search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு
    X

    மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு

    • மும்பை உள்ளிட்ட பல இடங்களில் இரண்டு நாட்களாக கனமழை
    • நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் பழங்குடியினர் வாழும் பல குக்கிராமங்கள் உள்ளன

    வடஇந்தியாவில் பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கும் மேலாக மும்பை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பியுள்ளன. அதேபோல குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது.

    தொடர்மழை காரணமாக தண்டவாளங்கள் மழைநீரில் மூழ்கியுள்ளதால் மும்பையில் லோக்கல் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக ராய்காட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பகுதியில் சுமார் 46 வீடுகள் இருக்கின்றன.

    இதில் பழங்குடியின சமூகத்தினர் வசித்து வருகின்றனர். தொடர்ந்து பெய்த மழை காரணமாக இப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் மண்ணில் புதைந்தன. இதில் இடிபாடுகளில் 30 குடும்பங்களை சேர்ந்த 100 பேர் சிக்கிக்கொண்டதாக தெரிகிறது. சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் மாவட்ட அதிகாரிகள் மற்றும் தாசில்தார் நேரில் சென்றுள்ளனர். மீட்புப் படையினர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டவர்களை மீட்கும்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 25 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 10 பேர் உயிரிழந்துவிட்டனர். 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    இதுகுறித்து ராய்காட் மாவட்ட கலெக்டர் யோகேஷ் மசே கூறுகையில், "இந்த சம்பவம் நள்ளிரவில் நடந்திருக்கிறது. தாசில்தாரை உள்ளடக்கிய மீட்பு குழு மக்களை மீட்டு வருகிறது. இந்த சம்பவம் நடைபெற்ற மலைப்பகுதிக்கு வரவேண்டும் எனில், குறைந்தது 2 மணி நேரம் ஆகும். தற்போது இடிபாடுகளில் சிக்கியுள்ள 30 பேரை காப்பாற்றுவதுதான் எங்களுக்கு மிகுந்த சவாலை ஏற்படுத்தியுள்ளது" என்று கூறியுள்ளார்.

    மீட்பு பணிகளை மாநில மந்திரி உதய் சாவந்த் நேரில் பார்வையிட்டு வருகிறார். இரவில் வெளிச்சம் குறைவு காரணமாக சிறிது நேரம் மீட்பு பணி நிறுத்தப்பட்டு காலையில் தொடங்கப்பட்டது. மலையின் மேல் பகுதியில் குடிசைகள் அமைத்து வாழ்ந்தவர்களின் வீடுகள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். நிலச்சரிவு நடந்த இர்சல்வாடி மலையின் உச்சியில் அமைந்துள்ள கிராமமாகும்.

    இந்த பகுதிக்கு செல்ல சரியான பாதை இல்லாததால் சுமார் 1 கி.மீ வரை மலைப்பாதையில் செல்வது மட்டுமே வழியாக இருந்துள்ளது. நிலச்சரிவு நடந்த இடத்திற்கு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே வந்து நிலைமையை ஆய்வு செய்து வருகிறார். மீட்புப் பணிகளை விரைவுபடுத்துவது மற்றும் இடிபாடுகளில் சிக்கியவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    ஏற்கனவே ராய்கட் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று கூறி வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப் பிடத்தக்கது. மாநிலம் முழுவதும் மழை பெய்து வருவதால் மும்பை, பால்கர், ராய்கட், ரத்னகிரி, கோலாப்பூர், சாங்கிலி, நாக்பூர், தானே போன்ற பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மழை வெள்ளம் மற்றும் மீட்பு பணிகளை சமாளிக்க தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். கனமழையால் மும்பையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

    Next Story
    ×