என் மலர்tooltip icon

    கேரளா

    • நிபுணர் குழுவினர் சேத விவரங்களை மதிப்பீடு செய்ய உள்ளனர்.
    • கட்டிட சேத விவரங்களை மதிப்பீடு செய்ய உள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி, அட்டமலை, புஞ்சிரிமட்டம், வெள்ளரிமலை ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அங்கி ருந்த வீடுகள் மற்றும் கட்டிடங்கள், பாலங்கள், சாலைகள், ஏராளமான வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

    மேலும் நூற்றுக்கணக் கான வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் வீடு, நகைகள், பணம், சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்தையும் இழந்துவிட்டனர். இந்த நிலச்ச ரிவில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும் அழிந்துவிட்டன.

    சேதமதிப்பு பல ஆயிரம் கோடி இருக்கும் என்று கருதப்படுகிறது. நிலச்ச ரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு மற்றும் மறுவாழ்வுக்காக அரசுக்கு ரூ1,000 கோடி தேவைப்படும் என்று கூறப்படுகிறது. முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு ஏராளமானோர் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

    பொதுமக்கள் வழங்கும் நிவாரண நிதி மற்றும் அரசு ஊழியர்கள் வழங்கும் சம்பள தொகை மூலமாக ரூ500 கோடி வரை கிடைக்கும் என அரசு கருதுகிறது. மீதி தொகையை எவ்வாறு திரட்டுவது? என்று அரசு ஆலோ சித்து வருகிறது.

    வயநாடு நிலச்சரிவில் காணாமல்போனவர்களை தேடும் பணி தற்போது இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. இதையடுத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் மற்றும் மறு வாழ்வு பணிகளை அரசு மேற்கொள்ளும். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டி ருக்கிறது.

    நிலச்சரிவால் பாதிக் கப்பட் பகுதிகளில் கட்டிடங்களின் சேதம் குறித்து மதிப்பீடு செய்வ தற்காக நிபுணர்கள் குழுவை அரசு நியமனம் செய்துள்ளது. 10 அதிகாரிகள் அடங்கிய அந்த குழுவில் சுரங்கம் மற்றும் புவியியல் துறையின் புவி யியலாளர்கள், உள்ளாட்சி சிவில் பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர் மற்றும் நில வருவாய்த்ததுறை பிரதிநிதி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

    அவர்கள் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து கட்டிட சேத விவரங்களை மதிப்பீடு செய்ய உள்ளனர். அவர்கள் பகுதியளவு மற்றும் முழுமையாக அழிக்கப்பட்ட வீடுகளை பார்வையிடுவார்கள். மேலும் கடைகள், வணிக கட்டிடங்கள் மற்றும் அலுவலக கட்டிடங்களையும் ஆய்வு செய்வார்கள்.

    ஒரு வாரத்திற்குள் சேத மதிப்பீடு தொடர்பான அறிக்கையை சர்ப்பிக்குமாறு நிபுணர் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    • அமீபிக் மூளைக்காய்ச்சல் கடந்த மாதம் பரவத் தொடங்கியது.
    • மூளைக்காய்ச்சல் பாதிப்பு 15 ஆக உயர்ந்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்தே பல்வேறு காய்ச்சல்கள் மற்றும் தொற்று நோய்கள் பரவ தொடங்கின. அதிலும் "பிரைமரி அமீபிக் மெனிங்கே என்செபா லிடிஸ்" என்று அழைக்கப்படும் மூளையை தாக்கும் "அமீபிக் மூளைக்காய்ச்சல்" கடந்த மாதம் பரவத் தொடங்கியது.

    உயிர்க்கொல்லி நோயான இந்த காய்ச்சலுக்கு 3 குழந்தைகள், ஒரு வாலிபர் என மொத்தம் 4 பேர் அடுத்தடுத்து பலியாகினர். மேலும் சிலர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேங்கிக்கிடக்கும் அசுத்தமான தண்ணீரில் இருக்கும் அமீபாக்கள், குளிப்பவர்களின் உடலுக்குள் காதுமடல் மற்றும் மூக்கு துவாரம் வழியாக புகுந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

    ஆகவே இந்த பாதிப்பில் இருந்து தப்ப தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் குளிப்பதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியது.

    இந்நிலையில் திருவனந்தபுரத்தில் மேலும் 6 பேருக்கு அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 5பேர் கடந்த 23-ந்தேதி இறந்த வாலிபரின் நண்பர்கள் ஆவர்.

    அவர்கள் 6 பேரும் தங்களது கிராமத்தில் உள்ள பாசி நிறைந்த குளத்தில் குளித்ததன் மூலமாக தொற்று பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த குளத்தில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த குளத்தில் யாரும் குளிக்கக்கூடாது என்று அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.

    அவர்களை தவிர மேலும் ஒருவருக்கு எப்படி பாதித்தது என்று சுகா தாரத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள 6 பேரில் 4 பேர் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இவர்களையும் சேர்த்து கேரளாவில் அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதிப்பு 15 ஆக உயர்ந்திருப்பதாக சுகாதாரத்துறை மந்திரி வீனா ஜார்ஜ் தெரி வித்திருக்கிறார்.

    • வயநாட்டில் ஒரு வாரத்துக்கு மேலாக மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • நிவாரண முகாம்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் தெரிவிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    வயநாடு:

    கேரள மாநிலம் வயநாடு சூரல் மலை, முண்டகை, பூஞ்சிரித்தோடு, அட்டமலை ஆகிய இடங்களில் கடந்த மாதம் 30-ம் தேதி அதிகாலை ஒரு மணிக்கு நிலச்சரிவுகள் ஏற்பட்டது. இதில் 405-க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். ஒரு வாரத்துக்கு மேலாக மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    நிலச்சரிவு பாதிப்பு பகுதிகளை பாராளுமன்ற எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், நடிகர்கள் மோகன்லால், மத்திய இணை மந்திரி சுரேஷ் கோபி ஆகியோர் பார்வையிட்டனர்.

    இந்நிலையில் பிரதமர் மோடி நாளை மறுதினம் (சனிக்கிழமை) வயநாடு செல்கிறார். டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் புறப்படும் அவர், கேரளாவின் கண்ணூர் விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் வயநாட்டுக்கு சென்று ஹெலிகாப்டரில் பறந்தபடியே நிலச்சரிவு பாதிப்புகளை பார்வையிடுவார் என்றும் கூறப்படுகிறது.

    பின்னர் நிவாரண முகாம்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் தெரிவிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிர் பிழைத்தவர்கள் சிலருடன் உரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

    பிரதமரின் இந்த பயணத்தில் கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் கண்ணூரில் இருந்து இணைவார்கள் என்றும் கூறப்படுகிறது.

    பிரதமரின் பயணம் குறித்த தகவல்கள் கேரள அரசுக்கு தெரிவிக்கப்பட்டு இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. இதைத்தொடர்ந்து வயநாடு மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் மாநில எல்லையிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    • வனத்துறையினர் அதிரடி சோதனை.
    • வனத்துறையினர் பாம்பு இறைச்சியை கைப்பற்றினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காடு தளியகோணம் பகுதியில் ஒருவர் மலைப்பாம்பை பிடித்துச் சென்றிருப்பதாக வனத்துறையிருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து மலைப்பாம்பை பிடித்ததாக கூறப்பட்ட அந்த பகுதியை சேர்ந்த ராஜேஷ்(வயது42) என்பவரின் வீட்டுக்கு பாலப்பல்லி வனச்சரக அதிகாரி ரதீஷ் தலைமையிலான வனத்துறையினர் அதிரடியாக சென்றனர்.

    அப்போது அங்கு ராஜேஷ் இல்லை. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த கவுன்சிலர் முன்னிலையில் வனத்துறையினர் சோதனை செய்தனர். இதில் ராஜேஷ் வீட்டின் சமையலறையில் மலைப்பாம்பு சமைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வனத்துறையினர், பாம்பு இறைச்சியை கைப்பற்றினர்.

    பின்பு தணியகோணம் பகுதியில் பதுங்கியிருந்த ராஜேசை பிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது தளியகோணம் வயல் பகுதியில் மலைப்பாம்பை பிடித்ததாகவும், அதனை வைத்து "ஸ்பெஷல் டிஷ்" தயாரித்ததாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து ராஜேசை கைது செய்தனர்.

    அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட மலைப்பாம்பு இறைச்சி அறிவியல் பரிசோதனைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ராஜீவ்காந்தி பயோலேபுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட ராஜேஷ் இரிஞ்சாலக்குடா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    வனச் சட்டங்களின்படி பாம்புகளை கொல்பவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.25ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.  

    • வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 400-ஐ நெருங்கியுள்ளது.
    • ராணுவ மீட்புப் பணிகளில் மிகவும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து வருகிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு கேரள மாநில மக்கள் மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள அனைவரையும் கவலையடைய செய்திருக்கிறது. அங்கு மீட்பு பணி இன்று 8-வது நாளாக தொடர்ந்து வருகிறது.

    பலி எண்ணிக்கை 400-ஐ நெருங்கியயுள்ளது. மேலும், 200-க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகியிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

    மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் உள்ளிட்ட மீட்புக்குழுவினர் மிகவும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து வருகிறார்கள்.

    இதற்கிடையே நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு உதவும் வகையில் பல்வேறு அரசியல் கட்சிகள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலர் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் கேரள மாநில முதல் மந்திரி பினராயி விஜயனைச் சந்தித்து வி.ஐ.டி. பல்கலைக்கழகம் சார்பில் வேந்தர் ஜி.விசுவநாதன் ரூ.1 கோடிக்கான வரைவோலை வழங்கினார்.

    அப்போது வி.ஐ.டி. துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன், டாக்டர்.ஜி.வி.செல்வம், உதவி துணைத்தலைவர் காதம்பரி ச.விசுவநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • பாலம் முழுமையான சேதமானதால் நடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • மீட்பு பணிகள் முடியாத நிலையில் பாலங்கள் சேதமானதால் மீட்பு பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது.

    வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு கேரள மாநில மக்கள் மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள அனைவரையும் கவலையடைய செய்திருக்கிறது. அங்கு மீட்பு பணி இன்று 8-வது நாளாக தொடர்ந்து வருகிறது.

    பலி எண்ணிக்கை 400-ஐ தாண்டிய நிலையில், 200-க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகியிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் உள்ளிட்ட மீட்பு குழுவினர் மிகவும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து வருகிறார்கள்.

    சூரல்மலை-முண்டகை இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், பொக்லைன் உள்ளிட்ட கனரக வாகனங்கள் ஆற்றை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் மீட்பு பணியை துரிதப்படுத்தும் வகையில் ஆற்றின் குறுக்கே ராணுவத்தினர் பெய்லி பாலம் அமைத்தனர். இதன் மூலம் சூரல்மலை-முண்டகை இடையே மீட்பு பணிக்காக வாகனங்கள் சென்று வந்தன.

    இந்நிலையில் நிலச்சரிவு பாதித்த வயநாட்டில் மீட்பு பணிக்காக ராணுவம் அமைத்த தற்காலிக பாலம் சேதமடைந்துள்ளது. பாலம் முழுமையான சேதமானதால் நடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    வாகனம் செல்வதற்காக அமைக்கப்பட்ட பாலத்தில் சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    மீட்பு பணிகள் முடியாத நிலையில் பாலங்கள் சேதமானதால் மீட்பு பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது.

    • தேடுதல் பணியில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் ஈடுபடுகிறார்கள்.
    • ஊரின் நிலையை பார்த்து கண்கலங்கிய அவர்கள், அதனை பொருப்படுத்தாமல் மீட்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு கேரள மாநில மக்கள் மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள அனைவரையும் கவலையடைய செய்திருக்கிறது. அங்கு மீட்பு பணி இன்று 8-வது நாளாக தொடரும் நிலையில், பலியானவர்களின் உடல்கள் தொடர்ந்து சிக்கியபடி இருக்கிறது.

    பலி எண்ணிக்கை 400-ஐ தாண்டிய நிலையில், 200-க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகியிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் உள்ளிட்ட மீட்பு குழுவினர் மிகவும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து வருகிறார்கள்.

    பலியானவர்களின் சின்னாபின்னமான உடல்களை மிகவும் பாதுகாப்பாக அகற்றி எடுத்து வருகின்றனர். தேடுதல் பணியில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் ஈடுபடுகிறார்கள். அவர்களில் 2 வீரர்கள் தங்களது சொந்த கிராமத்தில் மீட்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    வயநாடு சூரல்மலை பகுதியை சேர்ந்தவர் ஜினோஷ் ஜெயன்(வயது42). அவரது உறவினர் பிரவீன் பிரகாஷ்(37). ஜினோஷ் அவுரங்காபாத்தில் ராணுவ பீரங்கி பிரிவிலும், பிரவீன் மெட்ராஸ் ரெஜிமன்டலிலும் பணியாற்றுகின்றனர். ஜினோசின் சகோதரர் ஜிதில் ஜெயன் தேசிய பேரிடர் மீட்புபடை வீரர் ஆவார்.

    இவர்கள் 3 பேரும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட தங்களது ஊரான சூரல்மலைக்கு கடந்த 31-ந்தேதி வந்தனர். அவர்கள் தங்களது ஊரில் இடிந்து கிடந்த கட்டிடங்கள், மண் குவியல் மற்றும் பாறைகளுக்கு அடியில் கிடந்த உடல்களை மீட்கும் குழுவில் இடம்பெற்றுள்ளனர். தங்களது ஊரின் நிலையை பார்த்து கண்கலங்கிய அவர்கள், அதனை பொருப்படுத்தாமல் மீட்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    நிலச்சரிவில் இவர்களது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பலர் இறந்து விட்டனர். அவர்களது உருக்குலைந்த உடல்களை வேதனையுடன் மீட்டிருக்கின்றனர். அவர்கள் எங்களது ஊரில் இப்படி ஒரு பேரிழப்பு ஏற்பட்டு மீட்பு பணியில் ஈடுபடுவோம் என்று எதிர்பார்க்கவில்லை என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.


    தனக்கு ஏற்பட்ட வேதனையான அனுபவம் குறித்து தேசிய பேரிடர் மீட்பு படை வீரரான ஜிதில் ஜெயன் வேதனையுடன் கூறியதாவது:-

    இந்த பயங்கர நிலச்சரிவில் எங்களின் வீடு தப்பியது. எனது நண்பர்கள் ஸ்ரீலேஷ், லெனின் மற்றும் சுமேஷ் ஆகியோர் பலியாகிவிட்டனர். இவர்களது உடலை நான் பார்த்தது, எங்களுக்கு தெரிந்தவர்களின் வீடுகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டது ஒரு வேதனையான அனுபவம்.

    இதுபோன்று ஒரு தேடுதல் பணியில் ஈடுபடவேண்டும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. எங்களது சொந்த ஊர் என்பதால் இங்குள்ள நிலப்பரப்பு எங்களுக்கு பரிட்சயமாக இருந்தது. இது எங்களுடைய தேடுதல் முயற்சிக்கு உதவியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிலச்சரிவில் ராணுவ வீரர்களின் உறவினர்களான ஜெகதீஷ், அவரது மனைவி சரிதா, மகன் சரண் ஆகியோர் உயிரிழந்தனர். அவர்களில் ஜெகதீஷ் மற்றும் சரணின் உடல்களை இவர்கள் தான் மீட்டுள்ளனர். ஆனால் சரிதாவின் உடல் இன்னும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • வயலில் காட்டுப்பன்றிகள் புகுந்துவிடாமல் இருப்பதற்காக மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது.
    • மின்வேலியை கவனிக்காமல் சென்ற சந்திரசேகரன் அதில் சிக்கினார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் பந்தளம் கூரம்பாலை பகுதியை சேர்ந்தவர்கள் சந்திரசேகரன், கோபாலன். இவர்கள் இருவரும் இன்று காலை தோட்டுக்கரை பாலம் பகுதியில் வயல்வெளி வழியாக சென்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு வயலில் காட்டுப்பன்றிகள் புகுந்துவிடாமல் இருப்பதற்காக மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது.

    அதனை கவனிக்காமல் சென்ற சந்திரசேகரன் மின்வேலியில் சிக்கினார். மின்சாரம் தாக்கி துடிதுடித்த அவரை, கோபாலன் காப்பாற்ற முயன்றார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது. மின்வேலியில் சிக்கி இருவரும் பரிதாபமாக இறந்துவிட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாயமானவர்கள் அனைவரையும் மீட்கும் நடவடிக்கையில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பள்ளத்தாக்கு மற்றும் அதன் கரையோர பகுதிகளில் அவர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 30-ந்தேதி அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேலும் அட்டமலை, புஞ்சிரிமட்டம், வெள்ளரிமலை கிராமங்களும் உருக் குலைந்தன.

    அந்த பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்ததால் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள், பாலங்கள், சாலைகள், வாகனங்கள் என அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன. மண்ணுக்குள் பலர் உயிரோடு புதைந்துவிட்ட நிலையில், ஏராளமானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

    இந்த சம்பவத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகினர். மேலும் பலர் காணாமல் போனார்கள். அவர்களை தேடும் பணியில் ராணுவத்தின் முப்படைகளை சேர்ந்த வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், போலீசார் என 11 பிரிவுகளை சேர்ந்தவர்கள் ஈடுபட்டார்கள்.

    இதில் மண்ணுக்குள் புதைந்தும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. பலியானர்களின் உடல்கள் சிதைந்தும், துண்டு துண்டா கிய நிலையிலும் மீட்கப்பட்டன. மீட்பு பணி நேற்று 7-வது நாளாக நீடித்த நிலையில் பலியானர்களின் எண்ணிக்கை 400-ஐ தொட்டது.

    மேலும் மாயமாகியிருக்கும் 200பேரை தேடும் பணி தொடர்கிறது. அவர்களை கண்டுபிடிக்க நவீன ராடர்கள், ட்ரோன்கள் உள்ளிட்ட கருவிகள், ஹெலிகாப்டர்கள், மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டன.

    மாயமானவர்கள் அனைவரையும் மீட்கும் நடவடிக்கையில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது தேடுதல் பணி இன்று 8-வது நாளாக நடந்தது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகள், சாலியாறு மற்றும் ஆற்றின் கரையோர பகுதிகளில் முழுமையாக தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது.

    அங்கு ராணுவ வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், போலீசார், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட மீட்பு குழுவினர் வழக்கம்போல் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளுக்குள் யாரேனும் கிடக்கிறார்களா? என்பதை கண்டறிய மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டன.


    இந்த பகுதிகள் மட்டு மின்றி மனிதர்கள் எளிதில் செல்ல முடியாத பள்ளத்தாக்கு பகுதியில் இன்று தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. அதாவது சூச்சிப்பாறை மற்றும் பொதுக்கல்லு என்ற பகுதிகளுக்கு இடையில் தான் அந்த பள்ளத்தாக்கு இருக்கிறது.

    அந்த இடத்துக்கு ராணுவம் மற்றும் வனத்துறையினர் திறமைவாய்ந்த வீரர்கள் 12 பேர் ஹெலிகாப்டர் மூலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். சன்ரைஸ் என்று அழைக்கப்படும் அந்த பள்ளத்தாக்கு மற்றும் அதன் கரையோர பகுதிகளில் அவர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    பள்ளத்தாக்கு பகுதியில் யாரேனும் இறந்து கிடக்கிறார்களா? என்று பார்க்கப்பட்டது. மேலும் பள்ளத்தாக்கில் யாரேனும் இறந்துகிடந்தால், அவர்களது உடலை ஹெலிகாப்டர் மூலமாக கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    காட்டாற்று வெள்ளத்தில் வேகமாக அடித்துச் செல்லப்பட்டவர்கள் இந்த பள்ளத்தாக்கில் பிணமாக கிடக்கலாம் என்று கருதப்படுவதால் பல உடல்கள் இன்று கண்டெடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் வழக்கமான பகுதிகளில் இன்று மேலும் சில உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 400-ஐ தாண்டியது.

    • நிலச்சரிவில் தப்பிய வீடுகளில் நகை, பணம் திருட்டு போவதாக புகார்கள் வந்தன.
    • சூரல்மலை கிராமம் மற்றும் முண்டகை, அட்டமலை பகுதிகளை சேர்ந்த சுமார் 4,833 பேர் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    வயநாடு:

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டகை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகளில் கடந்த 30-ம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த கிராமங்கள் மட்டுமின்றி, அதன் அருகே இருந்த அட்டமலை, புஞ்சிரிமட்டம், வெள்ளிரிமலை கிராமங்களும் நிலச்சரிவால் உருக்குலைந்து போனது. நிலச்சரிவின் கோரதாண்டவத்தால் வீடுகள், சாலைகள், வாகனங்கள், பாலங்கள் அடித்து செல்லப்பட்டன. இதனால் கிராம மக்கள் மண்ணில் புதைந்தும், காட்டாற்று வெள்ளத்தில் அடித்தும் செல்லப்பட்டனர். மேலும் பலர் காணாமல் போனார்கள்.

    நிலச்சரிவில் மீட்கப்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்து உள்ளனர். மண்ணில் புதைந்தவர்கள், காணாமல் போனவர்களை மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று 7-வது நாளாக மீட்பு பணி நடைபெற்றது. மீட்பு பணிகளை வருவாய்த்துறை மந்திரி கே.ராஜன், வனத்துறை மந்திரி சுசீந்திரன் நேற்று நேரில் பார்வையிட்டனர். பின்னர் மந்திரி கே.ராஜன் நிருபர்களிடம் கூறுகையில், 'நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் காணாமல் போனவர்களை தேடும் பணி கைவிடப்படவில்லை. காணாமல் போன கடைசி நபரை கண்டுபிடிக்கும் வரை மீட்பு பணிகள் தொடரும்' என தெரிவித்தார்.

    நிலச்சரிவில் தப்பிய வீடுகளில் நகை, பணம் திருட்டு போவதாக புகார்கள் வந்தன. அத்துடன் அதிகம் பேர் அங்கு கூடுவதால், மீட்பு பணியில் சிரமம் ஏற்படும் நிலை இருந்தது. இதையடுத்து நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி, நேற்று ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு வீரர்கள், போலீசார், தன்னார்வலர்கள் என 1,500 பேர் மட்டுமே பெய்லி பாலத்தை கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    நவீன கருவியான ரேடார் சிக்னல் அடிப்படையில் மண்ணில் புதைந்தவர்கள், கட்டிட இடிபாடுகளில் சிக்கி யாரேனும் உள்ளார்களா என தேடப்பட்டது. உடல்களை கண்டுபிடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ள பகுதிகளில் நவீன கருவிகளுடன் தேடும் பணி நடந்தது. பாறைகள், மரங்களுக்கு அடியில் உடல்கள் புதையுண்டு உள்ளதா என தேடும் பணி நடைபெற்றது. நிலச்சரிவில் சிக்கி இதுவரை 402 பேர் உயிரிழந்து உள்ளனர். இன்னும் 180 பேரை காணவில்லை. சூரல்மலை கிராமம் மற்றும் முண்டகை, அட்டமலை பகுதிகளை சேர்ந்த சுமார் 4,833 பேர் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதுதவிர அங்குள்ள நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களை கண்டு ரசிக்க வந்த சுற்றுலா பயணிகள் விடுதிகளில் தங்கி இருந்தனர். அவர்களின் நிலை என்ன ஆனது என்பது தெரியவில்லை. சாலியாற்றில் இருந்து உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

    மேலும், நிலச்சரிவில் உயிரிழந்த அடையாளம் தெரியாத மற்றும் உரிமை கோரப்படாத உடல்களை பொது மயானத்தில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக 2019-ம் ஆண்டு நிலச்சரிவு ஏற்பட்ட புதுமலை பகுதியில் 64 சென்ட் நிலம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அங்கு பொக்லைன் எந்திரங்கள் மூலம் வரிசையாக குழிகள் தோண்டப்பட்டன. பின்னர் சர்வமத பிரார்த்தனையுடன் ஒரே இடத்தில் 39 பேரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன.

    நிலச்சரிவு காரணமாக வயநாடு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு கடந்த ஒரு வாரமாக விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில், நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.

    • நிலச்சரிவில் தங்களின் குடும்பத்தினர் மற்றும் உறவுகளை இழந்துவிட்டனர்.
    • சிலர் தாங்கள் செல்லமாக வளர்த்த நாய் மற்றும் வீட்டு வளர்ப்பு பிராணிகளையும் தேடி அலைகிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    வயநாடு நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகியிருக்கும் நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிர் தப்பியிருக்கின்றனர். அவர்களை மீட்பு குழுவினர் மீட்டு நிவராரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர். அவர்களில் ஒருசிலரை தவிர பெரும் பாலானவர்கள், நிலச்சரிவில் தங்களின் குடும்பத்தினர் மற்றும் உறவுகளை இழந்துவிட்டனர்.

    அவர்கள் கண்ணீர் வடித்தபடி நிவாரண முகாம்களில் தங்கியிருக்கின்றனர். பலர் மண்டோடு புதைந்தது, வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது உள்ளிட்டவைகளை நேராக பார்த்த அவர்கள், அந்த காட்சிகளை மறக்க முடியாமல் தவித்து வருகின்றனர். நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் பலரது குடும்பத்தினர் இன்னும் கிடைக்கால் இருக்கின்றனர்.

    இதனால் அவர்கள் தங்களது உறவுகளை கண்டுபிடிக்க உடல்கள் வைக்கப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு சென்று தங்களின் உறவுகளை தேடி வருகின்றனர். அதுமட்டுமின்றி சிலர் தாங்கள் செல்லமாக வளர்த்த நாய் உள்ளிட்ட வீட்டு வளர்ப்பு பிராணிகளையும் தேடி அலைகிறார்கள்.

    அப்படி தேடியதில் பெண் ஒருவர் தனது செல்ல நாயை ஒரு வாரத்திற்கு பிறகு பார்த்து உள்ளார். நாய் மற்றும் பெண்ணுக்கு இடையே நடந்தை பார்த்த அனைவரையும் கலங்க செய்தது.

    அதுபற்றிய விவரம் வருமாறு:-

    வயநாடு சூரல்மலை பகுதியை சேர்ந்தவர் உமா பாலகிருஷ்ணன். வயநாடு நிலச்சரிவில் இவர் தனது குடும்பத்தினருடன் சிக்கிக்கொண்டார். நிலச்சரிவு ஏற்பட்டு விட்டதை அறிந்த அவர்கள், தங்களின் வீட்டில் இருந்து வெளியேறி ஓடினர். இருள்சூழ்ந்த அதிகாலை நேரத்தில் தட்டுத்தடுமாறி சென்றனர்.

    அப்போது அவர்களுடன் அவர்கள் வளர்த்த செல்ல நாயும் ஓடி வந்தது. ஆனால் சிறிது தூரத்திற்கு பிறகு அவர்களது நாயை காணவில்லை. உயிர் பிழைப்பதற்காக ஓடியபடி இருந்த உமா மற்றும் அவரது குடும்பத்தினர் நிவாரண முகாமுக்கு சென்று தங்கினர்.

    தனது குடும்பத்தினர் அனைவரும் தப்பிவிட்ட நிலையில், தாங்கள் செல்லமாக வளர்த்தநாய் என்ன ஆனது? என்று தெரியாமல் உமா தவித்த படி இருந்தார். அதனை கண்டுபிடிப்பதற்காக சூரல்மலை பகுதிக்கு நேற்று சென்றார். எங்காவது தனது நாய் இருக்கிறதா? என்று பார்த்தார்.

    அப்போது ஒரு இடத்தில் அவரது வளர்ப்பு நாயை கண்டுபிடித்தார். உமாவை பார்த்த அந்த நாய் வேகமாக ஓடிவந்தது. உமாவின் காலை சுற்றிசுற்றி வந்து செல்லமாக குறைத்தது. நாயை பார்த்த உமா அதனை அரவணைத்தார். நாயின் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டு கொஞ்சினார். அவர்களது பாசப்போாட்டத்தை பார்த்து அங்கிருந்தவர்கள் நெகிழ்ந்து போனார்கள்.

    சிறிதுநேரம் செல்ல நாயை கொஞ்சியபடி இருந்த உமா, நிவாரண முகாமுக்கு செல்ல புறப்பட்டார். அவரை சுற்றியபடியே நாய் இருந்தது. அதனை பிரிந்துசெல்ல மனமில்லாமல் உமா அங்கிருந்து விடைபெற்றார். அவர் சென்ற வாகனத்தை அவரது செல்ல நாய் சில கிலோமீட்டர் தூரம் வரை பின்தொடரந்து ஓடியது.

    பார்த்தவர்களை நெகிழ்ச்சியடைய செய்த இந்த வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

    • நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 380-ஐ கடந்துள்ளது.
    • இறந்து 72 மணிநேரம் ஆன பிறகும் அடையாளம் காணப்படாத உடலை அரசே அடக்கம் செய்யலாம்.

    கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி கொட்டித்தீர்ந்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் பல நூறு குடும்பங்களை சேர்ந்தவர்கள் மண்ணில் புதைந்து போயினர்.

    நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 380-ஐ கடந்துள்ளது. மேலும் பலர் மண்ணில் புதைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

    குறிப்பாக, சூரல்மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளில் இருந்தும், பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் இருந்து 35 கிமீக்கு மேல் தொலைவில் உள்ள சாலியார் ஆற்றில் இருந்தும் உடல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன.

    இந்நிலையில், அடையாளம் காணப்படாத 31 உடல்கள் 158 உடல் பாகங்களும் புதுமலையில் உள்ள 64 சென்ட் இடத்தில் அடக்கம் செய்யப்படும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.

    இறந்து 72 மணிநேரம் ஆன பிறகும் அடையாளம் காணப்படாத உடலை புதைக்க சட்டம் இருந்தாலும், இறுதிச் சடங்குகளுக்கு முன்னதாகவே உறவினர்கள் அடையாளம் கண்டு கொண்டு செல்ல அரசு அவகாசம் அளித்திருந்தது.

    அடையாளம் தெரியாத உடல்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்தாலும் இறந்தவர்களின் டி.என்.ஏ.வும் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடமும் அரசால் பதிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×