என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • பிரகாஷ் அம்பேத்கர் கட்சியை கூட்டணியில் சேர்ப்பது குறித்து மகாவிகாஸ் அகாடியில் எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை.
    • உத்தவ் தாக்கரே சிவசேனா மற்றும் பிரகாஷ் அம்பேத்கர் கட்சிகளில் என்ன நடக்கிறது என்பது பற்றி எங்களுக்கு தெரியாது.

    மும்பை

    மகாராஷ்டிராவில் பா.ஜனதா - சிவசேனா கட்சிகள் 25 ஆண்டுகளுக்கு மேல் கூட்டணி அமைத்து தேர்தல்களை சந்தித்து வந்தன.

    2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு பிறகு முதல்-மந்திரி பதவியை பகிர்வதில் ஏற்பட்ட தகராறில் அந்த கூட்டணி உடைந்தது.

    இதைதொடர்ந்து சிவசேனா, பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறி கொள்கைகள் மாறுபட்ட தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. இந்த கூட்டணி மகாவிகாஸ் அகாடி கூட்டணி என அழைக்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே 40 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்தார். இதை தொடர்ந்து மகாவிகாஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே - பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைந்தது.

    இந்த அரசியல் பூகம்பத்துக்கு பின்னரும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும், சட்டமேதை அம்பேத்கரின் பேரனான பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான வஞ்சித் பகுஜன் அகாடியும் கூட்டணி அமைத்தன.

    வஞ்சித் பகுஜன் அகாடியை காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஏற்றுக்கொள்ளும் என உத்தவ் தாக்கரே கூறினார். அதே நேரத்தில் பிரகாஷ் அம்பேத்கர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு எதிராக பேசியதால் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடியை கூட்டணியில் சேர்த்து கொள்வது பற்றி மகாவிகாஸ் அகாடியில் எந்த பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை என சரத்பவார் கூறி இருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக நேற்று கோலாப்பூரில் அவர் கூறியதாவது:-

    தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரகாஷ் அம்பேத்கர் கட்சியை கூட்டணியில் சேர்ப்பது குறித்து மகாவிகாஸ் அகாடியில் எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை. உத்தவ் தாக்கரே சிவசேனா மற்றும் பிரகாஷ் அம்பேத்கர் கட்சிகளில் என்ன நடக்கிறது என்பது பற்றி எங்களுக்கு தெரியாது. அதுபற்றி நாங்கள் எதுவும் இதுவரை ஆலோசிக்கவில்லை. வர இருக்கும் தேர்தலை காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கூட்டணி சந்திக்கும். பிரகாஷ் அம்பேத்கருடன் கூட்டணி பற்றி நாங்கள் இதுவரை எதுவும் பேசவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விரைவில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் எதிர்க்கட்சி கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியாவில் இந்த ஆவணப்படத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
    • மத பிரச்சினைகளுக்கு மக்கள் ஒருபோதும் தங்கள் வாக்குகளை அளிக்க மாட்டார்கள்.

    மும்பை :

    பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் முதல்-மந்திரியாக இருந்தபோது குஜராத்தில் நடைபெற்ற கலவரம் குறித்து சமீபத்தில் இங்கிலாந்தை சேர்ந்த பி.பி.சி. செய்தி நிறுவனம் ஆவணப்படத்தை வெளியிட்டது.

    இதற்கு பா.ஜனதா கட்சி தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தியாவில் இந்த ஆவணப்படத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

    இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி நிறுவன தலைவர் சரத்பவார் கூறியதாவது:-

    பி.பி.சி. ஊடக குழுவால் வெளியிடப்பட்ட ஆவணப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடை என்பது ஜனநாயகத்தின் மீதான மிகப்பெரிய தாக்குதல். கடந்த சில நாட்களாக இதுபோன்ற சம்பவம் நடந்து வருகிறது. மத பிரச்சினைகளுக்கு மக்கள் ஒருபோதும் தங்கள் வாக்குகளை அளிக்க மாட்டார்கள்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். நாட்டில் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் இதில் கலந்துகொள்கின்றனர். ஆனால் மத்திய அரசு இந்த நடைபயணத்திற்கு மாறுபட்ட கோணத்தில் சாயம் பூச முயன்றது. சாதாரண மக்களின் பெரும் ஆதரவு காரணமாக இந்த முயற்சி தோல்வி அடைந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோல கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பதவியில் இருந்து விலக விரும்புவதாக கூறியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு சரத்பவார் பதில் அளித்து கூறுகையில், "மராட்டியத்தை சேர்ந்த பெரிய தலைவர்களான சத்ரபதி சிவாஜி மற்றும் பலர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நபரிடம் இருந்து மராட்டிய மாநிலமும், மக்களும் விடுபடுவது நல்ல விஷயம். அடுத்து யார் கவர்னராக வருவார் என்பது குறித்து எனக்கு தெரியவில்லை" என்றார்.

    • உலக பணக்காரர்கள் பட்டியலில் 7-வது இடத்துக்கு கவுதம் அதானி சரிவு.
    • அறிக்கையில் கேட்கப்பட்ட 88 நேரடி கேள்விகளில் ஒரு கேள்விக்குக் கூட அதானி குழுமத்திடமிருந்து பதில் இல்லை.

    மும்பை:

    பங்குச் சந்தை முறைகேட்டில் ஈடுபட்டதாக தொழில் அதிபர் கவுதம் அதானி தலைமையிலான அதானி குழுமத்தின் மீது அமெரிக்க சந்தை ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் குற்றம் சாட்டியதன் எதிரொலியாக, அந்தக் குழுமத்தின் சொத்து மதிப்பு ரூ.4.17 லட்சம் கோடி வீழ்ச்சியடைந்துள்ளது.

    ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அதானி குழுமத்தைச் சேர்ந்த 7 முக்கிய நிறுவனங்கள் தங்களது நிதிநிலையை உண்மைக்குப் புறம்பான முறையில் வலுவாகக் காட்டுவது, ஏராளமான தொகை கடன் வாங்கி அதனை மறைப்பது போன்ற முறைகேடான நடவடிக்கைகள் மூலம் பங்குச் சந்தையை ஏமாற்றி லாபம் பார்த்தன. மேலும், வெளிநாடுகளில் ஷெல் நிறுவனங்களை உருவாக்கி அவற்றின் மூலம் சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டது போன்ற பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

    அந்த அறிக்கை வெளியானதன் எதிரொலியாக, அதானி குழுமத்தில் பங்குகளை வாங்கியிருந்த முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் அதனை குறைந்த விலைக்கு விற்கத் தொடங்கினர். இதன் காரணமாக, புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரண்டே நாட்களில் அதானி குழும நிறுவனப் பங்குகளின் விலை ரூ.4.17 லட்சம் கோடி வீழ்ச்சிடைந்தது.

    இதன் மூலம், கவுதம் அதானியின் சொத்து மதிப்பிலும் ரூ.4.17 லட்சம் கோடி குறைந்ததால், ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியாவதற்கு முன் உலகின் 3-வது பெரிய பணக்காரராக இருந்த அவர். தற்போது 7-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

    முன்னதாக, அந்த ஆய்வறிக்கை குறித்து அதானி குழுமத்தின் சார்பில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட அறிக்கையில், தவறான குறிக்கோளுடன் போதிய ஆய்வு செய்யாமல் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

    இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் மீது சட்டப் பூர்வ நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அதானி குழுமம் எச்சரித்திருந்தது.

    இதற்கு பதிலளித்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம், தங்களது அறிக்கையில் கேட்கப்பட்ட 88 நேரடி கேள்விகளில் ஒரு கேள்விக்குக் கூட அதானி குழுமத்திடமிருந்து பதில் இல்லை. 2 ஆண்டு கால தீவிர ஆய்வுக்குப் பிறகே அந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது அதனை சட்டரீதியில் எதிர்க்க வேண்டுமென்று அதானி குழுமம் உண்மையிலேயே நினைத்தால், தாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்காவில் உள்ள நீதிமன்றத்தில் அந்தக் குழுமம் வழக்கு தொடரலாம் என்று சவால்விட்டது.

    தற்போது நாடு முழுவதும் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில். பங்குச் சந்தையின் இரண்டே வர்த்தக நாள்களில் அதானி குழுமம் ரூ.4.17 லட்சம் கோடி இழப்பைச் சந்தித்துள்ளது தொழில்துறையில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

    • மாணவிக்கு நிச்சயிக்கப்பட்டு இருந்த திருமணம் நின்றது.
    • மாணவி மீது அவரது குடும்பத்தினருக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது.

    மும்பை :

    நாந்தெட் மாவட்டம் பிம்ப்ரி மகிபால் கிராமத்தை சேர்ந்தவர் சுபாங்கி ஜோக்தாந்த் (வயது22). 3-ம் ஆண்டு ஹோமியோபதி மருத்துவம் (பி.எச்.எம்.எஸ்.) படித்து வந்தார். இவருக்கு சமீபத்தில் பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து இருந்தனர்.

    மாணவி வேறு நபரை காதலித்து உள்ளார். எனவே பெற்றோர் பார்த்து இருந்த மாப்பிள்ளையிடம் வேறு நபரை காதலிப்பது குறித்து மாணவி கூறினார்.

    இதனால் மாணவிக்கு நிச்சயிக்கப்பட்டு இருந்த திருமணம் நின்றது. திருமணம் நின்றதால் மாணவி மீது அவரது குடும்பத்தினருக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது.

    இந்தநிலையில் மாணவி திடீரென மாயமானார். சந்தேகமடைந்த சிலர் மாணவி மாயமானது குறித்து போலீசில் புகார் அளித்தனர். போலீசார் மாணவியின் குடும்பத்தாரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    கொலை செய்து உடல் எரிப்பு

    அப்போது திடுக்கிடும் தகவல் வெளியானது. காதல் விவகாரத்தில் சிக்கி திருமணம் நின்று போனதால் மாணவியின் மீது அவரது குடும்பத்தினர் ஆத்திரத்தில் இருந்து உள்ளனர். கடந்த மாதம் 22-ந் தேதி இரவு மாணவியை அவரது தந்தை ஜனார்தன், அண்ணன் கேசவ், மாமா கிரிதர் உள்ளிட்டவர்கள் வயலுக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் மாணவியை கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பின்னர் உடலை எரித்து அங்கு இருந்த கால்வாயில் சாம்பலை கரைத்தது விசாரணையில் தெரிவந்தது.

    இதையடுத்து சம்பவம் குறித்து கொலை வழக்குப்பதிவு செய்த லிம்காவ் போலீசார் மாணவியின் தந்தை, அண்ணன், மாமா மற்றும் குடும்பத்தினர் கிருஷ்ணா, கோவிந்த் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

    காதல் விவகாரத்தில் மாணவி ஆணவ கொலை செய்யப்பட்ட சம்பவம் மராட்டியத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

    • கூட்டத்தில் ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
    • 3 முக்கிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும்.

    மும்பை :

    வாரத்தில் 5 நாள் வேலை, தேசிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருதல், ஓய்வூதியத்தை மாற்றி அமைத்தல், சம்பள உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 30 மற்றும் 31-ந்தேதிகளில் நாடுதழுவிய வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்துக்கு ஐக்கிய வங்கி சங்கங்கள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.

    இதனால், இன்று 4-வது சனிக்கிழமை என்பதாலும், நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், அடுத்த 2 நாட்கள் வேலைநிறுத்தம் காரணமாகவும் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிச்சேவை முடங்கும் அபாயம் நிலவியது.

    இதற்கிடையே, வங்கி ஊழியர் சங்கங்களின் கோரிக்கை தொடர்பாக மும்பையில் துணை தலைமை தொழிலாளர் ஆணையர் தேஜ்பகதுர் முன்னிலையில் கடந்த 24-ந்தேதி சமரச பேச்சுவார்த்தை நடந்தது. அதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

    இந்தநிலையில், நேற்று மீண்டும் மும்பையில் தேஜ்பகதுர் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. அதில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.

    இதுகுறித்து அகில இந்திய வங்கி பணியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சிஎச்.வெங்கடாசலம் ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    27-ந்தேதி நடந்த பேச்சுவார்த்தையில், 9 வங்கி ஊழியர்கள் சங்கங்களின் தலைவர்களும் கலந்துகொண்டனர். அவர்களின் கருத்துகளில் வேறுபாடு இருந்தபோதிலும், நீண்டநேர பேச்சுவார்த்தைக்கு பிறகு வேலைநிறுத்தத்தை தள்ளிவைக்க ஒப்புக்கொண்டனர்.

    கூட்டத்தில் ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த மாற்றம் காரணமாக, வேலைநிறுத்தம் தள்ளிவைக்கப்படுகிறது.

    இந்திய வங்கிகள் அமைப்பு, 31-ந்தேதி, ஐக்கிய வங்கி சங்கங்கள் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தும்.

    அதில், வாரத்தில் 5 நாள் வேலை, ஓய்வூதியத்தை மாற்றி அமைத்தல், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருதல் ஆகிய 3 முக்கிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும். கருத்தொற்றுமை உருவாகாவிட்டால், அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு தேதி நிர்ணயிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சிறுமியை அழைத்த சென்ற வாலிபர்கள் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர்.
    • புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர்களை கைது செய்தனர்.

    நாக்பூர்:

    மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்தில் சயோனர் என்ற பகுதி உள்ளது. சம்பவத்தன்று இப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக காரில் வந்த 2 வாலிபர்கள் அந்த சிறுமிக்கு 'லிப்ட்' கொடுப்பதாக கூறி காரில் அழைத்துள்ளனர். அதை நம்பி சிறுமி காரில் ஏறினார்.

    பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சிறுமியை அழைத்த சென்ற வாலிபர்கள் அந்த சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர்களை கைது செய்தனர்.

    • உறவினர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கொலையான குடும்பத்தினரும், கைதானவர்களும் உறவினர்கள் ஆவர்.

    புனே :

    புனே மாவட்டம் தவுன்ட் தாலுகா யவத் கிராமப்பகுதியில் உள்ள பீமா ஆற்றில் கடந்த திங்கட்கிழமை 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. அடுத்த நாள் 4 பேர் உடல்களை போலீசார் மீட்டனர்.

    உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த மோகன் உத்தம் பவார் (வயது50), அவரது மனைவி சங்கீதா பவார் (45), மகள் ராணி (27), மருமகன் சாம்ராவ் பண்டித் (32), பேரப்பிள்ளைகள் ரிதேஷ் (7), சோட்டு சாம்ராவ் (5), கிருஷ்ணா (3) என்பது தெரியவந்தது.

    மோகன் உத்தம் பவாரின் மகன் ஒரு பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டு ஓடி விட்டதாகவும், இதன் பின்னணியில் இந்த குடும்பத்தினர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று முதலில் போலீசார் கூறினர்.

    ஆனால் இந்த வழக்கில் நேற்று திகில் திருப்பம் ஏற்பட்டது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேரும் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது.

    இது தொடர்பாக கொலை, குற்றச்சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், 5 பேரை அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் பெயர் அண்ணன்- தம்பிகளான அசோக் பவார், ஷியாம், ஷங்கர், பிரகாஷ் மற்றும் இவர்களது சகோதரி காந்தாபாய் என்று தெரியவந்தது.

    கொலையான குடும்பத்தினரும், கைதானவர்களும் உறவினர்கள் ஆவர். கைதான அசோக் பவாரின் மகன் தனஞ்செய் சில மாதங்களுக்கு முன் புனேயில் நடந்த சாலை விபத்தில் பலியானார். இந்த மரணத்துக்கு கொலையான மோகன் உத்தம் பவாரின் மகன் தான் காரணம் என்று அசோக் பவாரின் குடும்பத்தினர் கருதினர்.

    இதற்கு பழிதீர்க்க அவர்கள் மோகன் உத்தம் பவாரின் குடும்பத்தை கருவறுத்தது தெரியவந்தது. ஆனால் 7 பேரையும் எப்படி கொலை செய்தனர் என்ற விவரத்தை போலீசார் வெளியிடவில்லை.

    இருப்பினும் கொலையானவர்களில் 4 பேர் தண்ணீரில் மூழ்கி பலியானதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேரை கொலை செய்த வழக்கில் கைதான உறவினர்கள் 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தங்களது காவலில் எடுத்து விசாரிக்க இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    போலீசாரின் விசாரணையில், கிரைம் நாவலை மிஞ்சும் வகையில் அடுத்தடுத்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • முதல்கட்ட விசாரணையில் பிணமாக மீட்கப்பட்டவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
    • மோகன் உத்தம் பவாரின் மகன் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில், குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

    புனே:

    மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் தவுன்ட் தாலுகா யவத் கிராம பகுதியில் உள்ள பீமா ஆற்றில் நேற்று முன்தினம் உடல் ஒன்று மீட்கப்பட்டது. அடுத்த சில மணி நேரங்களில் அதே பகுதியில் இருந்து மேலும் 3 உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்தனர். அவர்கள் உடல்களை மீட்டு தீவிர விசாரணை நடத்தினர்.

    முதல்கட்ட விசாரணையில் பிணமாக மீட்கப்பட்டவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் தொடர்ந்து ஆற்றில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதில் நேற்று மேலும் 3 சிறுவர்களின் உடல் மீட்கப்பட்டன.

    பிணமாக மீட்கப்பட்டவர்கள் காம்காவ் பகுதியை சேர்ந்த மோகன் உத்தம் பவார் (வயது 50), அவரது மனைவி சங்கீதா பவார் (45), மகள் ராணி (27), மருமகன் சாம்ராவ் பண்டித் (32), பேரப்பிள்ளைகள் ரிதேஷ் (7), சோட்டு சாம்ராவ் (5), கிருஷ்ணா (3) என்பது தெரியவந்தது.

    மோகன் உத்தம் பவாரின் மகன் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில், குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர் அந்த பெண்ணுடன் எங்கோ ஓடிவிட்டது தெரியவந்தது. இந்தநிலையில் அந்த குடும்பத்தை சேர்ந்த 7 பேரும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

    மகன் காதல் திருமணம் செய்ததால் வேதனை அடைந்து மோகன் உத்தம் பவார் குடும்பத்தினர் தற்கொலை முடிவை எடுத்தார்களா? அல்லது யாராலும் மிரட்டப்பட்டதால் இந்த துயர முடிவை எடுத்தார்களா? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மகாராஷ்டிரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பயணியின் பையில் சந்தேகத்துக்கு இடமாக 2 பெரிய புத்தகங்கள் இருந்தன.
    • அதிகாரிகள் அந்த புத்தகங்களை எடுத்து பார்த்தனர்.

    மும்பை :

    மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்துக்கு சம்பவத்தன்று சார்ஜாவில் இருந்து விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் அசர்பைஜான் நாட்டை சேர்ந்த பயணி ஒருவர் வந்து இறங்கினார். அவரது உடைமைகளை சுங்க வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பயணியின் பையில் சந்தேகத்துக்கு இடமாக 2 பெரிய புத்தகங்கள் இருந்தன. அதிகாரிகள் அந்த புத்தகங்களை எடுத்து பார்த்தனர்.

    அப்போது புத்தகங்களின் பக்கங்களுக்கு இடையே அமெரிக்க டாலர் நோட்டுகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன. 2 புத்தகங்களிலும் 90 ஆயிரம் அமொிக்க டாலர்களை பதுக்கி கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் இந்திய மதிப்பு ரூ.73 லட்சம் ஆகும்.

    கடத்தலுக்கு பல்வேறு நூதன வழிகள் கையாளப்படும் வேளையில், புத்தகங்களில் டாலர் நோட்டுகளை மறைத்து வைத்து கடத்தி வந்த மற்றொரு நூதன முயற்சி அதிகாரிகளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த வெளிநாட்டு பயணியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல மும்பை விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் துபாயில் இருந்து விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பாலஸ்தீனத்தை சேர்ந்த பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    சோதனையில் அந்த பயணி உள்ளாடையில் மறைத்து கடத்தி வந்த 2½ கிலோ தங்க பசையை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்க பசையின் மதிப்பு ரூ.1 கோடியே 30 லட்சம் ஆகும். தங்கம் கடத்தி வந்த பயணியை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒடிசா மாநிலத்தில் முதல் மந்திரி நவீன் பட்நாயக் தலைமையிலான மந்திரி சபையில் பணக்கார மந்திரியாக நாபா கிஷோர் தாஸ் இருந்து வருகிறார்.
    • தங்க கலசம் 1.7 கிலோ எடை கொண்டது.

    அகமது நகர்:

    மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சனி சிக்கானப்பூர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிஜூ ஜனதா தள கட்சி மூத்த தலைவரும், ஒடிசா மாநில சுகாதாரத்துறை மந்திரியுமாக நாபா கிஷோர்தாஸ் தனது குடும்பத்துடன் சிறப்பு அபிஷேகம் செய்தார். அப்போது அவர் ரூ.1 கோடி மதிப்பிலான தங்க கலசத்தை அவர் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கினார். இந்த தங்க கலசம் 1.7 கிலோ எடை கொண்டது. மேலும் 5 கிலோ வெள்ளியையும் அவர் வழங்கினார்.

    மந்திரி நாபாகிஷோர் தாஸ் குடும்பத்துடன் பங்கேற்ற சிறப்பு பூஜை சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஒடிசா மாநிலத்தில் முதல் மந்திரி நவீன் பட்நாயக் தலைமையிலான மந்திரி சபையில் பணக்கார மந்திரியாக நாபா கிஷோர் தாஸ் இருந்து வருகிறார். இவருக்கு ரூ.1.14 கோடி மதிப்பிலான சொகுசு கார் உள்ளது. இவரது மனைவி பெயரில் 75 வாகனங்கள் உள்ளது. இதன் மதிப்பு ரூ.15 கோடி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இவரது தந்தை 5 ஆண்டுகளுக்கு முன் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
    • 18 வயதில் தந்தையை இழந்தது எனக்கு மிகப்பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.

    மும்பை

    கணவர் இறந்தவுடன் பெண்களும் உடன் கட்டை ஏறும் பழக்கம் முன்பு இருந்தது. சமூக சீர்திருத்தவாதிகளால் அந்த பழக்கம் ஒழிக்கப்பட்டது. ஆனாலும் குறைந்த வயதில் கணவரை இழந்த பெண்கள் பலர் வாழ்க்கை துணை இல்லாமல் தனியாக வாழும் நிலை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

    இந்தநிலையில் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் தந்தையை இழந்த வாலிபர் ஒருவர் அவரது 45 வயது தாய்க்கு மறுமணம் செய்து வைத்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.

    கோலாப்பூரை சேர்ந்தவர் யுவராஜ் செலே(வயது23). இவரது தந்தை 5 ஆண்டுகளுக்கு முன் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். தந்தையின் மரணத்துக்கு பிறகு தாய் ரத்னா சமூகத்தால் புறக்கணிக்கப்படுவதை கண்டு யுவராஜ் செலே வேதனை அடைந்தார். குறிப்பாக சுபநிகழ்ச்சிகளுக்கு வாலிபரின் தாயை யாரும் அழைப்பது இல்லை.

    இதேபோல தாய் பெரும்பாலான நேரம் வீட்டில் தனியாக இருப்பதை கவனித்த யுவராஜ், தாய்க்கு வாழ்க்கை துணை தேவை என்பதை உணர்ந்து கொண்டார். அவர் தனது தீவிர முயற்சிக்கு பிறகு தாயை சமாதானம் செய்து அவரை மாருதி கன்வத் என்பவருக்கு மறுமணம் செய்து வைத்து உள்ளார்.

    தாயின் மறுமணம் குறித்து மகன் யுவராஜ் கூறியதாவது:-

    18 வயதில் தந்தையை இழந்தது எனக்கு மிகப்பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. ஆனால் அவரின் மறைவு எனது தாய்க்கு பேரிழப்பாக இருந்தது. அவர் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு தனிமையில் தவித்தார். எனது தாய் 25 ஆண்டுகளாக தந்தையுடன் திருமண பந்தத்தில் இருந்தார். ஒரு ஆண் மனைவியை இழக்கும் போது, அவர் மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என சமூகம் நினைக்கிறது.

    ஆனால் அதே ஒரு பெண் கணவரை இழந்தால் மட்டும் சமூகம் ஏன் அவரும் மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என உணர மறுக்கிறது என்பதை நினைத்தால் வியப்பாக உள்ளது. எனவே தான் எனது தாய்க்கு மறுமணம் செய்து வைக்க முடிவு செய்தேன். அதற்கு அவரை கடும் முயற்சிக்கு பிறகு சம்மதிக்கவும் வைத்தேன்.

    கோலாப்பூர் போன்ற பாரம்பரிய மிக்க ஊரில் இதுபோன்ற மறுமணத்திற்கு குடும்பத்தினர், உறவினர்களை சம்மதிக்க வைப்பது எளிதானது அல்ல.

    நண்பர்கள், உறவினர்களுடன் தாய்க்கு பொருத்தமானவரை தேடினேன். அதிர்ஷ்டவசமாக மாருதி கன்வத் குறித்து எங்களுக்கு தெரியவந்தது. அவருடன் மறுமணம் பற்றி பேசினோம். அவர் ஒப்புக்கொண்ட பிறகு திருமணம் முடிவு செய்யப்பட்டது. எனது தாய்க்கு பொருத்தமானவரை தேடி கண்டுபிடித்ததால் அந்த நாள் எனக்கு சிறப்பு வாய்ந்த நாளாக அமைந்தது.

    இவ்வாறு அவர் மகிழ்ச்சி பொங்க கூறினார்.

    இது குறித்து மாருதி கன்வத் கூறுகையில், ''நான் கடந்த சில ஆண்டுகளாக தனியாக தான் வாழ்ந்து வந்தேன். ரத்னாவை சந்தித்து அவருடன் பேசிய பிறகு தான் அவரது குடும்பத்துடன் சேர்ந்து வாழ முடியும் என்பதை உணர்ந்து கொண்டேன். அவர்கள் உண்மையானவர்கள்'' என்றார்.

    மறுமணம் செய்த வாலிபரின் தாய் ரத்னா கூறுகையில், ''ஆரம்பத்தில் எனக்கு மறுமணத்தில் விருப்பம் இல்லை. எனது கணவரை மறக்க நான் தயாராக இல்லை. ஆனால் பல விஷயங்கள் குறித்து பேசிய பிறகு சமாதானம் அடைந்தேன். வாழ்நாள் முழுவதும் இனிமேல் தனியாகவே வாழப்போகிறாயா என எனக்குள் நானே கேட்டு கொண்டேன். இறுதியில் மறுமணத்திற்கு சம்மதித்தேன்'' என்றார்.

    விதவை தாய்க்கு மகனே நடத்தி வைத்த திருமணத்துக்கு வந்தவர்கள் சீர்திருத்த கல்யாண தம்பதியை மனதார வாழ்த்தி சென்றனர்.

    • ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்தது.
    • அங்கு ஆளுநராக பகத்சிங் கோஷ்யாரி செயல்பட்டு வருகிறார்.

    மும்பை:

    மகாராஷ்டிர ஆளுநராக பகத்சிங் கோஷ்யாரி செயல்பட்டு வருகிறார். உத்தவ் தாக்கரே முதல் மந்திரியாக இருந்தபோது மாநில அரசு - ஆளுநர் இடையே சிறுசிறு மோதல் போக்கு நிலவி வந்தது. பின்னர், சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டதால் முதல் மந்திரி பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார்.

    இதனை தொடர்ந்து பா.ஜ.க.வுடன் இணைந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்தது.

    இந்நிலையில், மகாராஷ்டிர ஆளுநர் பதவியில் இருந்து விலக பகத்சிங் கோஷ்யாரி முடிவு எடுத்துள்ளார். பதவி விலகல் முடிவை ஆளுநர் கோஷ்யாரி பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளார். ஆளுநர் கோஷ்யாரி அரசியல் பொறுப்புகளில் இருந்து விடுபட்டு தனது எஞ்சிய காலத்தை எழுத்து, வாசிப்பு மற்றும் பிற நடவடிக்கைகளில் ஈடுபட விரும்புவதாக பிரதமர் மோடியிடம் கூறியுள்ளதாக மகாராஷ்டிர ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இதன்மூலம் மகாராஷ்டிர ஆளுநர் பதவியை பகத்சிங் கோஷ்யாரி விரைவில் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×