என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • மகாராஷ்டிராவில் உள்ள சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் திருமணம் நடைபெற்றது.
    • மணமக்களின் இரு வீட்டார் மட்டும் இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் கே.எல்.ராகுல். இவரும், இந்தி நடிகர் சுனில் ஷெட்டியின் மகளும் நடிகையுமான அதியாவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். தொடக்கத்தில் வெளிநாடுகளுக்கு ஜோடியாக சுற்றுலா செல்வது, நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என இருந்து வந்த ராகுல் -அதியா ஷெட்டி ஜோடி கடந்த ஆண்டு தாங்கள் காதலிப்பதை உறுதி செய்தனர். இவர்களின் திருமணம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், கே.எல்.ராகுலுக்கும் அதியாவுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. மகாராஷ்டிராவின் கந்தாலாவில் உள்ள சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் திருமணம் நடைபெற்றது. புதுமண தம்பதி கே.எல்.ராகுல் - அதியாவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    திருமணத்தின்போது எடுக்கப்பட்ட அழகிய புகைப்படங்களை கே.எல்.ராகுல், அதியா  இருவரும் சமூக வலைத்தள பக்கங்களில் பதிவேற்றி உள்ளனர். இந்த புகைப்படங்கள் வைரலாகிவருகின்றன.

    • கடந்த 24 மாதத்தில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்ட 3-வது நீர்மூழ்கி கப்பலாகும்.
    • எதிரி போர்க்கப்பல்களை அழிக்கும் அதிநவீன ஏவுகணைகள் நீர்மூழ்கியில் பொருத்தப்பட்டுள்ளன.

    மும்பை:

    இந்திய கடற்படையில் தற்போது 150-க்கும் மேற்பட்ட போர் கப்பல்கள் உள்ளன. 2027-ம் ஆண்டுக்குள் போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த மத்திய பாதுகாப்புத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.

    இதேபோல் கடற்படையில் 17 நீர் மூழ்கி கப்பல்கள் உள்ளன. இதில் 2 நீர் மூழ்கி கப்பல்கள் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் திறன் கொண்டவை. நாட்டின் பெரும்பாலான நீர் மூழ்கி கப்பல்கள் ரஷியா, ஜெர்மனி தயாரிப்புகள் ஆகும்.

    இந்த நிலையில் கடந்த 2005-ம் ஆண்டில் பிரான்சின் நேவல் குரூப் நிறுவனத்துடன் இணைந்து 6 புதிய நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இதன்படி 2007-ம் ஆண்டில் மும்பை கட்டுமான தளத்தில் நீர் மூழூகி கப்பல்களை தயாரிக்கும் பணி தொடங்கியது.

    முதல் நீர்மூழ்கியான ஐ.என்.எஸ். கல்வாரி கப்பல் 2017-ம் ஆண்டு கடற்படையில் சேர்க்கப்பட்டது. 2019-ல் ஐ.என்.எஸ். காந்தேரி, 2021-ல் ஐ.என்.எஸ். கரஞ்ச், ஐ.என்.எஸ். வேலா ஆகியவை அடுத்தடுத்து கடற்படையில் இணைக்கப்பட்டன.

    இந்த வரிசையில் 5-வது நீர்மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ். வகிர் இன்று இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.

    மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் கடற்படை தளபதி ஹரிகுமார் புதிய நீர்மூழ்கி கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார். கடந்த 24 மாதத்தில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்ட 3-வது நீர்மூழ்கி கப்பலாகும்.

    ஐ.என்.எஸ். வகிர் நீர்மூழ்கி கப்பல் 67.5 மீட்டர் நீளம், 6.2 மீட்டர் அகலம், 12.3 மீட்டர் உயரம் கொண்டதாகும். இது டீசல், மின்சாரத்தில் இயங்கும்.

    எதிரி போர்க்கப்பல்களை அழிக்கும் அதிநவீன ஏவுகணைகள் நீர்மூழ்கியில் பொருத்தப்பட்டு உள்ளன. கடல் பகுதி மட்டுமின்றி வான்பகுதி, நிலப்பகுதிகளை குறி வைத்தும் தாக்குதல் நடத்த முடியும்.

    இது கடலுக்கு அடியில் 350 மீட்டர் ஆழம் வரை மூழ்கும். சுமார் 2 வாரங்கள் வரையில் கடலுக்கு அடியில் தொடர்ந்து தங்கி இருக்க முடியும். அதிக சப்தம் எழுப்பாது என்பதால் எதிரிகள் கடல் எல்லைக்குள் நுழைந்தாலும் எளிதில் கண்டறிய முடியாது.

    கல்வாரி ரகத்தில் 6-வது மற்றும் இறுதி நீர்மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ். வகிர் அடுத்த ஆண்டு மார்ச்சில் இந்திய கடற்படையில் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கார்த்திக் ஷெகோக்கர் என்ற 3-ம் வகுப்பு மாணவர் மட்டுமே பள்ளிக்கு வருகிறார்.
    • காலையில் வகுப்பு தொடங்குவதற்கு முன்பு இருவரும் தேசிய கீதம் பாடுகின்றனர்.

    புனே:

    மகாராஷ்டிரத்தில் வாஷிம் மாவட்டத்தில் கணேஷ்பூர் கிராமம் உள்ளது. மொத்தம் 150 பேர் வசித்து வரும் இந்த கிராமத்தில் அரசால் நடத்தப்படும் பள்ளி ஒன்று உள்ளது. 1 முதல் நான்காம் வகுப்பு வரையிலான வகுப்புகளை கொண்டிருந்தபோதும், அந்த பள்ளியில் ஒரே ஒரு மாணவர் படித்து வருகிறார்.

    கார்த்திக் ஷெகோக்கர் என்ற 3-ம் வகுப்பு மாணவர் மட்டுமே பள்ளிக்கு வருகிறார். அவருக்கு பாடம் நடத்துவதற்காக கிஷோர் மங்கார் என்ற ஆசிரியர் தினமும் 12 கி.மீ. பயணம் செய்து பள்ளிக்கு வருகை தருகிறார். காலையில் வகுப்பு தொடங்குவதற்கு முன்பு இருவரும் தேசிய கீதம் பாடுகின்றனர். அதன்பின்னர் வகுப்பு தொடங்கும்.

    இதுபற்றி ஆசிரியர் கிஷோர் மங்கார் கூறும்போது, 2 ஆண்டுகளாக இந்த பள்ளியில் ஒரே ஒரு மாணவர் மட்டுமே படித்து வருகிறார். பள்ளியில் நான் மட்டுமே ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். இந்த மாணவருக்கு அனைத்து பாடங்களையும் கற்று தருகிறேன். அரசால் வழங்கப்படும் மதிய உணவு உள்பட அனைத்து வசதிகளும் அந்த மாணவருக்கு வழங்கப்படுகிறது என்று கூறியுள்ளார். ஒரே ஒரு மாணவர் மட்டுமே பள்ளிக்கு வந்தபோதும், மாணவரின் கல்விக்கு தடை விதிக்காமல், பள்ளி நிர்வாகம் தொடர்ந்து இந்த பள்ளியை நடத்தி வருகிறது.

    • வங்கதேசம், இலங்கை அணிகளுக்கு எதிரான தொடரில் விராட் கோலி அடுத்தடுத்து சதமடித்தார்.
    • ஒருநாள் கிரிக்கெட்டில் உள்ளூரில் அதிக சதம் அடித்த சச்சின் சாதனையை கோலி முறியடித்தார்.

    மும்பை:

    சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் 100 சதங்கள் பதிவு செய்துள்ளார். சச்சினுக்கு அடுத்தபடியாக விராட் கோலி 74 சதங்களைப் பதிவு செய்துள்ளார்.

    விராட் கோலி வங்கதேசம், இலங்கை அணிகளுக்கு எதிரான தொடரில் அடுத்தடுத்து சதம் அடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் உள்ளூரில் அதிக சதம் அடித்த சச்சினின் சாதனையை முறியடித்தார்.

    இதற்கிடையே, சமூக வலைதளங்களில் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த வீரர் சச்சின் டெண்டுல்கரா, விராட் கோலியா என்ற சர்ச்சை தற்போது எழுந்துள்ளது. இது குறித்து பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் இது குறித்து தனது கருத்தை கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய முன்னாள் வீரர் கபில்தேவ் கூறியதாவது:

    அனைத்து தலைமுறையுமே ஒன்றுக்கு ஒன்று வளர்ந்து வருகிறது. தமது காலத்தில் கவாஸ்கர் சிறந்த வீரராக விளங்கி வந்தார். அதன்பிறகு டிராவிட் ,சச்சின், ஷேவாக் போன்ற தலைமுறையினர் வந்து சாதித்தனர். தற்போது ரோகித், விராட் கோலி என சிறந்து விளங்குகின்றனர்.

    இனி வரும் காலங்களில் விராட் கோலியை விட சிறந்த பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ரன் குவிக்க வாய்ப்பு இருக்கிறது.

    தமக்கு சில வீரர்களிடமிருந்து சில பிடிக்கும், சில பிடிக்காது என்பதால் 11 வீரர்கள் விளையாடும் ஆட்டத்தில் ஒருவர் மற்றும் இருவரை சிறந்த வீரர் என்று தேர்வு செய்ய தாம் விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.

    • தேர்தல் ஆணையத்தில் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும்.
    • இது ஒரு சட்டவிரோத அரசாங்கம்.

    மும்பை :

    சிவசேனா கட்சி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2 ஆக உடைந்தது. கடந்த ஆண்டு நடந்த அந்தேரி தொகுதி இடைத்தேர்தலின் போது 2 பிரிவினரும் தாங்கள் தான் உண்மையான சிவசேனா என முறையிட்டனர். இதையடுத்து தேர்தல் ஆணையம் சிவசேனாவின் கட்சி பெயர், சின்னத்தை முடக்கியது. அதன்பிறகு உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா என்ற பெயரில் தீப்பந்தம் சின்னத்துடன் உத்தவ் தாக்கரே தலைமையிலும், பாலாசாகேபஞ்சி சிவசேனா என்ற பெயரில் வாள், கேடயம் சின்னத்துடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலும் அந்த கட்சி செயல்பட்டு வருகிறது. தற்போது யார் உண்மையான சிவசேனா என்பது தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடந்து வருகிறது.

    தங்கள் பக்கம் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இருப்பதால் நாங்கள் தான் உண்மையான சிவசேனா என உத்தவ் தாக்கரே தரப்பு கூறுகிறது. இதேபோல மக்கள் பிரதிநிதிகள் தங்களிடம் அதிகம் இருப்பதால் நாங்கள் தான் உண்மையான சிவசேனா என ஷிண்டே தரப்பு வாதித்து வருகிறது. தேர்தல் ஆணையத்தில் நடந்து வரும் விசாரணையில் இருதரப்பு வாதங்களும் முடிந்துவிட்டன.

    ஜனவரி 30-ந் தேதி வரை எழுத்து பூர்வமான வாதங்களை வைக்க தேர்தல் ஆணையம் அவகாசம் வழங்கி உள்ளது.

    இந்தநிலையில் சிவசேனா தலைவராக உத்தவ் தாக்கரேவின் பதவிக்காலம் நாளையுடன் (திங்கட்கிழமை) முடிகிறது. கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் கட்சியின் தலைவராக 5 ஆண்டு காலத்துக்கு பொதுக்குழு கூட்டத்தில் உத்தவ் தாக்கரே ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். எனவே கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்த உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா சார்பில் தேர்தல் ஆணையத்தில் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

    இதுதொடர்பாக உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த முன்னாள் மந்திரி அனில் பரப் கூறுகையில், "உத்தவ் தாக்கரேயை கட்சி தலைவராக ஏற்றுக்கொள்ள எங்களுக்கு சட்ட அனுமதி எதுவும் தேவையில்லை. உண்மையான சிவசேனா யார் என்ற வழக்கில் தேர்தல் ஆணையம் முடிவு எடுத்தவுடன் சட்டரீதியாகவும் அவர் தலைவராவார்" என்றார்.

    தேர்தல் ஆணையத்தில் கட்சி தொடர்பாக நடந்து வரும் விசாரணை குறித்து ஆதித்ய தாக்கரே கூறுகையில், " ஒட்டுமொத்த மகாராஷ்டிராவிற்கும் யார் சிவசேனா என்பது தெரியும். சிவசேனா கட்சி பால்தாக்கரே, உத்தவ் தாக்கரே, அனைத்து தொண்டர்களுக்கும் சொந்தமானது. தேர்தல் ஆணையத்தில் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். உண்மை வெல்லும். ஆனால் எவ்வளவு காலம் இந்த சட்டவிரோத அரசு தொடரும்?. ஒருவரின் பேராசையால் இதுவெல்லாம் நடந்து இருக்கிறது. இது ஒரு சட்டவிரோத அரசாங்கம் " என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுடுகாட்டில் புதைக்கப்பட்டு இருந்த இறந்தவர்களின் உடல்களை தோண்டி எடுத்து எலும்புகளின் பவுடரை பெண்ணை சாப்பிட சொல்லி வற்புறுத்தினார்கள்.
    • போலீசார் பெண்ணின் கணவர், மாமியார், மந்திரவாதி உள்ளிட்ட 7 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ்வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புனே:

    குழந்தை பாக்கியத்திற்காக கோவில் கோவிலாக செல்லும் தம்பதிகளை தான் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் கருத்தரிப்பதற்காக ஒரு இளம்பெண்ணை சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்று மனித எலும்பு பவுடரை சாப்பிட சொல்லி உறவினர்கள் வற்புறுத்தி சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    அம்மாநிலத்தின் தொழில் நகரமாக திகழும் புனே நகரை சேர்ந்த ஒரு வசதியான குடும்பத்தை சேர்ந்த பெண்ணுக்கு கடந்த 2019-ம் ஆண்டு வெகு விமர்சையாக திருமணம் நடந்தது.

    கல்யாணத்தின் போது வரதட்சணையாக ஏராளமான நகைகள், பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக சென்று கொண்டு இருந்த அந்த பெண்ணின் வாழ்க்கை வரதட்சணை கொடுமையால் தலைகீழாக மாறியது. கணவர், மாமியார் மற்றும் உறவினர்கள் அவரிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்தனர். இது குறித்து அந்த பெண் புனே போலீசில் புகார் செய்தார்.

    இந்த சூழ்நிலையில் குழந்தை பாக்கியம் இல்லாததால் கணவர் குடும்பத்தார் மந்திரவாதி ஒருவரை சந்தித்தனர்.

    அப்போது அந்த மந்திரவாதி அமாவாசை நாளில் வீட்டில் சில பூஜைகள் செய்ய வேண்டும் என்றும் சுடுகாட்டுக்கு சென்று மனித எலும்புகளை சாப்பிட்டால் விரைவில் கரு உருவாகும் எனவும் கூறினார். இதனை உண்மை என நம்பிய பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தார் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

    அதன்படி சம்பவத்தன்று மந்திரவாதி வீட்டுக்கு வந்து சில பரிகார பூஜைகளை செய்தார். பின்னர் அந்த பெண்ணை அங்குள்ள ஒரு சுடுகாட்டுக்கு அழைத்து சென்றனர். அங்கும் அந்த மந்திரவாதி பூஜை நடத்தினார்.

    பின்னர் சுடுகாட்டில் புதைக்கப்பட்டு இருந்த இறந்தவர்களின் உடல்களை தோண்டி எடுத்து எலும்புகளின் பவுடரை அந்த பெண்ணை சாப்பிட சொல்லி வற்புறுத்தினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இது குறித்து போலீசில் புகார் கொடுத்தார்.

    இதையடுத்து போலீசார் அந்த பெண்ணின் கணவர், மாமியார், மந்திரவாதி உள்ளிட்ட 7 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ்வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுபற்றி புனே போலீஸ் துணை சூப்பிரெண்டு சுனில் சர்மா கூறும் போது நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

    • பெருநகரங்களில் பைக் டாக்சி சேவைகள் சமீபகாலமாக நடைபெற்று வருகிறது.
    • பைக் டாக்சி சேவையை தற்காலிகமாக நிறுத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    மும்பை :

    மகாராஷ்டிராவில் மும்பை, புனே போன்ற பெருநகரங்களில் பைக் டாக்சி சேவைகள் சமீபகாலமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கடந்த மாதம் பைக் டாக்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து புனேயில் ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து ரேபிடோ பைக் டாக்சி நிறுவனத்துக்கு புனேயில் பைக் டாக்சி சேவையை இயக்க அனுமதி மறுக்கப்பட்டது. ரேபிடோ நிறுவனம் பைக் டாக்சி சேவைக்கு உரிமம் வழங்க மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

    ஆனால் பைக் டாக்சி சேவையை தற்காலிகமாக நிறுத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்தநிலையில் மகாராஷ்டிரா அரசு திடீரென பைக் டாக்சிகளுக்கு தடை விதித்து அரசாணை பிறப்பித்து உள்ளது. அதில் சாலை பாதுகாப்பை உறுதி செய்யவும், பொதுமக்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் இந்த தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    பைக் டாக்சிகளுக்கு தடை விதித்து பிறப்பித்த அரசாணையை நேற்று மாநில அரசு மும்பை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது. இதையடுத்து பைக் டாக்சி உரிமம் கேட்டு ரேபிடோ நிறுவனம் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    • டெய்லர் வழக்கம் போல சிறுமியை அவரது வீட்டுக்கு அழைத்துள்ளார்.
    • டெய்லரின் குட்டு அம்பலமானது.

    மும்பை:

    தானே தைகர் பகுதியில் மதராசாவில் சமையல் வேலை பார்க்கும் பெண் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 3 மாதங்களுக்கு முன் சமையல்கார பெண்ணின் கணவரே, 17 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் மகளை பாதுகாப்பாக வளர்க்க விரும்பினார். எனவே அவர் தினமும் வேலைக்கு செல்லும் போது மகளை வீட்டில் அடைத்து வைத்து பூட்டிச்செல்ல முடிவு செய்தார்.

    அதன்படி கடந்த டிசம்பர் மாதம் முதல் சமையல்கார பெண், மகளை வீட்டில் பூட்டி வைத்து சாவியை அருகில் வசித்து வரும் டெய்லரிடம் கொடுத்துவிட்டு செல்ல தொடங்கினார். கடந்த நவம்பர் மாதம் இந்த சிறுமி தையல்கடைக்கு சென்றபோது, அந்த டெய்லர் பாலியல் தொல்லை கொடுத்ததும், இதுபற்றி வெளியே கூறினால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியும் உள்ளார்.

    இது தெரியாமல் சமையல்கார பெண் அந்த திருட்டு டெய்லரிடம் சாவியை ஒப்படைத்து உள்ளார். இது டெய்லருக்கு சாதகமாக அமைந்தது.

    சமையல்கார பெண் வேலைக்கு செல்லும் வேளையில், அவர் ஒரு மாதத்துக்கு மேலாக வீட்டில் பூட்டி வைக்கப்பட்டு இருந்த சிறுமியை மிரட்டி அவரது வீட்டுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்து இருக்கிறார். ஏற்கனவே காமூக தந்தையால் வீட்டில் அடைப்பட்டு கிடப்பதால், இந்த கொடுமையை எப்படி எதிர்கொள்வது என தெரியாமல் சிறுமி தவித்தார். ஒருநாள் டெய்லரின் அத்துமீறல்களை அவருக்கு தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்தார்.

    இந்தநிலையில் சம்பவத்தன்று டெய்லர் வழக்கம் போல சிறுமியை அவரது வீட்டுக்கு அழைத்துள்ளார். ஆனால் வர மறுத்ததால் சிறுமியை இழுத்து சென்றுள்ளார். இதைப்பார்த்த பக்கத்து வீட்டு பெண் ஒருவர் டெய்லரை கண்டித்தார். அப்போது சிறுமி தைரியத்தை வரவழைத்து தனக்கு ஒரு மாதத்துக்கு மேலாக நடந்த அவலம் குறித்து பக்கத்துவீட்டு பெண்ணிடம் கூறினார். மேலும் செல்போனில் பதிவு செய்து வைத்து இருந்த வீடியோவையும் காட்டினார்.

    இதையடுத்து டெய்லரின் குட்டு அம்பலமானது. அதிர்ச்சி அடைந்த தாய் தனது மகளுடன் சென்று போலீசில் புகார் அளித்தார். புகார் தொடர்பாக போலீசார் போக்சோ, பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் டெய்லர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிவசேனா கட்சியில் எந்த பிளவும் ஏற்படவில்லை.
    • சில எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் வெளியேறினர்.

    மும்பை :

    சிவசேனா கட்சி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2 ஆக உடைந்தது. உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியாகவும், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் சின்னத்திற்கு இரண்டு அணியினரும் உரிமை கோரி வருகின்றனர்.

    இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக ஷிண்டே அணியை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருந்தனர். இது தொடர்பான வழக்கும் சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது.

    இந்தநிலையில் உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சி தலைவர் சஞ்சய் ராவத் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிவசேனா கட்சியில் எந்த பிளவும் ஏற்படவில்லை. சிவசேனா சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் பிரிந்துவிட்டனர். இதனால் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது என்று அர்த்தமில்லை.

    இந்த பிளவு கானல் நீராக தான் உள்ளது. சில எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் வெளியேறினர். ஆனால் கட்சி அப்படியே தான் இருக்கிறது. எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வெளியாகும் வரை தேர்தல் சின்னம் தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணையம் அவசரம் காட்ட கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை பிப்ரவரி 14-ந் தேதி தொடங்கும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியிருந்தது.

    • இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளது.
    • ஒரு நாளில் 101 புகார்கள் வந்துள்ளன.

    மும்பை:

    ஜல்னா மாவட்டத்தில் கிரி காரத் மற்றும் அவரது மனைவி தீப்தி கார்த் ஆகியோர் கிரிப்டோகரன்சி முதலீட்டை ஈர்த்து வந்தனர். இவர்கள் ஜி.டி.சி. கிரிப்டோவில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என உறுதி அளித்தனர். இதை நம்பி பலர் முதலீடு செய்தனர். இந்த நிலையில் இவர்களிடம் முதலீடு செய்து நஷ்டமடைந்த நபர் ஒருவர் போலீசில் புகார் அளித்தார். இதேபோல மேலும் பலர் இந்த கிரிப்டோவில் முதலீடு செய்து ஏமாந்து இருக்கலாம் என உணர்ந்த போலீசார், அப்படி பணத்தை இழந்தவர்கள் புகார் அளிக்குமாறு பொதுஅறிவிப்பை வெளியிட்டனர்.

    இதன்மூலம் ஒருநாளில் மாவட்டம் முழுவதும் இருந்து 101 பேர் போலீசாரை அணுகி புகார் அளித்துள்ளனர். சுமார் 10 ஆயிரம் முதலீட்டாளர்கள் ரூ.700 கோடி வரை இந்த மோசடியில் இழந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    காரத் தம்பதியின் மீதான இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதன்மூலம் அவர்களின் வங்கி கணக்குகளை முடக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தநிலையில் கிரண் காரத் போலீசில் அளித்த புகாரின் மூலம் இந்த வழக்கில் மற்றொரு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இவர் தனது புகாரில் "தனது கிரிப்டோ கரன்சி திட்டத்தில் சுமார் ரூ.10 கோடி முதலீடு செய்த முன்னாள் கிரிக்கெட் வீரர் விஜய் ஜோல் மற்றும் 20 பேர் தன்னை 4 நாட்கள் பிணை கைதியாக பிடித்து வைத்திருந்ததாகவும், தனது சில சொத்துகள் மற்றும் நிலங்களை விஜய் ஜோல் பெயரில் மாற்ற கையெழுத்திட கட்டாயப்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.

    முன்னாள் கிரிக்கெட் வீரர் விஜய் ஜோல் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அணியை சேர்ந்த முன்னாள் மந்திரி அர்ஜுன் கோட்கரின் மருமகன் ஆவார். இதுகுறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைலாஷ் கோரண்டியல் கூறுகையில், 'அர்ஜுன் கோட்கரும் அவரது ஆட்களும் காரத்தை பிணை கைதியாக பிடித்து வைத்து துன்புறுத்தியதன் மூலமாக சட்டத்தை கையில் எடுத்துள்ளனர்' என குற்றம் சாட்டினார்.

    • விபத்தில், ஒரு பெண் குழந்தை, 3 பெண்கள் உள்பட 9 பேர் பலியாகி உள்ளனர்.
    • சாலை விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மராட்டிய மாநிலம் மும்பை- கோவா நெடுஞ்சாலையில் மும்பை நோக்கி ஒரு கார் வந்து கொண்டிருந்தது. கார் அதிகாலை 5 மணி அளவில் ராய்கட் மாவட்டத்தில் உள்ள ரேபோலி கிராம பகுதியில் வந்தபோது எதிரே வந்த லாரியும், காரும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது. இதில் ஒரு பெண் குழந்தை, 3 பெண்கள் உள்பட 9 பேர் பலியாகி உள்ளனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று, பலியானவர்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அதிகாலையில பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் அதிவேகமாக வந்து லாரி எதிரே வருவதை கவனிக்காமல் இந்த விபத்து நடைபெற்றதா? அல்லது தூக்க கலக்கத்தில் விபத்து நடைபெற்றதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர்.
    • போலீசார் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மும்பை

    துபாயில் இருந்து 2 பேர் அதிகளவு தங்கம் கடத்தி வர உள்ளதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக பிரிவு (டி.ஆர்.ஐ.) அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதிகாரிகள் சம்பவத்தன்று துபாயில் இருந்து மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர்.

    இதில் டெல்லியை சேர்ந்த முகமது சுலைமான் என்ற பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதிகாரிகள் அவரை தனியாக அழைத்து சோதனை போட்டனர். அப்போது அவரிடம் இருந்து ரூ.2 கோடியே 40 லட்சம் மதிப்பிலான 4 கிலோ 300 கிராம் தங்க பசையை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் மற்றொரு விமானத்தில் வந்த அப்துல் பாசித் என்ற பயணியிடம் சோதனை நடத்திய போது அவர் உள்ளாடைகளில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தியது தெரியவந்தது. அதிகாரிகள் அவரிடம் இருந்து ரூ.2 கோடியே 15 லட்சம் மதிப்பிலான 4 கிலோ தங்க பசையை பறிமுதல் செய்தனர்.

    அதிகாரிகள் நடத்திய விசாரணையில் 2 பேரும் ஒரே நபருக்காக துபாயில் இருந்து தங்கத்தை கமிஷன் பணத்துக்கு ஆசைப்பட்டு கடத்தி வந்தது தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×