என் மலர்
இந்தியா

புனேயில் நடந்த தற்கொலை வழக்கில் 'திகில்' திருப்பம்: சிறுவர்கள் உள்பட 7 பேரும் படுகொலை
- உறவினர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
- கொலையான குடும்பத்தினரும், கைதானவர்களும் உறவினர்கள் ஆவர்.
புனே :
புனே மாவட்டம் தவுன்ட் தாலுகா யவத் கிராமப்பகுதியில் உள்ள பீமா ஆற்றில் கடந்த திங்கட்கிழமை 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. அடுத்த நாள் 4 பேர் உடல்களை போலீசார் மீட்டனர்.
உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த மோகன் உத்தம் பவார் (வயது50), அவரது மனைவி சங்கீதா பவார் (45), மகள் ராணி (27), மருமகன் சாம்ராவ் பண்டித் (32), பேரப்பிள்ளைகள் ரிதேஷ் (7), சோட்டு சாம்ராவ் (5), கிருஷ்ணா (3) என்பது தெரியவந்தது.
மோகன் உத்தம் பவாரின் மகன் ஒரு பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டு ஓடி விட்டதாகவும், இதன் பின்னணியில் இந்த குடும்பத்தினர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று முதலில் போலீசார் கூறினர்.
ஆனால் இந்த வழக்கில் நேற்று திகில் திருப்பம் ஏற்பட்டது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேரும் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது.
இது தொடர்பாக கொலை, குற்றச்சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், 5 பேரை அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் பெயர் அண்ணன்- தம்பிகளான அசோக் பவார், ஷியாம், ஷங்கர், பிரகாஷ் மற்றும் இவர்களது சகோதரி காந்தாபாய் என்று தெரியவந்தது.
கொலையான குடும்பத்தினரும், கைதானவர்களும் உறவினர்கள் ஆவர். கைதான அசோக் பவாரின் மகன் தனஞ்செய் சில மாதங்களுக்கு முன் புனேயில் நடந்த சாலை விபத்தில் பலியானார். இந்த மரணத்துக்கு கொலையான மோகன் உத்தம் பவாரின் மகன் தான் காரணம் என்று அசோக் பவாரின் குடும்பத்தினர் கருதினர்.
இதற்கு பழிதீர்க்க அவர்கள் மோகன் உத்தம் பவாரின் குடும்பத்தை கருவறுத்தது தெரியவந்தது. ஆனால் 7 பேரையும் எப்படி கொலை செய்தனர் என்ற விவரத்தை போலீசார் வெளியிடவில்லை.
இருப்பினும் கொலையானவர்களில் 4 பேர் தண்ணீரில் மூழ்கி பலியானதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேரை கொலை செய்த வழக்கில் கைதான உறவினர்கள் 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தங்களது காவலில் எடுத்து விசாரிக்க இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
போலீசாரின் விசாரணையில், கிரைம் நாவலை மிஞ்சும் வகையில் அடுத்தடுத்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






