என் மலர்
மகாராஷ்டிரா
- வெங்காயம் விளைச்சல் கணிசமாக அதிகரித்துள்ளதால் அதன் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
- 512 கிலோ வெங்காயத்தை விற்பனை செய்ததில் ரூ.2 மட்டுமே கிடைத்த வேதனையை துக்காராம் பகிர்ந்து கொண்டார்.
ஜோலாப்பூர்:
மராட்டிய மாநிலத்தில் வெங்காயம் விளைச்சல் கணிசமாக அதிகரித்துள்ளதால் அதன் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
பார்ஷி பகுதியைச் சேர்ந்தவர்ராஜேந்திர துக்காராம் சவான் (வயது 58). விவசாயி. இவர் தனது நிலத்தில் விளைந்த 512 கிலோ வெங்காயத்தை விற்பனை செய்ய வேளாண் விளை பொருள் விற்பனை கூடத்துக்கு கொண்டு சென்றார். ஆனால் கடுமையான விலை வீழ்ச்சியால் 1 கிலோ வெங்காயம் 1 ரூபாய்க்கே கொள்முதல் செய்யப்பட்டது.
மொத்தத்தில் 512 கிலோ வெங்காயத்தை விற்றதில் விவசாயி துக்காராமுக்கு ரூ.512 மட்டுமே கிடைத்தது. வெங்காயத்தை 70 கிலோ மீட்டர் தூரம் கொண்டு சென்றதற்கான லாரி வாடகை, சுமை கூலி ஆகியவற்றுக்கு ரூ.510 செலவானது. அந்த வகையில் 512 கிலோ வெங்காயத்தை விற்ற விவசாயி துக்காராமுக்கு எல்லா செலவும் போக மிஞ்சியது வெறும் 2 ரூபாய்தான்.
வெங்காயத்தை வாங்கிய கடைக்காரர், விவசாயி துக்காராமிடம் 2 ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். அந்த காசோலையையும் 15 நாட்களுக்கு பிறகே பணமாக்க முடியும். இந்த காசோலை சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 512 கிலோ வெங்காயத்தை விற்பனை செய்ததில் ரூ.2 மட்டுமே கிடைத்த வேதனையை துக்காராம் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:-
512 கிலோ வெங்காயத்தை விற்பனை செய்ததன் மூலம் எனக்கு வெறும் 2 ரூபாயே கிடைத்தது. இந்த விளைவிக்க கிட்டத்தட்ட ரூ.40 ஆயிரம் செலவழித்துள்ளேன். கடந்த 4 ஆண்டுகளில் விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 1 கிலோ வெங்காயத்துக்கு 20 ரூபாய் சம்பாதித்தேன். இந்த ஆண்டு மொத்தமே 2 ரூபாய்தான் கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
விவசாயி துக்கராமிடம் வெங்காயத்தை வாங்கிய வியாபாரி கலீபா கூறுகையில், "ரசீதுகள் மற்றும் காசோலைகள் வழங்கும் செயல்முறையை நாங்கள் கணினி மயமாக்கியுள்ளோம். இதன் காரணமாக துக்காராமுக்கு பிந்தைய தேதியிட்ட காசோலை கொடுக்கப்பட்டது. இது ஒரு பொதுவான நடைமுறையாகும்.
விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட வெங்காயம் தரம் குறைந்ததாக இருந்தது. இதற்கு முன்பு அவர் 18 ரூபாய்க்கு விற்கப்பட்ட உயர்ரக வெங்காயத்தை கொண்டு வந்துள்ளார். அதன் பிறகு மற்றொரு முறை அவரது வெங்காயத்துக்கு கிலோவுக்கு 14 ரூபாய் வழங்கப்பட்டது. இப்போது தரம் குறைந்த வெங்காயத்தை கொண்டு வந்ததால் கிலோ 1 ரூபாய்க்கே எடுக்க முடிந்தது" என்றார்.
- ஒவ்வொரு நாட்டுக்கும் சவால்கள் உள்ளன.
- நம்மை சுயேச்சையான நாடாக உலகம் பார்க்கிறது.
புனே :
புனேவில், சிம்பியோசிஸ் சர்வதேச பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது:-
ஒவ்வொரு நாட்டுக்கும் சவால்கள் உள்ளன. ஆனால், தேச பாதுகாப்பு போல், கூர்மையான சவால்கள் வேறு எதுவும் இல்லை.
கடந்த சில ஆண்டுகளாக நமது மேற்கு எல்லையில் நமக்கு சோதனைகள் கொடுத்தனர். இப்போது நிலைமையில் சற்று மாற்றம் வந்துள்ளது. அதை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள்.
கடந்த 2016 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் சில விஷயங்கள் நடந்தன. வடக்கு எல்லையில் நமக்கு சோதனை அளிக்கிறார்கள். இந்த சோதனைகளை இந்தியா எப்படி கடந்து வந்துள்ளது என்பதுதான் நமது திறமையை காட்டுகிறது.
தேசத்தை பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய நாடு என்பதுதான் இப்போது இந்தியாவுக்கு உள்ள கவுரவம். இது ஒரு சகிப்புத்தன்மையும், பொறுமையும் கொண்ட நாடு. மற்றவர்களுடன் சண்டை போடும் நாடு அல்ல. ஓரங்கட்டக்கூடிய நாடு அல்ல.
நம்மை சுயேச்சையான நாடாக உலகம் பார்க்கிறது. நாம் நமது உரிமைகளுக்காக மட்டும் குரல் கொடுக்காமல் தெற்குலக நாடுகளுக்கும் சேர்த்து குரல் கொடுப்பதாக உலகம் பார்க்கிறது.
ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள இந்த காலகட்டத்தில், எந்த அமைப்பிலும் இடம்பெறாத நாடுகளின் நலன்களுக்காகவும் பாடுபட உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கோர்ட்டு வழக்குகள், முக்கியமான விஷயங்களை ஏக்நாத் ஷிண்டே பார்த்து கொள்வார்
- மக்களை பொறுத்தவரை சிவசேனாவும், தாக்கரேவும் ஒன்று தான்.
மும்பை :
சிவசேனா கட்சி கடந்த ஆண்டு உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 2 ஆக உடைந்தது. யார் உண்மையான சிவசேனா என்பது தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த தேர்தல் ஆணையம், ஏக்நாத் ஷிண்டே தரப்பு தான் உண்மையான சிவசேனா என அறிவித்தது.
ஷிண்டே தரப்பு தான் உண்மையான சிவசேனா என தேர்தல் ஆணையம் அறிவித்த போதும், ஏக்நாத் ஷிண்டே உத்தவ் தாக்கரே வகித்து வரும் கட்சி தலைவர் (சிவசேனா பக்சா பிரமுக்) பதவியை ஏற்பதை தவிர்த்து உள்ளார்.
கட்சி உடைந்த போது ஏக்நாத் ஷிண்டே அவருக்கு முதன்மை தலைவர் (முக்கிய நேத்தா) என்ற பதவியை உருவாக்கி கொண்டார். தொடர்ந்து அவர் அந்த பதவியில் நீடிக்க உள்ளார். உத்தவ் தாக்கரே வகித்து வரும் பதவியை தற்போது எடுத்துகொண்டால், அது தாக்கரே மீது மக்கள் இடையே அனுதாபத்தை ஏற்படுத்திவிடும் என்பதால் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா பக்சா பிரமுக் பதவியை ஏற்கவில்லை எனக்கூறப்படுகிறது.
அதே நேரத்தில் கட்சியில் அனைத்து முடிவுகளை எடுக்கும் அதிகாரம் ஏக்நாத் ஷிண்டே வசம் தான் இருக்கும் என அவர் தரப்பை சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறினார்.
இதுதொடர்பாக ஷிண்டே தரப்பு செய்தி தொடர்பாளர் சீத்தல் மாத்ரே கூறுகையில், "ஏக்நாத் ஷிண்டே தான் எங்கள் முதன்மை தலைவர். தொடர்ந்து அவர் அந்த பதவியில் இருப்பார். எங்கள் செயற்குழுவிடம் எல்லா உரிமைகளும் உள்ளன. கோர்ட்டு வழக்குகள், முக்கியமான விஷயங்களை ஏக்நாத் ஷிண்டே பார்த்து கொள்வார்" என்றார்.
ஷிண்டே தரப்பை சேர்ந்த மூத்த தலைவர் கூறுகையில், "உத்தவ் தாக்கரேயை அவரது பதவியில் இருந்து நீக்கி எந்த அறிவிப்பையும் வெளியிட நாங்கள் விரும்பவில்லை. மக்களை பொறுத்தவரை சிவசேனாவும், தாக்கரேவும் ஒன்று தான். ஏக்நாத் ஷிண்டேவை தலைவராக நியமித்தால் அது தவறாக போய்விடும். தாக்கரே தரப்புக்கு அனுதாப அலையால் ஆதாயம் ஏற்பட கூடாது என்பதில் கவனமாக உள்ளோம். இந்த அடிப்படையில் சிவசேனா பவன், சாக்கா அலுவலகங்களை உரிமைகோர மாட்டோம் என ஏக்நாத் ஷிண்டே கடந்த சில நாட்களுக்கு முன் கூறினார்" என்றாா்.
சிவசேனா தலைவர் பதவி விவகாரத்தில் ஷிண்டே சிவசேனாவினர் பாதுகாப்பாக காய்நகர்த்தி இருப்பதாக உத்தவ் தாக்கரே அணி செய்தி தொடர்பாளர் மனிஷா காயன்டே கூறியுள்ளார்.
- ஷிண்டே மகன் தன்னை கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயற்சிப்பதாக சஞ்சய் ராவத் குற்றம்சாட்டினார்.
- சஞ்சய் ராவத்தின் குற்றச்சாட்டை ஏக்நாத் ஷிண்டே தரப்பு மறுத்தது.
மும்பை:
சிவசேனா உத்தவ் தாக்கரே தரப்பைச் சேர்ந்த எம்.பி. சஞ்சய் ராவத் கடந்த சில நாட்களுக்கு முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே எம்.பி. மீது பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.
ஏக்நாத் ஷிண்டேவின் மகன் தன்னை கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயற்சி செய்வதாக அவர் குற்றம்சாட்டி இருந்தார். சஞ்சய் ராவத்தின் குற்றச்சாட்டை ஏக்நாத் ஷிண்டே தரப்பு மறுத்தது.
முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டேக்கு எதிராக அவதூறு பரப்பியதாக தானே முன்னாள் மேயர் மீனாட்சி ஷிண்டே கபுர்பாவ்டி போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக போலீசார் அவதூறு, இருதரப்பினர் இடையே மோதலை உருவாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சஞ்சய் ராவத் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், சஞ்சய் ராவத்தின் குற்றச்சாட்டு அடிப்படை அற்றது என ஸ்ரீகாந்த் ஷிண்டே விளக்கம் அளித்துள்ளார்.
- எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்த காங்கிரஸ் கட்சி முன்வர வேண்டும்.
- எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் 2024-ம் ஆண்டு பா.ஜனதாவை தோற்கடிக்க முடியும்
மும்பை :
பா.ஜனதாவுக்கு எதிராக தனித்தனியாக போராடுவதில் எந்த அர்த்தமும் இல்லை, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'சாம்னா'வில் கூறி இருப்பதாவது:-
எதிர்க்கட்சிகள் கூட்டணி என்ற புதிர் விரைவில் தீர்க்கப்பட வேண்டும். பா.ஜனதாவின் போலி தேசியவாதம் மற்றும் அடிப்படைவாதத்தின் விஷத்தை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும்.
மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் ஆகியோர் அந்தந்த மாநிலங்களில் பா.ஜனதாவுடன் தனித்தனியாக போராடி வருகின்றனர். இதுபோன்ற அரசியல் அணுகுமுறைக்கு எந்த அர்த்தமும் இல்லை.
காங்கிரசை வெறுத்து ஒதுக்கிவிட்டு பா.ஜனதாவை எதிர்த்து எப்படி போராடுவீர்கள்?.
2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் பிரதமர் வேட்பாளர் விவகாரம் குறித்து பின்னர் சிந்திக்கவேண்டும். அதற்கு முன்பு பா.ஜனதாவுக்கு எதிரான அனைத்து அரசியல் கட்சிகளும் கலந்தாலோசித்து தங்களின் வியூகத்தை இறுதி செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்.
எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்த காங்கிரஸ் கட்சி முன்வர வேண்டும்.
பணமும் அதிகார ஆணவமும் இன்றைய ஆட்சியாளர்களின் கைகளில் அரசியல் ஆயுதங்களாக மாறிவிட்டன.
நாடு தழுவிய அளவில் இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டதன் மூலம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலிமையான மற்றும் முதிர்ச்சி பெற்ற தலைவராக உருவெடுத்துள்ளார்.
ஹிண்டன்பர்க் அறிக்கை மற்றும் பிரதமர் நரேந்திர மோடி- கவுதம் அதானியின் தொடர்பு குறித்து ராகுல் காந்தி மக்களவையில் கடுமையாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதற்கு பதிலளித்து பேசும்போது, பிரதமர் பதில் சொல்ல முடியாமல் பலமுறை தண்ணீர் குடித்ததை பார்க்க முடிந்தது. இதற்கு அர்த்தம் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் 2024-ம் ஆண்டு பா.ஜனதாவை தோற்கடிக்க முடியும் என்பது தான்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- சில குடிசைகளில் மட்டுமே தீ பரவியதால், யாருக்கும் காயம் ஏற்பட்டதாக எந்த புகாரும் இல்லை.
- தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மும்பையின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் இன்று அதிகாலை 4.15 மணியளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதில், தாராவியின் கமலா நகர் மற்றும் ஷாஹு நகர் பகுதிகளில் உள்ள 25க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலாயின. ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்து குறித்து குடிமை அதிகாரி ஒருவர் கூறுகையில், " தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு, குறைந்தது 12 தீயணைப்பு வாகனங்கள், எட்டு தண்ணீர் டேங்கர்கள், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. சில குடிசைகளில் மட்டுமே தீ பரவியதால், யாருக்கும் காயம் ஏற்பட்டதாக எந்த புகாரும் இல்லை.
மேலும், மும்பை காவல்துறை, பிரஹன் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) நிர்வாக வார்டு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு வருகிறது" என்றார்.
- அமித்ஷாவின் கருணை இருந்ததால் ஷிண்டேக்கு சின்னம் கிடைத்தது.
- சிவசேனா இப்பொழுதும், எப்போழுதும் தாக்கரேக்கு சொந்தமானது தான்.
மும்பை :
தேர்தல் ஆணையம் ஏக்நாத் ஷிண்டே தரப்பு தான் உண்மையான சிவசேனா என அறிவித்தது. இதனால் கட்சியின் பெயர், சின்னத்தை முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கட்சி பறிகொடுத்துள்ளது.
இதையடுத்து தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் அடிமையாக மாறி உள்ளது என உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்தார். அவர் தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து உள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் மகாராஷ்டிரா வந்து இருந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, உத்தவ் தாக்கரேயை கடுமையாக விமர்சித்து இருந்தார்.
இந்தநிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தான் மகாராஷ்டிராவின் முதல் எதிரி என உத்தவ் தாக்கரேயின் கட்சி நாளேடான 'சாம்னா' பத்திரிகையில் கடுமையாக தாக்கி எழுதப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சிவசேனாவின் பெயர், சின்னத்தை வாங்கிய பிறகு, தாமரையின் கால்கள் உடையும் வரை பா.ஜனதா ஆட்டம் போட்டது. ஏக்நாத் ஷிண்டே அணியை விட பா.ஜனதா தான் மகிழ்ச்சி அடைந்தது. டெல்லியின் கால் அடியில் விழுந்து கிடக்கும் மனநிலையில், தாக்கரேயால் உருவாக்கப்பட்டு, வளர்க்கப்பட்ட சிவசேனாவை தேர்தல் ஆணையம் ஒப்படைத்து உள்ளது.
சத்ரபதி சிவாஜி ஜெயந்தி அன்று ஷிண்டேக்கு சிவசேனா சின்னம் ஒதுக்கப்பட்டதற்கு அமித்ஷா மகிழ்ச்சி தெரிவித்தார். அமித்ஷாவின் கருணை இருந்ததால் ஷிண்டேக்கு சின்னம் கிடைத்தது. அதை தற்போது அவர் மறைக்கிறாரா?. இந்த மனிதர் (அமித்ஷா) மகாராஷ்டிரா, மகாராஷ்டிரா மக்களுக்கு முதல் எதிரி. தங்கள் சொந்த ஆசைகளை அமித்ஷாவுக்கு பின்னால் நின்று மறைப்பவர்களும் மகாராஷ்டிராவின் எதிரிகள் தான். சிவசேனா இப்பொழுதும், எப்போழுதும் தாக்கரேக்கு சொந்தமானது தான். மகாராஷ்டிராவில் ஆட்சியை அமைக்கவும். வில், அம்பு சின்னத்தை வாங்கவும் ரூ.2 ஆயிரம் கோடி பேரம் நடந்து உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிவசேனா கட்சியின் பெயர், சின்னம் ஷிண்டே தரப்புக்கு சென்றுள்ளது.
- சஞ்சய் ராவத் அனுதாபத்தை பெற கீழ்த்தரமான அரசியல் செய்கிறார்.
மும்பை :
மகாராஷ்டிரா முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தரப்பு தான் உண்மையான சிவசேனா என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதனால் சிவசேனா கட்சியின் பெயர், சின்னம் ஷிண்டே தரப்புக்கு சென்றுள்ளது.
ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சி பெயர், சின்னத்தை பெற ரூ.2 ஆயிரம் கோடி பேரம் நடந்ததாக உத்தவ் தாக்கரே அணி எம்.பி. சஞ்சய் ராவத் பரபரப்பு குற்றம்சாட்டி இருந்தார். மேலும் அவர் ஏக்நாத் ஷிண்டேயை கடுமையாக விமர்சித்தார். இதனால் ஏக்நாத் ஷிண்டேயை அவதூறாக பேசியதாக தானேயில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே எம்.பி. தன்னை கொலை செய்ய சதி செய்வதாக சஞ்சய் ராவத் பகீர் குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக சஞ்சய் ராவத், மும்பை போலீஸ் கமிஷனருக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
மாநிலத்தில் ஆட்சி மாறியவுடன் எனது பாதுகாப்பு திரும்பபெறப்பட்டது. தற்போது ஆட்சியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அவர்களின் குண்டர்களால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என ஏற்கனவே உங்களிடம் தெரிவித்து இருந்தேன். இந்தநிலையில் ஸ்ரீகாந்த் ஷிண்டே எம்.பி. என்னை கொலை செய்ய தானே ரவுடி ராஜா தாக்குரை ஏவி உள்ளதாக எனக்கு இன்று தகவல் கிடைத்து உள்ளது. இந்த தகவலை நான் உறுதி செய்து உள்ளேன். என் மீது தாக்குதல் நடத்த ரவுடி ராஜா தாக்குர் தயராகி வருகிறார். பொறுப்பு உள்ள குடிமகனாக இந்த தகவலை நான் உங்களுக்கு கூறுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சஞ்சய் ராவத்தின் குற்றச்சாட்டை ஷிண்டே தரப்பு மறுத்து உள்ளது. இது தொடர்பாக அவரது ஆதரவு எம்.எல்.ஏ. சஞ்சய் ஷிர்சாட் கூறுகையில், "சஞ்சய் ராவத் அனுதாபத்தை பெற கீழ்த்தரமான அரசியல் செய்கிறார். அவர் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில் சஞ்சய் ராவத் இதேபோல பல குற்றச்சாட்டுகளை வைத்து இருக்கிறார் என்பதை மறக்க வேண்டாம். அதில் எந்த ஆதாரமும் இருக்காது. அவர் கூறுவது போல ஸ்ரீகாந்த் ஷிண்டே ஒருபோதும் செய்ய மாட்டார் என்பது எங்களுக்கு தெரியும். இருந்தாலும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை தொடங்கப்படும்" என்றார்.
சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு குறித்து உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே கூறுகையில், "இந்த குற்றச்சாட்டை தீவிரமாக எடுக்க வேண்டும். துரதிருஷ்டவசமாக இந்த துரோக எம்.எல்.ஏ.க்கள் யாருக்கும் அடங்குவதில்லை. மாகிமில் ஒரு எம்.எல்.ஏ. வான் நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அவர் மீது இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்றார்.
- சிவசேனா கட்சி பெயர், சின்னத்தை ஷிண்டே தரப்புக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.
- ஷிண்டே அணிக்கு சிவசேனாவின் பாராளுமன்ற அலுவலகத்தை மக்களவைச் செயலகம் ஒதுக்கியது.
மும்பை:
சிவசேனா கட்சி பெயர், சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் உத்தவ் தாக்கரே மேல் முறையீடு செய்துள்ளார்.
இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பிரிவை உண்மையான சிவசேனா என்று தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததையடுத்து, ஷிண்டே அணியினருக்கு சிவசேனாவின் பாராளுமன்ற அலுவலகத்தை மக்களவைச் செயலகம் ஒதுக்கியுள்ளது.
ஏக்நாத் ஷிண்டே அணியின் தலைவர் ராகுல் ஷெவாலே எழுதிய கடிதத்திற்கு பதிலளித்த மக்களவை செயலகம், பாராளுமன்றக் கட்டிடத்தில் சிவசேனா அலுவலகத்துக்காக ஒதுக்கப்பட்ட அறை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தது.
- இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது.
- ஹேசில்வுட் காயம் காரணமாக முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை:
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கு பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.
முதலில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவருக்கு ஏற்பட்ட காயம் குணமாக இன்னும் சிறிது காலம் எடுக்கும் என்பதால் எஞ்சிய போட்டிகளில் இருந்து அவர் விலக உள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்த ஹேசில்வுட் காயம் காரணமாக முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- நாங்கள் அதிகார பேராசை கொண்டவர்கள் அல்ல.
- நாங்கள் எங்கள் கொள்கைகளை எதற்காகவும் தியாகம் செய்வது இல்லை.
மும்பை :
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மராட்டியத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், 2-வது நாளாக நேற்று கோலாப்பூரில் நடந்த பா.ஜனதா கட்சி கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
2019-ம் ஆண்டு பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 48 நாடாளுமன்ற தொகுதிகளில் 42 இடங்களில் வெற்றி பெற்றது. இந்தமுறை பா.ஜனதா 48 இடங்களிலும் வெற்றி பெறவேண்டும். முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா சரத்பவாரின் காலடியில் சரணடைந்துவிட்டது.
உத்தவ் தாக்கரே கடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடியின் மிகப்பெரிய கட்-அவுட்டுடன் தேர்தலை சந்தித்தார்.
ஆனால் முடிவுகள் வெளியான பிறகு அவர், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் காலடியில் சரணடைந்துவிட்டார்.
நாங்கள் அதிகார பேராசை கொண்டவர்கள் அல்ல. நாங்கள் எங்கள் கொள்கைகளை எதற்காகவும் தியாகம் செய்வது இல்லை.
கடந்த மராட்டிய சட்டசபை தேர்தலில் அப்போதைய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் தலைமையில் தான் எங்கள் கூட்டணி போட்டியிட்டது. இதை நானும், பிரதமர் நரேந்திர மோடியும் பொதுக்கூட்டங்களின்போது வெளிப்படையாக தெரிவித்தோம். இருந்தபோதிலும் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்தார்.
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் அணியை உண்மையான சிவசேனா என்று அங்கீகரித்து வில் அம்பு சின்னத்தை வழங்கிய தேர்தல் ஆணையத்தின் முடிவை பாராட்டுகிறேன். உத்தவ் தாக்கரே அணியினர் தற்போது பாடம் கற்றிருப்பார்கள்.
வஞ்சகத்தால் நீங்கள் சில நாட்களுக்கு அதிகாரத்தை கைப்பற்றலாம். ஆனால் போர்க்களத்திற்கு வரும்போது வெற்றி பெறுவதற்கு உங்களுக்கு தைரியம் தேவை.
இவ்வாறு அவர் பேசினார்.
- மக்களை பிரிக்கும் பா.ஜனதாவின் இந்துத்வாவை நான் ஏற்கவில்லை.
- பா.ஜனதா இந்துக்களை தவறாக வழிநடத்துகிறது.
மும்பை :
சிவசேனா கட்சி முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியாகவும், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மற்றொரு அணியாகவும் உடைந்தது. இந்தநிலையில் 2 அணிகளும் சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் சின்னத்திற்காக உரிமை கோரி வந்தன.
இந்தநிலையில் தேர்தல் ஆணையம் சிவசேனா கட்சியின் 'வில் அம்பு' சின்னத்தை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அணிக்கு ஒதுக்கி உள்ளது. இது உத்தவ் தாக்கரே மற்றும் அவரது அணியை சேர்ந்தவர்களுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
இந்தநிலையில் மும்பையில் வடஇந்தியர்கள் சமுதாய கூட்டத்தில் கலந்துகொண்ட உத்தவ் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே பேசியதாவது:-
சிவசேனாவுக்கு என்ன நடந்தது, நாங்கள் எப்படி நடத்தப்பட்டோம் என்பதை பார்த்திருப்பீர்கள். இது உங்களுக்கும் நடக்கலாம். அனைத்து கட்சிகளும் கண்களைத் திறந்து கவனமாக இருக்க வேண்டும்.
உங்களுக்கு(பா.ஜனதா) எனது தந்தையின் முகம் வேண்டும். ஆனால் அவருடைய மகன் வேண்டாம். நான் உங்களுடன் வர தயாராக இருந்தேன். ஆனால் எனது தந்தைக்கு நான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற நினைத்தபோது நீங்கள் என்னை ஏமாற்றினீர்கள். நான் பின்னர் என்ன செய்ய வேண்டும்.
நான் ஒருபோதும் முதல்-மந்திரியாக விரும்பவில்லை. ஆனால் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளால் பதவியேற்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டேன். பா.ஜனதா கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியிருந்தால், சிவசேனா மற்றும் பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் தலா 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவியில் இருந்திருப்பார்கள். கட்சியில் இருந்து விலக விரும்புபவர்கள் போகலாம். அவர்கள் வேறு கட்சியில் இணையலாம். ஆனால் என்னை என்னுடைய வீட்டில் இருந்து தூக்கி எறிந்துவிட்டு, வீட்டை கைப்பற்ற நினைக்கிறார்கள்.
என் தந்தை தான் அவர்களை வளர்த்தார். சிவசேனா தொண்டர்கள் அவர்களை ஆதரித்தனர். ஆனால் இப்போது அவர்கள் வீட்டின் உரிமையாளராக விரும்புகிறார்கள்.
நமது அரசு நிறுவனங்கள் ஒரு திருடனை வீட்டின் உரிமையாளராக மாற்றிவிட்டன. நமது நாட்டில் என்ன நடக்கிறது.
ஆனால் நடந்தது நல்லது தான். ஏனென்றால் மக்கள் கோபமடைந்துள்ளனர். நடந்தவை அனைத்தும் தவறு என்பதை உணர்ந்துள்ளனர்.
காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்க்கும் நிலைக்கு பா.ஜனதா தான் எங்களை தள்ளியது. ஏனெனில் அது எங்களுக்கு கொடுத்த உறுதியை மதிக்கவில்லை.
நான் பா.ஜனதாவை விட்டு தான் விலகி உள்ளேன். இந்துத்வாவை விட்டு அல்ல. மக்களை பிரிக்கும் பா.ஜனதாவின் இந்துத்வாவை நான் ஏற்கவில்லை. ஹிஜாப், பசு கொலை போன்ற பிரச்சினைகளை வைத்து பா.ஜனதா இந்துக்களை தவறாக வழிநடத்துகிறது. சமீபத்தில் மும்பையில் இந்து ஆக்ரோஷ் பேரணி நடைபெற்றது. சக்தி வாய்ந்த தலைவர் ஒருவர் நாட்டை ஆளும்போது இந்துக்கள் ஏன் ஆக்ரோஷமாக வேண்டும்.
பலமான இந்தியாவை உருவாக்க நாம் வாக்களித்த தலைவர் தற்போது பலமானவராக மாறிவிட்டார். ஆனால் நாடு பலவீனமடைந்துவிட்டது.
ஏக்நாத் ஷிண்டே அணிக்கு சிவசேனா பெயரையும், சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது அநீதி ஆகும். இது கேவலமான அரசியல். சிவசேனாவுக்கு எதிராக நீங்கள் போராட விரும்பினால் தேர்தல் களத்தில் இறங்கி மக்கள் முன்பு எங்களை சந்தித்திருக்க வேண்டும்.
சிவசேனா ஒருபோதும் முஸ்லிம்களுக்கும், வட இந்தியர்களுக்கும் எதிரானது இல்லை. இந்தியாவை தாய் நாடாக கருதுபவர்கள் அனைவரும் நமது சகோதரர்கள்.
இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசினார்.






