மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம்: அஜித் பவாருக்கு நிதித்துறை, தனஞ்செய் முண்டேவுக்கு விவசாயம்

துணை முதல்வரான பா.ஜ.க.வைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் தொடர்ந்து உள்துறையை நிர்வகிப்பார். இந்த மாற்றங்கள் எதிர்பார்த்த ஒன்றுதான் என சிவசேனா செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம்: அஜித் பவாருக்கு நிதித்துறை, தனஞ்செய் முண்டேவுக்கு விவசாயம்
Published on

மும்பை:

மகாராஷ்டிர மாநிலத்தில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவை ஏற்படுத்திய அஜித் பவார், ஷிண்டே தலைமையிலான அரசில் இணைந்து துணை முதல்வராக பதவி ஏற்றார். அவருடன் மேலும் 8 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்களும் அமைச்சராக பதவி ஏற்றனர்.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. அஜித் பவாருக்கு மாநில கருவூலத்தை நிர்வகிக்கும் நிதித்துறை வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் ஏகநாத் ஷிண்டே தொடர்ந்து ஊரக வளர்ச்சி துறையை தன்வசம் வைத்திருப்பார். மற்றொரு துணை முதல்வரான பா.ஜ.க.வைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் தொடர்ந்து உள்துறையை நிர்வகிப்பார்.

தேசிய காங்கிரஸ் கட்சியை (NCP) சேர்ந்த சகன் புஜ்பாலுக்கு உணவு மற்றும் சிவில் சப்ளை துறை வழங்கப்பட்டுள்ளது. அவர் முந்தைய "மஹா விகாஸ் அகாதி" கூட்டணி அரசாங்கத்திலும் இதே பதவியை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனஞ்செய் முண்டேவிற்கு விவசாயத்துறை கிடைத்துள்ளது.

இந்த மாற்றங்கள் குறித்து சிவசேனா செய்தித்தொடர்பாளர் சஞ்சய் ஷிர்சாத் கருத்து தெரிவித்தபோது, "இந்த விரிவாக்கமும் அமைச்சரவை ஒதுக்கீடுகளும் நடக்கும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான்" என கூறியுள்ளார்.

அமைச்சர் பதவிக்கு போட்டியிடும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையில் ஏற்றத்தாழ்வு இருப்பதாகவும், இதனால் அமைச்சரவை விரிவாக்கம் சுமூகமாக நடக்குமா என்று முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணி சந்தேகம் எழுப்பியிருந்தது.

ஏக்நாத் ஷிண்டே தரப்பில் பலர் முக்கிய துறைகளை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், துணை முதல்வர் அஜித் பவாருக்கு நிதித்துறை கிடைத்திருப்பது தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்படுத்தியதற்காக அவருக்கு கிடைத்த பரிசாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com