 3 ரெயில்கள் விபத்துக்குள்ளாகி 275 பேர் பலி
    • 1000 ஊழியர்கள் இரவு பகலாக வேலைப்பார்த்து சீரமைப்பு பணி முடிந்து தற்போது ரெயில் சேவை தொடக்கம்

    ஒடிசாவில் கடந்த வெள்ளிக்கிழமை மூன்று ரெயில்கள் மோதி 275 பேர் உயிரிழந்தனர். சீரமைப்பு பணி முடிவடைந்து சுமார் 51 மணி நேரத்திற்குப் பின் பஹனாகா பகுதியில் தற்போது ரெயில் சேவை தொடங்கியுள்ளது.

    மிகப்பெரிய விபத்து நடைபெற்று 3 நாட்கள் முடிவடைவதற்குள் தற்போது ஒடிசாவில் மீண்டும் ஒரு விபத்து நடந்துள்ளது.

    ஒடிசா மாநிலம் டுங்ரி சுண்ணாம்பு சுரங்கத்திற்கும் ஏசிசி பார்கார் சிமெண்ட் ஆலைக்கும் இடையில் ரெயில் தண்டவாளம் உள்ளது. இதில் சென்ற சுண்ணாம்பு ஏற்றி சென்ற ரெயிலின் ஐந்து பெட்டிகள் தடம் புரண்டுள்ளது.

    இது முற்றிலும் தனிப்பட்ட ரெயில் பாதை. ரெயில் தண்டவாளம், பெட்டிகள், என்ஜின் அனைத்தும் தனிப்பட்டவை. ரெயில்வேயுடன் எந்த வகையிலும் இணைக்கப்படவில்லை எனத் தகவில் வெளியாகியுள்ளது.கோரமண்டல உள்பட 3 ரெயில்கள் விபத்துக்குள்ளாகி 275 பேர் பலி

    • ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் 3 ரெயில்கள் விபத்துக்குள்ளாகின.
    • விபத்து நடந்து 51 மணி நேரம் ஆனநிலையில் சீரமைப்பு பணிகள் முடிந்து ரெயில் சேவை தொடங்கியது.

    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் 3 ரெயில்கள் விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் 17 ரெயில் பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 275 ஆக அதிகரித்துள்ளது. 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ஒடிசா ரெயில் விபத்து நடந்த இடத்தில் உள்ள ரெயில் பெட்டிகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 7 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தண்டவாளத்தில் கிடந்த ரெயில் பெட்டிகள் அகற்றப்பட்டன. தண்டவாளத்தில் கிடந்த எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள், சரக்கு ரெயில் பெட்டிகள் என அனைத்து ரெயில் பெட்டிகளும் அகற்றப்பட்டது. தண்டவாளங்கள் மற்றும் மின் இணைப்புகள் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.

    இந்நிலையில், ஒடிசா ரெயில் விபத்து நடந்து 51 மணி நேரம் ஆனநிலையில் சீரமைப்பு பணிகள் முடிந்து ரெயில் சேவை தொடங்கியது.

    சீரமைக்கப்பட்ட பாதையில் சென்ற சரக்கு ரெயிலை, அங்கிருந்த மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் உற்சாகமாக வழியனுப்பி வைத்தார்.

    • ஒடிசா ரெயில் விபத்தில் இதுவரை 275 பேர் பலியாகி உள்ளனர்.
    • மனித தவறு காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

    ஒடிசாவில் நிகழ்ந்த ரெயில் விபத்து நாட்டையே உலுக்கி உள்ளது. பாலசோர் மாவட்டம் பஹனகா ரெயில் நிலையம் அருகே மெயின் லைனில் வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லூப் லைனில் திடீரென சென்று சரக்கு ரெயில் மீது மோத, எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் தடம்புரண்டு அருகில் உள்ள மற்றொரு மெயின் லைனில் விழுந்துள்ளன. அந்த சமயத்தில் வந்த பெங்களூரு- ஹவுரா அதிவிரைவு ரெயில், தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது பயங்கரமாக மோதியது.

    ஒடிசா ரெயில் விபத்தில் இதுவரை 275 பேர் பலியாகி உள்ளனர். 1175 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 793 பேர் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் உள்ளவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    இன்டர்லாக்கிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட கோளாறு இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மனித தவறு காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

    இந்நிலையில் ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்துவதற்கு ரெயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளது. நிர்வாகத்திற்கு கிடைத்த தகவல்கள் மற்றும் பிற கேள்விகளையும் கருத்தில் கொண்டு, இந்த விபத்து தொடர்பாக மேல் விசாரணை செய்வதற்காக, முழு வழக்கையும் விசாரிக்கும்படி சிபிஐக்கு ரெயில்வே வாரியம் பரிந்துரை செய்திருப்பதாக ரெயில்வே துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

    • கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் லூப் லைனுக்கு சென்று சரக்கு ரெயிலின் மீது மோதி உள்ளது.
    • இன்டர்லாக் மாற்றம் எப்படி நடந்தது? என்பது விசாரணையில் தெரியவரும் என ரெயில்வே மந்திரி கூறினார்.

    ஒடிசா மாநிலம் பாலசோரில் நிகழ்ந்த ரெயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்தததாக தலைமைச் செயலாளர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 1175 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் 793 பேர் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்றும் தலைமை செயலாளர் கூறினார். ரெயில் விபத்து நடந்த இடத்தில் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

    கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் மெயின் லைனில் இருந்து லூப் லைனுக்கு சென்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரெயிலின் மீது மோதியதால் இந்த பேரிழிவு ஏற்பட்டிருக்கிறது.

    விபத்து நடந்த இடத்தில் ரெயில்வே துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விபத்துக்கான மூலகாரணம் கண்டறியப்பட்டுள்ளதாக கூறினார். மின்னணு இன்டர்லாக்கிங்கில் ஏற்பட்ட மாற்றத்தால் விபத்து நடந்துள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்த மாற்றத்திற்கு யார் காரணம், எப்படி நடந்தது? என்பது விசாரணையில் தெரியவரும் எனவும் ரெயில்வே மந்திரி கூறினார்.

    ரெயில் டிரைவர்களுக்கு விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் கவாச் அமைப்பு இந்த ரெயில்களில் நிறுவப்படவில்லை. இந்த அமைப்பு இருந்திருந்தால் விபத்தை தவிர்த்திருக்கலம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விபத்துக்கும் கவாச்சிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ரெயில்வே மந்திரி குறிப்பிட்டார். 

    • இறந்துபோனவர்களில் 88 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
    • காயமடைந்தவர்களில் 793 பேர் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

    ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில் ஆகியவை ஒடிசாவின் பாலசோர் அருகே மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தண்டவாளத்தில் ஆங்காங்கே சிதறி உருக்குலைந்தன. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன. ரெயில் பெட்டிகளில் பயணிகள் கொத்துக்கொத்தாக இறந்து கிடந்தனர். பலர் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் உயிருக்குப்போராடினர். இதனால் நேரம் செல்லச்செல்ல உயிரிழப்பு அதிகரித்தவண்ணம் இருந்தது.

    இன்று மதிய நிலவரப்படி உயிரிழந்தோர் எண்ணிக்கை 288-ஆக அதிகரித்துள்ளதாகவும், 1000க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகின. எனினும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

    இந்நிலையில், இன்று பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்த ஒடிசா தலைமைச் செயலாளர் பிரதீப் ஜேனா, ஒடிசா ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த தரவு மாவட்ட கலெக்டரால் சரிபார்க்கப்பட்டு, பலி எண்ணிக்கை திருத்தப்பட்டது என்றும், சில உடல்கள் இரண்டு முறை எண்ணப்பட்டதால் 288 என்று முதலில் கூறப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

    இறப்பு எண்ணிக்கை 275 ஆக திருத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 88 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1175 பயணிகளில் 793 பேர் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்றும் தலைமை செயலாளர் கூறினார்.

    விபத்து நடந்த இடத்தில் தண்டவாளங்களின் குறுக்கே கிடந்த ரெயில் பெட்டிகள் அகற்றப்பட்டுவிட்டன. இப்போது அந்த வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட ரெயில் சேவையை மீண்டும் வழங்குவதற்காக மறுசீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது.

    • ஒடிசாவில் ரெயில் விபத்து நடந்த இடம் சோக சுவடுகளை என்றும் சுமந்து கொண்டிருக்கும்.
    • அவரது காதலின் அடையாளமான கடிதங்கள் மட்டும் எஞ்சி நிற்கிறது.

    ஒடிசாவில் ரெயில் விபத்து நடந்த இடம் சோக சுவடுகளை என்றும் சுமந்து கொண்டிருக்கும்.

    அந்த இடத்தில் சிதறிக் கிடந்த பொருட்கள் ஒவ்வொன்றும் பல இதயங்களின் வலியையும், ஏக்கத்தையும் பிரதிபலிப்பதாக இருந்தது.

    தண்டவாளத்தின் சில அடி தூரத்துக்குள் ஒரு பயணியின் பை கிடைத்தது. அதில் ஒரு நோட் புக் இருந்தது. அதை பிரித்து பார்த்த போது மீட்பு குழுவினர் கண்களில் வேதனை கலந்த கண்ணீர் கசிந்தது.

    ஏனெனில் அந்த நோட்டு புத்தகத்தில் இடம்பெற்று இருந்தது அனைத்தும் காதல் கவிதைகள்.

    சிவப்பு, நீலம், பச்சை என்று பல வண்ணங்களை கவிதையாக வடித்து இருந்தார். வங்காள மொழியில் எழுதப்பட்டிருந்த கவிதைகள் ஒவ்வொன்றும் காதலையும், காதலின் ஏக்கத்தையும் வெளிப்படுத்தியது.

    'சிறிய மேகங்கள் மழையை உருவாக்குகின்றன. சிறிய கதைகள் அன்பை உருவாக்குகின்றன' என்று அந்த கடிதங்கள் நீள் கிறது. எழுதியவர் யார்? அவர் என்ன ஆனார்? என்பது தெரியவில்லை. அவரது காதலின் அடையாளமான கடிதங்கள் மட்டும் எஞ்சி நிற்கிறது.

    குழந்தைகளுக்காக ஆசையாக வாங்கி வைத்திருந்த பொம்மைகள், உடைகள் சிதறி கிடந்தன. கிழிந்தும், சிதைந்தும் கிடந்த அவற்றின் மீது ரத்த கறைகள் படிந்து காணப்பட்டன. சிதறி கிடந்த பயணிகளின் உடமைகளை தன்னார்வலர்கள் சேகரித்து ஆங்காங்கே குவித்து வைத்துள்ளார்கள்.

    • பாலசோர் வழித்தடத்தில் ரெயில் சேவை சீராகும் வரை கொல்கத்தாவுக்கு கட்டணமில்லா பேருந்துகள் இயக்கப்படும்.
    • பூரி, புவனேஸ்வர், கட்டாக்கிலிருந்து கொல்கத்தாவுக்கு தினந்தோறும் 50 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

    ஒடிசா மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 3 ரெயில்களுக்கு இடையே ஏற்பட்ட விபத்தின் காரணமாக தற்போது வரை 294பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்களுக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

    ரெயில் விபத்து நடந்து 40 மணிநேரம் ஆனநிலையில் விபத்து நடந்த இடத்தில் உள்ள ரெயில் பெட்டிகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 7 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தண்டவாளத்தில் கிடந்த ரெயில் பெட்டிகள் அகற்றப்பட்டன. தண்டவாளத்தில் கிடந்த எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள், சரக்கு ரெயில் பெட்டிகள் என அனைத்து ரெயில் பெட்டிகளும் அகற்றப்பட்டது. தொடர்ந்து நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளால் ஏராளமான ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஒடிசாவில் பூரி, புவனேஸ்வர், கட்டாக் ஆகிய இடங்களிலிருந்து கட்டணமில்லா பேருந்துகள் இயக்கப்படும் என முதல்- மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

    பாலசோர் வழித்தடத்தில் ரெயில் சேவை சீராகும் வரை கொல்கத்தாவுக்கு கட்டணமில்லா பேருந்துகள் இயக்கப்படும். பூரி, புவனேஸ்வர், கட்டாக்கிலிருந்து கொல்கத்தாவுக்கு தினந்தோறும் 50 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

    இதனிடையே ரெயில் விபத்து ஏற்பட்ட இடத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகள் குறித்து ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்-கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார்.

    முன்னதாக, ரெயில் விபத்தில் உயிரிழந்த ஒடிசாவைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சமும் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • லேசான காயம் அடைந்த பயணிகள் பஸ்களில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
    • ரெயில் விபத்தில் காயங்களுடன் தப்பியவர்கள், மீண்டும் பஸ் விபத்தில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஒடிசா ரெயில் விபத்தில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்து உள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். லேசான காயம் அடைந்த பயணிகள் பஸ்களில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

    இந்த நிலையில், ஒடிசா ரெயில் விபத்தில் காயமடைந்த பயணிகளை ஏற்றிக் கொண்டு கொல்கத்தாவுக்கு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் திடீரென்று விபத்தில் சிக்கியது.

    கொல்கத்தாவில் உள்ள மேதினிபூருக்கு சென்ற அந்த பஸ் மதியம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த வேன் மீது நேருக்கு நேர் மோதியது. இதில், பஸ்சில் இருந்த பயணிகள் சிலர் லேசான காயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. ரெயில் விபத்தில் காயங்களுடன் தப்பியவர்கள், மீண்டும் பஸ் விபத்தில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நாட்டையே உலுக்கிய கோர விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 294-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய ரெயில்வே மந்திரி தெரிவித்துள்ளார்.
    • விபத்துக்குள்ளான ரெயிலின் முன்பதிவு பெட்டியில் பயணித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில் ஆகியவை ஒடிசாவின் பாலசோர் அருகே மோதி விபத்து ஏற்பட்டது. அதிவேகத்தில் சென்ற போது நடந்த இந்த விபத்தால் ரெயில் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி உருக்குலைந்தது.

    ரெயில் விபத்து நடந்து 36 மணிநேரம் ஆனநிலையில் விபத்து நடந்த இடத்தில் உள்ள ரெயில் பெட்டிகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 7 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தண்டவாளத்தில் கிடந்த ரெயில் பெட்டிகள் அகற்றப்பட்டன. தண்டவாளத்தில் கிடந்த எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள், சரக்கு ரெயில் பெட்டிகள் என அனைத்து ரெயில் பெட்டிகளும் அகற்றப்பட்டது.

    நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 294-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய ரெயில்வே மந்திரி தெரிவித்துள்ளார்.

    விபத்து நடந்த இடத்தில் 2-வது நாளாக நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்ட மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்னவ் கூறியதாவது:-

    ரெயில் விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது. அனைத்து உடல்களும் அகற்றப்பட்டுள்ளன. இந்தப் பாதையில் ரெயில்கள் ஓடத் தொடங்கும் வகையில் புதன்கிழமை காலைக்குள் சீரமைப்புப் பணிகளை முடிக்கும் வகையில் நடைபெறுவதாக கூறினார்.

    இதனிடையே விபத்துக்குள்ளான ரெயிலின் முன்பதிவு பெட்டியில் பயணித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அவர்களின் நிலை என்ன என்பதை அறிய ஒடிசா அதிகாரிகளுடன் இணைந்து தமிழ்நாடு குழு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உலகையே உலுக்கியுள்ள இந்த விபத்தில் 288 பேர் பலியாகி உள்ளனர்.
    • சுமார் 900 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பாலசோர் :

    மேற்கு வங்காளத்தின் ஷாலிமாரில் இருந்துசென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்பட 3 ரெயில்கள் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு விபத்துக்குள்ளாகின. உலகையே உலுக்கியுள்ள இந்த விபத்தில் 288 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 900 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து நடந்த பகுதியை மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று நேரில் பார்வையிட்டார். மேலும் விபத்துக்கான காரணங்கள் குறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    முன்னாள் ரெயில்வே மந்திரியான மம்தா பானர்ஜி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ரெயில்வேயின் செயல் திறனை மேம்படுத்த வேண்டும் என தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    விபத்து நடந்த வழித்தடத்தில் மோதல் தடுப்பு கருவி இல்லை. அது இருந்திருந்தால் இந்த பேரழிவு தடுக்கப்பட்டிருக்கும். ஒரு முன்னாள் ரெயில்வே மந்திரி என்ற முறையில் இந்த துறையின் உள் செயல்பாடுகள் எனக்கு தெரியும். அப்பாவி மக்களின் உயிரை ஆபத்தில் ஆழ்த்தும் இதுபோன்ற விபத்துகளை தடுப்பதற்கு சிறந்த ஒருங்கிணைப்பு அவசியம். ரெயில்வேயின் செயல்திறனை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியது அவசர தேவை ஆகும்.

    இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

    முன்னதாக டாக்டர்கள், நர்சுகள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய 50 பேர் கொண்ட மேற்கு வங்காள குழு விபத்து நடந்த இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்தார். மேலும் 110 ஆம்புலன்ஸ்கள் மற்றும் உபகரணங்களும் விபத்து நடந்த இடத்தில் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

    விபத்தில் சிக்கிய ரெயிலில் இருந்த 60 சதவீத பயணிகள் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்கள் எனக்கூறிய அவர், இந்த விபத்தில் உயிரிழந்த மேற்கு வங்காளத்தினருக்கு தலா ரூ.5 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

    ×