என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முக கிரீம் பயன்படுத்த தொடங்கிய 4 மாதங்களில் 3 பெண்களுக்கும் சிறுநீரக கோளாறு ஏற்பட்டது.
    • அதிர்ச்சி அடைந்த பெண்கள் மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.

    மும்பை:

    இளம்பெண்கள் உடல் பொலிவு பெறவும், முகத்தை அழகாக காட்டவும், கிரீம் பூசுவது அதிகரித்து வருகிறது.

    அந்த வகையில் மும்பையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னை அழகுபடுத்திக் கொள்ள அழகு கலை நிபுணர் ஒருவரிடம் சென்றார். அவர் பெண்ணுக்கு முகத்தில் பூசி கொள்ள கிரீம் ஒன்றை கொடுத்தார். அதனை முகத்தில் பூசிய பின்னர் அந்த இளம்பெண் மேலும் அழகாக தோன்றினார்.

    இதனை பார்த்து வியந்து போன பெண்ணின் தாயாரும், சகோதரியும், அதே கிரீமை அவர்களும் பயன்படுத்த தொடங்கினர். ஆரம்பத்தில் பொலிவுடன் காணப்பட்ட அவர்கள், அடுத்தடுத்த மாதங்களில் உடல்நலக்குறைவுக்கு ஆளானார்கள்.

    முக கிரீம் பயன்படுத்த தொடங்கிய 4 மாதங்களில் 3 பெண்களுக்கும் சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.

    அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர், உடல் நலக்குறைவுக்கான காரணத்தையும், அவர்களின் சிறுநீரகம் பாதிக்கப்பட காரணம் என்ன? என்பதை பற்றியும் ஆய்வு செய்தனர்.

    இதில் பெண்களின் ரத்தத்தில் பாதரசத்தின் அளவு அதிகமாக இருப்பதை கண்டறிந்தனர். ஒருவரது ரத்தத்தில் பாதரசத்தின் அளவு 7-க்கும் குறைவாக இருக்க வேண்டும். ஆனால் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட பெண்ணின் ரத்தத்தில் அது 46 அளவுக்கு இருந்தது.

    இதன் காரணமாகவே அவர்களின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருப்பதையும் கண்டறிந்தனர். இதையடுத்து பாதரசம் பெண்களின் உடலில் பரவியது எப்படி என்பதை கண்டறிய பல்வேறு பரிசோதனைகளை நடத்தினர்.

    இதில் அந்த பெண்கள் பயன்படுத்திய முக கிரீம் மீது டாக்டர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனை பரிசோதனை செய்து பார்த்த போது அந்த கிரீமில் அளவுக்கு அதிகமாக பாதரசம் சேர்க்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதாவது தோலில் பூசப்படும் கிரீமில் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்க வேண்டும்.

    ஆனால் பாதிப்புக்கு ஆளான பெண்கள் பயன்படுத்திய முக கிரீமில் பாதரசத்தின் அளவு அதிகமாக இருந்தது. இதன்மூலம் அந்த பெண்களின் ரத்தத்தில் பரவிய உலோக நச்சு ஆரம்பத்தில் முகத்தை பொலிவாக்குவது போல காட்டினாலும் பின்னர் அவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகளை கொடுக்கும் என்பதை நிரூபித்துள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

    • பங்குகளின் அடிப்படையில் எந்த கடனும் வழங்கவில்லை.
    • அதானி குழுமத்தின் கணக்கில் ஒரு பைசா கூட பாக்கி இல்லை.

    மும்பை :

    இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான அதானியின் பல்வேறு நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பெரும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், கணக்குகளில் மோசடி செய்ததாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.

    இந்த அறிக்கையை தொடர்ந்து அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் கோடிக்கு மேல் சரிந்தது. எல்.ஐ.சி., பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) போன்ற பொதுத்துறை நிறுவனங்கள், அதானியின் நிறுவனங்களில் முதலீடுகள் செய்துள்ளதால் இந்த வீழ்ச்சி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசை தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் எதிர்க்கட்சிகள், பாராளுமன்றத்தை தொடர்ந்து முடக்கி வருகின்றன.

    இந்த நிலையில் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன் தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கி தலைவர் தினேஷ் கரா பல்வேறு தகவல்களை வெளியிட்டார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    அதானி குழுமத்துக்கு பாரத ஸ்டேட் வங்கி வழங்கிய மொத்த கடன் ரூ.27 ஆயிரம் கோடி மட்டுமே. இது வங்கியின் கடன் புத்தகத்தில் வெறும் 0.88 சதவீதம் ஆகும்.

    பங்குகளின் அடிப்படையில் அதானி குழுமத்துக்கு எந்த கடனும் வழங்கவில்லை.

    கடன் வழங்குவதற்கான உறுதியான சொத்துகள் மற்றும் போதுமான பணப்புழக்கங்களை அதானி குழும திட்டங்கள் கொண்டுள்ளன. அத்துடன் கடனை திருப்பி செலுத்துவதில் சிறந்த வரலாறும் இந்த குழுமத்துக்கு உண்டு.

    இதைப்போல இந்த சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்காக அதானி குழுமத்திடம் இருந்து எந்தவித மறுநிதி கோரிக்கைகளும் வரவில்லை.

    இவ்வாறு பாரத ஸ்டேட் வங்கி தலைவர் தினேஷ் கரா தெரிவித்தார்.

    இதற்கிடையே அதானி குழுமத்துக்கு தாங்கள் வழங்கிய கடன் பாதுகாப்பாக இருப்பதாக ஜம்மு-காஷ்மீர் வங்கி (ஜே.கே.வங்கி) தெரிவித்து உள்ளது.

    இது குறித்து வங்கியின் துணை பொதுமேலாளர் நிஷிகாந்த் சர்மா பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், 'அதானி குழுமத்துக்கான எங்கள் கடன்கள் ஜே.கே. வங்கியால் நிதியளிக்கப்பட்ட திட்டங்களின் சொத்துகளுக்கு மேல் பாதுகாக்கப்படுகின்றன' என தெரிவித்தார்.

    மேலும் அவர், 'அதானி குழுமத்துக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 2 மின் திட்டங்களுக்காக ரூ.400 கோடி கடன் வழங்கப்பட்டது. தற்போது அது சுமார் ரூ.250 கோடியாக உள்ளது. கடனுக்கான பணத்தை திருப்பி செலுத்துவது ஒழுங்காக நடைபெறுவதுடன், 2 மின் திட்டங்களும் மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களுடன் செயல்படுகின்றன. அதானி குழுமத்தின் கணக்கில் ஒரு பைசா கூட பாக்கி இல்லை' என்றும் கூறினார்.

    • மிரட்டல் கடிதம் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் மும்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
    • நகரின் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    மும்பை:

    மும்பையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த போவதாக தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) இ-மெயில் மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது.

    இக்கடிதத்தை அனுப்பிய நபர், தான் தலிபான் என்றும் தலிபான் அமைப்பின் முக்கிய தலைவரான சிராஜூதீன் ஹக்கானியின் உத்தரவின் பேரில் மும்பையில் வெடிகுண்டு தாக்குதலை நடத்த போவதாகவும் குறிப்பிட்டு இருந்தது.

    மிரட்டல் கடிதம் குறித்து, என்.ஐ.ஏ. அதிகாரிகள், மும்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். மும்பை முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும் படியும் தீவிர சோதனையில் ஈடுபடுமாறும் கேட்டுக் கொண்டனர்.

    இதையடுத்து மும்பையில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். நகரின் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர். ரெயில், பஸ் நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.

    மும்பைக்கு தீவிரவாத மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு உஷார் படுத்தப்பட்டன. நகர் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு பாதுகாப்பை பலப்படுத்த போலீசார் கேட்டு கொள்ளப்பட்டனர்.

    இதையடுத்து முக்கிய நகரங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் அனுப்பியது யார்? எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பது குறித்து என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வருகிறது.

    மேலும் மும்பை போலீசாரும் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே மும்பையில் குண்டுவெடிப்பு சம்பவங்கள், தீவிரவாதிகள் தாக்குதல் ஆகியவை நடந்து உள்ளன. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில் தான் மும்பைக்கு தலிபான்கள் பெயரில் மிரட்டல் கடிதம் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமத்தை வியாகாம் 18 நிறுவனம் பெற்றுள்ளது.
    • ஐ.பி.எல். வீராங்கனைகள் ஏலம் மும்பையில் வரும் 13-ம் தேதி நடைபெறும்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஐ.பி.எல். பாணியில் முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி மும்பையில் மார்ச் மாதம் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டிக்கான 5 அணிகள் ஏற்கனவே ஏலம் விடப்பட்டு விட்டன.

    இந்நிலையில், இந்தப் போட்டிக்கான வீராங்கனைகள் ஏலம் மும்பையில் வரும் 13-ம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

    பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டின் ஒளிபரப்பு உரிமத்தை வியாகாம் 18 நிறுவனம் ரூ.951 கோடிக்கு வாங்கியுள்ளது.

    • இந்த விருதுக்கான தகுதி குறித்து கூட்டத்தில் விரிவான விவாதம் நடைபெற்றது.
    • இந்த விருதுக்காக சுமார் 27 பெயர்கள் அரசுக்கு முன்மொழியப்பட்டன.

    மும்பை :

    மகாராஷ்டிரா பூஷண் விருது வழங்குவது தொடர்பான கூட்டம் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், கலாசார விவகாரங்கள் துறை மந்திரி சுதிர் முங்கண்டிவார், கலாசார விவகாரங்கள்துறை முதன்மை செயலாளர் விகாஸ் கார்கே மற்றும் விருது குழு உறுப்பினர்கள், விஞ்ஞானி டாக்டர் அனில் ககோட்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த விருதுக்கான தகுதி குறித்து கூட்டத்தில் விரிவான விவாதம் நடைபெற்றது. இந்த விருதுக்காக சுமார் 27 பெயர்கள் அரசுக்கு முன்மொழியப்பட்டன. அதுகுறித்தும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் சிலர் விருதுக்கு புதிய பெயர்களையும் பரிந்துரைத்தனர்.

    மகாராஷ்டிராவில் பல முக்கிய பிரமுகர்கள் பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர். இதுபோன்ற பல ஆளுமைகளை இந்த விருதுக்கு பரிசீலிக்க முடிவு செய்யப்பட்டது.

    மேலும், விருது தொகையை கணிசமாக உயர்த்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதுவரை ரூ.10 லட்சம் விருதுக்கு பரிசுத்தொகையாக வழங்கப்பட்டு வந்தது. இந்த விருது தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இந்த விருதை மேலும் ஈர்க்கக்கூடிய வகையில் உருவாக்க புதிய விதிகளை நிர்ணயம் செய்வது எனவும் முடிவுவெடுக்கப்பட்டது.

    • உள்கட்டமைப்பு வளர்ச்சியை அதிகரிக்க உதவும்.
    • உள்கட்டமைப்புக்கு ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    மும்பை :

    மத்திய அரசின் பட்ஜெட்டை நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கருத்து கூறியதாவது:-

    விவசாயிகள், பழங்குடியின மக்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் உள்ளிட்ட சமுதாயத்தின் அனைத்து பிரிவினரின் நலன்களையும் கருத்தில் கொண்டு மத்திய பட்ஜெட் உருவாக்கப்பட்டு உள்ளது.

    மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்த பட்ஜெட் அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும்.

    ரூ.7 லட்சம் வரையிலான வருமானவரி விலக்கு கீழ்த்தட்டு நடுத்தர வர்க்கத்திற்கு உதவும். நடுத்தர மற்றும் கீழ்தட்டு நடுத்தர வர்க்கத்தினர் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்ற இந்த பட்ஜெட் உதவும்.

    முன்பு எப்போதும் இல்லாத வகையில் உள்கட்டமைப்புக்கு ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது உள்கட்டமைப்பு வளர்ச்சியை அதிகரிக்க உதவும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதேபோல மத்திய மந்திரி ராவ்சாகேப் தன்வே கூறுகையில், "பா.ஜனதா தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட் எப்போதும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. இந்த பட்ஜெட்டும் அதையே செய்கிறது" என்றார்.

    • விமானத்தில் ஊழியரை தாக்கிய பெண் பயணி, அரை நிர்வாணமாக நடந்து சென்றுள்ளார்.
    • பயணி மீது வழக்கு பதிவு செய்வதற்கு முன்பாக மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது

    மும்பை:

    அபுதாபியில் இருந்து மும்பை வந்த விஸ்தாரா விமானத்தில் விமான ஊழியரை தாக்கியது தொடர்பாக இத்தாலிய பெண் கைது செய்யப்பட்டார்.

    இதுதொடர்பாக விஸ்தாரா நிறுவனம் கூறியிருப்பதாவது:-

    இத்தாலியைச் சேர்ந்த பவோலா பெருசியோ (வயது 45) என்ற அந்த பெண், எகனாமி வகுப்பு டிக்கெட் வைத்திருந்தார். ஆனால், அந்த பெண், பிசினஸ் வகுப்பு இருக்கையில் உட்கார முயன்றார். இதை விமான ஊழியர் தடுத்தபோது அவரை தாக்கி உள்ளார். அந்த ஊழியரின் முகத்தில் குத்தியதுடன், மற்றொருவரை நோக்கி எச்சில் துப்பி உள்ளார். அத்துடன், அரை நிர்வாணமாக நடந்து சென்றுள்ளார்.

    விமானம் மும்பை வந்ததும், போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பயணியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

    இவ்வாறு விஸ்தாரா நிறுவனம் கூறி உள்ளது.

    இத்தாலி பெண் பயணி மீது வழக்குப் பதிவு செய்வதற்கு முன்பு அவருக்கு மருத்துவப் பரிசோதனை, சக பயணிகள், பணியாளர்கள் உள்ளிட்டோரிடம் வாக்குமூலம் பதிவு செய்தல் அனைத்து நடைமுறைகளையும் முடித்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    • இத்தாலி பெண், திடீரென தனது ஆடைகளை கழற்றி வீசிவிட்டு விமானத்தில் அங்கும், இங்கும் சுற்றிவந்தார்.
    • விமானத்தில் இருந்த மற்ற பயணிகள் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.

    மும்பை:

    வளைகுடா நாடான அபுதாபியில் இருந்து மும்பைக்கு ஒரு தனியார் விமானம் வந்தது.

    இதில் இத்தாலி நாட்டை சேர்ந்த பெண் பயணி ஒருவர் பயணம் செய்தார். எக்னாமி வகுப்பு டிக்கெட் எடுத்திருந்த அவர் பிசினஸ் வகுப்பு இருக்கைக்கு செல்ல முயன்றார். அவரை விமான ஊழியர்கள் தடுத்து நிறுத்தி அவருக்கு உரிய இருக்கைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பயணி, விமான ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டார். மேலும் ஊழியர் ஒருவரின் முகத்திலும் குத்துவிட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர் இதுபற்றி விமான பைலட்டிடம் புகார் கூறினார். அவர் இத்தாலி பெண்ணை சமாதானம் செய்ய முயன்றார்.

    ஆனால் அந்த பெண், திடீரென தனது ஆடைகளை கழற்றி வீசிவிட்டு விமானத்தில் அங்கும், இங்கும் சுற்றிவந்தார். இதனால் விமானத்தில் இருந்த மற்ற பயணிகள் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.

    இதையடுத்து விமானம் மும்பையில் தரை இறங்கியதும், விமான ஊழியர்கள் விமான பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளிடம் புகார் செய்தனர். அவர்கள் இதுபற்றி விசாரணை நடத்தி மும்பை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அவர்கள் விரைந்து வந்து விமானத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட இத்தாலி பெண் பயணியை கைது செய்தனர். பின்னர் அவரது பாஸ்போர்டை கைப்பற்றி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த சம்பவத்தால் மும்பை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதானி குழுமத்தில் மொத்தம் 10 நிறுவனங்கள் உள்ளன.
    • எல்.ஐ.சி.யின் மொத்த சொத்து மதிப்பு ரூ.41.66 லட்சம் கோடியாக உள்ளது.

    மும்பை :

    இந்தியாவின் 'நம்பர் 1' கோடீஸ்வரரான கவுதம் அதானியின் அதானி குழுமம், முறைகேடுகளில் ஈடுபடுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டது.

    அது, அதானி குழுமத்துக்கு பலத்த அடியாக அமைந்தது. அந்நிறுவன பங்குகள் ரூ.4.20 லட்சம் கோடி இழப்பைச் சந்தித்திருப்பதாக கூறப்படுகிறது. தங்கள் மீது தெரிவிக்கப்படும் முறைகேடுகளை மறுத்துள்ள அதானி குழுமம், இது இந்தியாவுக்கு எதிரான சதி என்று கூறியுள்ளது.

    அதேவேளையில், அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் பெருமளவில் முதலீடு செய்துள்ளதால், அவற்றுக்கு அதிக இழப்பு ஏற்பட்டுள்ளதாக குரல் எழுந்துள்ளது.

    இந்நிலையில் எல்.ஐ.சி. நிறுவனம் நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 'அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. சார்பில் ரூ.36 ஆயிரத்து 474 கோடியே 78 லட்சம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அது கடந்த டிசம்பர் 31-ந்தேதியன்று ரூ.35 ஆயிரத்து 917 கோடியே 31 லட்சமாக இருந்தது. அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. பங்குகளின் மொத்த வாங்கு மதிப்பு ரூ.30 ஆயிரத்து 127 கோடியாகவும், கடந்த 27-ந்தேதி நிலவரப்படி அதன் சந்தை மதிப்பு ரூ.56 ஆயிரத்து 142 கோடியாகவும் உள்ளது. அதானி குழுமத்தில் செய்யப்பட்டுள்ள முதலீடு, எல்.ஐ.சி.யின் மொத்த முதலீடுகளில் ஒரு சதவீதத்துக்கும் குறைவு' என்று தெரிவித்துள்ளது.

    அதானி குழுமத்தில் மொத்தம் 10 நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் எந்தெந்த நிறுவனங்களில் எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தை எல்.ஐ.சி. தெரிவிக்கவில்லை. கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி, எல்.ஐ.சி.யின் மொத்த சொத்து மதிப்பு ரூ.41.66 லட்சம் கோடியாக உள்ளது.

    • புதுமணத்தம்பதி தனித்தனியாக குதிரையில் மாதேரான் மலை அழகை சுற்றிப்பார்த்து கொண்டு இருந்தனர்.
    • வாலிபருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    மும்பை:

    மகாராஷ்டிர தலைநகர் மும்பை முகமது அலி ரோடு பகுதியை சேர்ந்தவர் முகமது காசிப் இம்தியாஸ் சேக் (வயது23). இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் அவர் தனது மனைவியுடன் மும்பை அருகே உள்ள மாதேரான் மலை வாசஸ்தலத்துக்கு தேனிலவுக்கு சென்றார்.

    சம்பவத்தன்று புதுமணத்தம்பதி தனித்தனியாக குதிரையில் மாதேரான் மலை அழகை சுற்றிப்பார்த்து கொண்டு இருந்தனர்.

    முகமது காசிப் இம்தியாஸ் சேக் சென்ற குதிரை திடீரென வேகமாக ஓடத் தொடங்கியது. இதனால் அவர் நிலைதடுமாறி குதிரையில் இருந்து கீழே விழுந்தார். வாலிபருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு வாலிபரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

    தேனிலவு சென்ற இடத்தில் புதுமாப்பிள்ளை குதிரையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பயணி ஒருவர் விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்றார்.
    • பயணி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    மும்பை:

    நாக்பூரில் இருந்து மும்பைக்கு இண்டிகோ விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. விமானம் மும்பை விமான நிலையத்தில் தரை இறங்கும் நேரத்தில் அதில் பயணம் செய்த பயணி ஒருவர் விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்றார்.

    இது தொடர்பாக விமான ஊழியர்கள் புகார் செய்தனர். அந்த பயணி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இது தொடர்பாக இண்டிகோ விமான நிறுவனம் 'விமானத்தை பாதுகாப்பாக இயக்குவதில் எந்த சமரசமும் கிடையாது' என்று விளக்கம் அளித்து உள்ளது.

    • பிரகாஷ் அம்பேத்கர் கட்சியை கூட்டணியில் சேர்ப்பது குறித்து மகாவிகாஸ் அகாடியில் எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை.
    • உத்தவ் தாக்கரே சிவசேனா மற்றும் பிரகாஷ் அம்பேத்கர் கட்சிகளில் என்ன நடக்கிறது என்பது பற்றி எங்களுக்கு தெரியாது.

    மும்பை

    மகாராஷ்டிராவில் பா.ஜனதா - சிவசேனா கட்சிகள் 25 ஆண்டுகளுக்கு மேல் கூட்டணி அமைத்து தேர்தல்களை சந்தித்து வந்தன.

    2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு பிறகு முதல்-மந்திரி பதவியை பகிர்வதில் ஏற்பட்ட தகராறில் அந்த கூட்டணி உடைந்தது.

    இதைதொடர்ந்து சிவசேனா, பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறி கொள்கைகள் மாறுபட்ட தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. இந்த கூட்டணி மகாவிகாஸ் அகாடி கூட்டணி என அழைக்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே 40 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்தார். இதை தொடர்ந்து மகாவிகாஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே - பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைந்தது.

    இந்த அரசியல் பூகம்பத்துக்கு பின்னரும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும், சட்டமேதை அம்பேத்கரின் பேரனான பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான வஞ்சித் பகுஜன் அகாடியும் கூட்டணி அமைத்தன.

    வஞ்சித் பகுஜன் அகாடியை காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஏற்றுக்கொள்ளும் என உத்தவ் தாக்கரே கூறினார். அதே நேரத்தில் பிரகாஷ் அம்பேத்கர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு எதிராக பேசியதால் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடியை கூட்டணியில் சேர்த்து கொள்வது பற்றி மகாவிகாஸ் அகாடியில் எந்த பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை என சரத்பவார் கூறி இருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக நேற்று கோலாப்பூரில் அவர் கூறியதாவது:-

    தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரகாஷ் அம்பேத்கர் கட்சியை கூட்டணியில் சேர்ப்பது குறித்து மகாவிகாஸ் அகாடியில் எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை. உத்தவ் தாக்கரே சிவசேனா மற்றும் பிரகாஷ் அம்பேத்கர் கட்சிகளில் என்ன நடக்கிறது என்பது பற்றி எங்களுக்கு தெரியாது. அதுபற்றி நாங்கள் எதுவும் இதுவரை ஆலோசிக்கவில்லை. வர இருக்கும் தேர்தலை காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கூட்டணி சந்திக்கும். பிரகாஷ் அம்பேத்கருடன் கூட்டணி பற்றி நாங்கள் இதுவரை எதுவும் பேசவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விரைவில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் எதிர்க்கட்சி கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×