search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மனைவி வளர்க்கும் 3 நாய்களுக்கும் பராமரிப்பு செலவு கொடுக்க வேண்டும்- ஜீவனாம்ச வழக்கில் கணவருக்கு உத்தரவு
    X

    மனைவி வளர்க்கும் 3 நாய்களுக்கும் பராமரிப்பு செலவு கொடுக்க வேண்டும்- ஜீவனாம்ச வழக்கில் கணவருக்கு உத்தரவு

    • பெண்ணை பிரிந்த கணவர் பராமரிப்பு மற்றும் பிற அடிப்படை தேவைகளை வழங்குவதாக உறுதி அளித்தார்.
    • தன் மீதான குற்றச்சாட்டுகளை பெண்ணின் கணவர் மறுத்தார்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 55 வயதான பெண் ஒருவருக்கும், அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

    இந்நிலையில் அந்த பெண், குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005-ன் பிரிவு 12-ன் கீழ் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், தனது வயது, உடல் நிலை பிரச்சினை மற்றும் தான் வளர்க்கும் 3 ராட்வீலர் வகை நாய்கள் ஆகியவற்றை குறிப்பிட்டு தனது கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கேட்டு இருந்தார்.

    இந்த வழக்கை மெட்ரோபொலிட்டன் மாஜிஸ்திரேட் கோமல்சிங் ராஜ்புத் விசாரித்தார். இந்த வழக்கில் பெண் சார்பில் ஆஜரான வக்கீல் ஸ்வேதா மோரே வாதாடுகையில், இருவருக்கும் 1986-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களின் 2 திருமணமான மகள்கள் இப்போது வெளிநாட்டில் உள்ளனர்.

    இரு தரப்புக்கும் இடையே கடந்த 2021-ம் ஆண்டு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. அப்போது பெண்ணை பிரிந்த கணவர் பராமரிப்பு மற்றும் பிற அடிப்படை தேவைகளை வழங்குவதாக உறுதி அளித்தார். ஆனால் அதை அவர் பின்பற்றவில்லை.

    அவர்கள் ஒன்றாக இருந்த போது பெண் மீது குடும்ப வன்முறையில் ஈடுபட்டுள்ளார். அந்த பெண்ணுக்கு தற்போது எந்த வருமானமும் இல்லை. அவருக்கு சில உடல் நிலை பிரச்சினைகளும் உள்ளது. மேலும் அவர் 3 நாய்களை வளர்த்து வருகிறார்.

    அதே நேரம் மனைவியை பிரிந்த நபர் தற்போது வேறு ஒரு நகரத்தில் தொழில் செய்து வருகிறார். அவருக்கு வருமானமும் வருகிறது. எனவே அவர் இடைக்கால பராமரிப்பு செலவாக மாதம் ரூ.70 ஆயிரம் செலுத்த வேண்டும் என வாதிட்டார்.

    ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுகளை அந்த பெண்ணின் கணவர் மறுத்தார். தனக்கு நிலையான வருமானம் எதுவும் இல்லை என கூறிய அவர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே பராமரிப்பு தொகையை வழங்க முடியாது என கூறினார்.

    அவரின் இந்த வாதத்தை கோர்ட்டு ஏற்க மறுத்தது. மேலும் குடும்ப வன்முறைக்கான முகாந்திரம் இருப்பதாக தெரிவித்த நீதிபதி, அந்த பெண் இடைக்கால நிவாரணத்திற்கு தகுதி பெற்றவர் என தெரிவித்ததோடு, அந்த பெண் வளர்க்கும் 3 நாய்களுக்கு ஆகும் பராமரிப்பு செலவை கொடுக்க வேண்டும் என கணவருக்கு உத்தரவிட்டார்.

    Next Story
    ×