என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • அஜித் பவார் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 8 பேர் பாஜக-சிவசேனா கூட்டணி அரசில் இணைந்தனர்.
    • சிவசேனாவில் இருந்து ஷிண்டே எப்படி பிரிந்தாரோ, அதேபோன்று அஜித் பவாரின் அரசியல் நகர்வு இருக்கிறது.

    மகாராஷ்டிர மாநிலத்தில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அவரது அண்ணன் மகன் அஜித் பவார் தனி அணியாக பிரிந்தார். அவரும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 8 பேரும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக-சிவசேனா (ஷிண்டே) கூட்டணி அரசில் இணைந்தனர். அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். இதன்மூலம் சரத்பவரால் நிறுவப்பட்ட தேசியவாத கட்சி பிளவுபட்டது.

    இந்நிலையில் நாகாலாந்தில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 7 எம்எல்ஏக்களும் அஜித் பவாருக்கு ஆதரவு அளித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். நாகாலாந்தில் உள்ள ஒட்டுமொத்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்களும்  அஜித் பவார் பக்கம் சென்றது. சரத் பவாருக்கு மேலும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    உத்தவ் தாக்கரே முதலமைச்சராக இருந்தபோது சிவசேனாவில் இருந்து ஷிண்டே எப்படி பிரிந்தாரோ, அதேபோன்று அஜித் பவாரின் அரசியல் நகர்வு இருக்கிறது. ஷிண்டே இறுதியில் சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை கைப்பற்றினார். கடந்த ஆண்டு ஆட்சி கவிழ்ந்ததும், கட்சியை உடைத்து தனியாக பிரிந்த ஷிண்டே, பாஜகவுடன் கைகோர்த்து புதிய அரசை அமைத்தது குறிப்பிடத்தக்கது.

    • நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
    • நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    மும்பை:

    தென்மேற்கு பருவமழையால் மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக புனே, மும்பையில் அதி கனமழை பெய்து வருகிறது.

    இதற்கிடையே, நேற்றிரவு ராய்காட் மாவட்டத்தில் உள்ள கலாபுர் அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. இப்பகுதியில் பழங்குடியினர் வசிக்கும் குக்கிராமங்கள் உள்ளன. இதனால் நிலச்சரிவில் சுமார் 30 குடும்பங்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    காலை நிலவரப்படி நிலச்சரிவில் இருந்து 25 பேர் மீட்கப்பட்ட நிலையில், 4 பேர் உயிரிழந்தனர். 21 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக முதல் கட்ட தகவல் வெளியானது.

    தேசிய பேரிடர் மீட்புக்குழு படைகள் சம்பவ இடம் அடைந்து, நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

    தகவலறிந்து முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே ராய்காட் மாவட்டம் சென்று நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியைப் பார்வையிட்டார். மீட்புப் பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சட்டசபையில் நிலச்சரிவு குறித்து பேசினார். மீட்புப் பணிகள் மேற்கொண்டு வருவது பற்றி விளக்கிய அவர், உள்துறை மந்திரியிடம் தற்போதைய நிலவரம் குறித்து தகவல் தெரிவித்துள்ளோம் என கூறினார்.

    • மகாராஷ்டிராவில் பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது.
    • 4 மாத கைக்குழந்தை திடீரென நழுவி சாக்கடைக்குள் விழுந்தது.

    மும்பை :

    மகாராஷ்டிராவில் பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. இதில் தானே மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக மத்திய ரெயில்வே வழித்தடத்தில் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. அந்த வகையில் கல்யாண் நோக்கி சென்ற மின்சார ரெயில் ஒன்று தாக்குர்லி- கல்யாண் ரெயில் நிலையங்களுக்கு இடையே நடுவழியில் நின்றது. இதனால் ரெயிலில் இருந்த பயணிகள் பலர் இறங்கி தண்டவாளம் வழியாக நடந்து சென்றனர்.

    இதேபோல பிவண்டியை சேர்ந்த யோகிதா (வயது25) என்ற பெண் பயணியும் தனது 4 மாத பெண் குழந்தையுடன் ரெயிலில் இருந்து இறங்கினார். சாக்கடை கால்வாய் மேலே இருந்த தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

    அப்போது யோகிதா கையில் இருந்த 4 மாத கைக்குழந்தை திடீரென நழுவி சாக்கடைக்குள் விழுந்தது. அந்த குழந்தை சாக்கடை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதைப்பார்த்து குழந்தையின் தாய் கதறி அழுதார். அந்த வழியாக சென்றவர்கள் யோகிதாவை ஆசுவாசப்படுத்தினர்.

    தகவல் அறிந்த கல்யாண் ரெயில்வே போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். கால்வாயில் அடித்து செல்லப்பட்ட கைக்குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    மும்பை பரேலில் உள்ள கே.இ.எம். மாநகராட்சி ஆஸ்பத்திரிக்கு வந்து விட்டு பிவண்டி திரும்பியபோது யோகிதாவிற்கு இந்த துயரம் நேர்ந்துள்ளது. தாயின் கையில் இருந்து நழுவி விழுந்த கைக்குழந்தை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மும்பை உள்ளிட்ட பல இடங்களில் இரண்டு நாட்களாக கனமழை
    • நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் பழங்குடியினர் வாழும் பல குக்கிராமங்கள் உள்ளன

    வடஇந்தியாவில் பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கும் மேலாக மும்பை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பியுள்ளன. அதேபோல குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது.

    தொடர்மழை காரணமாக தண்டவாளங்கள் மழைநீரில் மூழ்கியுள்ளதால் மும்பையில் லோக்கல் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக ராய்காட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பகுதியில் சுமார் 46 வீடுகள் இருக்கின்றன.

    இதில் பழங்குடியின சமூகத்தினர் வசித்து வருகின்றனர். தொடர்ந்து பெய்த மழை காரணமாக இப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் மண்ணில் புதைந்தன. இதில் இடிபாடுகளில் 30 குடும்பங்களை சேர்ந்த 100 பேர் சிக்கிக்கொண்டதாக தெரிகிறது. சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் மாவட்ட அதிகாரிகள் மற்றும் தாசில்தார் நேரில் சென்றுள்ளனர். மீட்புப் படையினர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டவர்களை மீட்கும்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 25 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 10 பேர் உயிரிழந்துவிட்டனர். 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    இதுகுறித்து ராய்காட் மாவட்ட கலெக்டர் யோகேஷ் மசே கூறுகையில், "இந்த சம்பவம் நள்ளிரவில் நடந்திருக்கிறது. தாசில்தாரை உள்ளடக்கிய மீட்பு குழு மக்களை மீட்டு வருகிறது. இந்த சம்பவம் நடைபெற்ற மலைப்பகுதிக்கு வரவேண்டும் எனில், குறைந்தது 2 மணி நேரம் ஆகும். தற்போது இடிபாடுகளில் சிக்கியுள்ள 30 பேரை காப்பாற்றுவதுதான் எங்களுக்கு மிகுந்த சவாலை ஏற்படுத்தியுள்ளது" என்று கூறியுள்ளார்.

    மீட்பு பணிகளை மாநில மந்திரி உதய் சாவந்த் நேரில் பார்வையிட்டு வருகிறார். இரவில் வெளிச்சம் குறைவு காரணமாக சிறிது நேரம் மீட்பு பணி நிறுத்தப்பட்டு காலையில் தொடங்கப்பட்டது. மலையின் மேல் பகுதியில் குடிசைகள் அமைத்து வாழ்ந்தவர்களின் வீடுகள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். நிலச்சரிவு நடந்த இர்சல்வாடி மலையின் உச்சியில் அமைந்துள்ள கிராமமாகும்.

    இந்த பகுதிக்கு செல்ல சரியான பாதை இல்லாததால் சுமார் 1 கி.மீ வரை மலைப்பாதையில் செல்வது மட்டுமே வழியாக இருந்துள்ளது. நிலச்சரிவு நடந்த இடத்திற்கு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே வந்து நிலைமையை ஆய்வு செய்து வருகிறார். மீட்புப் பணிகளை விரைவுபடுத்துவது மற்றும் இடிபாடுகளில் சிக்கியவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    ஏற்கனவே ராய்கட் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று கூறி வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப் பிடத்தக்கது. மாநிலம் முழுவதும் மழை பெய்து வருவதால் மும்பை, பால்கர், ராய்கட், ரத்னகிரி, கோலாப்பூர், சாங்கிலி, நாக்பூர், தானே போன்ற பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மழை வெள்ளம் மற்றும் மீட்பு பணிகளை சமாளிக்க தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். கனமழையால் மும்பையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

    • தக்காளி பயிரிட்ட விவசாயிகள் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • விவசாய உற்பத்தி செலவு எகிறி விட்டது.

    புனே

    நாடு முழுவதும் தக்காளி விலை உயர்வு ராக்கெட் வேகம் கண்டுள்ளது. இந்த விலை உயர்வு பொதுமக்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ள நிலையில், தக்காளி பயிரிட்ட விவசாயிகள் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்களில் பலர் லட்சாதிபதிகளாகி விட்டனர். இந்தநிலையில் மகாராஷ்டிராவில் தக்காளி விவசாயி ஒருவர் கோடீசுவரர் ஆகி விட்டார்.

    புனே மாவட்டம் ஜூன்னார் தாலுகா பஞ்கர் கிராமத்தை சேர்ந்த ஈஸ்வர் கெய்கர் (வயது 36) என்ற விவசாயி தான் அந்த அதிர்ஷ்டசாலி. இவர் தனக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட்டு இருந்தார். இதில் தக்காளி அறுவடை மூலம் அவருக்கு ஒரே மாதத்தில் ரூ.3 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

    தக்காளி அடிமாட்டு விலைக்கு போகும் செய்தியை அடிக்கடி கேட்டு இருப்போம். அப்போது விரக்தி அடையும் விவசாயிகள் அறுவடை செய்த தக்காளியை சாலையில் கொட்டுவதையும், தக்காளி பயிரை அழிப்பதையும் வழக்கமாக வைத்து இருந்தனர். இதேபோன்று தான் ஈஸ்வர் கெய்கரும் கடந்த 2 மாதங்களுக்கு முன் விலை போகாத தக்காளியை வீணடித்து இருக்கிறார். இருப்பினும் மனம் தளராமல் மீண்டும் தக்காளி பயிரிட்ட அவருக்கு தற்போது ஜாக்பாட் அடித்து இருக்கிறது.

    இதுபற்றி விவசாயி ஈஸ்வர் கெய்கர் கூறியதாவது:-

    எனக்கு 18 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் 12 ஏக்கரில் தக்காளி பயிரிட்டேன். கோடை வெயிலில் இருந்து பயிரை பாதுகாக்க கடின முயற்சி மேற்கொண்டேன். அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

    கடந்த ஜூன் 11-ந் தேதி எனக்கு தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ.37 கிடைத்தது. கடந்த 18-ந் தேதி கிலோ ரூ.110-க்கு விற்றேன். ஜூன் 11-ந் தேதி முதல் இதுநாள் வரை 3 லட்சத்து 60 ஆயிரம் கிலோ தக்காளி அறுவடை செய்து அதன் மூலம் ரூ.3 கோடி சம்பாதித்துள்ளேன். இன்னும் ரூ.50 லட்சம் வருவாய் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

    தக்காளி சாகுபடி மற்றும் போக்குவரத்து என சுமார் ரூ.40 லட்சம் செலவு ஆனது.

    கடந்த காலங்களில் தக்காளியால் நஷ்டங்களை சந்தித்தேன். 2011-ம் ஆண்டு ரூ.15 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டது. கடந்த ஆண்டில் உற்பத்தி செலவு அளவுக்கு தான் வருமானம் கிடைத்தது. கடந்த மே மாதம் கூட கிலோவுக்கு ரூ.2.50 மட்டுமே விலை போனதால் தக்காளியை சாலையில் கொட்டினேன். தற்போது நல்ல லாபம் கிடைத்து இருப்பது மகிழ்ச்சியை தந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தக்காளி விலை உயர்வு பற்றி புனே பகுதி ஏ.பி.எம்.சி. மார்க்கெட் வியாபாரி சஞ்சய் காலே கூறுகையில், "நான் கடந்த 15 ஆண்டுகளாக இந்த வியாபாரத்தில் உள்ளேன். இதுபோன்ற தக்காளி விலை உயர்வை ஒருபோதும் பார்க்கவில்லை. விவசாய உற்பத்தி செலவு எகிறி விட்டது. கோடைக்காலங்களில் தக்காளி பயிரை கடுமையாக நோய் தாக்கியது. எனவே தக்காளி பயிரிடுவதை விவசாயிகள் பலர் கைவிட்டனர். இதுபோன்ற காரணங்களால் தான் தக்காளி அதிகப்படியான விலை உயர்வு கண்டுள்ளது" என்றார்.

    • புனேயில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.
    • இதனால் மும்பை-பெங்களூரு நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தின் புனேயில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. கனமழையால் புனேவுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    புனேவைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளியில் செல்லும்போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

    இடைவிடாது பெய்து வரும் மழையால் மும்பை-பெங்களூரு நெடுஞ்சாலையில் 5 கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டுள்ளது.

    புனேவைத் தவிர, பால்கர், ராய்காட் மற்றும் சதாரா உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்நிலையில், கனமழை காரணமாக கல்யாண்-கசரா ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில் சேவை நிறுத்தப்பட்டது.

    ரத்னகிரி மாவட்டத்தில் ஓடும் வஷிஷ்டி ஆற்றில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் சிப்லுனில் ரெயில் சேவை நிறுத்தப்படுகிறது என கொங்கண் ரெயில்வே தெரிவித்துள்ளது.

    • பெண்ணை பிரிந்த கணவர் பராமரிப்பு மற்றும் பிற அடிப்படை தேவைகளை வழங்குவதாக உறுதி அளித்தார்.
    • தன் மீதான குற்றச்சாட்டுகளை பெண்ணின் கணவர் மறுத்தார்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 55 வயதான பெண் ஒருவருக்கும், அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

    இந்நிலையில் அந்த பெண், குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005-ன் பிரிவு 12-ன் கீழ் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், தனது வயது, உடல் நிலை பிரச்சினை மற்றும் தான் வளர்க்கும் 3 ராட்வீலர் வகை நாய்கள் ஆகியவற்றை குறிப்பிட்டு தனது கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கேட்டு இருந்தார்.

    இந்த வழக்கை மெட்ரோபொலிட்டன் மாஜிஸ்திரேட் கோமல்சிங் ராஜ்புத் விசாரித்தார். இந்த வழக்கில் பெண் சார்பில் ஆஜரான வக்கீல் ஸ்வேதா மோரே வாதாடுகையில், இருவருக்கும் 1986-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களின் 2 திருமணமான மகள்கள் இப்போது வெளிநாட்டில் உள்ளனர்.

    இரு தரப்புக்கும் இடையே கடந்த 2021-ம் ஆண்டு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. அப்போது பெண்ணை பிரிந்த கணவர் பராமரிப்பு மற்றும் பிற அடிப்படை தேவைகளை வழங்குவதாக உறுதி அளித்தார். ஆனால் அதை அவர் பின்பற்றவில்லை.

    அவர்கள் ஒன்றாக இருந்த போது பெண் மீது குடும்ப வன்முறையில் ஈடுபட்டுள்ளார். அந்த பெண்ணுக்கு தற்போது எந்த வருமானமும் இல்லை. அவருக்கு சில உடல் நிலை பிரச்சினைகளும் உள்ளது. மேலும் அவர் 3 நாய்களை வளர்த்து வருகிறார்.

    அதே நேரம் மனைவியை பிரிந்த நபர் தற்போது வேறு ஒரு நகரத்தில் தொழில் செய்து வருகிறார். அவருக்கு வருமானமும் வருகிறது. எனவே அவர் இடைக்கால பராமரிப்பு செலவாக மாதம் ரூ.70 ஆயிரம் செலுத்த வேண்டும் என வாதிட்டார்.

    ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுகளை அந்த பெண்ணின் கணவர் மறுத்தார். தனக்கு நிலையான வருமானம் எதுவும் இல்லை என கூறிய அவர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே பராமரிப்பு தொகையை வழங்க முடியாது என கூறினார்.

    அவரின் இந்த வாதத்தை கோர்ட்டு ஏற்க மறுத்தது. மேலும் குடும்ப வன்முறைக்கான முகாந்திரம் இருப்பதாக தெரிவித்த நீதிபதி, அந்த பெண் இடைக்கால நிவாரணத்திற்கு தகுதி பெற்றவர் என தெரிவித்ததோடு, அந்த பெண் வளர்க்கும் 3 நாய்களுக்கு ஆகும் பராமரிப்பு செலவை கொடுக்க வேண்டும் என கணவருக்கு உத்தரவிட்டார்.

    • அஜித் பவார் மந்திரி சபையில் இணைந்த பின் நடைபெறும் முதல் சட்டமன்ற தொடர்
    • எதிர்க்கட்சிகள் கேள்விகளுக்கு பதில் அளிக்க தயாராக இருக்கிறோம் என்றார் பட்னாவிஸ்

    மகாராஷ்டிர மாநில மழைக்கால சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. ஆகஸ்ட் 4-ந்தேதி வரை மூன்று வாரங்கள் நடைபெற இருக்கிறது.

    ஷிண்டே தலைமையிலான சிவசேனா- பா.ஜனதா கூட்டணி அரசில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை பிளவுப்படுத்தி தனது ஆதரவாளர்களுடன் அஜித் பவார் இணைந்த பிறகு நடைபெறும் முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் இதுவாகும்.

    இதுவரை சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியாக செயல்பட்டு வந்தது. அஜித் பவார் எதிர்க்கட்சி தலைவராக இருந்து வந்தார். தற்போது அவர் துணை முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.

    தேசியவாத காங்கிரஸ் எதிர்க்கட்சியா? அல்லது ஆளுங்கட்சியா? என்பதை முடிவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. மேலும், சரத் பவார் கட்சி தங்களது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    இந்த நிலையில்தான் இன்ற சட்டமன்றம் கூடுகிறது.

    இந்த மழைக்கால தொடரில் 24 மசோதாக்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இதில் 10 மசோதாவிற்கு மந்திரி சபை ஒப்புதல் வழங்கிவிட்டது. 14 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை. இவைகள் சட்டசபையில் முன்வைக்கப்படும்.

    ஒரு மசோதா சட்டமன்ற கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தாக்கல் செய்யப்பட இருக்கிறது. ஒரு மசோதா இரண்டு அவைகளின் கூட்டுக்குழுவில் நிலுவையில் உள்ளது. இதுவும் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது.

    24 மசோதாக்கள் தவிர, 6 திருத்தப்பட்ட மசோதாவும் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

    சட்டசபை கூட்டம் இன்று தொடங்கும் நிலையில் நேற்று ஷிண்டே, பட்னாவிஸ், அஜித் பவார் ஆகியோர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது ''தற்போது எங்களுக்கு அதிகமான எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும் அதை தவறாக பயன்படுத்த மாட்டோம். எதிர்க்கட்சிகளால் எழுப்பப்படும் மக்கள் நலனுக்கான அனைத்து கேள்விகள் குறித்தும் இந்த அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளும்'' என பட்னாவிஸ் தெரிவித்தார்.

    சட்டமன்ற கூட்டத்திற்கு முன் அனைத்துக் கட்சிகளுக்கு தேனீர் விருந்தை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    • துணை முதல்வராக பதவி ஏற்ற பிறகு, அஜித் பவார் மற்றும் அணியினர் முதல் முறையாக சரத் பவாரை சந்தித்துள்ளனர்.
    • சரத் பவாரை மாநில செயலகம் 'மந்த்ராலயா' அருகே அமைந்துள்ள ஒய்.பி சவான் மையத்தில் சந்தித்தார்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் பாஜக கூட்டணியில் அஜித் பவார் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

    பின்னர், அஜித் பவார் மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வராக பதவி ஏற்றார். இதுபோல் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்களும் அங்கிருந்து பிரிந்து ஆளும் கட்சியில் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

    இதனால் மகாராஷ்டிரா அரசியலில் குழப்பம் நீடித்து வருகிறது.

    இந்நிலையில், அஜித் பவார் மற்றும் அவரது தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் சிலரும் இன்று மும்பையில் என்சிபி தலைவர் சரத் பவாரை சந்தித்துள்ளனர்.

    துணை முதல்வராக பதவி ஏற்ற பிறகு, அஜித் பவார் மற்றும் அணியினர் முதல் முறையாக சரத் பவாரை சந்தித்து பேசியுள்ளனர்.

    அஜித் பவார் என்சிபி அமைச்சர்கள் ஹசன் முஷ்ரிப், சகன் புஜ்பால், அதிதி தட்கரே மற்றும் திலீப் வால்ஸ் பாட்டீல் ஆகியோருடன் சரத் பவாரை மாநில செயலகம் 'மந்த்ராலயா' அருகே அமைந்துள்ள ஒய் பி சவான் மையத்தில் சந்தித்தார்.

    என்சிபி மாநிலத் தலைவர் ஜெயந்த் பாட்டீல் மற்றும் கட்சியின் தலைவர் ஜிதேந்திர அவாத் ஆகியோரும் ஒய்.பி சவான் மையத்திற்கு விரைந்துள்ளனர்.

    • பிரதமர் நரேந்திர மோடி எங்கு சென்றாலும் பாராட்டுகளை பெறுகிறார்.
    • எங்களுக்கு 200 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் உள்ளனர்.

    நாசிக் :

    மகாராஷ்டிரா அரசு 'ஷாசன் அப்லியா தாரி'(உங்கள் வீட்டு வாசலை தேடி அரசு) என்ற திட்டத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த ஒன்றை சாளர முறையின் கீழ் தேவையான ஆவணங்கள், சான்றிதழ்கள் மற்றும் பல்வேறு அரசு திட்டங்களின் பலன்களை ஒரே இடத்தில் பெற முடியும்.

    நாசிக்கில் 'ஷாசன் அப்லியா தாரி திட்டத்தை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் முதல்-மந்திரி பேசியதாவது:-

    மகாராஷ்டிராவில் எங்களுக்கு 200 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் உள்ளனர். இருப்பினும் யாருக்கும் பாரபட்சமோ அல்லது அநீதியோ இழைக்கப்படாது.

    அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை தோற்கடிக்க எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்றிணைய முயன்றாலும், அவர்களால் ஒரு தலைவரை தேர்வு செய்ய முடியவில்லை. இது பிரதமர் மோடியின் வெற்றியை உறுதி செய்துள்ளது.

    அஜித்பவாரும் தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் மீது நம்பிக்கை வைத்துள்ளார்.

    பிரதமர் நரேந்திர மோடி எங்கு சென்றாலும் பாராட்டுகளை பெறுகிறார். அமெரிக்க பாராளுமன்றத்தில் 2 முறை உரையாற்றும் வாய்ப்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்தது. சமீபத்தில் பிரான்சின் உயரிய கவுரவ விருதுஅவருக்கு வழங்கப்பட்டது.

    தேசியவாத காங்கிஸ் கட்சி தலைவர் அஜித்பவார் ஆளும் அரசில் இணைந்ததன் மூலம், மாநில அரசு மேலும் வேகமாக செயல்பட தொடங்கி உள்ளது. முடிவுகள் விரைவாக எடுக்கப்படுகிறது.

    துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் எனது நல்ல நண்பர் மற்றும் பெரிய இதயம் படைத்தவர். அவர் முன்பு முதல்-மந்திரியாக இருந்தார். நாங்கள் இணைந்து வேலை செய்தோம். தற்போது அவர் துணை முதல்-மந்திரியாகவும், நான் முதல்-மந்திரியாகவும் இருக்கிறேன். இந்த நிலையில் அவர் மற்றொரு துணை முதல்-மந்திரியாக அஜித்பவாரை ஏற்றுக்கொண்டுள்ளார்.

    அவரை சிலர் களங்கம் என்று கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் அவர் ஒரு களங்கமற்ற தூய்மையான அரசியல்வாதி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே சமீபத்தில் தேவேந்திர பட்னாவிசை நாக்பூரின் களங்கம் என விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

    • தேசியவாத காங்கிரஸ் கட்சியில இருந்து பிரிந்த அஜித் பவார் ஷிண்டே அரசில் இணைந்துள்ளார்
    • சரத் பவார்- அஜித் பவார் இடையே அரசியல் தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்து வருகிறது

    மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அஜித் பவார் குரூப், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசில் பங்கேற்றுள்ளது. அஜித் பவார் துணை முதல்வராகவும், மற்ற 8 எம்.எல்.ஏ.-க்கள் அமைச்சராகவும் பதவி ஏற்றனர். இவர்களுக்கு நேற்று மந்திரி பதவி ஒதுக்கப்பட்டது. அஜித் பவார் நிதித்துறை மந்திரியாகியுள்ளார்.

    அஜித் பவார் கட்சியை உடைத்த சம்பவம் கடந்த ஜூலை 2-ந்தேதி அரங்கேறியது. அதன்பின் சரத் பவார் முறைமுகமாக அஜித் பவரை கடுமையாக விமர்சனம் செய்தார். அஜித் பவார் விமர்சனம் செய்யவில்லை என்றாலும் கட்சியை கைப்பற்றுவதற்காக சரத் பவாருக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.

    இந்த நிலையில் சரத் பவாருக்கு வீட்டிற்கு அஜித் பவார் நேற்று சென்றுள்ளார். சரத் பவாரின் மனைவின் பிரதிபா பவாருக்கு மும்பையில் உள்ள பிரீச் கேண்டில மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. அதன்பின் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்ததும், அவரை பார்ப்பதற்காக சென்றுள்ளார்.

    2019-ம் ஆண்டு அஜித் பவார் திடீரென பட்னாவிஸ் உடன் இணைந்து மகாராஷ்டிராவில் பதவி ஏற்றார். அப்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஏற்பட இருந்த பிளவை தடுத்து நிறுத்த பிரதீபா மூளையாக செயல்பட்டார் எனக் கூறப்படுகிறது.

    மேலும், கட்சியின் முக்கியமான முடிவுகளை எடுக்க ஆலோசனைகளையும் அவ்வப்போது தெரிவித்துள்ளார் எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. ஆனால், அரசியல் தொடர்பான நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டது கிடையாது.

    • துணை முதல்வரான பா.ஜ.க.வைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் தொடர்ந்து உள்துறையை நிர்வகிப்பார்.
    • இந்த மாற்றங்கள் எதிர்பார்த்த ஒன்றுதான் என சிவசேனா செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவை ஏற்படுத்திய அஜித் பவார், ஷிண்டே தலைமையிலான அரசில் இணைந்து துணை முதல்வராக பதவி ஏற்றார். அவருடன் மேலும் 8 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்களும் அமைச்சராக பதவி ஏற்றனர்.

    இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. அஜித் பவாருக்கு மாநில கருவூலத்தை நிர்வகிக்கும் நிதித்துறை வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் ஏகநாத் ஷிண்டே தொடர்ந்து ஊரக வளர்ச்சி துறையை தன்வசம் வைத்திருப்பார். மற்றொரு துணை முதல்வரான பா.ஜ.க.வைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் தொடர்ந்து உள்துறையை நிர்வகிப்பார்.

    தேசிய காங்கிரஸ் கட்சியை (NCP) சேர்ந்த சகன் புஜ்பாலுக்கு உணவு மற்றும் சிவில் சப்ளை துறை வழங்கப்பட்டுள்ளது. அவர் முந்தைய "மஹா விகாஸ் அகாதி" கூட்டணி அரசாங்கத்திலும் இதே பதவியை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனஞ்செய் முண்டேவிற்கு விவசாயத்துறை கிடைத்துள்ளது.

    இந்த மாற்றங்கள் குறித்து சிவசேனா செய்தித்தொடர்பாளர் சஞ்சய் ஷிர்சாத் கருத்து தெரிவித்தபோது, "இந்த விரிவாக்கமும் அமைச்சரவை ஒதுக்கீடுகளும் நடக்கும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான்" என கூறியுள்ளார்.

    அமைச்சர் பதவிக்கு போட்டியிடும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையில் ஏற்றத்தாழ்வு இருப்பதாகவும், இதனால் அமைச்சரவை விரிவாக்கம் சுமூகமாக நடக்குமா என்று முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணி சந்தேகம் எழுப்பியிருந்தது.

    ஏக்நாத் ஷிண்டே தரப்பில் பலர் முக்கிய துறைகளை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், துணை முதல்வர் அஜித் பவாருக்கு நிதித்துறை கிடைத்திருப்பது தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்படுத்தியதற்காக அவருக்கு கிடைத்த பரிசாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

    ×